என் மலர்
நீங்கள் தேடியது "Rajinikanth"
- உயிரிழந்த சரவணனின் உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
வயது மூப்பின் காரணமாக இன்று காலை உயிரிழந்த சரவணனின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்குகளில் பல நாட்கள் ஓடியது.
- இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாதவை.
கடந்த 1993-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - மீனா நடிப்பில் வெளியான படம் 'எஜமான்'. கிட்டத்தட்ட 32ஆண்டுகளுக்கு பிறகு 'எஜமான்' படம் மீண்டும் வெளியாக உள்ளது. ரஜினியின் 75-வது பிறந்தநாளான வருகிற 12-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் உருவான இப்படம் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டு பிரமாண்டமான முறையில் வெளியாவதாக கூறப்படுகிறது.
ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் எம்.என். நம்பியார், மனோரமா, விஜயகுமார், நெப்போலியன், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்குகளில் பல நாட்கள் ஓடியது. மேலும் இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாதவை.
- சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது
- இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இந்த விழாவின் இறுதி நாளில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினியை கவிஞர் வைரமுத்து வாழ்த்தி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் ரஜினி அவர்களை வாழ்த்துகிறோம். அவரது தாழாத கீர்த்திக்கும் வீழாத வெற்றிக்கும் சில காரணங்கள் உண்டு. அவரது வாழ்வின் முன்னுரிமை உழைப்புக்கு; பிறகுதான் மற்றவற்றுக்கு கலை உலகம் தந்த புகழை வேறு சந்தைகளுக்கு அவர் மடைமாற்றம் செய்வதில்லை
ரசிகனுக்கும் தனக்குமுள்ள நெருக்கம் தூரம் இரண்டுக்கும் எல்லை கட்டத் தெரியும். உணவு உடற்பயிற்சி இரண்டினாலும் தொப்பையற்ற தோற்றத்தைத் தொடர்ந்து காப்பாற்றுகிறார். தான் பின்தங்கிவிடாமல் மாறும் தலைமுறையோடு மாறாமல் பயணிக்கிறார்.
சமூகம் அவரைச் சர்ச்சைக்கு இழுத்தாலும் சர்ச்சைகளை அவர் திட்டமிட்டு உண்டாக்குவதில்லை. கர்வம் என்பது தனியறையில் இருந்தாலும் பணிவு என்பதைப் பொதுவெளியில் காட்டுகிறார். 'இமயமலை ஆகாமல் எனதுஉயிர் போகாது எல்லையைத் தொடும்வரை எனது கட்டை வேகாது' என்ற வரிகளை வாழ்ந்துகாட்டத் துடிக்கிறார். தான் நன்றாக இருக்கவேண்டும்; அதுபோல் எல்லாரும் என்று நினைக்கிறார். வாழ்க பல்லாண்டு!" என்று பதிவிட்டுள்ளார்.
- ரஜினிகாந்துக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- எண்ணற்ற திரைச் சாதனைகளுக்கு அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கோவாவில் நடைப்பெற்ற 56 வது சர்வதேச திரைப்பட விழாவில் தனது 50 வருட கலைப் பயணத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெற்றார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச திரைப்பட விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள
தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
50 ஆண்டுகளாக தனது திரை ஆளுமையால் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து, உலகம் முழுக்க மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை என்றும் ஈர்க்கும் வல்லமை கொண்ட ரஜினிகாந்த் அவர்களின் எண்ணற்ற திரைச் சாதனைகளுக்கு அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
- என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி.
- 100 ஜென்மம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு நடிகனாக, ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்.
கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
மேலும் திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெற்றன.
இந்நிலையில் விழாவின் இறுதி நாளான இன்றைய நிகழ்வில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் வாழ்நாள் சாத்தையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
விருது பெற்றது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. நான் நடிப்பையும் சினிமாவையும் காதலிக்கிறேன். 100 ஜென்மம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு நடிகனாக, ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல். முருகன், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.
- இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
- ‘ஜெயிலர்2’ படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என கூறப்பட்டது.
இயக்குநர் நெல்சன்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்2'. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.
'ஜெயிலர்' முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கூறினாலும், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிவராஜ்குமார் தவிர்த்து பிற நடிகர்களின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
சமீபத்தில் 'ஜெயில் 2' படத்தின் தனது படப்பிடிப்பை முடித்ததாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, 'ஜெயிலர்2' படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும், கோவா படப்பிடிப்பின் போது அவர் படப்பிடிப்பு தளத்தில் இணைந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், இத்தகவல் தொடர்பாக விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினரிடமிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 'ஜெயிலர் 2 ' படத்தில் விஜய்சேதுபதி இணைவது உண்மையானால், கார்த்திக் சுப்பராஜின் பேட்ட (2019) படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாக இது இருக்கும்.
- ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை சுந்தர் சி இயக்கப்போவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார் . சுந்தர் சி விலகலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், அவர் தற்போது 'மூக்குத்தி அம்மன்-2' படத்தை இயக்குவதில் பிசியாக இருக்கிறார்.
இதற்கிடையில் ரஜினியின் புதிய படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்றார் போல், பிடித்தார் போல் கதை அமைய வேண்டும். அதுவரை கதைக்கேட்டுக்கொண்டு இருப்போம் என கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான், ரஜினி-கமல் கூட்டணி படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது சிம்பு நடிப்பில் புதிய படத்தை இயக்க இருந்த ராம்குமார் பாலகிருஷ்ணன், இப்படத்தை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாக உள்ளது.
இதனால் இனிவரும் நாட்களில் 'தலைவர் 173' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பா.ரஞ்சித் தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார்.
- கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார்.
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பா.ரஞ்சித் கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படத்தின்மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார். ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தனது படங்களில் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசிவரும் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வருகிறார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் -இயக்குநர் பா.ரஞ்சித் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து இருவரும் அடுத்த படத்தில் ஒன்றாக இணைவார்களா என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- வாழ்க்கையின் இன்ப - துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான்.
- தெய்வம் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும்.
"லதாவுக்கும் எனக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது" என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.
1981 பிப்ரவரி 25-ந்தேதி மாலை 4 மணிக்கு, நிருபர்களை திடீரென்று ரஜினி அழைத்தார். சில நிமிடங்களுக்கெல்லாம் நிருபர்கள் பெருந்திரளாகக் கூடி விட்டனர்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
7 மாதங்களுக்கு முன்பே, ரஜினிகாந்த் - லதா திருமணம் என்ற செய்தியை வெளியிட்ட ஒரே பத்திரிகை "தினத்தந்தி" தான். ரகசியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்த இந்தச் செய்தியை, "தினத்தந்தி" வெளியிட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்தச் செய்தி "தினத்தந்தி"யில் வெளிவந்ததும், லட்சக்கணக்கான எனது ரசிகர்களிடம் இருந்து பல கடிதங்கள் வந்தன. பட அதிபர்களும், நடிகர்களும் 'போன்' செய்து. 'இது உண்மையா என்று கேட்டார்கள். சற்று பொறுத்திருக்கும்படி கூறினேன்.
அந்தச் செய்தி இன்று உண்மையாகி, எல்லோரும் பாராட்டும் விதமாக அமைந்தது பற்றி பெருமைப்படுகிறேன்." இவ்வாறு கூறிய ரஜினிகாந்த், அங்கிருந்த தினத்தந்தி நிருபருடன் கை குலுக்கினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:-
"லதாவுடன் எனது காதல் கனிந்து, கடவுள் அருளால் திருமணம் நடைபெறுகிறது. இது எப்படி என்பது பற்றி, என் அன்பு ரசிகர்களுக்கு சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
வாழ்க்கையின் இன்ப - துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான். முதுகில் தழும்பேற மூட்டைசுமந்து, 'மில்லி' அடித்து வாழ்க்கையின் மேடு- பள்ளங்கள் அனைத்தையும் உணர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் பெரும் திருப்பம் நிகழ்ந்தது. பிரபல நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில் தான். 7 மாதங்களுக்கு முன் அங்கு, டைரக்டர் பாலசந்தர் சாரின் "தில்லு முல்லு" படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.
