search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை தேர்தல்"

    • நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது.
    • ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சாவித்ரி ஜிண்டால் வெற்றி பெற்றார்.

    அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெற்று 3 ஆவது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

    நயாப் சிங் சைனி மீண்டும் அரியானா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. .

    இந்நிலையில், அரியானா தேர்தலில் வெற்றி பெற்ற 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களான சாவித்ரி ஜிண்டால், தேவேந்தர் கத்யான், ராஜேஷ் ஜூன் இன்று பாஜகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

    மத்திய அமைச்சரும் அரியானா மாநில பாஜக. பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சந்தித்து, பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் ஹரியானாவில் பாஜகவின் பலம் 51 ஆக அதிகரித்துள்ளது.

    நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது. இதனையடுத்து அவர் ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்

    பாஜகவில் இருந்து அதிருப்தி காரணமாக பிரிந்து சென்ற தேவேந்தர் கத்யான் கனார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். அதேபோல் பாஜகவில் இருந்து விலகிய ராஜேஷ் ஜூன் பகதூர்கர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார்.

    • அரியானா தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
    • தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட உள்ளது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அங்கு பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

    லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன.

    இந்த தேர்தலில் 2 முறை ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.க. 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.

    முதல் மந்திரி நயாப் சிங் சைனி, முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகத், ஜேபிபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட 1027 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மக்கள் வாக்களிக்க வசதியாக 20,632 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

    காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநில தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
    • கடந்த 5 ஆண்டுகளில் இவர் 4 முறை வெவ்வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளார்.

    அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

    வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் பாஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    இன்று காலையில் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு, அடுத்த 2 மணி நேரத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் முன்னாள் எம்.பி. அஷோக் தன்வார் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் இவர் 4 முறை வெவ்வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளார். 2019ல் காங்கிரசில் இருந்து விலகி, 2021ல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். பின்பு அடுத்த ஆண்டே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி ஆம் ஆத்மி கட்சிக்கு தாவினார். அதன் பிறகு அங்கிருந்து பாஜகவுக்கு சென்ற அவர், 2024 தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பெற, பாஜகவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசுக்கே திரும்பியுள்ளார். 

    • தமிழ்நாடு, குஜராத் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை.
    • தமிழ்நாடு, குஜராத் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை. கூட்டத்தில் தேர்தல் பணிகளை எவ்வாறு நடத்துவது என்று விவாதித்தனர்.

    சென்னை:

    மராட்டிய மாநில சட்ட சபைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள் பா.ஜ.க. தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

    மும்பையில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். அவர்கள் மத்தியில் ஆதரவு திரட்டுவதற்காக அந்த மாநிலங்களை சேர்ந்த பா.ஜ.க.வினரை அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.

    அதன்படி தமிழ்நாடு, குஜராத் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். மும்பையில் நடந்த இந்த கூட்டத்துக்கு மத்திய மந்திரியும் தேர்தல் பொறுப்பாளருமான பூபேந்திர யாதவ், இணை பொறுப்பாளர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கருப்பு முருகானந்தம், ஏ.கே.முருகானந்தம், வினோஜ் செல்வம், கரு நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    கூட்டத்தில் தேர்தல் பணிகளை எவ்வாறு நடத்துவது என்று விவாதித்தனர். தேர்தல் தேதி அறிவித்ததும் தலைவர்களுக்கு ஒதுக்கப்படும் பகுதிகள், வீடு வீடாக சென்று ஆதரவு திரட்ட வேண்டியவர்கள் அவர்களுக்கான பகுதிகள், அமைப்பு ரீதியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியவர்கள் என ஒவ்வொரு வருக்கும் பணிகள் பிரித்து கொடுக்கப்பட உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இது பற்றிய பட்டியல் தயாரித்து வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்கள்.

    • ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரசார கூட்டத்தில் பேசினார்.
    • அப்போது அவர், பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை உயிருடன் இருப்பேன் என்றார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. முதல் இரு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை மறுதினம் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கார்கேவுருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று உட்காரவைத்தனர். இதையடுத்து, சிறிது ஓய்வெடுத்தபின் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்பப் பெற்றுத்தர போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது. அதே வேளையில், வெகு சீக்கிரத்தில் நான் ஒன்றும் சாகப் போவதில்லை. பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை உயிருடன் இருப்பேன் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

    • முதற்கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.
    • வைஷ்ணவ தேவி பகுதியில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற திட்டமிடப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடந்தது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 7 மணி வரை நடந்தது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் மொத்தம் 54.11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு குறித்து பேசிய ஜம்மு-காஷ்மீருக்கான தலைமை தேர்தல் அதிகாரி பி.கே. போலே, "கத்ரா சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி பகுதியில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன. இங்கு 79.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன."

    "ரியாசி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக 74.14 சதவீதம் வாக்கு பதிவாகி இருக்கிறது. பூஞ்ச் மாவட்டத்தில் 73.78 சதவீதமும், ரஜோரி மாவட்டத்தில் 69.85 சதவீதமும், கந்தர்பால் மாவட்டத்தில் 62.63 சதவீதமும் மற்றும் புத்காம் மாவட்டத்தில் 61.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன," என்று அவர் தெரிவித்தார்.


    • 2வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
    • காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த வாரம் 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்நிலையில், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6 மாவட்டங்களை சேர்ந்த 25.78 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இத்தருணத்தில் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • மராட்டியத்தில் கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
    • 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

    மும்பை:

    மராட்டிய மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய இருக்கிறது. இதையொட்டி வருகிற நவம்பர் மாதம் அங்கு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    மராட்டியத்தில் தற்போது பா.ஜ.க. ஆதரவுடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க. சேர்ந்த பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ளார்.


