என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • காதலன் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
    • காதலன் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் சிறுமி, பாகூர் பகுதியில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து பெற்றோர் அளித்த தகவலின் பேரில் பாகூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி வந்து காதலன் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் காதலன் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து போலீசார் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காதலன் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இவ்வழக்கில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காதலன் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களை தேடி வருகின்றனர். மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 மாணவர்களும் பள்ளி படிப்பை இடையிலேயே கைவிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண் பலியான நிலையில் உடன் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரியில் கூடப்பாக்கம் அருகே பைக்கில் எடுத்துச்சென்ற வெடிமருந்து எதிர்பாராத விதமாக வெடித்ததில் பெண் பலி, மேலும் ஒருவர் படுகாயம்

    பைக்கில் சென்ற இருவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தோர் எனத் தகவல்; காட்டுப்பன்றி வேட்டைக்காக வெடிமருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.

    வெடி மருந்து வெடித்ததில் நரிக்குறவர் இன பெண் பலியான நிலையில் உடன் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
    • பண தேவைக்காக கஞ்சாவை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்றது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்கில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    இதில் ஒருவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர் என்பதும் மற்றொருவர் புதுச்சேரியில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வரும் வாலிபர் என்பதும் தெரியவந்தது.

    மேலும் இவர்கள் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து பயன்படுத்தி வந்ததும், பின்னர் பண தேவைக்காக கஞ்சாவை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 110 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • ஏற்கனவே சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவும் பெறப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. உறுதியாக உள்ளது. இதனால் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப தலைவிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல பிரிவுகளில் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பொங்கல் தொகுப்புடன் தமிழகம்போல பரிசுத் தொகை வழங்கவும் புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. காலியாக உள்ள அரசின் அனைத்து பணியிடங்களையும் நிரப்பும் வகையில் அரசு தேர்வு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு ஆணையம் மூலம் 10-ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்தவர்களுக்கு பணிக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் உடல் தகுதி தேர்வு நடந்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 பேர் கொண்ட 2-வது ஐ.ஆர்.பி.என். படை அமைக்கவும் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ராஜீவ்காந்தி சிலை முதல், இந்திராகாந்தி சிலை வரை சுமார் ரூ.600 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி புதுச்சேரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வளர்ச்சி திட்டங்களுக்காகவும் மத்திய அரசிடம் கூடுதல் நிதியை கேட்டுள்ளனர். இந்த நிதியும் விரைவில் வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

    பிரதமர் புதுச்சேரிக்கு வரும்போது பல்வேறு திட்டங்கள் செயல்வடிவம் பெறும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சூசகமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆட்சியை தக்க வைப்பதில் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. முனைப்புடன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

    அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். கைநழுவி போன புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என நிரூபிக்க தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தி.மு.க.வும் கால் நுாற்றாண்டாக இல்லாத ஆட்சியை தங்கள் தலைமையில் மீண்டும் கொண்டுவர வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியை உற்சாகப்படுத்தி உள்ளது. காங்கிரஸ், தி.மு.க.வுக்கு கட்சி தலைமை மூலம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவும் பெறப்பட்டு வருகிறது.

    அதோடு ஆட்சியின் அவலங்களை தொடர்ந்து காங்கிரஸ், தி.மு.க. மக்களிடம் கூறி வருகின்றனர். சமீபத்தில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தை இந்தியா கூட்டணி கையில் எடுத்து அரசுக்கு எதிராக தொடர் பிரசாரம் செய்து வருகிறது. இதில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.

    இதேபோல ஆளும் அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ், தி.மு.க. கூறி வருகிறது. இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 21-ந்தேதி முதல் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரசார் பாதயாத்திரை நடத்த உள்ளனர்.

    இந்த பாதயாத்திரை 15 நாட்கள் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. இதை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்துள்ளார். பாத யாத்திரைக்கான கையேடையும் வெளியிட்டுள்ளார். ஆட்சியின் அவலங்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புதுச்சேரி தாத்தா என்ற பெயரில் விமர்சனம் செய்யும் வீடியோக்களையும் காங்கிரஸ் வெளியிட்டு வருகிறது. இதற்கான கி.யூ.ஆர். கோடையும் காங்கிரஸ் தலைவர் வெளியிட்டுள்ளார்.

    இதன்மூலம் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே புதுச்சேரியில் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    • உயர்த்தப்பட்ட உதவித்தொகை வருகிற 12-ந் தேதி, அல்லது பொங்கலுக்கு பின் வழங்கப்படும்.
    • மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    எங்கள் அரசு பொறுப்பேற்ற பின் பல உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. பொதுப்பணி, உள்ளாட்சி மூலம் பல பணிகள் செய்யப்பட்டுள்ளது. புதுவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது, நல்ல கல்வி, மருத்துவ வசதி, அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

    மக்கள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று, சட்டசபை வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றியுள்ளது. எல்லா தொகுதியிலும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவை மாநிலம் ஒட்டு மொத்த வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

    4 பிராந்தியத்திலும் இன்னும் பல மக்கள் நல பணிகள் தொடங்கப்பட உள்ளது. நல்ல அரசாக செயல்பட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.

    அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 500 ஆக வழங்குவதாக அரசு அறிவித்தது. மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1000-ம் முதலில் வழங்கப்படும். உயர்த்தப்பட்ட உதவித்தொகை வருகிற 12-ந் தேதி, அல்லது பொங்கலுக்கு பின் வழங்கப்படும். மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உட்பட உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

    இந்த தொகையும் விரைவில் உயர்த்தி வழங்கப்படும். புதுவையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கலுக்கு எந்தளவுக்கு பரிசு தொகை தரமுடியுமோ அவை வழங்கப்படும். போலி மருந்து விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையாக அறிக்கை வெளியிடப்படும் என்றார். 

    • மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை ‘மிஸ்’ பண்ணுகிறேன்.

    புதுச்சேரி:

    கடந்த மாதம் 9-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த கட்சி தொண்டர்கள் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. அவர்களை மைதானம் உள்ளே அனுமதிக்கும் பொறுப்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஆர்.பி.என். கமாண்டன்டுமான இஷா சிங்கிற்கு வழங்கப்பட்டது.

    தொண்டர்கள் காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வரத் தொடங்கினர். அவர்கள் முண்டியடித்து உள்ளே செல்லும்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிடம் 'மைதானத்தில் ஏராளமாக இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றார். இதனால் ஆவேசம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், சிங்கப்பெண்ணாக மாறி, தனி ஆளாக நின்று கெத்து காட்டினார். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதன் பின்னர் இஷா சிங்கிற்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்தன.

    இந்த நிலையில் மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி மக்கள் சிலர், சமூக வலைதளத்தில் இஷா சிங் சீருடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் உள்ள 'மெல்ல விடை கொடு.. விடை கொடு.. மனமே, இந்த நினைவுகள் நினைவுகள் கனமே, தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம், இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே, சில அழகிய வலிகளும் தருதே, போகின்றோம், போகின்றோம் தூரம் தூரம், ஓ ஓஹோ.. ஓ ஓ ஹோ... என்னை விட்டு செல்லும் உறவுகளே ஓ ஓ ஹோ'. என்னும் பாடலை ரீல்ஸ்சாக வெளியிட்டுள்ளனர். மேலும் 'மிஸ்.யூ.மேம்', உங்களது கடின உழைப்பு மற்றும் சிறந்த சேவைக்கு 'ராயல் சல்யூட்' என்று குறிப்பிட்டிருந்தனர்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக இஷா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை 'மிஸ்' பண்ணுகிறேன். நான் டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்' என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங்கின் தந்தை, தாத்தாவும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான். இவரது தாயார் மும்பை கோர்ட்டு வக்கீல் ஆவார். சமூக சேவையில் அக்கறை கொண்ட இஷா சிங், தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன.
    • அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    புதுச்சேரி:

    மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. புதுச்சேரியில் இதை அமல்படுத்த அப்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இருப்பினும் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்துறை தனியார் மயமாக்குவதை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரி மின்சார பகிர்மான கம்பெனி என்ற பெயரில் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை மின்துறை ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் குதித்தனர்.

    இதனால் மின் பழுது நீக்குதல், புதிய இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கின. பல இடங்களில் நாள் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்தநிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான 100 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான டெண்டர் தொடர்ந்து பலமுறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. மின்துறையின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நிர்வாக காரணங்களுக்காக டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்துறை தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

    • புதுச்சேரியில் கடந்த மாதம் 9-ந்தேதி த.வெ..க. பொதுக்கூட்டம் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது.
    • எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லித்தரத் தேவையில்லை, என்று தனி ஆளாக நின்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த மாதம் 9-ந்தேதி த.வெ..க. பொதுக்கூட்டம் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 5 ஆயிரம் பேருக்கு மட்டும் பாஸ் வழங்கப்பட்டது. தொண்டர்களை மைதானம் உள்ளே அனுமதிக்கும் பொறுப்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டான இஷா சிங்கிற்கு வழங்கப்பட்டது.

