என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல் வீடியோ"

    • பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.
    • அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    சிகரெட் பிடிக்கக்கூடாது என கூறியதால் பெட்ரோல் பங்க்-குக்கு நபர் ஒருவர் தீ வைக்க முயன்ற சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நிகழ்ந்துள்ளது.

    ராய்ப்பூரின் உர்லா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று, தர்மேந்திரா மற்றும் இம்ரான் என்ற இரு இளைஞர்கள் தங்களது பைக்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளனர்.

    இம்ரான் பைக்கில் அமர்ந்திருக்க, அருகில் நின்றிருந்த தர்மேந்திரா திடீரென சிகரெட் பற்ற வைக்க முயன்றுள்ளார்.

    பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கு புகைபிடிக்கக் கூடாது என்று தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தர்மேந்திரா, ஊழியர் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போதே, தனது கையில் இருந்த தீப்பெட்டியால் பெட்ரோல் செலுத்தும் குழாயின் முகப்பு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார்.

    பெட்ரோல் வெளியே வந்து கொண்டிருந்ததால், நொடிப் பொழுதில் தீயானது, பைக் மற்றும் பெட்ரோல் நிரப்பும் இயந்திரம் வரை பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு, அங்கிருந்த தீயணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைத்ததால் மிகப்பெரிய வெடி விபத்து தவிர்க்கப்பட்டது.

    பெட்ரோல் பங்க் மேலாளர் அளித்த புகார் மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், தர்மேந்திரா மற்றும் இம்ரானை உர்லா போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.  

    • நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான்.
    • எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை.

    டெல்லியின் துவாரகாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அருகே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சஹில் தனேஷ்ரா என்ற 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    17 வயது சிறுவன் தனது சகோதரியுடன் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு அதிவேகமாக ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார், எதிரே வந்த சஹிலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி மீதும் மோதியுள்ளது. சஹில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்ஸி ஓட்டுநரும் காயமடைந்தார்.

    அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், அவனுக்கு தேர்வுகள் இருப்பதாலும் நீதிமன்றம் அவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    ஆனால் தனக்கு நீதி வேண்டும் என்றும், சிறுவனை வயது வந்தவராக கருதி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் விபத்தில் உயிரிழந்த சஹில் தனேஷ்ராவின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    மேலும், சிறுவனிடம் காரைக் கொடுத்த அவனது தந்தை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இந்த வீடியோ வைரலாகி, சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்தது.

    இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தொழிலதிபர் தந்தை, ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில், இது ஒரு மிகப்பெரிய தவறு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என் குடும்பமே இந்தச் செயலால் கடும் அதிர்ச்சியிலும் அவமானத்திலும் ஆழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட தாயிடம் நான் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கோருவேன்.

    சம்பவம் நடந்த போது நான் வேலை விஷயமாக கோரக்பூரில் இருந்தேன். நான் வீட்டில் இல்லாதபோது எனது மகன் யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துச் சென்றிருக்கிறான். நான் டெல்லியில் இருந்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்காது.

    நான் வீட்டில் இருக்கும்போது எப்போதும் கண்டிப்பாகவே இருப்பேன். நான் இல்லாதபோது அவனது தாயாரையும் மீறி அவன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளான்.

    எனது மகன் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடவில்லை. அங்கேயே இருந்து உதவி செய்தான். எனது மனைவி போன் செய்து தகவல் சொன்னவுடன், உடனடியாகக் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி நான் அறிவுறுத்தினேன்" என்று தெரிவித்தார்.

    விபத்து ஏற்படுத்திய கார் சாலை விதிகளை மீறியதாக ஏற்கனவே பல அபராதங்களை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் வணிக ரீதியான தொழில் செய்து வருவதால், டிரைவர்கள்தான் பெரும்பாலும் இந்த வாகனத்தை ஓட்டுவார்கள். முந்தைய அபராதங்களுக்கு அதுவே காரணம்" என்று பதிலளித்தார்.    

    • வங்கியின் எதிரே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றார்.
    • அந்த வழியாக அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் அவர் மீது மோதியது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கெம்பேகவுடா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரி (27 டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.

    கடந்த திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில், யோகேஸ்வரி வங்கியின் எதிரே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் அவர் மீது மோதியது.

    இந்த விபத்தில் யோகேஸ்வரி மற்றும் பைக்கை ஓட்டி வந்த தீபக் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, யோகேஸ்வரி அன்று இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார்.

    பைக்கை ஓட்டி வந்தவர் உல்சூர் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    • சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், தேர்வுகள் இருப்பதாலும் ஜாமீன் வழங்கியது.
    • கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனால் என் மகன் கொல்லப்பட்டான்.

