search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதயநிதி ஸ்டாலின்"

    • முரசொலி செல்வம் மாமா மறைவால் ஆற்ற முடியாத துயரில் உறைந்து நிற்கிறேன்.
    • செல்வம் மாமா இனி வர மாட்டார் என்று நினைக்கும்போது நெஞ்சம் கலங்குகிறது.

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.

    இந்நிலையில், முரசொலி செல்வம் மறைவுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "எங்களைத் தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க... செல்வம் மாமா! திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் 'முரசொலி' செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது. இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றேன். வழக்கம் போல, முரசொலியில் கட்டுரை எழுதுவதற்காக குறிப்புகளைச் சேகரித்து வைத்துவிட்டு, உறங்கச் சென்றவரை இயற்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.

    கலைஞர் அவர்களின் கொள்கை வார்ப்பு. கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டி, செல்வி அத்தையின் பாசத்துக்குரிய கணவர். எங்களுக்கெல்லாம் கொள்கை உணர்வூட்டிய பண்பாளர். 'முரசொலி' செல்வம் மாமாவின் மரணம், கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே பேரிழப்பு. இந்த ஆற்ற முடியாத துயரில், தவிக்கும் கோடிக்கணக்கானத் தொண்டர்களில் ஒருவனாக உறைந்து நிற்கிறேன்.

    இயக்கப் பணி - பத்திரிகைப் பணி - திரைத்துறை எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த செல்வம் மாமாவின் உழைப்பை சிறு வயதிலிருந்தே நேரில் பார்த்தவன். அவருடன் நெருங்கிப் பழகியவன். கலைஞர் அவர்களைப் போலவே நேர் வகிடு எடுத்துக்கொண்டு, கலைஞரைப் போலவே கையில் முரசொலியோடு வீட்டிற்கு வருகின்ற செல்வம் மாமாவைப் பார்க்கும் போது, கலைஞரையே பார்ப்பது போன்றதோர் உணர்வு எங்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட செல்வம் மாமா, 'இனி, வர மாட்டார்' என்று நினைக்கும்போதே நெஞ்சம் கலங்குகிறது.

    நல்லது, கெட்டது எல்லாத்துலயும், இன்னைக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே என்ற குறையை எனக்குப் போக்கிக் கொண்டிருப்பவர் நம்முடைய முரசொலி செல்வம் அவர்கள் தான்." என்று நம்முடைய கழகத்தலைவர் அவர்கள், 'முரசொலி நினைவலைகள் நூல் வெளியீட்டு விழாவில் உருக்கத்துடன் கூறினார்கள்.

    கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், 2019-ஆம் ஆண்டிலிருந்து கழகத்தில் கழக அரசில் நான் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறேன். அதனைக் காண்பதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இல்லையே என்ற வருத்தம் எனக்கிருந்தாலும், கலைஞர் அவர்கள் இடத்திலிருந்து அந்தக் கவலையைப் போக்கிடக் கூடியவராக முரசொலி செல்வம் மாமா அவர்கள்தான் இருந்தார்கள்.

    எதையுமே எளிய மக்களின் பார்வையிலிருந்து அணுக வேண்டும் என்ற 'உங்களின் குரல்' இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது மாமா! கட்டுரை எழுதுவதற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைப் போலவே, நாங்களும் நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம். மாமா. எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு எங்கே போனீங்க மாமா! என்றும் உங்கள் நினைவுகளோடு உதய்" என்று கூறியுள்ளார்.

    • சமூக மேம்பாட்டுக்கான ரத்தன் டாடாவின் அர்ப்பணிப்பு பல தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும்.
    • ரத்தன் டாடாவின் வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கம் தரும்.

    சென்னை:

    தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தேசத்துக்கும் மக்களுக்கும் ரத்தன் டாடாவின் பங்களிப்பு அளவிட முடியாதது.

    சமூக மேம்பாட்டுக்கான ரத்தன் டாடாவின் அர்ப்பணிப்பு பல தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும்.

    ரத்தன் டாடாவின் வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கம் தரும்.

    இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் டாடா குழுமத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நாட்டை கட்டியெழுப்புவதில் பங்காற்றிய நவீன இந்தியாவின் பொக்கிஷம் ரத்தன் டாடா.

    ரத்தன் டாடாவின் உண்மையான செல்வம் பொருளில் இல்லை. அவரது நேர்மை, தேசபக்தி, நெறிமுறையில் உள்ளது. எனது வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்த கதாநாயகன் ரத்தன் டாடா.

    ரத்தன் டாடா மறைவால் வாடும் டாடா குழுமம் மற்றும் இந்தியர் ஒவ்வொருவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள்.
    • அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!

    கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

    தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

    அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

    என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.

    கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 27 அன்று பிரதமரை சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார்கள்.
    • செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.3585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் 60% பங்களிப்பாக அளிக்க வேண்டியது ரூ.2151.59 கோடி ஆகும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை.

    இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 27 அன்று பிரதமரை சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார்கள். ஆனாலும், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை.

    நமது திராவிட மாடல் அரசு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒன்றிய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யப்படும்.

    ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நம் திராவிட மாடல் அரசு, அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதுப்பொலிவுடன் மெரினா நீச்சல் குளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • மெரினா நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் மெரினா மற்றும் பெரியமேடு மை லேடி பூங்கா ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இதில், மெரினா நீச்சல் குளம் 3½ முதல் 5 அடி வரை ஆழம் கொண்டது. மெரினா நீச்சல் குளத்தை முதலில் மாநகராட்சி பராமரித்து வந்தது. பின்னர், ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இங்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கட்டணம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையே, நீச்சல் குளத்தை தனியார் முறையாக பராமரிக்காததால் சுகாதாரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதேபோல, கடந்த ஆண்டு பெரியமேட்டில் உள்ள உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். இதன் காரணமாக நீச்சல் குளங்களில் பொதுமக்கள் நீச்சல் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மெரினா நீச்சல் குளம் கடந்த ஆண்டு மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இன்று மாலை ரூ.1.37 கோடி செலவில் புதுப்பொலிவோடு மறுசீரமைக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நாளை முதல் மெரினா நீச்சல் குளத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் காலை 5:30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீச்சல் குளம் திறந்திருக்கும். கழிவறை, உடைமாற்றும் அறைகள் போன்ற வசதிகள் என நீச்சல் குளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மெரினா நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி சார்பில் தரப்பட்டுள்ள கியூ.ஆர் கோடை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும். நீச்சல் குளத்தில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அவர்களும் கியூ.ஆர் கோடை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

    இது தொடர்பான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் எக்ஸ் பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் பலரும் விரும்பிச்செல்லும் நீச்சல் குளத்தைக் கழக அரசு ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதுப்பொலிவுடன் மேம்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன நீச்சல் குளத்தை இன்று திறந்து வைத்து, நீச்சல் பயிற்சியையும் தொடங்கி வைத்தோம்.

    அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்ட பின்னர் பாதுகாப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தினோம். மேலும், இப்புதிய நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கான இணையவழி முன்பதிவினையும் தொடங்கி வைத்து வாழ்த்தினோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
    • உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்.

    சென்னை:

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் சட்டை போடாமல் டி சர்ட் போட்டு, அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை இல்லையா? சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம். டி சர்ட் போட்டுக்கொண்டு அதில் அவரது கட்சியின் சின்னத்தை பொறித்துக்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது இல்லை.

    கட்சி நிகழ்ச்சிக்கு எப்படி வேண்டுமானாலும் போங்கள், அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசு நிகழ்ச்சி என்றால் அதற்கு என்று சில விதிகள் உள்ளன.

    2019 ஆம் ஆண்டில் போடப்பட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கண்ணியமான உடையை அணிய வேண்டும். ஆண்களாக இருந்தால் சட்டை, ஃபார்மல் பேண்ட், வேட்டி என தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    டி சர்ட் பாரம்பரிய உடையா? வீட்டில் நடைப்பயிற்சி செல்லும் போது டி சர்ட் போடுவோம்.. அரசு நிகழ்ச்சிக்கு யாராவது டி சர்ட் போட்டு செல்வார்களா? உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதிதான். டி சர்ட் போடுவதை நான் குறை சொல்லவில்லை. கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள்.

    கண்ணியம் என ஒன்று இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும். அதிலும் தப்பு பண்ணக்கூடாது. கட்சியின் சின்னத்தை போட்டு கொடியை போடுவது ஏற்புடையது அல்ல. உடை விஷயத்தை உதயநிதி இப்படியே தொடர்ந்தால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்." என்று அவர் கூறினார்.

    • சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
    • விமானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.

    இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

    விமானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.

    இந்நிலையில், இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன்

    சென்னை மெரினாவின் பிரகாசமான நீல வானத்தில் இந்திய விமானப்படையின் கண்கவர் வானூர்திக் காட்சியை அனுபவிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

    மூச்சடைக்கக் கூடிய வான்வழி காட்சிகளும், துல்லியமான பறப்பும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. இவ்வளவு திறமையையும் அருகில் இருந்து பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது.

    வானத்தில் விமானம் உயரும் போது அனைவரும் ஆரவாரத்துடன் கூடிய சூழல் பிரம்மிப்பாக இருந்தது.

    இந்நிகழ்வை மறக்க முடியாததாக மாற்றியமைத்த அனைத்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
    • புத்தகங்கள் எல்லோருடைய கரங்களிலும் - அவற்றின் கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தவழட்டும்! வெல்லட்டும்!

