search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jagan Mohan Reddy"

    • ஜெகன்மோகன் ரெட்டி கண் புருவத்திற்கு மேல் காயம் ஏற்பட்டது.
    • கைது செய்யப்பட்டவர்களை கடந்த 4 நாட்களாக மறைவான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கடந்த வாரம் ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ்சில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது மர்ம நபர்கள் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்களை வீசினர். இதில் ஜெகன்மோகன் ரெட்டி கண் புருவத்திற்கு மேல் காயம் ஏற்பட்டது.

    இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் வெமுலா துர்கா ராவ் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கடந்த 4 நாட்களாக மறைவான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாததால் துர்கா ராவ் மனைவி தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் விஜயவாடா போலீஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மேலும் வக்கீல் மூலம் ஆந்திர ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தனர்.

    இதனை அறிந்த போலீசார் துர்கா ராவை நேற்று விடிவித்தனர். இது குறித்து துர்கா ராவ் கூறுகையில், கல்வீச்சு சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என போலீசாரிடம் பலமுறை கூறியும் அவர்கள் காதில் வாங்கவில்லை.

    துப்பாக்கியை காட்டி குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தினர். தெலுங்கு தேசம் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் என் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    குற்ற சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சம்பவத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என ஓய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
    • கடந்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீது முதல் மந்திரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருப்பதி:

    ஆந்திரா முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் நேற்று முன்தினம் பஸ் யாத்திரை பிரசாரம் செய்தார். அப்போது அவர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் என ஓய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் வாகனங்கள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.

    அடுத்தடுத்த கல் வீச்சு சம்பவங்களால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சந்திரபாபு நாயுடு பிரசாரக் கூட்டத்தில் விளக்கமளித்து பேசினார்.

    ஜெகன்மோகன் ரெட்டி கல் வீச்சில் காயம் அடைந்தது வருத்தம் அளிக்கிறது. அவர் மீது கல்வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    மேலும் இந்த சம்பவம் ஒரு நாடகம் போல் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீது முதல் மந்திரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் பவன் கல்யாண் மீது கற்களை வீசப்பட்டது. இந்த சம்பவத்தை ஜெகன்மோகன் ரெட்டி கண்டிக்கவில்லை. பொது மக்கள் வாக்களிக்கும் போது சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தேர்தல் பிரசாரத்தின் போது ஆந்திர முதல் மந்திரி மீது கல் வீசப்பட்டதில் அவர் காயமடைந்தார்.
    • இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரத்துக்காக ரோடு ஷோ நடத்தினார். சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் நடந்த ரோடு ஷோவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் ஜெகன்மோகன் காயமடைந்தார்.

    இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அருகிலிருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலில் முதல் மந்திரி அருகிலிருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி தனது பேருந்து யாத்திரையைத் தொடர்ந்தார்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர முதல் மந்திரி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    முதல் மந்திரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.
    • ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.

    மாநிலத்தில் காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சர்மிளா அண்ணன் என்று கூட பார்க்காமல் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது அண்ணனுக்காக தானும் ஒரு காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டதாக சர்மிளா உருக்கமாக பேசினார்.

    ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் மைடுகூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சர்மிளா பேசியதாவது:-

    கடந்த காலங்களில் என்னுடைய தந்தை ராஜசேகர ரெட்டியின் கனவை ஜெகன்மோகன் ரெட்டி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். நானும் ஜெய் ஜெகன் கோஷத்தை எழுப்பினேன். அவர் ஜெயிலில் இருந்த போது அவருக்கு ஆதரவாக 3200 கிலோமீட்டர் பாதயாத்திரை சென்றேன்.

    ஆனால் முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு ஜெகன்மோகன் வாக்குறுதிகளை மறந்து விட்டார். அவர் வாக்களித்தபடி முழு மதுவிலக்கு அமல்படுத்தவில்லை. ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது. மாநிலத்தின் தலைநகரம் எங்கே என்பது தெரியவில்லை.

    இதனால் மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சந்திரபாபு நாயுடு வெளியே வந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்காக ஏங்குகிறார்.
    • தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.

    சினிமா படங்களில் வரும் கொடூரமான பாத்திரங்களை நினைவூட்டி சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பஸ் யாத்திரை மூலம் பிரசாரம் செய்து வரும் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில்:-

    சந்திரபாபு நாயுடு மக்களை ஏமாற்றுவதை தொழிலாக கொண்டுள்ளார். மக்களை ஏமாற்றும் பழக்கம் கொண்ட குற்றவாளியான சந்திரபாபு நாயுடுவுக்கும் மக்களுக்குமான போர் இந்த தேர்தல்.

    சந்திரபாபு நாயுடு வெளியே வந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்காக ஏங்குகிறார். அருந்ததி சினிமா படத்தில் ஒரு கல்லறையில் பேயாக பல ஆண்டுகள் வில்லன் காத்திருப்பார். பின்னர் வெளியே வந்து பழி வாங்குவார். அதே போல சந்திரபாபு நாயுடு செயல்பாடும் உள்ளது எனக் கூறினார்.


    இது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை கோபமடைய செய்துள்ளது. இது குறித்து தெலுங்குதேசம் கட்சித் தலைவர் வர்லராமையா தேர்தல் ஆணையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கருதுவதாக கூறி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 48 மணி நேரத்திற்குள் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பதில் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    ஏற்கனவே ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்த சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கொலையாளிகள் சட்டசபைக்கு செல்லக்கூடாது என்பதால் தேர்தலில் நிற்கிறேன்.
    • மக்கள் யாரை ஜெயிக்க வைக்கணும்னு யோசிச்சு வாக்களிக்கணும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் தொகுதியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா, பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை. ஜெகன் மோகன் ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்கிறது.

    விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. கொலைகாரர்கள் வெளியில் திரிகிறார்கள்.

    கொலையாளிகள் சட்டசபைக்கு செல்லக்கூடாது என்பதால் தேர்தலில் நிற்கிறேன். நியாயம் ஒரு பக்கம். அநியாயம் இன்னொரு பக்கம். ராஜசேகர ரெட்டியின் பிள்ளை ஒரு பக்கம்.


    விவேகானந்த ரெட்டியை கொன்ற கொலையாளிகள் இன்னொரு பக்கம். மக்கள் யாரை ஜெயிக்க வைக்கணும்னு யோசிச்சு வாக்களிக்கணும்.

    ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஆண்டு கால ஆட்சியில் கும்பகர்ணனை போல் தூங்கிக் கொண்டு இருந்தார். தேர்தலுக்காக இப்போதுதான் விழித்துக் கொண்டுள்ளார்.

    அப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். உங்கள் நலன்களுக்காக பாடுபட இந்த சர்மிளாவை தேர்ந்தெடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெயிலில் நடக்க முடியாமல் உதவித்தொகை பெற சென்ற 31 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
    • 31 பேரின் மரணத்திற்கு காரணமான சந்திரபாபு நாயுடு தான் கொலையாளி.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பஸ் யாத்திரை சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    காளஹஸ்தி அருகே உள்ள நாயுடு பேட்டையில் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி விடிந்தவுடன் தன்னார்வலர்கள் நேரடியாக வீடு வீடாக வந்து முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கி வந்தனர். ஆனால் சந்திரபாபு நாயுடு தனது உறவினரான நிம்ம கட்டா ரமேஷ் மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உதவித்தொகை வழங்குவதை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் வெயிலில் நடக்க முடியாமல் உதவித்தொகை பெற சென்ற 31 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    31 பேரின் மரணத்திற்கு காரணமான சந்திரபாபு நாயுடு தான் கொலையாளி. கொஞ்சம் ஏமாந்தால் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் ரத்தம் குடிக்க வந்துவிடும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஜெகன்மோகன் ரெட்டியை சந்திரபாபு நாயுடு அரக்கன் என கொடூரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால் அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை ரத்தம் குடிக்கும் சந்திரமுகி என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
    • அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.

    ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்:-

    ஜெகன் மோகன் ரெட்டி ஒரு அரக்கன் திருடன், விலங்கு, மக்களை காட்டிக் கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் போன்ற சொற்களால் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இது ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது.

    இது குறித்து ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் லெல்லாஅப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார்.

    சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 48 மணி நேரத்தில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க., ஜனசேனா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ்சில் யாத்திரையாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் அடுத்த குட்டி பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட்டு இருந்தார். ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் கூடி இருந்தனர்.

    ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார். அந்தரத்தில் பறந்து வந்த செருப்பு ஜெகன்மோகன் ரெட்டியை தாண்டி சென்று விழுந்தது.

    இதனைக் கண்டு ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி செருப்பு வீசியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எனக்கு எதிராக தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா, காங்கிரஸ் கட்சி இணைந்து பிரசாரம் செய்கின்றனர்.
    • கடவுள் மற்றும் மக்கள் என் பக்கம் உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஒரே கட்டமாக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பஸ் யாத்திரை பிரசாரம் தொடங்கினார்.

    தனது சொந்த தொகுதியான கடப்பாவில் தேர்தலில் பிரசாரத்தை முடித்து விட்டு பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் ஆதரவு இன்றி தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மோசமான அரசியல் செய்து வருகிறார். என் மீது சேற்றை வாரி வீசி அரசியல் செய்கிறார்.

    எனக்கு எதிராக தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா, காங்கிரஸ் கட்சி இணைந்து பிரசாரம் செய்கின்றனர்.

    இது போதாதென்று எனது தங்கையை அரசியலுக்கு அழைத்து வந்து அவர் மூலம் சேற்றை வாரி இறைத்து வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. நீதியை நம்புகிறேன்.

    கடவுள் மற்றும் மக்கள் என் பக்கம் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    • முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் மகன் ராம்குமார் ரெட்டி போட்டியிடுகிறார்.
    • பாரளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் வருகிற பாரளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல் மந்திரிகள் 6 பேரின் மகன்கள் போட்டியிடுகின்றனர்.

    முன்னாள் முதல் மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகனும், இப்போதைய முதல் மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி, புலிவெந்துலா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், மங்களா கிரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.


    முன்னாள் முதல் மந்திரி என்.டி. ராமாராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா ஹிந்துபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் முதல் மந்திரி பாஸ்கரராவின் மகன் மனோகர், தெனாலி தொகுதியில், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

    வெங்கடகிரி தொகுதியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில், முன்னாள் முதல் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் மகன் ராம்குமார் ரெட்டி போட்டியிடுகிறார்.

    தோனே தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி விஜய பாஸ்கர் ரெட்டியின் மகன் சூர்ய பிரகாஷ், ரெட்டி போட்டியிடுகிறார்.

    • ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
    • பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வருகிற மே மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுறது . முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்த பயணத்தில் காலை நேரத்தில் பொது மக்கள் மத்தியில் பேசுகிறார். மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    ×