    டெல்லியின் துவாரகாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அருகே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சஹில் தனேஷ்ரா என்ற 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, பிப்ரவரி 3 காலை 11:57 மணியளவில் அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார், எதிரே வந்த சஹிலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி மீதும் மோதியுள்ளது. சஹில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்ஸி ஓட்டுநரும் காயமடைந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. காரில் அந்த சிறுவனுடன் அவனது சகோதரியும் இருந்துள்ளார். அவர்கள் காரை அதிவேகமாக ஓட்டி ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், அவனுக்கு தேர்வுகள் இருப்பதாலும் நீதிமன்றம் அவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சஹில் தனேஷ்ராவின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "23 ஆண்டுகளாக கணவர் இன்றி தனியாக கஷ்டப்பட்டு என் மகனை வளர்த்தேன். பிப்ரவரி 3 அன்று, அதிவேகமாக கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனால் என் மகன் கொல்லப்பட்டான். நான் ஒரு ஆதரவற்ற தாய், எனக்கு நீதி வேண்டும்" என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது. 

    • ஏராளமான மக்கள் பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்குத் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
    • அமைச்சர் நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்

    தெலங்கானாவின் புகழ்பெற்ற மேதாரம் ஜாத்ரா திருவிழாவில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான ஷேக் ஷா வாலி, சாலையோரம் கடை அமைத்து 'கோவா பன்' விற்று வந்துள்ளார்

    அங்கு வந்த சில யூடியூபர்கள் அவரிடம், அந்த பன் பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வாலியை கோவா பன்-ஐ சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவரின் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் அட்டையைக் கேட்டு வற்புறுத்திய அவர்கள், அவரின் வியாபாரத்தை 'உணவு ஜிகாத்' என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ கண்டனத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஏராளமான மக்கள் வாலியின் கடைக்குச் சென்று பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தச் சம்பவத்தைக் கண்டித்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், "அன்புச் சகோதரர் வாலி அவர்களே, உங்களுக்கு நேர்ந்த இந்த கசப்பான அனுபவத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சகோதரத்துவத்திற்கும் பரஸ்பர மரியாதைக்கும் பெயர் போன நமது தெலுங்கு சமூகத்தில் இத்தகைய பிரிவினைவாதப் போக்கிற்கு இடமில்லை.

    நான் விரைவில் உங்களைச் சந்தித்து, உங்கள் கைகளால் அந்தப் புகழ்பெற்ற 'கோவா பன்'-ஐ ருசிப்பேன். நாம் அனைவரும் உங்கள் பக்கம் நிற்கிறோம்." என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர்.
    • அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்.

    மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் சில்லோட் பகுதியில் ரஹிமாபாத் கிராமம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவசேனாவை சேர்ந்த சில்லோட் தொகுதியின் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அப்துல் சத்தார் ரஹிமாபாத் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

    அப்துல் சத்தாரின் வருகைக்கு பாஜக மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர் சென்ற பிறகு, கோவிலின் புனிதத்தைக் காப்பதாகக் கூறி அவர்கள் கோவில் வளாகம் முழுவதும் கோமியம் தெளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சில்லோட் நகர பாஜக தலைவர் மனோஜ் மொரல்லு இது குறித்துக் கூறுகையில், "அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர் என்பதால், அவர் கோவிலுக்குள் வந்தது அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டது.

    அவர் முஸ்லிம்களையும் இந்துக்களையும் ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் ஹஜ் பயணம் சென்று வந்தவர், இப்போது கோவிலுக்கு வந்து நாடகமாடுகிறார். அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்." என்று கூறினார்.  

    • சாலை மெல்ல விரிசல் விட்டு, பின்னர் மிகப்பெரிய பள்ளமாக மாறியது.
    • ஷாங்காய் நகரின் மென்மையான வண்டல் மண் முக்கிய காரணம்.

    சீனாவின் ஷாங்காய் நகரில் பரபரப்பான சாலை ஒன்று திடீரென உள்வாங்கிய சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.

    எப்போதும் வாகன நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் மேற்கொண்டு கட்டுமானப் பணிகள் நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில் அங்கிருந்த தொழிலாளர்கள் முன்னிலையிலேயே சாலை மெல்ல விரிசல் விட்டு, பின்னர் மிகப்பெரிய பள்ளமாக மாறியது.

    அங்கிருந்த கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் அந்தப் பள்ளத்திற்குள் விழுந்தன. நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. அருகிலுள்ள கட்டிடங்களில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

    ஷாங்காய் நகரின் மென்மையான வண்டல் மண், நிலத்தடி நீரைத் தொடர்ந்து உரிந்து எடுப்பது மற்றும் அதிகரித்து வரும் நகரக் கட்டுமானம் போன்ற காரணங்களால் இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி நிகழ்கின்றன.

    முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி 2024-இல் மின்ஹாங் மாவட்டத்தில் கழிவுநீர் குழாய் உடைந்ததால் 10 மீட்டர் அளவிற்குச் சாலை உள்வாங்கியது. 

    • தீபக் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா என்பவர் வீடியோ வெளியிட்டிருந்தார்
    • தற்கொலைக்கு தூண்டியதாக வீடியோ பதிவிட்ட ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

    சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது.

    இந்த வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    இதனையடுத்து, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஷிம்ஜிதாவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை கணக்கில் கொண்டு நிபந்தனைகளுடன் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் அளித்தது.

    • "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
    • விருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.

    அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இஸ்லாமிய வெறுப்பு வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.

