என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுமருத்துவம்"
- கரிசலாங்கண்ணியை கொண்டு மருந்துகள் தயார் செய்யப்படுகிறது.
- வயல் வரப்புகளில் அதிகமாக வளரும்.
கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக வளரும். இதில் இரு வகை உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்திலும், இன்னொன்று வெள்ளை நிறத்திலும் பூக்கும். இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
இந்த கீரையில் தங்கச்சத்து நிறைந்துள்ளதால் இது பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு காயகல்ப மூலிகை.
மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி
இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சுரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும், ஏராளமான தாதுசத்துகளும் இந்த கீரையில் உள்ளன. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது.
மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி
கண், முகம் வெளுத்து, கை, கால், மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். அதற்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும். கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி, நல்லெண்ணெய் 100 மி.லி, அதிமதுரம் 10 கிராம் போன்ற வைகளை சேர்த்து காய்ச்சி, 5 மி.லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும்..
இதனை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும். இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிற மடையும்.
ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.
இவ்வாறு செய்யும்போது உடலில் பித்தம் அதிகமாக இருந் தால் வாந்தியாக வெறியேறி விடும். இதனால் ஜீரண உறுப்புகள் தூய்மை அடைந்து கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும்.
சுவாசப்பை கழிவுகள் மற்றும் சிறுநீர கத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளையும் கரிசலாங்கண்ணி நீக்கும். ஒற்றை தலைவலியால் துன்பப்படுகிறவர்கள் இந்த கீரையை மென்று உள்நாக்கில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் பித்தம் நீங்கி தலைவலி அகலும்.
மேற்கண்டவாறு தினமும் கீரையை மென்று பல்துலக்குவது தந்த சுத்தி என்றழைக்கப்படுகிறது. பச்சையாக கீரை கிடைக்காத வர்கள் ஒருதேக்கரண்டி கீரை பொடியை கொண்டும் தந்த சுத்தி செய்யலாம்.
கரிசலாங்கண்ணியை கொண்டு பல்வேறு மருந்துகள் தயார் செய்யப்படுகிறது. கூந்தல் தைலங்களிலும் இதன் சாறு சேர்க்கப்படுகிறது. இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்தால் என்றும் இளமையுடன் திகழலாம்.
- பிரைமரி மற்றும் செகண்டரி என தலைவலி இரு வகைப்படும்.
- மூளைக்கு குளுக்கோஸ் செல்வது குறைவதால் தலைவலி ஏற்படும்.
பொதுவாக தலைவலி சர்க்கரை நோயின் அறிகுறியாக இல்லாவிட்டாலும் அதை உதாசீனப்படுத்த கூடாது. பிரைமரி மற்றும் செகண்டரி என தலைவலி இரு வகைப்படும். தலைவலியே முதன்மை நோயாக வருவது பிரைமரி தலைவலி (மைக்ரேன், கிளஸ்டர் தலைவலி) ஆகும்.
வேறொரு நோயின் வெளிப்பாடாக ஏற்படுவதை செகண்டரி தலைவலி என்று கூறுகிறோம். செகண்டரி தலைவலி ஏற்பட முக்கிய காரணங்களாக கீழ்க்கண்டவை கருதப்படுகின்றன.
நீரிழிவு நோய், ரத்த நாளங்கள் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சைனஸ் பிரச்சினை, நோய் தொற்று, மன அழுத்தம், போதை பழக்கம், கண் ஒளி விலகல் பிழை, செர்விக்கல் ஸ்பாண்டிலோசிஸ் (கழுத்து எலும்பு தேய்மானம்).
பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் எபிநெப்ரின் மற்றும் நார்எபிநெப்ரின் போன்ற ஹார்மோன் அளவுகளின் மாற்றங்கள், தலைவலியை உண்டாக்குகிறது.
ரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது, சிறுநீர் அதிகம் வெளியேறி, நீரிழப்பு ஏற்பட்டுவதாலும், ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளாலும் தலைவலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் தலையின் பின்பகுதியில் வலியை ஏற்படுத்தும்.
ரத்த சர்க்கரை அளவு குறையும்போது மூளைக்கு குளுக்கோஸ் செல்வது குறைவதால் தலைவலி ஏற்படும். இது தலையின் வலது அல்லது இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் சில பொதுவான காரணங்களாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு தலைவலி ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் தலைவலி வரலாம்.
