என் மலர்tooltip icon

    இந்தியா

    விவேக் எக்ஸ்பிரசில் கடத்தப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல்
    X

    விவேக் எக்ஸ்பிரசில் கடத்தப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல்

    • கன்னியாகுமரியில் இருந்து திங்கள், புதன், வியாழன், சனி என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
    • கஞ்சாவை கடத்தி வந்த நபர்களை ரெயிலில் போலீசார் தேடிப்பார்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர ரெயில் திப்ருகர் எக்ஸ்பிரஸ். இந்தியாவின் மிகவும் நீளமான ரெயில் பாதையை கொண்ட இந்த எக்ஸ்பிரஸ், 4,189 கிலோமீட்டர் தூரத்தை 74 மணி நேரத்தில் கடக்கிறது.

    விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2013-ம் ஆண்டு இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து திங்கள், புதன், வியாழன், சனி என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகிறது.

    அசாம், நாகாலாந்து, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 9 மாநிலங்களின் வழியாக இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரசில், சமீபகாலமாக அதிகளவில் கஞ்சா கடத்தி கொண்டுவரப்படுகிறது.

    அவ்வாறு கடத்தி வரப்பட்ட கிலோ கணக்கிலான கஞ்சாவை, குமரி மாவட்ட ரெயில்வே போலீசார் பிடித்துள்ளனர். இந்தநிலையில் விவேக் எக்ஸ்பிரசில் கடத்தி கொண்டுவரப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வந்த அந்த ரெயில், ஆலுவா ரெயில் நிலையத்திற்கு வந்தபோது கலால் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த ரெயிலின் பின்பகுதியில் இருந்த பொதுப்பெட்டியில் கழிவறைக்கு அருகே சந்தேகமளிக்கும் வகையில் சில பைகள் கிடந்தன. அவற்றை அவர்கள் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தம் 33 கிலோ கஞ்சா இருந்தது. அதனை போலீசாரும், கலால் துறையினரும் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த நபர்களை ரெயிலில் போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும்.

    ஆலுவா ரெயில் நிலையத்தில் கடந்த 13-ந்தேதி 10 கிலோ கஞ்சாவும், ஆலுவா சந்தையில் ரூ.17லட்சம் மதிப்புள்ள கஞ்சாவும், திருச்சூர் ரெயில் நிலையத்தில் நேற்று(17-ந்தேதி) 5 கிலோ கஞ்சாவும் பிடிபட்டது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் அதிகரித்திருப்பதாக குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜிபின் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×