பகல் ஒரு மணி இருக்கும். எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் வந்தனர். அவர்களில், என் முன்னால் வந்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் லதா. "மிஸ்டர் ரஜினி! நான் கல்லூரி மாணவி. எங்கள் கல்லூரியின் சிறப்பு இதழுக்கு, உங்களை பேட்டி காண வந்திருக்கிறேன். சம்மதமா?" என்று கேட்டார். நான் சம்மதித்தேன். பேட்டி தொடர்ந்தது. சுவையான, அறிவுபூர்வமான கேள்விகள் பலவற்றை லதா கேட்க கேட்க, நானும் என் பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

லதா திடீரென்று "மிஸ்டர் ரஜினி காந்த்! உங்கள் திருமணம் எப்போது?" என்று கேட்டார். "குடும்பப் பாங்கான பெண் எப்போது கிடைக்கிறாளோ, அப்போதுதான் திருமணம்" என்று பதிலளித்தேன். லதா மீது கண்களைப் பதித்தபடி. இப்படிச் சொன்னால் எப்படி! விளக்கமாகச் சொல்லுங்கள்!" என்றார் லதா. "உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்" என்றேன்.
நாணத்தால் லதாவின் முகம் சிவந்து விட்டது. என் வாழ்க்கையில் ஒளிவு - மறைவு இல்லை. உண்மை பேசி வாழ விரும்புகிறேன். என் மனமார, எவருக்கும் துரோகம் செய்ய மாட்டேன். அதனால்தான் மனம் திறந்து, "என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?" என்று லதாவிடம் கேட்டேன். தொடர்ந்து, இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரனிடம் பேசினேன். லதாவிடமும், லதாவின் பெற்றோரிடமும் மகேந்திரன் பேசினார். அவர்களின் சம்மதம் கிடைத்தது.
அதன் பிறகு நானும் லதா வீட்டுக்கு சென்று அவர் பெற்றோர்களிடம் பேசினேன். 'திருமணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் நானே செய்கிறேன். அதுவரை வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.
நான் பெங்களூர் சென்று என் அண்ணனிடம் லதா பற்றி கூறினேன். முதலில் அவர் அதிர்ச்சி அடைந்தார். 'அந்தப் பெண் நம்ம சாதி இல்லேன்னு சொல்றே. மராத்தியில் கிடைக்காத பெண்ணா உனக்கு மதராசில் கிடைக்கப்போகுது?" என்று கேட்டார். 'நான் நல்லா இருக்கணும்னு நீங்க விரும்பினா, லதாவை மணந்து கொள்ள எனக்கு அனுமதி கொடுங்க' என்று சொல்லி விட்டு வந்தேன்.
பிறகு என் அண்ணன், சென்னைக்கு வந்தார். லதாவைப் பார்த்து விட்டு, சம்மதம் தெரிவித்தார். லதா மட்டும், "உங்களை மணந்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தால், என் மனம் தாங்கியிருக்காது. ஏனென்றால் ஒரு பொருளின் மீது ஆசை கொண்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி கொண்டவன் நான். சம்யுக்தையை பிருதிவிராஜன் தூக்கிச் சென்றது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.
திருமணத்துக்காக 7 மாதம் காத்திருந்தேன். அதற்குக் காரணம் உண்டு. எனது மனைவியின் குணநலன்கள் எப்படி? என் குணத்தையும், மனதையும் அறிந்து நடந்து கொள்வாளா? அவளது நடை, உடை, பாவனை எப்படி என்பதை எல்லாம் அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்குத்தான் 7 மாதம் பிடித்தது.