சிலருக்கு தூக்கத்தில் பற்களை கடிக்கும் பழக்கத்தால் தூங்கி எழுந்தவுடன் தலைவலி ஏற்படும். மேலும் சிலருக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மது, குளிர்பானங்கள் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தி தலைவலியை தூண்டலாம்.
இதற்கு தீர்வாக கீழ்க்கண்ட வாழ்க்கை நடைமுறை மாற்றங்களை பின்பற்றுங்கள்.
1) சரியான நேரத்தில் தூங்குதல்
2) சரியான நேரத்தில் உணவு அருந்துதல்
3) புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழித்தல்
4) அதிக நேரம் லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்தல்
5) ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்
6) காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து அதிகமுள்ள ஆரோக்கிய உணவு முறையை பின்பற்றுதல்
7) தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி செய்தல்
8) நீரிழப்பை தடுக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல்
சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் மருத்துவரை உடனே கலந்தாலோசித்து தகுந்த பரிசோதனைகளை செய்து என்ன காரணத்தினால் தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.
- 14 சதவீதம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழ்கின்றனர்.
- போதிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் இல்லை.
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 14 சதவீதம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழ்கின்றனர். சிறுநீரக நோய் அறிகுறிகளைப் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் இல்லை.
காரணங்கள்
கட்டுப்பாடில்லாத நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகள் நாட்பட சாப்பிடுவது, தொடர் சிறுநீரக தொற்றுக்கள், சிறுநீரக நீர்க்கட்டி நோய், தொடர் சிறுநீரக கற்கள் போன்றவை.
அறிகுறிகள்
1) சிறுநீரக நோயின் முதல் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக ஆழ்ந்த சோர்வு, பலகீனம், புத்திக் கூர்மை குறைதல் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரகங்கள் அவற்றின் அன்றாட வேலை செய்யும் திறனை நிறுத்தும் போது, உடலில் நச்சுகள் மற்றும் கழிவுகள் உருவாகும். இந்த அசுத்தங்கள் எளிதில் உடலை சோர்வடையச் செய்யும்.
2) தூங்குவதில் சிரமம் ஏற்படும். நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழும் நோயாளிகள் பல்வேறு தூக்கக் கோளாறுகளை அனுபவிக்கின்றனர்.
3) சிறுநீரகத்தின் வடிகட்டிகள் (நெப்ரான்கள்) சேதமடைவதால், குறிப்பாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
4) சிறுநீருடன் ரத்தம் கலந்து காணப்படும்.
5) வீங்கிய பாதங்கள் மற்றும் கணுக்கால்.
6) பசியின்மை, குமட்டல், வாந்தி உணர்வுகள்,
7) தோல் வறட்சி மற்றும் அரிப்பு,
8) சிறுநீரில் நுரை, குமிழிகள் காணப்படுதல்,
9) தசை சோர்வு, தசைப்பிடிப்பு,
10) கண்களின் கீழ் வீக்கம்.
11) முதுகுவலி.
நோய் கண்டறிய உதவும் பரிசோதனைகள்
ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், பொட்டாசியம், சோடியம் பை கார்பனேட், சோடியம், குளோரைடு, இ.ஜி.எப்.ஆர் மற்றும் சிஸ்டேட்டின் சி, சிறுநீரில் மைக்ரோஆல்புமின் அளவுகளை பரிசோதித்து நோயின் தன்மையை அறியலாம்.
மருத்துவ ஆலோசனை மற்றும் சித்த மருத்துவம்
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்க்குரிய காரணத்தை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும். உணவில் உப்பு குறைந்த அளவில் எடுக்க வேண்டும்.
உப்பில் ஊறவைத்த பொருட்களை தவிர்க்க வேண்டும். அசைவ உணவு எடுப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைபடி அளவுடன் சாப்பிட வேண்டும், அல்லது தவிர்க்க வேண்டும்.
சித்த மருத்துவத்தில் மூக்கிரட்டை, பூனைமீசையிலை, நெருஞ்சில் இவைகளை பொடித்து வைத்ததில் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை குடித்து வர வேண்டும். இதனால் யூரியா, கிரியாட்டினின் அளவு குறையும்.
