என் மலர்
நீங்கள் தேடியது "Siddha Medicine"
- ஒவ்வாமையை உண்டுபண்ணுகின்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
- நுரையீரலை வலுப்படுத்த தினமும் 10 துளசி இலைகளை சாப்பிடலாம்.
பலருக்கும் சிரமம் தரும் நோயாக இருப்பது சுவாச அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய். உலக அளவில் சுமார் 18 முதல் 20 விழுக்காடு மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு செல்லும் பாதையானது வீக்கமடைந்து, அப்பகுதியில் உள்ள தசைகள் இறுகுகின்றன. இதனால் நுரையீரலுக்கு பிராணவாயு செல்வது குறைகிறது. சுவாச அலர்ஜி (ஒவ்வாமை) இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
அலர்ஜி தடுப்பு முறைகள்
நுரையீரலில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று இருந்தால், முதலில் தொற்றிற்கான மருந்தைக் கொடுத்து குணப்படுத்த வேண்டும். ஒவ்வாமையை உண்டுபண்ணுகின்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
வீடு, வேலை பார்க்கும் இடங்களைத் தூய்மையாய் வைத்திருப்பதோடு தூசி, புகை உள்ள இடங்களில் நடக்கும் போது மாஸ்க் (முகமூடி) அணிவது நல்லது.
சித்த மருத்துவத் தீர்வுகள்
* 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் அடிப்படையில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் கிராம்புக் குடிநீரை காலை, மாலை இருவேளை குடித்துவர ரத்தச் சுற்றோட்டம் நன்கு நடைபெற்று ஆக்சிஜன் அளவு அதிகரித்து புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். (கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு, மஞ்சள், சுக்கு இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சி ஓரளவு சூடு ஆறியதும் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து தயாரிக்கப்படுவது தான் கிராம்பு குடிநீர்)
* துளசி, கற்பூரவள்ளி, ஆடாதோடை இலைச் சாற்றைத் தேனில் காய்ச்சி 5 முதல் 10 மி.லி. வரை எடுத்துக் கொள்ளலாம்.
* நெல்லிக்காய் லேகியம் எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருமல், சளிப் பிரச்சனையும் நீங்கும்.
* நுரையீரலை வலுப்படுத்த தினமும் 10 துளசி இலைகளை சாப்பிடலாம்.
* தூதுவளை இலைகளை வைத்து ரசம் செய்து உணவுடன் உண்ண வேண்டும்.
* சிற்றரத்தைப் பொடியை தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து உண்ண நுரையீரல் வலுப்படும்.
* தாளிபத்திரி சூரணம் 1 கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி.,பலகரை பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.
* சுவாச குடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
* ஆடாதோடை நெய் ஐந்து மி.லி. வீதம் இரு வேளை சாப்பிட வேண்டும்.
- தோள்பட்டையை சுற்றியுள்ள தசை நார்கள், சவ்வுகள் இவை கிழிவதினால் கடுமையான வலி ஏற்படுகிறது.
- கீல்வாத நோய்களிலும் தோள் பட்டையில் வீக்கத்துடன் வலி உருவாகிறது.
தோள்பட்டை வலி என்பது பல்வேறு காரணங்களால் வரலாம்.
* ரோட்டேட்டர் சுற்றுப்பட்டை வலி: தோளின் சுழற்சியை உருவாக்கும் நான்கு முக்கிய தசைகள் சுப்ரா ஸாபின்டஸ், இன்ப்ரா ஸ்பின்டஸ், டெரெஸ் மைனர் மற்றும் சப் ஸ்கேபுலாரிஸ் ஆகும். இந்த தசைகள், டெல்டாய்டு தசையுடன் சேர்ந்து, தோள்பட்டை மூட்டை உறுதிப்படுத்துவதற்கும் பரந்த அளவிலான கை அசைவுகளை செயல்படுத்துவதற்கும் முக்கியமானவை ஆகும். தசைப்பிடிப்புகள் காயங்களினால் இவைகளின் இயக்கம் குறையும் பொழுது தோள்பட்டையின் உள்பகுதியில் மந்தமான வலியாகவோ அல்லது திடீரென கூர்மையான வலியாகவோ வெளிப்படும். இந்த வலியினால் தோள் பட்டையில் குறைந்த அளவிலான இயக்கம், முதுகுக்கு பின்னால் கை வைத்து எட்டுவது, தலைமுடியை சீவுவது ஆகியவை கடினமாகிறது.