என் மனைவி லதாவுக்கு சங்கீத ஞானம் உண்டு. நன்றாகப் பாடுவாள். அவள் விரும்பினால் சினிமாவில் பின்னணி பாடலாம். நடிக்க விரும்பினால் கூட நடிக்கலாம். நான் தடை சொல்லமாட்டேன். என்னோடு ஜோடியாக நடிக்க விரும்பினால்கூட, நான் நடிக்கத் தயார்!
பெண்கள் என்பவர்கள் வீட்டில் கணவன் காலடியில் நெளியும் புழுவோ, பூச்சியோ அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் தேவை, அந்த சுதந்திரத்தை நான் முழுமையாகத் தருவேன. "
இவ்வாறு ரஜினி கூறினார்.
திருமணம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ரஜினிகாந்த் அதிரடியாக பதில் அளித்து, பரபரப்பு உண்டாக்கினார்.
தன் திருமணம் 26-2-1981 அன்று திருப்பதியில் நடைபெற இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஜினிகாந்த், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:-
"எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. என்னோடு நெருங்கிப் பழகிய, என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களைக்கூட, "வாருங்கள்! என் திருமண கோலத்தைக் கண்ணாரக் கண்டு ஆசீர்வதியுங்கள்" என்று அழைக்கவில்லை.
இதற்குக் காரணம் என்ன? அழைப்பிதழ் அச்சடித்து, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பது, தபால், தந்தி, ரேடியோ வசதிகள் இல்லாத அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் அது எதற்கு? என்னைப்போன்ற ஒரு நடிகனுக்குத் திருமணம் என்றால், அடுத்த நிமிடமே மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நவீன வசதிகள் இருக்கின்றன. அதனால் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை.
என் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள் தவிர, வேறு எவரையும் அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, மானசீகமாகத்தான் வாழ்த்து பெற்று இருந்தேன். கண்டக்டராக நான் பெங்களூரில் பணியாற்றினேனே! அப்போது என்னுடன் பழகி, என்னுடன் உண்டு உறங்கிய சில பஸ் கண்டக்டர்களை மட்டும் திருமணத்துக்கு அழைத்திருக்கிறேன்.
தெய்வத்தின் சந்நிதானத்தில் என் திருமணம் நடைபெறுகிறது. தெய்வம் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும். ரஜினி, தன் வீட்டில், வெறும் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியைத்தான் நான் லதா கழுத்தில் கட்டப்போகிறேன்.
தாலி கட்டுவது என்பது வெறும் சடங்கு. ஆனால், தெய்வத்தை சாட்சியாக வைத்துக் கொண்டு, மனச்சாட்சிக்கு பயந்து, ஒருத்தி கழுத்தில் கயிற்றைக் கட்டுவதே உண்மையான திருமணம். இன்று நான் இருக்கும் நிலையில் 4 ஆயிரம் பேர் என்ன. லட்சம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கி திருமணத்தை சிறப்பாக செய்ய முடியும்.
ஆனால், கோடீசுவரன் என்றாலும், திருமண விழாவுக்கு பணத்தை விரயம் செய்வதை நான் வெறுக்கிறேன். பசி அறியாதவர்கள் என் திருமணத்துக்கு வந்து விருந்துண்டு போவதைவிட, பசித்தவர்களுக்கு சோறு போட நினைக்கிறேன். எனவே, சென்னையில் உள்ள சில அனாதை விடுதிகளில் உள்ளவர்களுக்கு சீருடையுடன் உணவும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
திருப்பதியில் நடந்த ரஜினி-லதா திருமணம் பற்றி நாளை பார்க்கலாம்.
- கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இப்படம் வெளியானது.
- குஷ்பு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர்.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
மீண்டும் வெளியாகும் படங்கள் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுரேஷ் கிருஷ்ணாவுடன் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய திரைப்படமான அண்ணாமலை விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை ஒட்டி, டிசம்பர் 12-ந்தேதி முதல் இந்தப் படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.