மேலும், வறுத்த சீரகம் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வர வேண்டும். இது சிறுநீரக செயல்பாட்டிற்கு நல்லது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தான் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ரத்த தானம் செய்பவர்களுக்கு, புது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி ஆகும்.
- அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் ரத்த தானம் செய்ய வேண்டும்.
ரத்த தானம், நோய்வாய்ப்பட்ட ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், ரத்த தானம் செய்தவரின் உடலுக்கும் பலவிதங்களில் நன்மையைத் தருகிறது.
'ஒருவர் தொடர்ந்து ரத்த தானம் செய்து வந்தால், அவருக்கு ரத்தக்கொதிப்பு குறைய வாய்ப்புள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 'மாரடைப்பு' வரும் வாய்ப்பையும் குறைக்கும்' என்று இதய நோய் சிகிச்சை நிபுணர்களின் ஆய்வு கூறுகிறது.
ஒரு வருடத்தில் நான்கைந்து தடவை ரத்த தானம் செய்த நூற்றுக்கணக்கான பேரின் ரத்த அழுத்த அளவை பரிசோதித்து பார்த்தபோது சுமார் 40 சதவீதம் பேருக்கு சற்று அதிகமாகவும், மீதி 60 சதவீதம் பேருக்கு சரியாகவும், சற்று குறைவாகவும் இருந்தது. ஆக மொத்தத்தில் ரத்த தானத்தை பொறுத்தவரை ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லதைத் தான் செய்திருக்கிறது.
உங்களுடைய ரத்தத்திலுள்ள 'ஹீமோகுளோபின்' என்று அழைக்கக்கூடிய இரும்புச்சத்து பொருள் மிக அதிகமாக இருந்தால், நீங்கள் ரத்த தானம் செய்தால் உங்களுடைய ரத்தத்தின் அடர்த்தி குறைந்து ரத்தம் சீராகவும் சுலபமாகவும் உடலெங்கும் ஓடி இதயத்தை சீக்கிரம் சென்றடையும்.
ரத்த அடைப்புக் கட்டி, மாரடைப்பு, ரத்த ஓட்ட குறைபாட்டினால் கால், கைகள் மரத்துப் போதல் போன்றவை ஏற்படாமலிருக்க இது உதவி செய்யும்.
தொடர்ந்து ரத்த தானம் செய்பவர்களுக்கு, புது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி ஆகும். இதய நோய்களினால் வரும் பெரும் பிரச்சினைகளும், பேராபத்துகளும் குறையும்.
முதலில், உயிருக்குப் போராடும் ஒருவருக்கு ரத்த தானம் செய்கிறோம், அவருடைய உயிர் பிழைக்க உதவி செய்கிறோம் என்பதே உங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தையும், பேரானந்தத்தையும், மன நிம்மதியையும் கொடுக்கும். இதுவே நீங்கள் உற்சாகமாகவும் எவ்வித மன இறுக்கமும் இல்லாமல் நிம்மதியுடன் வாழ வழிவகுக்கும்.
அதிக ரத்த அழுத்தம் இல்லாமல் இருக்க தொடர்ந்து ரத்த தானம் செய்தால் மட்டும் போதாது. மற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
ஊற்றில் நீரை எடுக்க எடுக்க புதுநீர் ஊறி வந்துகொண்டே இருப்பதுபோல ரத்த தானம் செய்யச்செய்ய ரத்தத்தில் புதிய செல்கள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும். தகுதியுள்ள அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் ரத்த தானம் செய்ய வேண்டும்.
- வாழ்க்கையை எப்படி நேசிப்பது என்பதற்கான சில வழிமுறைகள்.
- வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வாழ வேண்டும்.
நாம் வாழுகிற வாழ்க்கை இயற்கையின் கொடை. இந்த வாழ்க்கையை நேசிப்பவர்கள் மிக குறைவு. கோபமும், வெறுப்பும், மன அழுத்தமும் அதிகமாகிக் கொண்டு இருப்பதற்கு வாழ்க்கையை நேசிக்காததே அடிப்படை காரணமாகும். வாழ்க்கையை எப்படி நேசிப்பது என்பதற்கான சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்!