* கிழிவுகள்: தோள்பட்டையை சுற்றியுள்ள தசை நார்கள், சவ்வுகள் இவை கிழிவதினால் கடுமையான வலி ஏற்படுகிறது.
* டென்டினைடிஸ்: தோள் பட்டையை சுற்றியுள்ள தசைநாண்களில் ஏற்படும் அழற்சி, வீக்கம் வலி மற்றும் விறைப்பை ஏற்படுத்தும்.
* திடீரென ஏற்படும் விபத்துகள், காயங்களினால் தோள்பட்டை மூட்டைச் சுற்றியுள்ள எலும்புகள், தசைகள் மற்றும் தசைநாண்களில் ஏற்படும் பாதிப்புகள்.
* பர்சைடிஸ்: தோள்பட்டை மூட்டை மெத்தை போன்று தாங்கி உயவுடன் சுழலச் செய்யும் திரவம் நிறைந்த பைகளில் ஏற்படும் வீக்கம்.
* எலும்பு தேய்மானம்: தோள்பட்டை மூட்டில் உள்ள குருத்தெலும்புகளில் ஏற்படும் சிதைவு.
* உறைந்த தோள்பட்டை (புரோஷன் ஷோல்டர்): இது மூட்டைச் சுற்றியுள்ள இணைப்பு திசுக்களில் இறுக்கம் மற்றும் விறைப்பை ஏற்படுத்துகிறது.
* தசைச் சுளுக்குகள்: சமநிலையற்ற படுக்கையில் படுப்பது, அதிக பாரத்தை தூக்குவது இவற்றால் தோள்பட்டையைச் சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் பிடிப்புகள் கடுமையான வலியை தரும்.
* கீல்வாதம்: கீல்வாத நோய்களிலும் தோள் பட்டையில் வீக்கத்துடன் வலி உருவாகிறது.
* கழுத்து எலும்பு, நரம்புகளில் ஏற்படும் வலி, மார்பு அல்லது வயிறு போன்ற பிற பகுதிகளிலிருந்து தோன்றும் வலிகளும் தோள்பட்டையில் வலியை ஏற்படுத்தும்.
சித்த மருத்துவ தீர்வுகள்:
1) அமுக்கரா சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம்-200 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம்-200 மி.கி. இவைகளை மூன்று வேளை வெந்நீர் அல்லது பாலில் உணவுக்கு பின்பு சாப்பிட வேண்டும்.
2) அஸ்வகந்தா லேகியம் 1-2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
3) வலியுள்ள இடத்தில் கற்பூராதி தைலம், வாதகேசரி தைலம் இவைகளை தேய்த்து வெந்நீரில் ஒற்றடம் இட வேண்டும்.
- ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்று கூறப்படுகிறது.
- உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
குழந்தையின்மை என்பது, திருமணமான தம்பதியர் தொடர்ந்து ஒரு வருடம் தாம்பத்தியத்தில் இருந்தும் மகப்பேறு அடையாத நிலையாகும். இதை முதன்மை குழந்தைப் பேறின்மை என்றும், ஒரு குழந்தை பிறந்த பின்னர் இரண்டாவது முறை மகப்பேறு அடையாத நிலையை இரண்டாம்பட்ச குழந்தையின்மை என்றும் கூறப்படுகிறது.
காரணம்
உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதிகளின் விகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், நாகரிக வாழ்வியல் முறைகள், தவறான உணவுப்பழக்கம், குறைந்த பட்ச உடற்பயிற்சி கூட இல்லாதிருத்தல், மன அழுத்தம், மனக்கவலைகள். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலிருப்பது, பொருளாதார நெருக்கடிகள், கொஞ்ச நாட்கள் இளமையை நன்கு அனுபவித்துவிட்டு அதன் பின்னர் குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று கருத்தரித்தலை தள்ளிப்போடுதல், மருத்துவர் ஆலோசனையின்றி கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது, ஆண், பெண் இனப்பெருக்க மண்டல பிரச்சனைகள் உள்பட குழந்தையின்மைக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
ஆண்களுக்கான உடலியல் பிரச்சனை
அசூஸ்பெர்மியா (விந்தணுக்கள் இல்லாத நிலை), ஏஸ்பெர்மியா (விந்து நீரே வெளியாகாமல் இருப்பது), ஒலிகோஸ்பெர்மியா (விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவு), அஸ்தினோஸ்பெர்மியா (விந்தணுக்களின் இயக்க குறைபாடு), டெரடோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அமைப்பில் ஏற்படும் குறைபாடு), ஹைபோஸ்பெர்மியா (விந்தணுக்களின் அளவு குறைபாடுகள்), நெக்ரோசூஸ்பெர்மியா (விந்து நீரில் உயிருள்ள விந்தணுக்கள் இல்லாத நிலை), தாம்பத்திய குறைபாடுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு.