    "Point Blank Shot" என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், முதல்வர் பிஸ்வா கையில் ரைபிள் துப்பாக்கியை எடுத்து குறிபார்க்கிறார், அடுத்த காட்சியில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குல்லாய், தாடி உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

    வீடியோவின் பின்னணியில் "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.

    முதல்வர் பிஸ்வா அசாம் இஸ்லாமிய சமூகம் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துக்களை கூறியும், நடவடிக்கை எடுத்தும் வரும் சூழலில் இந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வீடியோ வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அசாம் பாஜக அந்தப் பதிவை நீக்கியது.

    அசாம் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய், ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் குடும்பத்தினர் அசாம் முழுவதும் சுமார் சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த நில மோசடி புகாரிலிருந்து திசைதிருப்பவே பிஸ்வா இத்தகைய வகுப்புவாதக் கருத்துகளைப் பரப்புவதாகவும் தெரிவித்தார்.

    அண்மையில் பொதுநிகழ்வு ஒன்றில் பேசிய பிஸ்வா, பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களான மியாக்களை தொந்தரவு செய்வதன் மூலமே அசாமிலிருந்து அவர்களை வெளியேற்ற முடியும்.

    ஒரு ரிக்ஷா ஓட்டுநர் 'மியா' முஸ்லிமாக இருந்தால், ரூ.5 கட்டணத்திற்கு ரூ.4 மட்டும் கொடுங்கள். அவர்களுக்குத் தொல்லை கொடுத்தால் மட்டுமே அவர்கள் அசாமிலிருந்து வெளியேறுவார்கள்" என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

    மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார். 

    • போலீசார் லத்திகளால் அந்த இளைஞர்களைத் தாக்கி, ரத்தம் வழியும் நிலையிலும் தேசிய கீதம் மற்றும் 'வந்தே மாதரம்' பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது பதிவாகியிருந்தது.
    • உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் ஃபைசான் உயிரிழந்தார்.

    2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறியது. கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    கலவரத்தின்போது படுகாயமடைந்த ஃபைசான் என்ற 23 வயது இஸ்லாமிய சமூக இளைஞர் உட்பட நான்கு பேரை சாலையில் கிடத்தி வைத்து தேசிய கீதம் பாடச் சொல்லி வற்புறுத்திய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், போலீசார் லத்திகளால் அந்த இளைஞர்களைத் தாக்கி, ரத்தம் வழியும் நிலையிலும் தேசிய கீதம் மற்றும் 'வந்தே மாதரம்' பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது பதிவாகியிருந்தது.

    இதன்பின் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் ஃபைசான் உயிரிழந்தார். 

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஃபைசான் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் எனக் கருதப்படும் 7 காவலர்கள்  நேரில் ஆஜராமாகசம்மன் அனுப்பியுள்ளது.

    அவர்கள் மீது கடத்தல், முறையற்ற சிறைபிடிப்பு மற்றும் கொலைக் குற்றம் தொடர்பான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் டெல்லி போலீஸாரின் குற்றப்பிரிவு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம், அந்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்கான ஒரு முக்கிய நகர்வாக இந்த நீதிமன்ற உத்தரவு பார்க்கப்படுகிறது.

    • சிறுமிக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற நடிகை ஸ்ருதி ஹாசன் உதவி செய்துள்ளார்.

    ஆழ்வி என்ற சிறுமி MSMD எனப்படும் மிகவும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    இந்த நோயைக் குணப்படுத்த சிறுமிக்கு உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்குப் பெரும் தொகை தேவைப்பட்டது.

    சிறுமியின் நிலையை அறிந்த ஸ்ருதி ஹாசன், உடனடியாக சிகிச்சைக்கான முழு நிதி உதவியையும் வழங்கி, சிறுமிக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கவும் உதவியுள்ளார்.

    இதனால் அந்தச் சிறுமிக்குத் தகுந்த நேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது அந்தச் சிறுமி முற்றிலும் குணமடைந்துள்ளார்.

    சிறுமியுடன் அவரது பெற்றோர் ஸ்ருதி ஹாசனை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி ஸ்ருதி ஹாசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.   

    "எங்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியது ஸ்ருதி ஹாசன் அவர்கள்தான். அவர் செய்த இந்த உதவியை எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது" என்று சிறுமியின் பெற்றோர் சமூக வலைதளங்களில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளனர்.

    • அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.
    • பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார்.

    மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக எம்.பி அனுராக் தாகூர் அணிந்திருந்த ஒரு விலையுயர்ந்த பெல்ட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று, நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே அனுராக் தாகூர் பேச எழுந்தபோது, அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.

    கேமராவில் பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அவர் அணிந்திருந்த பெல்ட்டில் 'LV' என்ற சின்னம் தெளிவாகத் தெரிந்தது. லூயி விட்டான் பெல்ட்கள் பொதுவாக 40,000 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. அனுராக் தாகூர் அணிந்திருந்தது போன்ற குறிப்பிட்ட மாடல்கள் 80,000 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

    நாடாளுமன்றத்தில் ஒரு மூத்த தலைவர் இது போன்ற விலையுயர்ந்த வெளிநாட்டு பிராண்ட் பெல்ட் அணிந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.

    ×