search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra Pradesh"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது
    • ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார்

    பாராளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது.

    இந்த வேட்பாளர் பட்டியலில் ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், ஆந்திராவில் இருந்து 5 பேர், பீகாரில் இருந்து 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத்தும், கதிஹார் தொகுதியில் மூத்த தலைவர் தாரிக் அன்வரும், பகல்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ அஜீத் சர்மாவும் போட்டியிடுகின்றனர்.

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார். ஒடிசாவின் பர்கர் தொகுதியில் முன்னாள் எம்.பி சஞ்சய் போய் போட்டியிடுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாமியார், மருமகள் இருவரும் தாய் மகள் போல பாசமாக இருந்தனர்.
    • மாமியார் இறந்த துக்கத்தில் மருமகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், யாதகிரி குட்டா அடுத்த கொல்ல குடிசேவையை சேர்ந்தவர் பாரதம்மா (வயது 65). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இளைய மகனின் மனைவி மங்கம்மா (26). மாமியார் மருமகள் இருவரும் தாய் மகள் போல பாசமாக இருந்தனர். நேற்று அதிகாலை பாரதம்மாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

    மாமியாரின் உடலைப் பார்த்து மருமகள் மங்கம்மா கதறி அழுதார். சிறிது நேரத்தில் அவருக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் மங்கம்மாவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே மங்கம்மா பரிதாபமாக இறந்தார்.

    மாமியார் இறந்த துக்கத்தில் மருமகளும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    வழக்கமாக மாமியார், மருமகள் சண்டையிட்டு அடித்துக் கொள்வது தான் வழக்கம். ஆனால் இந்த சம்பவம் மாமியார் மருமகள் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஒரே கட்டமாக 175 தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.

    ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ம் தேதி 28 தொகுதிகளும், மே 20-ம் தேதி 35 தொகுதிகளுக்கும், மே 25-ம் தேதி 42 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ம் தேதி மீதமுள்ள 42 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்தார்.
    • சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.

    ரஞ்சி கோப்பையின் காலிறுதி போட்டியில் ஆந்திர பிரதேசம் அணி மத்திய பிரதேசம் அணியுடன் மோதி தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் இனி எப்போதும் ஆந்திர பிரதேசம் அணிக்காக விளையாட மாட்டேன் என்று அந்த அணியை சேர்ந்த ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

    அரசியல் காரணங்களுக்காகவே தான் அணியில் இருந்து விலகியதாக ஹனுமா விஹாரி தெரிவித்து இருந்தார். ஹனுமா விஹாரி குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த, ஆந்திரா அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் கே.ன். ப்ருத்விராஜ், தனது சமூக வலைதளத்தில் தன் தரப்பு விளக்கத்தையும் பதிவிட்டிருந்தார்.

     

    அதில், "நீங்கள் கமென்ட்களில் தேடிக்கொண்டிருக்கும் நபர் நான் தான். ஆனால் நீங்கள் கேள்வியுற்ற தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று. போட்டி மற்றும் ஒருவரின் சுய மரியாதையை விட பெரியது எதுவும் கிடையாது. தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாச மொழியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அணியில் உள்ள அனைவருக்கும், அன்று என்ன நடந்தது என நன்றாகவே தெரியும். இந்த அனுதாப விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விளையாடி கொள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஹனுமா விஹாரி வெளியிட்டுள்ள பதிவில், "ஒட்டுமொத்த அணிக்கும் தெரியும்" என்ற தலைப்பில் கடிதம் ஒன்றின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.

    அந்த கடிதத்தில், "ரஞ்சி கோப்பையில் அணியை சேர்ந்த வீரர் நான் தவறான மொழியை பயன்படுத்தியதாகவும், அவரை மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால், நான் பயன்படுத்திய வார்த்தைகள் நம் அணிக்குள் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தை தான். அணியின் டிரெசிங் அறையில் இந்த வார்த்தைகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது."



    "ஆனாலும், ஒருவர் இதனை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டுள்ளார். நாம் அனைவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள், சமயங்களில் அணியில் உள்ள உதவியாளர் குழுவும் இது போன்ற சூழலை எதிர்கொண்ட சம்பவங்கள் உள்ளன. அந்த வகையில், விஹாரியே எங்களது அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு அவரிடம் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. அவர் எப்போதும் எங்களிடம் இருக்கும் திறமையை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளார்."

    "அவரது தலைமையில் நாங்கள் ஏழு முறைக்கும் அதிகாக தகுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். இந்த ரஞ்சி தொடர், வீரர்களாக எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆந்திரா ரஞ்சி வீரர்களாக எங்களுக்கு விஹாரி அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் அதில் அணி வீரர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.



    • பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது.
    • ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம்.

    இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது. ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம். தீமையை அகற்றி நன்மையை பரவச் செய்வதை கருப்பொருளாகக் கொண்டு, இந்தியா முழுவதும் இந்த விழா கொண்டாடப்பட்டாலும், உள்ளூர் பழக்க வழக்கம் மற்றும் மரபுகளின்படி, மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விழா மாறுபடுகிறது.

    வட மாநிலங்களில் நவராத்திரி விழா துர்க்கை தேவிக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டாலும், தென்னிந்தியாவில் சரஸ்வதி சாமுண்டி உன் ளிட்ட சில தெய்வங்களை இணைத்து கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது. நவராத்திரியை வெவ்வேறு விதமாக கொண்டாடும் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் பற்றி இங்கே...

     தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் துர்க்கை மட்டுமின்றி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவியரின் வழிபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என்று மூவருக்கும் சமமான வழிபாட்டு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் 10 நாட்களிலும் வீடு மற்றும் கோவில்கள், பொது இடங்களில் 'கொலு அமைப்பது என்பது விசேஷமானது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள். அதில் மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பொருட்களையும், கலைஞர்கள் தங்களின் கலை சார்ந்த பொருட்களையும், ஒவ்வொரு உழைப்பாளர்களும் தங்கள் உழைப்பை முன்னிறுத்தும் பொருட்களையும் சரஸ்வதியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 10-ம் நாளில் மகிஷனை வதம் செய்த துர்க்கையின் வெற்றி தினமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக உலகப்புகழ்பெற்ற திருவிழாவாக இந்த தசரா திருவிழா உள்ளது.

     கேரளா

    பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் சொல்லும் கேரள மாநிலம் 'கடவுளின் தேசம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட 108 பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. நவராத்திரி விழாவின் போது இந்த ௧௦௮ கோவில்களும் துர்க்கையின் ஆலயங்களாக பாவித்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்தியாவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாநிலமாகத் திகழும் கேரளாவில், தங்களின் கல்வி சார்ந்த பொருட்கள், வீட்டு விலங்குகள், வாகனங்களை வழிபடுவதை மக்கள் விரும்புகிறார்கள்.

    நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறார்கள். அப்போது மாணவர்கள் கரும்பு அல்லது வெல்லம் போன்ற நைவேத்தியங்களுடன், தங்களின் கல்வி சார்ந்த பொருட்களை சரஸ்வதி தேவியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குகிறார்கள்.

     ஆந்திரா

    நவராத்திரி பண்டிகையானது 'பதுக்கம்மா பண்டிகை' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்கள் பலரும். இனிமையான தாம்பத்ய வாழ்க்கை அமைய அன்னை கவுரி தேவியை வழிபடும் நிகழ்வாக இது இருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று இந்த வழிபாட்டில் இணைகிறார்கள். இந்த பண்டிகையின் இறுதிநாள் விழாவில், ராமலீலா நிகழ்வு நடத்தப்படும். அதாவது ராவணனின் உருவ பொம்மை செய்து, அதை நெருப்பு மூட்டி எரியூட்டுவார்கள்.

    இந்த நிகழ்வில் ஆண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அன்னை கவுரி தேவியின் வழிபாட்டிற்காக உள்ளூரில் உருவாகும் மலர்களைக் கொண்டு மலர் அடுக்குகளை உருவாக்குவார்கள். இது பன்னெடுங்காலமாக நடை பெறும் வழக்கமாகும். திருவிழாவின் இறுதிநாளில் இந்த மலர் அடுக்கானது, ஒரு ஏரி அல்லது ஆற்றில் விடப்படும்.

     குஜராத்

    நவராத்திரி விழாவானது. குஜராத் மாநிலத்தில் ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. குஜராத் மக்கள், நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்க்கை மற்றும் துர்க்கையின் வெவ்வேறு ஒன்பது அவதாரங்களையும் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். நவராத்திரி நாளில் குஜராத் மக்கள் ஆடும் ஒரு வகை நடனம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நடனத்திற்கு "கர்பா நடனம்" என்று பெயர்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் நோன்பு இருக்கும் பெண்கள், பானைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட மெழுகுவர்த்தி முன்பாக நின்று தங்கள் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை சொல்லி வழிபடுவார்கள். "கார்போ" என்று அழைக்கப்படும் இந்த பானை, வாழ்க்கையின் மூலத்தையும் ஒளி, சக்தியையும் குறிக்கும். 'கார்போ' என்பதே மருவி 'கர்ப என்றானதாக சொல்கிறார்கள்.

    கர்பட் என்ற வார்த்தைக்கு "கருப்பை" என்றும் பொருள். பானைக்குள் உள்ள மெழுகுவர்த்தியும், அதன் ஒளியும்கருப்பையில் இருக்கும் உயிரை குறிக்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஆண்களும், பெண்களும், துர்க்கா தேவி சிலையை சுற்றி ஆடும் பாரம்பரிய நடனமாக கரிபா நடனம் இருக்கிறது.