    வருகிற சட்டசபை தேர்தலிலும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா கட்சியுடன் தேர்தலை சந்திக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

    கடந்த தேர்தலில் ஒன்றிணைந்த சிவசேனா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது. ஆனால் இம்முறை சிவசேனா 2-ஆக பிரிந்து கிடக்கிறது.


    ஏக்நாத் ஷிண்டே பிரிவு பா.ஜ.க. கூட்டணியிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு காங்கிரஸ் கூட்டணியிலும் உள்ளது. இதனால் இம்முறை மராட்டியத்தில் கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதையடுத்து இம்முறை ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. புது வியூகம் அமைத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    தேர்தலை சந்திக்க மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ் உள்பட 13 மூத்த தலைவர்களிடம் பா.ஜ.க. பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது.

    8 மண்டலமாக பிரிக்கப்பட்டு இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 6 மந்திரிகள் மற்றும் 7 மூத்த தலைவர்கள் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக வெற்றி பெறுவது குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கோவா மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் சதீஷ்தோந்த் கொங்கன் மண்டல பகுதியையும், குஜராத் மாநில பொதுச்செயலாளர் ரத்னாகர் வடக்கு மராட்டியம் பகுதிகளிலும், தெலுங்கானா பா.ஜ.க. பொதுச்செயலாளர் சந்திரசேகர் கட்சி பிரசாரத்தையும் கவனிப்பார்கள்.

    மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஹிதானந்த் சர்மா மேற்கு விதர்பா பகுதிகளையும், ஆந்திர பிரதேச பா.ஜ.க. பொதுச்செயலாளர் மதுக்கர் மராத்வாடா மண்டல பகுதிகளையும் கவனிப்பார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ஜம்மு காஷ்மீரில் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட சட்டசபை தேர்தலில் 24 தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (25-ந்தேதி) 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 26 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "பாஜக அரசு மக்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகளான நாம் அவர்கள் முன் நிற்கிறோம். உடனடியாக U Turn எடுக்கிறார்கள். பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக உடைத்துள்ளோம்.

    இந்தியாவில், யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக தரம் உயர்த்தப்பட்டதை நாங்கள் பார்த்தோம், ஆனால் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தப்பட்டுள்ளது. உங்கள் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, உங்கள் மாநிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களின் முதன்மை கோரிக்கை.

    பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் வன்முறை கலாச்சாரத்தை நிலைநிறுத்தி மக்களிடையே பிளவைத் தூண்டுகிறார்கள். அவர்களின் அரசியல் குரோதத்தில் வளர்கிறது.

    ஒரு பக்கம் (பாஜக) முரண்பாட்டை விதைப்பவர்கள் உள்ளனர், மறுபுறம் (இந்தியா கூட்டணி) அன்பை ஊக்குவிப்பவர்கள் உள்ளனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மற்றும் மணிப்பூரிலிருந்து மகாராஷ்டிரா வரையிலான எங்கள் பயணம் வெறுப்பு யாருக்கும் பயனளிக்காது என்ற ஒரே ஒரு செய்தியை கொண்டு சென்றது" என்று தெரிவித்தார்.

    • 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது.
    • 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது. 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

    ராஞ்சி:

    81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் குழு இன்று ஜார்க்கண்ட் சென்றது. 4 கூட்டங்களை இன்று தேர்தல் கமிஷன் நடத்துகிறது.

    அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை மேற்கொண்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஜார்க்கண்டில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

    2019-ம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. டிசம்பர் 23-ந்தேதி தேர்தல் முடிவு வெளியானது.

    • தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர்.
    • 4 முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

    ஸ்ரீநகர்:

    10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.


    இதில் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற முதல் கட்ட சட்டசபை தேர்தலில் 24 தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (25-ந்தேதி) 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 26 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர்.

    2-ம் கட்ட தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, பாரதீய ஜனதா மாநில தலைவர் ரவீந்திர ரெய்னா மற்றும் அப்னி கட்சியின் அல்தாப் புகாரி ஆகிய 4 முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

    2-வது கட்ட தேர்தல் களத்தில் அதிகபட்சமாக ஸ்ரீநகர் மாவட்டத்தில் 93 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பட்காம் மாவட்டத்தில் 46 பேர், ரஜோரியில் 34 பேர், பூஞ்ச் மாவட்டத்தில் 25 பேர், கந்தெர்பால் மாவட்டத்தில் 21 பேர், ரேசி மாவட்டத்தில் 20 பேர் போட்டியிடுகின்றனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து மீட்கப்படும் வரை சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என முன்னாள் முதல்-முந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அவர் இந்த தேர்தலில் கந்தெர்பால் மற்றும் புட்ஹால் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

    இதில் கந்தெர்பால் தொகுதியில் அதிகபட்சமாக 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புட்ஹால் தொகுதியில் 4 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.


    அல்தாப் புஹாரி கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அப்னி கட்சியை தொடங்கினார். அவர் ஸ்ரீநகரில் உள்ள சனாபோரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கராவுக்கும் இந்த தேர்தல் முக்கியமானது. அவர் ஸ்ரீநகரில் உள்ள சென்ட்ரல் ஷால்டெங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
    • மூன்றாம் கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தலில் 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 26 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்ட தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன.

    முதல் கட்ட தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடந்து முடிந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரவு 7.30 மணி நிலவரப்படி 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதிகபட்சமாக கிஷ்ட்வாரில் 77.23 சதவீதமும், குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.03 சதவீத வாக்குகளும் பதிவாகின.

    தேர்தல் அமைதியாக நடைபெற துணை ராணுவப் படையினர், ஜம்மு காஷ்மீர் ஆயுதப் படையினர், போலீசார் ஆகியோர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக அக்டோபர் 1-ம் தேதியும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    ×