பெண்களுக்கான உடலியல் பிரச்சனை
சினைப்பை நீர்க்கட்டிகள், கருப்பை தசை கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோமா, சினைப்பாதை அடைப்புகள், புரோஜஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன், புரோலாக்டின், ஆன்டி முல்லரின் ஹார்மோன் போன்றவைகளின் சீரற்ற செயல்பாடுகள்.
சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் குழந்தைப் பேறின்மை நீங்கி கருத்தரிக்க உதவும் சித்த மருத்துவக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இதை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்துவது நல்லது.
பெண்களுக்கு
* மாதவிடாய் காலங்களில் அரசமரத் தளிர் இலைகளை அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கரு உண்டாகும். இதை உடல் ரீதியான காரணம் இல்லாமல் மகப்பேறு தாமதமடையும் ஏராளமான பெண்களுக்கு அனுபவ ரீதியாக பலன் தந்துள்ளது.
* மாதவிடாய் ஒழுங்காக வருவதற்கு அசோகப்பட்டை, முள்முருக்கு பூ, கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை, சோற்றுக் கற்றாழை போன்ற மூலிகை மருந்துகள் நற்பலனைத் தரும்.
* விஸ்ணுகிரந்தி செடியை பொடி செய்து மாதவிலக்கு வந்த முதல் மூன்று நாட்கள் வெந்நீரில் சாப்பிட்டு வர மகப்பேறு உண்டாகும்.
* புத்திரச் சீவி விதையை பொடி செய்து காலை, இரவு இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும்.
ஆண்களுக்கு
* முருங்கை விதை, வாதுமை விதைகள், நெருஞ்சில் விதை, நீர்முள்ளி விதை, ஆலம் விதை, பூனைக்காலி விதை, முள்ளங்கி விதை போன்றவை விந்தணுக்களை அதிகரிக்கும்.
* விறைப்புத்தன்மை குறைபாடுகள் சீராக, நிலப்பனைக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, அமுக்கரா கிழங்கு, பூமிசர்க்கரைக் கிழங்கு, சாதிக்காய், சாதிபத்திரி, மதனகாமப்பூ, கசகசா, வாலுழுவை போன்ற மூலிகைகள் நல்ல பலனைத் தரும்.
* உடல் பருமன் இருந்தால் அதைக் குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆண், பெண் இருவரும் தினமும் ஹெகல் பயிற்சி செய்து வர நல்ல பலன் கிடைக்கும். அதிக கலோரி ஆற்றலைத் தரும் இனிப்பு வகைகள், பேக்கரி உணவுகள், நொறுக்குத் தீனிகள் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* மன அழுத்தம், மன உளைச்சல், மனக்கவலை இன்றி ஒருமித்த உணர்வுடன், பிரார்த்தனைகளுடன் கணவன்-மனைவி சேரும்போது, இல்லத்தில் துள்ளி விளையாட பிள்ளைச் செல்வம் பிறக்கும்.
- நடைபயிற்சி, சைக்கிள், நீச்சல் ஆகியவை நல்ல தேர்வுகள், ஏனெனில் இவை அதிகமாக முதுகை சிரமப்படுத்துவது இல்லை.
- எண்ணெய் மசாஜ் செய்யும்போது அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம் மேம்படுகிறது.
முதுகு வலி என்பது பலவித உடல் நலப் பிரச்சனைகளினால் ஏற்படுகிறது. முதுகு வலி எந்த நோயுடன் தொடர்பு உடையது என்பதை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுக்க வேண்டும்.