     கர்நாடகா

    கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் புகழ் பெற்றதாகும். இது ஒரு மாநில விழாவாகும். மைசூர் நகரின் மையத்தில் மிகவும் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கி.பி. 1610-ம் ஆண்டு முதல் அப்போதைய மன்னன் முதலாம் ராஜா உடையார் கடைப்பிடித்த சடங்குகளைப் பின்பற்றியே, இன்றளவும் இந்த மைசூர் தசரா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான, மகாநவமி அன்று அரச வாள் ஒரு சிம்மாசனத்தில் வைத்து வணங்கப்படும்.

    அதன்பின்னர் யானைகள் மற்றும் குதிரைகள் மூலமாக அந்த வாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 10-ம் நாள் தசமி அன்று. யானை மேல் தங்க பல்லக்கில், சாமுண்டீஸ்வரியின் (துர்க்கையின் வடிவம்) உருவத்தை வைத்து, நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் சூழ்ந்துவர பிரமாண்டமான ஊர்வலம் நடைபெறும்.

     இமாச்சலப் பிரதேசம்

    நாட்டின் பிற மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம் முடியும் பத்தாம் நாளில், இமாச்சலப் பிரதேசத்தில் இந்த விழா தொடங்குகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர், அயோத்தி திரும்பியதை குறிக்கும் வகையில் இந்த கொண்டாட்டம் இருக்கும். பத்தாம் நாளில் `குலு தசரா' என்ற பெயரில் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். குலு பள்ளத்தாக்கில் மிகப் பிரபலமான திருவிழா இதுவாகும்.

    இந்த நாளில் குலு பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள தெருக்கள் வண்ண விளக்குகளால் பிரகாசமாக மின்னும். தெய்வங்களின் சிலைகளை பிரதான மைதானத்திற்கு எடுத்துச்செல்லும் பெரிய ஊர்வலம். அந்த ஊர்வலத்துடன் கலந்த மக்களின் உற்சாகம் மற்றும் ஆடல். பாடல் ஆகியவை இந்த விழாவின் சிறப்பம்சமாகும். பல்வேறு நடனம், கலாசார நிகழ்ச்சிகள் இந்த நாளை அழகாக்கும்.

    இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் தெய்வமான ரகுநாதரின் சிலை, அழகாக வடிவமைக்கப்பட்டு ஒரு தேரில் வைக்கப்படும். அந்த தேரை உள்ளூர் மக்கள் கயிறுகளால் இழுத்து நகரத்தின் பல பகுதிகளிலும் வலம் வருவார்கள்.

    • ஆதித்யா-எல்1, செப்டம்பர் 1 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது
    • செப்டம்பர் 30 அன்று பூமியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு பயணிக்க தொடங்கியது

    கடந்த செப்டம்பர் 2 அன்று இந்திய அரசாங்கத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அமைப்பினால், ஆந்திர பிரதேச ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, சூரியனை குறித்த ஆராய்ச்சிகளுக்காக இந்தியாவின் முதல் முயற்சியாக பிஎஸ்எல்வி-சி57.1 (PSLV-C57.1) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட விண்கலன், ஆதித்யா-எல்1 ஆர்பிடர் (Aditya-L1 Orbiter).

    தனது பயணப்பாதையில் கடந்த செப்டம்பர் 30 அன்று இந்த விண்கலன் பூமியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான பாதையில் அது அடைய வேண்டிய இலக்கான முதல் லெக்ராஞ்சியன் புள்ளி எனப்படும் எல்1 புள்ளியை நோக்கி பயணித்தது.

    அதன் தற்போதைய நிலை குறித்து இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் தெரிவித்திருப்பதாவது:

    ஆதித்யா-எல்1 விண்கலத்தின் செயல்பாடு திட்டமிட்டபடி நன்றாக உள்ளது. தனது பயண தடத்தில் அது செய்து கொள்ள வேண்டிய மாற்றங்களுக்கான ஒரு நடவடிக்கையான "டிராஜக்டரி கரெக்ஷன் மென்யூவர்" (Trajectory Correction Maneuver) வழிமுறையை நேற்று முன் தினம் ஆதித்யா 16 நொடிகளில் வெற்றிகரமாக செய்தது. எல்1 புள்ளியை அடைவதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 19 அன்றே டிரான்ஸ்-லெக்ராஞ்சியன் புள்ளியை தொடுதல் நடவடிக்கையும் முறையாக நடைபெற்றதை தொடர்ந்து தற்போதைய இந்த நடவடிக்கை தேவைப்பட்டது. தொடர்ந்து ஆதித்யா விண்கலன், தான் செல்ல வேண்டிய பாதையில் சரியான திசையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

    • ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.
    • ஆந்திர சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது.