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வாழ வேண்டும். ஒவ்வொன்றையும் நேசிக்க வேண்டும். காலையில் எழுந்து வெளியே வந்ததும் சூரிய ஒளி உடலில் படும்போது ஏற்படுகிற வெப்பத்தை உணர வேண்டும். மெல்லியக்காற்று நம்மீது படும் போது ஏற்படுகிற அந்த இதமான இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்தது தான். வெற்றியும் தோல்வியும் நிறைந்ததுதான். அதை நடுநிலையோடு எதிர்கொள்கிற போது சுமைகள் மாறி, சுகமாக தெரியும். அதற்கு நாம் நம்மை எப்போதும் இயங்கி கொண்டு இருப்பவர்களாக மாற்ற வேண்டும். இயங்குதல் என்றால் வழக்கமாய் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு வேலைகள் செய்வது மட்டுமல்ல. அந்த வட்டத்தை கடந்து கிடைக்கும் நேரத்தில் நமக்கு பிடித்த ஒரு வட்டத்தை உருவாக்க வேண்டும்.
உதாரணமாக இலக்கியம் மீது ஆர்வம் என்றால் ஓய்வாக இருக்கும் நேரத்தில் இலக்கிய கூட்டங்களில் பங்கு பெறலாம். திரைப்பட ஆர்வலர் என்றால் திரைப்படங்களை பார்க்கலாம். திரைப்படங்கள்குறித்து கலந்துரையாடுகிற நிகழ்வுகளில் பங்கு பெறலாம்.
எது உங்களுக்கு பிடிக்கிறதோ எந்த இடத்தில் இருந்தால் உங்களுக்கு ஒரு மாற்றம் கிடைக்கும் என நினைக்கிறீர்களோ அந்த இடத்தோடு, அந்த நபர்களோடு உங்கள் ஓய்வு நேரத்தை செலவிடுங்கள். அது உங்களுக்குள் உள்ளார்ந்த மாற்றத்தை கொடுக்கும்.
ஏதோ ஒன்றை திரும்ப, திரும்ப யோசித்து உங்களையே குழப்பிக் கொள்ளாமல் உங்கள் மனநிலையை சீராக வைக்க உங்கள் சிந்தனைகளை ஒருங்கிணைக்க உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அது உங்களை மாற்றும்.
ஏதாவது ஒரு செயலை அன்றாடம் செய்வேன் என முடிவு எடுங்கள். அது காலையில் சிறிது நேரம் நடப்பதாக இருக்கலாம். செடிக்கு தண்ணீர் ஊற்றுவதாக இருக்கலாம். எதுவானாலும் சரி, அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.
குடும்பத்திற்காகவும், எதிர்காலத்திற்காகவும் ஓடிக்கொண்டே இருக்கும் பலர் தங்களுக்கென ஓடுவதில்லை. ஒரு நாளின் பத்து நிமிடத்தையாவது உங்களுக்கென செலவிடுங்கள். அமைதியாக அமருங்கள்.
எல்லாம் கடந்து போகும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துங்கள். என்ன நேர்ந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள். நாம் செய்கிற ஒவ்வொரு வேலைகளையும் ரசித்து, கவனத்தோடு, நிகழ்கால உணர்வோடு இணைந்து செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்களுக்கு அர்த்தமானதாகவும், அழகானதாகவும் தெரியும்.
- உடலில் சுமார் 60 ஆயிரம் மைல் நீளத்துக்கான ரத்த நாளங்கள் உள்ளன.
- இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது.
கால்களின் ஆடுதசைகள் உடலின் 2-ம் இதயம் போல இயங்குகின்றன. கால்களின் ஆடுதசைகளை உடற்பயிற்சி மூலம் பலப்படுத்தும் போது இதயம் நன்றாக செயல்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் தோராயமாக 28 சதவீதம் இதய நோய்களால் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
உயர் ரத்த அழுத்தம், புகைத்தல், நீரிழிவு நோய், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை இதய நோய்களுக்கு காரணமாக உள்ளன.
உடலின் உயிரணுக்களுக்கு தேவையான பிராண வாயுவை வழங்க இதயத்தின் உந்து சக்தி நுரையீரலில் இருந்து பிராணவாயு கலக்கப்பட்ட ரத்தத்தை தமனிகள் மற்றும் சிரைகள் வழியாக உந்தித் தள்ள செய்கிறது.