முதுகு வலிக்கான பொது காரணங்கள்:
தசைப் பிடிப்புகள், முதுகு எலும்புகளுக்கு இடையில் மெத்தைகளாக செயல்படுகின்ற வட்டுகள் வீங்கி அல்லது விலகி நரம்புகளை அழுத்துவதால் ஏற்படுகிற முதுகு வலி, குமட்டாய்டு (கீல் வாத) நோய்கள், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை (எலும்புகளில் கால்சியம் மற்றும் வைட்டமின்டி குறைவினால் நுண்துளைகள் ஏற்பட்டு உடையக்கூடியதாக மாறினால் முதுகெலும்புகளில் வலி ஏற்படும்), அன்கிலோசிங் ஸ்பான்டை விடிஸ், சயாட்டிகா, சாக்ரோலைடிஸ், குடல் பிரச்னைகள், சிறுநீரக பிரச்சனைகள், கர்ப்பப்பை பிரச்சனைகளிலும் முதுகு வலி ஏற்படும். விபத்துக்கள், அடிபட்ட காயங்கள், இவற்றைத் தொடர்ந்தும் முதுகில் வலி, குத்தல் ஏற்படும்.
இந்த நோய்க்கான மருத்துவ பரிசோதனைகள்:
இமேஜிங் (எம்.ஆர்.ஐ மற்றும் சிடி ஆய்வுகள்)
முதுகு வலிக்கான தடுப்பு முறைகள்
உடற்பயிற்சி:
தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் முதுகில் வலிமையும், நெகிழ்வுத் தன்மையும் அதிகரித்து தசைகள் சிறப்பாக செயல்பட உதவும். நடைபயிற்சி, சைக்கிள், நீச்சல் ஆகியவை நல்ல தேர்வுகள், ஏனெனில் இவை அதிகமாக முதுகை சிரமப்படுத்துவது இல்லை.
உடல் எடை:
ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும். அதிக எடை இருப்பது முதுகின் தசைகளை சிரமப்படுத்துகிறது.
எண்ணெய் மசாஜ்: மசாஜ் செய்யும்போது அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம் மேம்படுகிறது. தசை இறுக்கம், சோர்வு, வலி, இவைகளை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.
சித்த மருத்துவ சிகிச்சைகள்
1) அமுக்கரா சூரணம் 1 கிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி., ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்திரில் சாப்பிட வேண்டும்.
2) வலியுடன் கூடிய வீக்கத்திற்கு சேராங் கொட்டை நெய் 5-10 மி.லி. வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
3) முதுகு வலி உள்ள இடத்தில், வாதகேசரி தைலம், சிவப்பு குங்கிலியத் தைலம், கற்பூராதி
தைலம் இவைகளில் ஒன்றைத் தேய்ந்து நொச்சி பழுத்த எருக்கு இலை, தழுதாழை, வாதநாராயணன் இலைகளை வதக்கி இளஞ்சூட்டில் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.
சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
- பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
- கருணைக் கிழங்கை புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.
மூல நோய் என்பது மருத்துவத்தில், 'ஹெமராய்ட்ஸ்' அல்லது 'பைல்ஸ்' என்று குறிப்பிடப்படுகிறது. பெருங்குடலின் கடைசிப் பாகம் முதல் ஆசனவாய் வரையுள்ள ரத்த நாளங்கள் புடைத்து வீங்கி வலியைத் தருவதைத் தான் 'மூலம்' என்கின்றோம்.
ஆசன வாயில் உள்ள வெண் கோடு போன்ற பகுதிக்கு மேலே தோன்றுவது 'உள்மூலம்' என்றும், கோட்டிற்கு கீழே தோன்றுவது 'வெளிமூலம்' என்றும் பிரிக்கப்படுகிறது.

மூல நோய் எதனால் ஏற்படுகின்றது?
'அனில பித்த தொந்த மலாது மூலம் வராது' என்று சித்தர் தேரையர் பாடல் கூறுகின்றது. அதிகரித்த நாள்பட்ட அபான வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வயிற்றின் அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகிலுள்ள தசைகளில் ஏற்படும் பலகீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, எப்போதும் இருக்கை நிலையில் இருப்பது போன்ற காரணங்களினால் மூலநோய் ஏற்படுகின்றது.
ஆசனவாயில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிதல், உடல் எடை மெலிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

உணவு பழக்கம்
துத்திக் கீரையுடன், சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.
கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.

பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
காரநூல் சிகிச்சை
மருந்துகளினால் தீராத மூல நோய்க்கு சித்தர்கள் கூறியுள்ள பாரம்பரிய 'காரநூல்' அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காணலாம். காரநூல் என்பது உறுதியான லினன் நூலை, நாயுருவி உப்பு, மஞ்சள், உத்தாமணிப் பால், எருக்கம்பால் போன்றவைகளைக் கொண்டு முறைப்படி செய்து மூலம் பாதித்த பகுதிகளை அந்த நூலினால் இறுக்கிக்கட்டி விடும் முறை. இது மூலத்தை அறுத்து புண்ணை ஆற்றும் இயல்புடையதால் நோயாளிக்கு எந்த பக்க விளைவுகளும் கிடையாது.