அதிரடியான இப்படத்தில் ரஜினிகாந்த், ஒரு சாதாரண பால் வியாபாரியான அண்ணாமலையாக நடிக்கிறார், அவர் தனது பணக்கார நண்பர் அசோக்கால் (சரத் பாபு) ஏமாற்றப்படுகிறார். அண்ணாமலையின் வீடு இடிக்கப்பட்டு, அவரது குடும்பம் (கால்நடைகள் உட்பட) வெளியேற்றப்படும்போது பழிவாங்க சபதம் செய்கிறார். இதன் விளைவாக, அசோக்கை எதிர்த்து அண்ணாமலையின் போராட்டம் தொடங்குகிறது.
அண்ணாமலையின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா இருவர் கூட்டணியில் வீரா (1994), பாஷா (1995), மற்றும் பாபா (2002) ஆகிய படங்கள் எடுக்கப்பட்டது.
கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் குஷ்பு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர். தேவா இசையமைப்பில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
- அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
- இப்படத்தை ‘டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்த படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது.
இந்த நிலையில், அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இந்த படத்தின் டைட்டில் டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட உள்ளதாக அவர் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
- ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா, சுருளிராஜன், டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர்.
- படத்தில் ரஜினிக்கு முரட்டு இளைஞன் வேடம்.
ரஜினி-லதா 1980-ம் ஆண்டு மத்தியில் காதல் ஜோடியாக சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தனர். தினமும் அவர்கள் போனில் பேசிக் கொள்வார்கள். நேரம் கிடைக்கும் போது சேர்ந்து விழாக்களுக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தனர். 3.7.1980-ல் வெளியான "காளி" படத்தின் முதல் காட்சியை அவர்கள் இருவரும் சேர்ந்து பார்த்தனர்.
இப்படி காதலில் ரஜினி தீவிரமாக இருந்தாலும் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினார். அந்த சமயத்தில் அவரிடம் முக்தா சீனிவாசன் இயக்கிய "பொல்லாதவன்" படமும், ஏ.வி.எம். நிறுவனத்தின் "முரட்டுக் காளை" படமும் கைவசம் இருந்தன. அதில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பொல்லாதவன் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், சிம்லா நகரங்களில் படமாக்கப்பட்டது.
முதலில் இந்த படத்துக்கு எரிமலை என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு சென்டிமெண்ட் காரணமாக அந்த படத்தின் பெயரை பொல்லாதவன் என்று மாற்றி இருந்தனர். அந்த படத்தில் ரஜினியுடன் லட்சுமி, ஸ்ரீபிரியா, சுருளிராஜன், டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். படத்தில் ரஜினிக்கு முரட்டு இளைஞன் வேடம்.
எஸ்டேட் ஒன்றில் வேலைக்கு செல்லும் லட்சுமி, ரெயிலில் வரும்போது பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் ஒரு மர்ம மனிதனை பார்த்து விடுவார். அவர் பற்றிய தகவல்களை பின்னணியாகக் கொண்டு பொல்லாதவன் படம் தயாரிக்கப்பட்டு இருந்தது.
பொல்லாதவன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் மைசூர் பகுதிகளில் படமாக்கப் பட்டன. இதற்காக ரஜினி, ஸ்ரீபிரியா, லட்சுமி ஆகியோர் பெங்களூரில் தங்கியிருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்தனர். பெங்களூரில் இருந்து காரில் புறப்படும்போது லட்சுமியிடம் ரஜினி ஒவ்வொரு பகுதியாக காட்டி அங்கெல்லாம் தான் சிறுவயதில் சுற்றி அலைந்ததை தெரிவித்தார்.
ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு கூலி வேலை செய்ததை நினைவுப்படுத்தினார். அந்த கூலி வேலைக்கு தினமும் 3 ரூபாய் கிடைத்ததையும் ரஜினி சொன்ன போது லட்சுமிக்கும், ஸ்ரீபிரியாவுக்கும் பிரமிப்பாக இருந்தது. ஒரு தடவை பெங்களூரில் லட்சுமி நடித்து வெளியான படத்தை பார்க்க கூலி வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் 15 ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு சென்றதை கூறினார்.
ரஜினி சிறுவயதில் கஷ்டப்பட்டதை எதையும் மறைக்காமல் சொன்னதை பார்த்து லட்சுமிக்கு மேலும் வியப்பாக இருந்தது. இந்த படத்தின் "அதோ வாரான்டி வாரான்டி.... வில் ஏந்தி ஒருத்தன்...." பாடல் காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்டது. அங்குள்ள ஏரியில் படமாக்கப்பட்டபோது ஒளிப்பதிவாளர் கர்ணனின் மோதிரம் தண்ணீருக்குள் தவறி விழுந்து தொலைந்து போனதை அறிந்து ரஜினி வருத்தப்பட்டார்.
தமிழ்நாட்டுக்கு திரும்ப டெல்லிக்கு வந்ததும் அவர் கர்ணனை அழைத்துச் சென்று அதே போன்று ஒரு மோதிரம் வாங்கிக் கொடுத்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார். இதைப் பார்த்து முக்தா சீனிவாசனும், அவரது குடும்பத்தினரும் ரஜினியின் பெருந்தன்மையை நினைத்து ஆச்சரியப்பட்டனர்.
1980-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியான பொல்லாதவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற "நான் பொல்லாதவன்... பொய் சொல்லாதவன்..." என்ற பாடல் அவரது ரசிகர்களிடம் அமோக ஆதரவை பெற்றது. இந்த பாடலை ரஜினிக்காகவே சிறப்பான வரிகளை அமைத்து கண்ணதாசன் எழுதி இருந்தார். அந்த பாடல் வரிகளை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும்....
நான் பொல்லாதவன்....
பொய் சொல்லாதவன்...
என் நெஞ்சத்தில்
வஞ்சங்கள் இல்லாதவன்...
வீண் வம்புக்கும்
சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி, வாய்மூடி, யார் முன்னும்
நான் நின்று ஆதாயம் தேடாதவன்,
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்…
வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்
வீரத்தை கண்டேனடி…
ஞானத்தை பாதிக்கும்
மானத்தை சோதித்தால்
நான் என்ன செய்வேனடி…
நானுண்டு வீடுண்டு வாழ்வுண்டு நாடுண்டு
என்றேதான் வாழ்ந்தேனடி
நாளாக நாளாக தாளாத கோபத்தில்
நான் வேங்கை ஆனேனடி...
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக
இதுபோல ஆனேனடி…- என்ற அந்த பாடலில் ரஜினியின் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி நடித்து வந்த "முரட்டுக்காளை" படமும் தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. முரட்டுக்காளை படத்தில் நடிப்பதற்காக ரஜினிக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 3 மடங்கு அதிக சம்பளம் கொடுத்தார். அது மட்டுமின்றி 9453 என்ற எண் கொண்ட வெளிநாட்டு கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
முள்ளும் மலரும் படத்துக்கு ரூ.35 ஆயிரம், பைரவி படத்துக்கு ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கிய ரஜினிக்கு முரட்டுக்காளை படத்தில் நடித்ததற்கு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைத்தது. பஞ்சு அருணாசலம் கதை, வசனம், பாடல்கள் எழுதிய அந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார்.
கிராமத்து கதை கொண்ட இந்த படத்தில் ரஜினி ஏழை இளைஞனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக ரதி நடித்திருந்தார்.
கிராமத்தில் வாழும் பண்ணையார் தனது முரட்டுக் காளையை யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கு தனது தங்கையை திருமணம் செய்து கொடுப்பதாக அறிவிப்பார். ரஜினி அந்த காளையை அடக்கி விடுவார். ஆனால் பண்ணையார் தங்கையை திருமணம் செய்ய மறுப்பார். அதன் பிறகு நடப்பதுதான் கதை.