    சென்னை, கலைவாணர் அரங்கில் எம்.பி. திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

    நூல் வெளியீட்டு விழா குறித்து துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் - தி.மு.கழகத்தின் மாநிலங்களவைக் குழுத்தலைவர் அண்ணன் திருச்சி சிவா அவர்கள் எழுதியுள்ள 5 நூல்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு வாழ்த்திய நிகழ்வில் கலைவாணர் அரங்கில் இன்று பங்கேற்றோம்.

    நம் கழகத்தலைவர் அவர்கள் திமுக இளைஞரணியை தொடங்கிய போது, அதன் வளர்ச்சிக்கு முன்வரிசையில் நின்று உழைத்தவர் அண்ணன் சிவா அவர்கள்.

    இளைஞரணி பயிற்சி பாசறைக் கூட்டம் உட்பட, தான் ஏறுகின்ற மேடைகள் தோறும் திராவிட இயக்கக் கொள்கைகளை ஓர் ஆசிரியரைப் போல அடுத்தடுத்த தலைமுறைக்கும் பாடமெடுக்கும் ஆற்றலுக்குச் சொந்தக்காரர்.

    தனது மேடைப்பேச்சு - 'மிசா' சிறைவாசம் - முரசொலிக் கட்டுரைகள் - பேட்டிகள் - வாட்ஸ் அப் வழி கருத்துக்கள் ஆகியவற்றை புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கும் அண்ணன் சிவாவை வாழ்த்தியும், இச்சிறப்புக்குரிய நிகழ்வுக்கு வந்தோரை வரவேற்றும் உரையாற்றினோம்.

    அண்ணன் சிவா எழுதியுள்ள இப்புத்தகங்கள் எல்லோருடைய கரங்களிலும் - அவற்றின் கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தவழட்டும்! வெல்லட்டும்!

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
    • மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    • முதலமைச்சர் கோப்பைக்கான நிதியை உயர்த்துவதற்கான கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டேன்.
    • தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் சென்ற 6 வீரர்களில், 4 பேர் பதக்கங்கள் பெற்றனர்.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது.

    இதில், விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    துணை முதலமைச்சரான பின், நான் இட்ட முதல் கையெழுத்து முதலமைச்சர் கோப்பைக்கானது.

    முதலமைச்சர் கோப்பைக்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவதற்கான கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டேன்.

    இந்தியாவிலேயே தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் சென்ற 6 வீரர்களில், 4 பேர் பதக்கங்கள் பெற்றனர்.

    இந்தியா விளையாட்டுத்துறையின் தலைநகரமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    • . உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள்.
    • சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என்று பவன் கல்யாண் விமர்சித்து இருந்தார்.

    சனாதனம் வைரஸ் போன்றது என்ற உதயநிதியின் பேச்சை கண்டித்து ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியிருந்தார்.

    சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழிந்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என்று பவன் கல்யாண் விமர்சித்து இருந்தார்.

     இந்நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

    பொறுத்திருந்து பாருங்கள். சிரித்த முகத்துடன் LETS WAIT AND SEE என அவர் பதில் அளித்துள்ளார்.

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க ஏற்பாடு.
    • பெண்கள் வாக்குகளை அதிகளவில் பெறுவதற்கும் தி.மு.க. வியூகம்.

    சென்னை:

    2026 சட்டமன்ற தேர்லுக்கு தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அந்த தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்று மெஜாரிட்டி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் ஓட்டு அதிகமாக உள்ளதால் பெண்களின் ஓட்டுகள் சிதறாமல் கிடைக்க என்னென்ன வழிகள் உள்ளதோ அதை அனைத்தையும் தி.மு.க. கையாண்டு வருகிறது.

    அந்த வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை என பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இதுதவிர மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் சுழல் நிதி வழங்கவும் இப்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுத்தேர்தலுக்கு இன்னும் 18 மாத காலமே உள்ளதால் ஆட்சி காலம் முடிவடைவதற்குள் சுமார் ரூ.90 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக மாவட்ட வாரியாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்ய தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சிகளில் துணை முதல்மைச்சர் உதயநிதி பங்கேற்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்க உள்ளார்.

    2009-ம் ஆண்டு துணை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது மாவட்டம் வாரியாக சென்று பலமணி நேரம் ஒவ்வொரு சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியது போல், இப்போது துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க உள்ளார்.

    இதற்காக மாவட்ட வாரியாக உதயநிதியின் சுற்றுப்பயணம் தயாராகி வருகிறது. ஆயுத பூஜைக்கு பிறகு அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வரும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    நடிகர் விஜய் புதுக்கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் தி.மு.க.வின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்ளவும், பெண்கள் வாக்குகளை அதிகளவில் பெறுவதற்கும் இந்த வியூகம் 'கை கொடுக்கும்' என தி.மு.க. தலைமை கணக்கு போட்டுள்ளது.

    ×