என் மலர்
கேரளா
- கோவில்களில் பாதுகாப்பு-கூட்டத்தை கட்டப்படுத்துவது காவல்துறை மற்றும் தேவசம்போர்டின் பொறுப்பு.
- பவுன்சர்களை நியமிப்பது தவறான நடைமுறை என்று மனுதாரர் வாதிட்டார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திரிபுனித்துராவில் பூர்ணத்ரயீசர்கோவில் இருக்கிறது. மிகவும் பழமையான விஷ்ணு கோவிலான இங்கு பெரிய தீபம் ஏற்றும் விழாவில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் பவுன்சர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிராக மராடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் எனபவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜா, விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் தேவசம்போர்டு தரப்பில் ஆஜரானவர்கள் வாதிட்டனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் பவுன்சர்கள் கருப்பு ஆடைகள், பேண்ட் மற்றும் காவி சால்வைகள் அணிந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் பவுன்சர் என்று எழுதப்பட்டிருந்தது. கோவில்களில் பாதுகாப்பு-கூட்டத்தை கட்டப்படுத்துவது காவல்துறை மற்றும் தேவசம்போர்டின் பொறுப்பு. அதற்காக பவுன்சர்களை நியமிப்பது தவறான நடைமுறை என்று மனுதாரர் வாதிட்டார்.
அதே நேரத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பவுன்சர்கள் அனுப்பப்பட்டனர் என்று தேவசம்போர்டு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், கோவில்களில் பாதுகாப்புக்காக மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பவுன்சர்களை நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் பவுன்சர் என்று எடிதப்பட்டிருக்கும் டிசர்ட் அணிந்தும், பொருத்தமற்ற உடைகளை அணிந்தும் பணியாளர்கள் மற்றும் பவுன்சர்களை கோவில்களில் பாதுகாப்பு பணியில் நியமிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு தெளிவுபடுத்தியது.
- ஒரு கட்டத்தில் தனது வாயில் திணித்து வைக்கப்பட்டிருந்த துணியை உருவி எடுத்து காப்பாற்றுமாறு கத்தத் தொடங்கினார்.
- பெருநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் வடசேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் என்ற பத்ரோஸ் ஜான்(வயது64). இவரது பக்கத்து வீட்டில் 94 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார்.
இதனை நோட்டமிட்ட முதியவர் ஜோஸ், சம்பவத்தன்று அந்த மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். பின்பு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, முதியவருடன் போராடினார்.
ஒரு கட்டத்தில் தனது வாயில் திணித்து வைக்கப்பட்டிருந்த துணியை உருவி எடுத்து காப்பாற்றுமாறு கத்தத் தொடங்கினார். இதனால் பயந்துபோன முதியவர் ஜோஸ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டுக்கு வந்தனர்.
அவர்களிடம் முதியவர் ஜோஸ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விவரத்தை கூறினார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதுகுறித்து பெருநாடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதியவர் ஜோஸ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தப்பியோடிய அவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் முதியவர் ஜோசை போலீசார் கைது செய்தனர்.
- முருங்கைக்காயின் விலை ஒரு மாதத்தில் 10 மடங்கு உயர்ந்துள்ளது.
- கனமழை பெய்ததால் காய்கறிகளின் விலையும் கேரளாவில் அதிகமாகியிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில மக்களின் உணவில் தவிர்க்க முடியாத ஒன்று முருங்கைக்காய். சாம்பார், அவியல் மட்டுமின்றி பல்வேறு வகை உணவு வகைகளில் முருங்கைக்காயை பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் கேரளாவில் முருங்கைக்காயின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு 130 முதல் 150 ரூபாய் வரை இருந்த ஒரு கிலோ முருங்கைக்காய், தற்போது 600 ரூபாயாக அதிகரித்துள்ளது. வரத்து குறைவாக இருப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனின் போது தென்மாநிலங்களில் முருங்கைக்காயின் தேவை அதிகரிக்கும்.
அதன் காரணமாக விலையும் உயருவது வழக்கமானதாகும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ.500 வரை உயர்ந்தது. ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிகமாகி இருக்கிறது.
கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளியில் முருங்கைக்காயின் விலை ஒரு மாதத்தில் 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.30-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ முருங்கைக்காய், தற்போது ரூ.380-க்கு விற்கப்படுகிறது. நாட்டு வகை முருங்கைக்காய் ரூ.420 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விலை அதிகமாக இருப்பதால் சிறிய கடைகளில் முருங்கைக்காயை காண முடியவில்லை. பெரிய கடைகளில் கூட சில அளவு கிலோ முருங்கைக்காய்களே இருக்கின்றன. ஆனால் அதனை வாங்குவதற்கும் ஆள் இல்லை. இந்த விலை உயர்வு காரணமாக கேரள மாநிலத்தில் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் முருங்கைக்காய் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை சமைப்பது குறைந்துவிட்டது.
கேரளா மாநிலத்துக்கு பெரும்பாலான காய்கறிகள் தமிழ்நாட்டின் தென்காசி, மேட்டுப்பாளையம், கம்பம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது அந்த இடங்களில் கனமழை பெய்ததால் காய்கறிகளின் விலையும் கேரளாவில் அதிகமாகியிருக்கிறது.
- சிகிச்சை பலனின்றி நேற்று கனத்தில் ஜமீலா எம்.எல்.ஏ. இறந்தார்.
- இறுதிச்சடங்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது.
கேரள மாநிலம் கோயிலாண்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெற்றி பெற்றவர் கனத்தில் ஜமீலா.
கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டிருந்த இவர், கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று கனத்தில் ஜமீலா எம்.எல்.ஏ. இறந்தார். அவருக்கு வயது 59.
கோழிக்கோடு குட்டியாடி பகுதியை சேர்ந்த இவர் பஞ்சாயத்து தலைவர், ஜனநாயக மகளிர் சங்கத்தின் மாநில துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
இவரது இறுதிச்டங்கு நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது.
- தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
- எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று கூறினார்.
கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நாராயணன் நாயர் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக நாராயணன் போட்டியிடுகிறார். இதுவே இவருக்கு முதல் தேர்தல் களம் ஆகும்.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டமாகச் செல்ல, வேட்பாளர் நாராயணன் நாயர் தனியொரு மனிதனாக வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார்.
தனது முதுமை குறித்துக் கேட்கப்பட்டபோது, எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை என்று நாராயணன் நம்பிக்கையுடன் கூறுகிறார். தனது வார்டு வளர்ச்சிக்காக நிறைய செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிடுகிறார்.
போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவற்றை விட மக்களை நேரடியாகச் சந்தித்தால் தான் பலன் கிடைக்கும். திருமண அழைப்பிதழ்கள் கூட நேரில் சென்று கொடுத்தால் தான் திருமணத்துக்கு வருவார்கள் என நாராயணன் தெரிவிக்கிறார்.
இவரது நேர்மையான அணுகுமுறைக்கு வாக்காளர்கள் மத்தியிலும் வரவேற்பு நிலவுகிறது.
கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடதப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
- ஆகாய ஓட்டல் இயந்திரம் திடீரென பழுதானதால் கீழே இறங்க முடியவில்லை.
- 2 மணி நேரத்திற்கும் மேலாக முயன்றும் சுற்றுலா பயணிகளை கீழே இறக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
கேரளாவின் மூணாறில் ஆகாய ஓட்டலில் சுற்றுலா பயணிகள் 8 பேர் சிக்கி தவிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
120 அடி உயரம் சென்ற ஆகாய ஓட்டல் இயந்திரம் திடீரென பழுதானதால் கீழே இறங்க முடியவில்லை.
2 மணி நேரத்திற்கும் மேலாக முயன்றும் சுற்றுலா பயணிகளை கீழே இறக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதனால், ஆகாய ஓட்டலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- 50 வயதான முரளி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
- மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற தமிழக பக்தர் உயிரிழந்ததால் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதான முரளி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் முரளி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலையில் இதுவரை மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
- பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?
முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
கோழிக்கோடு பத்திரிகையாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார்.
அதில், மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததுதான் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, "பாஜகவுக்கு வாக்களித்தால்தான் முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்க முடியும். முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதபோது முஸ்லிம் அமைச்சர்கள் எப்படி இருக்க முடியும்?
காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகம் என்ன நன்மைகளைப் பெற்றுள்ளது?
காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம்கள் என்ன சாதித்துள்ளனர்.
பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?" என்று தெரிவித்தார்.
- இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு கொடுத்த பரிசு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
- பூங்கொத்து செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.