- செல்கள் கட்டுப்பாட்டை மீறி அசாதாரணமாக வளரும்போது ரத்த புற்றுநோய் ஏற்படுகிறது.
- பிளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன.
ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள் உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகின்றன. வெள்ளை ரத்த அணுக்கள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பிளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன. இதில் ரத்தத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி அசாதாரணமாக வளரும்போது ரத்த புற்றுநோய் ஏற்படுகிறது. இது மூன்று வகைப்படும்.

லுகேமியா:
எலும்புகளுக்குள் இருக்கும் பஞ்சுபோன்ற திசுக்களான எலும்பு மஜ்ஜையில் உள்ள ரத்தத்தை உருவாக்கும் செல்களில் லுகேமியா தொடங்குகிறது.

லிம்போமா:
இது நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் லிம்போசைட்டுகள், வெள்ளை ரத்த அணுக்களில் தொடங்குகிறது. நிணநீர் மண்டலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மல்டிபிள் மைலோமா:
இது எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களைப் பாதிக்கிறது. பிளாஸ்மா செல்கள் நோயெதிர்ப்பு அமைப்பு தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன.
அறிகுறிகள்
லுகேமியாவின் அறிகுறிகள் அந்த நோயின் வகையைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும். எளிதில் சிராய்ப்பு அல்லது ரத்தப்போக்கு, அதிகப்படியான வியர்வை, இரவில் சோர்வு அல்லது பலவீனம், காய்ச்சல் மற்றும் குளிர், அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றுகள், பசியின்மை, குமட்டல் மற்றும் எடை இழப்பு, எலும்புகள் அல்லது மூட்டுகளில் வலி, வீங்கிய நிணநீர் சுரப்பிகள், குறிப்பாக கழுத்து, அக்குள் அல்லது இடுப்புப் பகுதிகளில் வீங்குதல், கல்லீரல் அல்லது மண்ணீரல் வீக்கம், தோலில் சிறிய சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்றவை இதற்கான அறிகுறியாகும்.

பரிசோதனைகள்
ரத்த சோகையால் வெளிறிய தோல், நிணநீர் கணுக்களின் வீக்கம் மற்றும் கல்லீரல், மண்ணீரலின் வீக்கம் இவற்றின் மூலம் இந்த நோயை அறியலாம். ரத்த பரிசோதனையில் அசாதாரண சிவப்பு அல்லது வெள்ளை ரத்த அணுக்கள் அல்லது பிளேட்லெட்டுகள் உள்ளதா என்பதை பார்க்கலாம். இடுப்பு எலும்பில் இருந்து எலும்பு மஜ்ஜையின் மாதிரியை எடுத்து லுகேமியா செல்களைக் கண்டறியலாம்.
சித்த மருத்துவம்

நித்திய கல்யாணி:
இது எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தாவரம். இந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படும் வின்கிரிஸ்டின் மற்றும் வின்பிளாஸ்டைன் மருந்துகள் ரத்த புற்று நோய்க்கு மருந்தாக நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் கொடிவேலி மாத்திரை, சேராங்கொட்டை நெய் போன்ற மருந்துகள் ரத்தப்புற்றுநோய் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.
துளசி
இதன் இலைகளில் உள்ள தைமோல் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இயற்கையிலேயே புற்றுநோய் எதிர்ப்புச் செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இவை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது.
மஞ்சள்:
இதில் உள்ள குர்குமின் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது.
பூண்டு:
இதில் உள்ள அலிசின், டைஅலைல் சல்பைடுகள் அசாதாரண செல் பிரிவைத் தடுத்து புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டை செய்கிறது.
இஞ்சி:
இதில் உள்ள ஜிஞ்சிரால், புற்றுநோய்க்கு எதிரான செயல்பாடுகளை கொண்டுள்ளது.

முள்சீத்தாப்பழம்:
இதில் உள்ள ரெட்டிகுலின், கோரெக்சிமைசின் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பில் சிறந்த பங்காற்றுகிறது.