    விஜயதசமி முதல் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில சட்டமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் கூடியது.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் மழைகால கூட்டத் தொடர் நாளை (செப்டம்பர் 21) துவங்க இருக்கும் நிலையில், இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைநகர் பற்றிய அறிவிப்பு வெளியானது. நவம்பர் 2-ம் தேதி துவங்கும் விஜயதசமி நாள் முதல் முதலமைச்சர் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாறுகிறது.

    இதே போன்று மற்ற அமைச்சர்களும் விசாகப்பட்டினத்தில் இருந்து பணியாற்ற தயாராக வேண்டும். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்ததில் இருந்து, ஆந்திரா மாநில தலைநகராக அமராவதி நகரம் செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் விசாகப்பட்டினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மின் ஊழியருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் மின் ஊழியர் உமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தின் ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில், பாப்பையா என்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சாலைப் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த உமா என்கிற மின் ஊழியரை காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், போக்குவரத்து விதியை மீறியதால் மின் ஊழியருக்கு ரூ.135 அபராதம் விதித்துள்ளார்.

    இதனால், மின் ஊழியருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அபராதம் விதித்த ஆத்திரத்தில் நேராக அருகில் இருந்த காவல் உதவி மையத்தின் மின்கம்பத்தில் ஏறிய மின் ஊழியர் உமா மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் ஊழியரின் இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை சரி செய்தனர்.

    இதைதொடரந்து, போலீசார் மின் ஊழியர் உமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சின்னராஜப்பா உரையாற்றியபோது பலத்த காற்று வீசியது.
    • முன்னாள் எம்.பி. மகந்தி பாபுவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் பட்டுலவாரி குடமில் இன்று இரவு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சீனராஜப்பா உரையாற்றியபோது பலத்த காற்று வீசியது. மேடை ஆட்டம் கண்டது. எனினும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். மேடையில் சிந்தமனேனி பிரபாகர், பீதலா சுஜாதா, மகந்தி பாபு மற்றும் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.

    அப்போது, காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேடை மொத்தமாக சரிந்தது. மேடையில் இருந்த சீனராஜப்பா, உள்ளிட்ட அனைவரும் மேடையுடன் விழுந்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னாள் எம்.பி. மகந்தி பாபுவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சம்பவம் நடைபெற்ற தினம், பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வந்தது.
    • இந்த சம்பவம் குறித்து ராஜநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தை அடுத்த ராஜநகரம் பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளியில் மாணவரை சக மாணவனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளியில் ஒன்பதம் வகுப்பு பயின்று வரும் உதய் சங்கர் என்ற மாணவர், சக மாணவரான பின்கெ ஸ்ரீஹரி சாய்நாத்-ஐ கத்தியால் குத்தினார். இருவருடன், உதய் சங்கரின் ஒன்றுவிட்ட சகோதரியும் அதே வகுப்பில் பயின்று வருகிறார். இந்த நிலையில், உதய் சங்கரின் சகோதரியை ஸ்ரீஹரி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உதய் சங்கர் இவ்வாறு செய்திருக்கிறார்.

    சம்பவம் நடைபெற்ற தினம், பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வந்தது. தேர்வின் இடையில் திடீரென எழுந்து நின்ற உதய் சங்கர், தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பின்கெ ஸ்ரீஹரி சாய்நாத்-ஐ கத்தியை கொண்டு கடுமையாக குத்தினார். கத்தியால் குத்தியதோடு அவரை, உதய் சங்கர் கடுமையாக திட்டித் தீர்த்தார்.

    கத்தி குத்து வாங்கிய ஸ்ரீஹரியை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனையில் ஸ்ரீஹரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் உதய் சங்கரை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
    • ஆந்திராவின் 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது.

    வங்க கடலில் உருவான மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வரும் நிலையில், ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதையடுத்து ஆந்திராவின் தென் கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

    6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. 5 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் 5 மாநில பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர காலங்களில் மக்களை வெளியேற்றவும் தயாராக இருப்பதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ராமகிருஷ்ணா குடிசை வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா, வேலங்கி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 75). இவர் அங்குள்ள சிறிய குடிசையில் தங்கி இருந்து கோவில்களில் பிச்சை எடுத்து வந்தார்.

    உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று இறந்தார். ராமகிருஷ்ணாவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அங்குள்ள போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    ராமகிருஷ்ணா குடிசை வீட்டில் சோதனை செய்தபோது ரூபாய் நோட்டுகள் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டு இருந்தது.

    மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது 2000, 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை நாணயங்கள் இருந்தன. அவற்றை எண்ணி பார்த்த போது ரூ.3 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது.

    இதையடுத்து முதியவர் உடலை தகனம் செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை சமூக அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×