இவ்வாறு செல்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ரத்தமானது, சிரை அமைப்பு மூலம் இதயத்திற்கு திரும்புகிறது. பின்னர் நுரையீரலுக்கு மீண்டும் சென்று பிராணவாயு கலக்கப்படுகிறது. இந்த சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.
உடலில் சுமார் 60 ஆயிரம் மைல் நீளத்துக்கான ரத்த நாளங்கள் உள்ளன. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது. 2,250 கேலன் ரத்தத்தை உந்தி தள்ளுகிறது.
இதயத்தின் இவ்வளவு கடினமான பணிச்சுமையை குறைக்க கால்களின் பின்புறம் உள்ள ஆடுதசைகள் உடலின் 2-ம் இதயம் போலவே இயங்கி உடலின் கீழ்ப்பகுதிக்கு வரும் பிராண வாயு கலக்கப்பட்ட ரத்தத்தை மீண்டும் இதயம் மற்றும் நுரையீரலுக்கு தள்ள ஒன்றாக வேலை செய்கின்றன.
இதயம் நன்றாக இயங்க கால்களின் ஆடுதசைகளை வலுப்படுத்த வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள். இதற்கு உடற்பயிற்சி அவசியம் அல்லது உட்கார்ந்த நிலையில் கூட கால் பாதங்களை முன்பின் மடித்து நீட்டுவதால் கன்று தசைகள் நன்கு இயங்கி ரத்தத்தை சரியான விசையுடன் இதயத்தை நோக்கி உந்தி தள்ள வழிசெய்யும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
- மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது.
- கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.
உடல் உழைப்பு மற்றும் உடற்பயிர்சி இல்லா வாழ்க்கை முறை, ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்து பணியாற்றுவது போன்றவர்களுக்கு மூட்டுத்தேய்மானம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும். நடக்க, அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமம், கால் வலி, மூட்டு இறுக்கமாகுதல், காலை இயல்பாக நீட்டி மடக்க முடியாதது, கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.
உடல் பருமனாக இருப்பவர்கள், எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்தே இருப்பவர்கள், அதிகமான உடலுழைப்பை செலுத்தி வேலைகள் செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், தேய்மானத்தின் பாதிப்புக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பிசியோதெரபி பயிற்சி, பணிகளை மாற்றி செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற எளிமையான வழிமுறைகள் வாயிலாக பாதிப்பு தீவிரமடையாமல் தடுக்கலாம்.
உணவுமுறைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். ஏனென்றால் துரித உணவுகளை சாப்பிடும் போது உடல் பருமன் ஏற்பட்டு மூட்டுவலி ஏற்படும். இதனால் டயட் ஃபாளோ செய்ய வேண்டும்.
மேலும் மூட்டு தேய்மானத்திற்கான ப்ரப் சிகிச்சை பற்றி விரிவான விளக்கம் அளிக்கிறார் டாக்டர் லட்சுமிநாதன்.
- மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு ஸ்டெம் செல் அருமையான வழிமுறையாகும்.
- மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஸ்டெம் செல் சிகிச்சை உதவுகிறது.
நீரிழிவு நோய்க்கு தீர்வு காண்பதிலும் ஸ்டெம் செல் சிகிச்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணையத்தில் உள்ள செல்களின் வளர்ச்சியை தூண்டுவதற்கும், அந்த செல்களை மீண்டும் உருவாக்குவதற்கும் ஸ்டெம் செல் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் நீரிழிவு நோயானது இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனை தருகிறது. சில புற்றுநோய்களுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகச்சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களுக்கு இந்த ஸ்டெம் செல் சிகிச்சை ஒரு அருமையான சிகிச்சையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்டெம் செல் சிகிச்சையானது புற்றுநோய் பாதித்த செல்களை பழுதடையச் செய்து புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.
மேலும் புதிய நல்ல செல்களையும் உருவாக்குகிறது. இதன் மூலம் சில புற்று நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலை வரலாம். சில நேரங்களில் மார்பகம் வளர்ச்சி அடையாத பெண்களுக்கு மார்பக வளர்ச்சி தேவைப்படலாம். எனவே மார்பக சிகிச்சைக்கும் ஸ்டெம் செல் என்பது மிக அருமையான வழிமுறையாகும்.
இதன் மூலம் புற்றுநோய் பாதித்த பெண்கள் தங்களுடைய மார்பகத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். மேலும் மார்பகத்தை அழகாக மாற்றுவதற்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல வழிமுறையாகும்.
புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு எந்த திசுவில் புற்றுநோய் இருந்தாலும் அதையும் ஸ்டெம் செல் சிகிச்சை சரி செய்கிறது. இது தொடர்பாக பல ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன.
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது இதயத்தில் உள்ள திசுக்கள் மற்றும் செல்கள் குறைந்து விடும் அல்லது இறந்து விடும். மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஸ்டெம் செல் சிகிச்சை உதவுகிறது.
ஒருவருக்கு இதய செல்கள் குறையும் போது ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் இதய செல்களை உருவாக்க முடியும். இதன் மூலம் இதயத்தின் செயல்பாடுகளையும் சீராக்கி மாரடைப்பை தடுக்க முடியும்.
மேலும் மூட்டு பகுதிகளில் உள்ள தேய்மானங்களுக்கும் ஸ்டெம் செல் என்பது நன்மை பயக்கும் சிகிச்சையாகும். மூட்டு தேய்மானம், முதுகெலும்புகளில் ஏற்படக்கூடிய தேய்மானங்கள் இவை அனைத்தையுமே சீராக்கு வதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை முக்கியமான வழிமுறையாக உள்ளது.
ஆட்டோ இம்யூன், பக்கவாதம், உடல் பருமனுக்கு தீர்வு:
நமது உடலில், நோய் தொற்றுக்களை அழிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு அமைப்பானது சிலநேரங்களில் தவறுதலாக ஆரோக்கியமான செல்களை தாக்கி அழிக்கிறது. இந்த பாதிப்புக்கு ஆட்டோ இம்யூன் என்று பெயர். அவர்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மிகச் சிறந்த பலனை தருகிறது.
இந்த பாதிப்பானது சமீப காலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. வைரஸ்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு மரபணு பிரச்சினைகள் உருவாகி அதன் மூலமாக ஆட்டோ இம்யூன் பாதிப்பு ஏற்படுகிறது.
ஸ்டெம் செல் சிகிச்சையானது ஆட்டோ இம்யூன் பாதிப்பு கொண்டவர்களின் செல்களில் ஏற்படும் மாற்றங்களை சீரமைப்பதன் மூலம் அவர்களின் நோயையும் குணப்படுத்துகிறது.
ஒருவருக்கு வயதாகும்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பக்கவாதம் வரலாம். அதுபோன்ற பக்கவாதத்துக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனை தரும்.
ஒவ்வொரு உறுப்புகளில் ஏற்படுகிற சேதம் மற்றும் மீளுருவாக்கத்தை சரி செய்வதற்கு ஸ்டெம் செல் மிகவும் அற்புதமான வழிமுறை என ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடி க்கப்பட்டுள்ளது.
பெண்களை பொருத்தவரைக்கும் வயதாகும் போது அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கும் போது அவர்களுக்கு உடல் எடை குறைகிறது.
பெண்களின் உடல் உறுப்புகளில் எந்த வகையான பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் சீராக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்டெம் செல் சிகிச்சை என்பது ஒரு எளிய வழிமுறை ஆகும்.
அந்த வகையில் ஒவ்வொரு திசுவின் உருவாக்கம், பழுதுபார்த்தல், மீளுருவாக்கம் ஆகியவைகளுக்கான அடிப்படையே அந்த திசுக்களில் உள்ள ஸ்டெம் செல் தான். இதனால் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது பெண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியதாக அமைகிறது.
ஸ்டெம் செல் சிகிச்சை பற்றி நிறைய ஆய்வுகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதன் சக்சஸ் ரேட் இன்னும் கொஞ்ச காலத்தில் மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
- இளம் வயதினரும் நியாபக மறதி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
- தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு.
ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். சில எளிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஞாபக மறதியை கட்டுப்படுத்தலாம்.
* தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு. தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்து வருவது மனநலத்துக்கு மட்டுமல்ல ஞாபக மறதி பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவும் உதவும். குறிப்பாக நினைவுத்திறனையும், மனநிலையையும் மேம்படுத்தும்.
* மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் செயல்திறனை அதிகரிக்க செய்யலாம். பொதுவாக எந்த வேலை செய்வதாக இருந்தாலும் வலது கையைத்தான் அதிகமாக பயன்படுத்துவோம். அதற்கு மாற்றாக இடது கையை உபயோகிக்கலாம். அதன் மூலம் மூளையின் செயல்திறன் மேம்படும். ஞாபக மறதியின் வீரியம் குறையும்.
* ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதும் மூளை சிறப்பாக செயல்பட உதவும். அதனால் மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் பயிற்சிகளை செய்து வரலாம். யோகாசனங்களும் பலன் கொடுக்கும். அவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நினைவுத்திறனை மேம்படுத்தவும் உதவிடும்.
* உணவுக்கட்டுப்பாடும் அவசியமானது. சரியான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதுவும் நினைவாற்றல் திறனை அதிகரிக்க உதவும் புரோக்கோலி, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுவதும் நல்லது.
- மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட்கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத தொற்று வியாதியாக பலரையும் ஆட்கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் உட்கொள்ளும் உணவு தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் மன அழுத்தத்தை கூடுதலாக தூண்டி பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட்கொள்ளலாம். ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த அவை, செல்கள் சேதம் அடைவதை தடுக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் துத்தநாகத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. உடலில் துத்தநாகம் குறைவாக இருந்தால் மன அழுத்த பாதிப்பு அதிகமாகிவிடும்.
முந்திரி பருப்பில் 14 முதல் 20 சதவீதம் வரை துத்தநாகம் இருக்கிறது. அதனை உட்கொள்வது துத்தநாக குறைபாட்டை ஈடு செய்து மன அழுத்தத்தையும், கவலையையும் குறைக்க உதவும்.
மெக்னீசியமும் மனநிலையை மேம்படுத்துவதற்கு வழிவகை செய்யும். சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் முட்டையில் மெக்னீசியம் உள்ளது. இவை மனநிலை முன்னேற்றத்துக்கும் வித்திடும்.
அவகேடோவிலும் மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் சேர்மங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் சி, பி6 ஆகியவை உள்ளடக்கி இருக்கின்றன. அவை மனஅழுத்தத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவிடும்.
கீரைகளையும் உட்கொள்ளலாம். அதில் இருக்கும் போலேட்டுகள் பதற்றத்தை தணிக்க உதவும். சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளையும் உட்கொள்ளலாம். அதில் இருக்கும் வைட்டமின் டி, பதற்றம் மற்றும் மனநல கோளாறுகளை தணிக்கும்.
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுவதும் நல்லது. பாலில் இருக்கும் டிரிப்டோபன், மெலடோனின் மற்றும் பி-வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை தூண்டிவிடும்.
- பெண்களுக்கு கருத்தரித்தல் பிரச்சினை.
- 3 ஆயிரம் ரசாயனங்களை நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம்.
உலக பாலியல் நல தினம், ஸ்டெம்செல் விழிப்புணர்வு தினத்தை யொட்டி பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கையின் படி திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
தற்போது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனைகளும், பெண்களுக்கு கருத்தரித்தல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு, ரசாயன பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.
இப்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு பொருட்கள் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க அதில் அதிக அளவில் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலுமே ரசாயனம் உள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுகிறது. இந்த காற்றை சுவாசிப்பதாலும் நமது உடலுக்குள் ரசாயனம் செல்கிறது.
இப்படி தினமும் 3 ஆயிரம் ரசாயனங்களை நம்மை அறியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். இந்த ரசாயனங்கள் பெண்கள் கருத்தரிப்பதற்கு இடையூறாக இருப்பதற்கும், ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது.
இதன் மூலம் ரசாயன பயன்பாடு தாம்பத்திய உறவை சீர்குலைப்பதற்கு ஒரு காரணமாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும் சர்க்கரை நோயும் பலருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட காரணமாக அமைகிறது.
- பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
- கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன.
தமிழகத்தில் நிகழாண்டில் 11,743 போ் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானதாகவும், அதில் 4 போ் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் 25,000 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
அவா்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலரும், நகா்ப்புறங்களில் வாா்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலா்களும் நியமிக்கப்பட்டு வீடுகள்தோறும் மருத்துவ கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணுக்கு அழைக்க
லாம். எத்தகைய சூழலையும் எதிா்கொண்டு சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் டெங்கு வாா்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளைத் தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரத்த வங்கிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்கவும், அவசரகால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்