175-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனி இடம் பெற்று இருந்த ஜெய்சங்கர் முதல் முதலாக இந்த படத்தில் பண்ணையாராக வில்லன் வேடத்தில் நடித்தார். இந்த படத்தின் பணிகள் தொடங்கிய போது ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் மரணம் அடைந்தார். என்றாலும் படஅதிபர் ஏ.வி.எம்.சரவணன் பொறுப்பேற்று இந்த படத்தின் பணிகளை சிறப்பாக மேற்கொண்டார்.
இதனால் உற்சாகம் அடைந்த ரஜினி இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். பஞ்சு அருணாசலமும், எஸ்.பி.முத்துராமனும் ரஜினியை நன்கு உணர்ந்தவர்களாக இருந்த தால் முரட்டுக்காளை படத்தில் அவரை எந்த அளவுக்கு வித்தியாசப்படுத்தி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டினார்கள்.
அதனால்தான் ஓடும் ரெயில் மீது ஜெய்சங்கரும், ரஜினியும் சண்டை போடும் காட்சிகளில் கூட ரஜினி டூப் போடாமல் தானே நடித்து முடித்தார். இந்த படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதி இளையராஜா இசையமைத்த பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக "பொதுவாக என் மனசு தங்கம்..." பாடல் பட்டிதொட்டிகளில் எல்லாம் அனல் பறக்கும் வகையில் இருந்த தோடு ரசிகர்களின் விருப்பப் பாடலாகவும் அமைந்தது.
அந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ரஜினிக்காகவே பஞ்சுஅருணாசலம் எழுதியதாகும். ரஜினியுடன் பழகி அவரது வாழ்க்கையை முழுமையாக அறிந்து வைத்திருந்த பஞ்சு அருணாசலம் அதையெல்லாம் அந்த பாடலில் கொட்டி இருந்தார். அந்த பாடலை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியவரும்....
அண்ணனுக்கு ஜே…
காளையனுக்கு ஜே…
பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு
வந்து விட்டா சிங்கம்…
பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு
வந்து விட்டா சிங்கம்…
உண்மைய சொல்வேன்…
நல்லத செய்வேன்…
வெற்றிமேல் வெற்றி வரும்…
ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம்…
ஆ… ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…
முன்னால சீறுது மயிலக்காளை…
பின்னால பாயுது மச்சக்காளை…
முன்னால சீறுது மயிலக்காளை… ஆ…
பின்னால பாயுது மச்சக்காளை…
அடக்கி ஆளுது முரட்டுக்காளை…
முரட்டுக்காளை… முரட்டுக்காளை…
நெஞ்சுக்குள் பயமும் இல்ல…
யாருக்கும் அச்சம் இல்ல…
வாராதோ வெற்றி என்னிடம்…
விளையாடுங்க உடல் பலமாகுங்க…
பொறந்த ஊருக்கு புகழை சேறு…
வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…
பொறந்த ஊருக்கு புகழை சேறு…
வளந்த நாட்டுக்கு பெருமை தேடு…
நாலுபேருக்கு நன்மைசெய்தா…
கொண்டாடுவார் பண்பாடுவார்…
என்னாலும் உழைச்சதுக்கு…
பொன்னான பலன் இருக்கு…
ஊரோட சேர்ந்து வாழுங்க…
அம்மன் அருள் சேரும்…
இனி நம்ம துணையாகும்…
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்… ஹே…
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே…
இந்த பாடலால் முரட்டுக்காளை படம் வெள்ளி விழா படமாக மாறியது. அதன் பிறகு தீ, கழுகு ஆகிய படங்களில் ரஜினி கவனம் செலுத்தினார். அப்போது லதாவை திருமணம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக நினைத்தார். உடனடியாக ரஜினி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதுபற்றிய ருசிகர தகவல்களை நாளை காணலாம்.