    கூட்டத்திற்கு காலை முதலே தொண்டர்கள் குவியத்தொடங்கினர். இதற்கிடையே கூட்டம் அதிகரித்தபோது தொண்டர்கள் முண்டி அடித்துக்கொண்டு உள்ளே செல்ல முயற்சி செய்தனர். நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சினியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிடம், மைதானத்தில் ஏராளமான இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே அனுமதிக்கலாம் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதனால் ஆவேசம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், சிங்கப்பெண்ணாக மாறி, காவல்துறை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் சொல்லாதீர்கள். கரூரில் 41 பேர் உயிரிழந்ததை மறந்து விட்டீர்களா? இங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள். எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லித்தரத் தேவையில்லை, என்று தனி ஆளாக நின்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து அவரை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் பாராட்டுகள் குவிந்தன. இதனால் அவர் உயர் போலீஸ் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

    • மக்கள் யாருக்கும் இன்று பாஜகவை தாண்டி வேறு எந்தக் கட்சிமீதும் நம்பிக்கை வரவில்லை.
    • எல்லா சலுகைகளும் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது

    புதுச்சேரியில் இன்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்ற பாஜக அனைத்து பிரிவுகளின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் குஷ்பு சுந்தர், தமிழ்நாடு அனைத்துப் பிரிவுகளின் மாநில அமைப்பாளர் ராகவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பேசிய குஷ்பு,

    "இந்தியா இன்று பொருளாதாரத்தில் 4வது இடத்தில் உள்ளது என்றால், அதற்கு பிரதமர் மோடிதான் காரணம். மக்கள் அவர்மீது வைத்துள்ள நம்பிக்கைதான் காரணம். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்ன செய்துக் கொண்டிருக்கிறார்? காலையில் எழுந்தால் ராகுல் காந்தியின் முதல்வேலை இன்று மோடியை எவ்வாறு திட்டுவது? தவறுகள் இல்லையென்றாலும் அவறேக் கூறுவது. வாக்குத்திருட்டு என்று கூறுகிறார். காங்கிரஸ் வெற்றிப் பெற்றால், வாக்குத்திருட்டு இல்லையா? அப்போது மட்டும் ஈவிஎம் சரியாக இருக்கிறதா? கொஞ்சம் வளருங்கள். சின்னக்குழந்தை மாதிரி பேசாதீர்கள். உலகத்தை கவனியுங்கள்.

    மக்கள் யாருக்கும் இன்று பாஜகவை தாண்டி வேறு எந்தக் கட்சிமீதும் நம்பிக்கை வரவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை. அடுத்தமுறையும் திமுக வந்துவிடும் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படி வரும்? எது கேட்டாலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனக்கூறுவது. எல்லா சலுகைகளும் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. திமுக பாஜகவின் எதிரி மட்டும் கிடையாது. மக்களின் எதிரி, இந்த நாட்டின் எதிரி, சனாதனத்தின் எதிரி, இந்து மக்களுடைய எதிரி, ஏன் கடவுளுக்கே எதிரி". எனப் பேசியுள்ளார். 

    • பரிசு பொருட்களை பெற பொதுமக்கள் தயாராக இருந்தனர்.
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத காரணத்ததால் விழா திடீரென தள்ளி வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் ஆண்டு தோறும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி 4 கிலோ பச்சரிசி, 1கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பாசி பருப்பு, 300கிராம் நெய், சமையல் எண்ணெய் 1 லிட்டர் உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசின் கான்பெட் நிறுவனம் டெண்டர் விட்டது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இதன் தொடக்க விழா நேற்று மாலை 4 மணிக்கு சண்முகாபுரத்தில் உள்ள ரேசன் கடையில் நடைபெறும் என்றும், இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அந்த கடையில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் அனைத்தும் எடுத்து தயாராக வைக்கப்பட்டு இருந்தது. பரிசு பொருட்களை பெற பொதுமக்கள் தயாராக இருந்தனர்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத காரணத்ததால் விழா திடீரென தள்ளி வைக்கப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

    பொங்கல் தொகுப்பு பொருட்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அழைப்பிதழில் கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

    சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம்பெறவில்லை. இதனை அறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அழைப்பிதழில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லை என துறை அதிகாரிகளை கண்டித்துள்ளார்.

    மேலும் அழைப்பிதழில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெயர்களை இடம்பெற செய்து அவர்களுக்கு அழைப்பு விடுத்து விட்டு விழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாகவே பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும்.
    • கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி என்றாலே மதுபானத்துக்கு பெயர் பெற்றதாகும். இங்கு பலவிதமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் புதுச்சேரிக்கு வந்து மதுகுடிப்பது வழக்கம். சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும். வார இறுதி நாட்களில் அது சற்று உயரும்.

    இந்தநிலையில் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள், மது பிரியர்கள் கடந்த ஒருவாரமாக புதுச்சேரியில் குவிந்தனர். இதன் காரணமாக மது விற்பனையும் அமோகமாக நடந்தது.

    மது விற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகரித்துள்ளது.

    • கைது செய்த 11 மீனவர்களை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
    • விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் என தெரியவந்தது.

    தமிழக-புதுச்சேரி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி சென்றதாக கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மின்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி சென்றதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த 11 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகம் வடமேற்கு கடற்பரப்பில் இன்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகை பறிமுதல் செய்து 11 மீனவர்களையும் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கைது செய்த 11 மீனவர்களையும் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் என தெரியவந்தது.

    விசாரணை முடிந்து மீனவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    தமிழக-புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வரும் நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து தீர்வு காணவேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    ×