காதல் ஜோடிகள் தங்கள் இணையர்களுக்கு வித்தியாசமான பரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு கொடுத்த பரிசு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தன் காதலனுக்கு அவருக்கு பிடித்த குட்கா பாக்கெட்டுகளால் ஆன சிறப்பு பூங்கொத்தை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், என்னை சந்திக்க வந்த ஒரு வாடிக்கையாளரான பெண் ஒருவர் அவரது காதலனுக்கு குட்கா மிகவும் பிடிக்கும் என்பதால் அதை பூங்கொத்து போல செய்து தருமாறு கூறினார். எனவே நான் நீல நிற பாக்கெட்டுகளில் குட்கா பாக்கெட்டுகளை ஒட்டி பூங்கொத்து உருவாக்கி கொடுத்தேன் என கூறினார்.
அவர் குட்கா பூங்கொத்து செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது. அதில், ஒரு குச்சியில் 2 குட்கா பாக்கெட்டுகளை ஒட்டி அவற்றை பூக்களை போல அடுக்கி வைத்தி நீல நிற குட்கா பூங்கொத்து தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்கள் காதலும் ஒரு புற்றுநோய் போல தான் என விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.
- டிசம்பர் 9 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
- டிசம்பர் 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 9-ந்தேதி மற்றும் 11-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, நேற்று மனுக்கள் மீதான ஆய்வு நடைபெற்றது. இதில் 1.55 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளர்கள் 82020 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 72524 மனுக்கள் ஏற்கபப்ட்டுள்ளது. மூன்று திருநங்கைகள் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. 2479 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் 1354 பெண்கள், 1125 ஆண்கள் மனுக்களாகும்.
மொத்தமாக 1,07,211 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதில் 56,501 பெண்கள், 50,709 ஆண்கள் ஆவார்கள். பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதனால் நாளை வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். அதன்பின் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்படும்.
941 கிராம பஞ்சாயத்தில் உள்ள 17,337 வார்டுகளுக்கும், 125 பிளாக் பஞ்சாயத்தில் உள்ள 2,267 வார்டுகளுக்கும், 14 மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 346 வார்டுகளுக்கும், 86 நகராட்சியில் உள்ள 3,205 வார்டுகளுக்கும், 6 மாநராட்சியில் உள 421 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.
டிசம்பர் 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
- மணமகள் ஆவணி காரை ஓட்டிச் சென்றார்.
- கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தும்போலி அருகே முதலசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மகள் ஆவணி (25).
தனியார் பள்ளி ஆசிரியையான இவருக்கும், தும்போலி பகுதியைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஷாரோன் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது.
மணமகள் ஆவணி ஒப்பனை செய்வதற்காக அவரது அத்தையுடன் அருகே உள்ள அழகு நிலையத்துக்கு காரில் சென்றார்.
காரை ஆவணி ஓட்டிச் சென்றார். அங்கு செல்லும் வழியில் கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஆவணி மற்றும் அவரது அத்தையும் காயமடைந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற மணமகன் ஷாரோன் அங்கு மணமகள் ஆவணிக்கு தாலி கட்டினார்.
ஆனாலும், திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்துக்கு வந்தவர்களுக்கு அங்கிருந்தவர்கள் விருந்து உபசரித்தனர்.
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு மணமகன் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வினயா சேர்க்கப்பட்டார்.
- வினயாவுக்கு தொற்று பரவியதற்கான மூலக்காரணம் தெரியவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவ தொடங்கியது. தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் நபர்களுக்கு, அதில் இருக்கக்கூடிய அமீபா நாசி மற்றும் காது துவாரம் வழியாக சென்று மூளையை தாக்குவதால் அமீபிக் மூளைக்காய்ச்சல் வருகிறது.
இதனால் தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரின் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டது. இருந்தபோதிலும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவல் கட்டுக்குள் வரவில்லை.
இந்த நோய் தொற்றுக்கு உயிர்பலியும் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்தநிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இளம்பெண் ஒருவர் பலியாகி விட்டார்.
திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் வினயா (வயது26). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார்.
அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வினயா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 40 நாட்கள் சிகிச்சையில் இருந்தநிலையில், சிகிச்சை பலனின்றி வினயா இறந்து விட்டார்.
வினயாவுக்கு தொற்று பரவியதற்கான மூலக்காரணம் தெரியவில்லை. அவர் அவருடைய வீட்டில் இருந்த கிணற்று தண்ணீரையே பயன்படுத்தி இருக்கிறார். இதனால் அவரது வீட்டின் கிணற்று நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கேரள மாநி லத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு இந்த ஆண்டு இதுவரை 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் பலியாகி விட்டனர். மாநிலத்தில் இந்த மாதத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 17 பேரில் 7 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