கருஞ்சீரகம்:
இது முழுமையாக புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதன் உயிர்வேதியியல் கலவையான தைமோகுவினோன் புற்றுநோய் செல்களை தடுக்கிறது, மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
வாழ்வியல் முறை
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது செய்ய முடிந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் நீங்க இறை பிரார்த்தனை, தியானம் செய்ய வேண்டும்.
நவீன மருத்துவத்தில் புற்று நோய்களுக்கு விரிவான சிகிச்சைகள் உள்ளன. நோயாளிகள் அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே புற்றுநோய் என்ற உடன் நோயாளிகள் பயப்பட வேண்டாம். குணப்படுத்தக் கூடிய புற்று நோய்களும் உண்டு. எனவே நோயாளிகள் மனம் தளராமல் சிகிச்சை பெறுவது நல்லது.
- பெண்களை கவலை கொள்ளும் விஷயம் கூந்தல் உதிர்வு.
- பல்வேறு காரணங்களால் கூந்தல் உதிர்வு பிரச்சனை வருகிறது.
தலை முடி உதிர்வுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பயோட்டின் குறைபாடுகள், மனக்கவலைகள், தூக்கமின்மை, உடல் சூடு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, பொடுகு போன்றவை முக்கிய காரணமாக உள்ளன.
இதற்காக பயன்படுத்த வேண்டிய சித்த மருந்துகள்:
1) அயச் சம்பீர கற்பம் 200 மி.கி. அல்லது அய பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி. எடுத்துக்கொண்டு இவற்றுடன் கரிசாலை சூரணம் ஒரு கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
2) தலைக்கு செம்பருத்தி பூ தைலம் அல்லது கரிசாலை தைலம் தேய்த்து குளித்து வர வேண்டும்.
3) வாரம் ஒரு முறை கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வெண் மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து இவைகளை சம அளவில் எடுத்து பொடித்து பாலில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர வேண்டும். இதனால் பொடுகு, உடல் சூடு நீங்கும், உடல் குளிர்ச்சி அடையும், கண் ஒளி கூடும்.
உணவில் முட்டை, பால், கருவேப்பிலை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பச்சைப் பட்டாணி, முருங்கை கீரை, வேர்க் கடலை, பேரீச்சம் பழம், மாதுளம்பழம் இவைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- இதற்கு எளிய சித்த மருத்துவ தீர்வுகளை பார்க்கலாம்.
- குளிர் காலத்தில் இந்த பிரச்சினையை பலர் சந்திக்கலாம்.
சிலருக்கு அடிக்கடி தொண்டையில் கரகரப்பு காணப்படும். சிலருக்கு புண்கள் ஏற்படுவதும் உண்டு. இதனால் சாப்பிட முடியாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக குளிர் காலத்தில் இந்த பிரச்சினையை பலர் சந்திக்கலாம். இதற்கு எளிய சித்த மருத்துவ தீர்வுகள்:
மஞ்சள் தூள், உப்பு கலந்த வெந்நீரால் வாய், தொண்டையை கொப்பளித்து வர வேண்டும்.
காலை, இரவு வேளைகளில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு கலந்த பாலை குடிக்கலாம்.
ஆடாதோடை இலை, அதனுடன் 5 மிளகு, சுவைக்காக சிறிதளவு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு மென்று சாப்பிட்டு வர தொண்டை வலி, கரகரப்பு நீங்கும்.
கிராம்பு-2, சிறிதளவு அதிமதுரம், சுக்கு, மிளகு, லவங்கப்பட்டை இவைகளை டீ போன்று தயாரித்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
திரிகடுகு சூரணத்தை 500 மில்லி கிராம் அல்லது அரை டீ ஸ்பூன் வீதம் இருவேளை தேன் அல்லது வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம்.
சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் தாளிசாதி வடகம், துளசி வடகம் போன்ற மாத்திரைகளை 2 வீதம் இருவேளை கடித்துச் சாப்பிடலாம்.
வசந்த குசுமாகர மாத்திரை 2, லவங்கம் 2 எடுத்து, இவற்றை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சுவைத்து சாப்பிடலாம்.
- நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கும்.
- குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம்.
குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். சரியாக சாப்பிடவும் மாட்டார்கள். குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கும். ஆகவே குழந்தைகள் பசி எடுத்து சாப்பிட பஞ்ச தீபாக்கினி லேகியம் கால் முதல் அரை டீ ஸ்பூன் காலை, இரவு இருவேளை கொடுக்கவும். இது பசியை தூண்டும், நல்ல சீரணமுண்டாகும். அதுபோல, நெல்லிக்காய் லேகியம் அரை முதல் ஒரு டீஸ்பூன் காலை, இரவு கொடுக்க வேண்டும். இதிலுள்ள வைட்டமின் சி, கால்சியம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
இவை தவிர பொதுவாக, திரிபலா சூரணம் குழந்தைகளுக்கு 200-500 மி.கி. அளவில் கொடுக்கலாம், இரவு வேளையில் கொடுப்பது நல்லது. இதனால் பக்க விளைவுகள் இல்லை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். அன்றைக்கு வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- சினைமுட்டை முதிர்ச்சி அடையாமல் நீர்க்கட்டிகளாக மாறுகின்றது.
- PCOD பிரச்சினை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுகிறது.
சினைப்பை நீர்க்கட்டி (PCOD) பிரச்சினை ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்குரிய ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும், பெண்மைக்குரிய ஹார்மோன்கள் குறைவாக இருக்கும். இதனால் சினைமுட்டை முதிர்ச்சி அடையாமல் நீர்க்கட்டிகளாக மாறுகின்றது.
இதற்கு, குமரி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம். அடுத்து, கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை மூன்றையும் சமஅளவு எடுத்து பொடித்து ஒரு டீஸ்பூன் வீதம் காலை, இரவு பனை வெல்லத்தில் கலந்து சாப்பிட வேண்டும். மேலும், கழற்சிக்காய் பொடி-500 மி.கி., மிளகு பொடி -200 மி.கி. சேர்த்து வெந்நீரில் காலை, இரவு சாப்பிட வேண்டும்.
நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். மனஅழுத்தம் இன்றி இருப்பது அவசியம்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது
- தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து.
சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பழமையான மூலிகை மருந்து கருஞ்சீரகம். 100 கிராம் கருஞ்சீரகத்தில் கார்போஹைட்ரேட் 24.9, புரதம் 26.7, கொழுப்பு 28.5 சதவீதத்தில் உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி மற்றும் லினோலெய்க் அமிலம் நிறைந்துள்ளது. இதிலுள்ள 'தைமோகுயினோன்' என்ற தாவர வேதிப்பொருள் மிகச்சிறந்த ஆன்ட்டி ஏஜிங், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும்.
இது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதிலும், உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சீராக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. கருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய் சத்து கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய செயல் பாட்டை ஊக்குவிக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து.
இதை தினசரி உண்ணும் அளவு 1-3 கிராம். இதை வறுத்து பொடித்து டீ போல போட்டு குடிக்கலாம். அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாவில் சேர்த்து பயன்படுத்தலாம்.
கருஞ்சீரக விதைக்கு மாதவிடாயை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பிணிகள் பயன்படுத்தக்கூடாது. ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இதை அளவோடு எடுக்க வேண்டும், ஏன் எனில் இது ரத்த அழுத்தத்தை சிறிது குறைக்கும். கருஞ்சீரகத்தை தினமும் அளவோடு எடுத்து வந்தால் `இது ஆயுள் காக்கும் இறை மருந்து' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தைப்பேறு தாமதமாகும்.
- சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன.
உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தைப்பேறு தாமதமாகும். தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்தப்பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அவை:
1) அமுக்கரா சூரணம் 1 கிராம், பூரண சந்திரோதய செந்தூரம் 100 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. என்ற அளவில் எடுத்து தினமும் காலை-இரவு, பாலில் கலந்து உணவுக்குப் பின்பு சாப்பிடலாம்.
2) பூனைக்காலி விதைப் பொடி 1 கிராம் எடுத்து பாலில் கலந்து காலை, இரவு குடிக்கலாம்.
3) நெருஞ்சில் விதைப் பொடி, நீர்முள்ளி விதைப்பொடி சம அளவில் பொடித்து பாலில் கலந்து சாப்பிடலாம்.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அசைவ உணவுகள்: நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்திச்சாளை மீன்கள்,
பருப்பு வகைகள்: பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள்,
பழங்கள்: செவ்வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், பேரீச்சம் பழம், திராட்சை பழம், பெர்ரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளம்பழம்,
கீரைகள்: பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, தக்காளி, புடலங்காய், அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு மற்றும் சின்ன வெங்காயம், பூண்டு இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மது, புகைப்பழக்கம் கூடாது.
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)






