என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamal haasan"

    • அண்மையில் நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார்
    • கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    நடிகர் கமல்ஹாசன் தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    'நீயே விடை' என்ற நிறுவனம் அனுமதியின்றி கமலின் புகைப்படங்களையும், வசனங்களையும் டி-சர்ட்டுகளில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். சிறுவயதிலிருந்தே திரையுலகில் இருந்து வருவதாகவும், பல்வேறு கலை வடிவங்களில் தனக்கிருக்கும் நிபுணத்துவத்தின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    சமீப நாட்களாகவே பிரபல நடிகர், நடிகைகளின் பெயரைப் பயன்படுத்தி, சில நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி தங்களது உற்பத்தி பொருட்களை விளம்பரம் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது. அண்மையில் கூட நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகர் மாதவன் என பல பிரபலங்களும் நீதிமன்றத்தை நாடி உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பராசக்தி படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது
    • பராசக்தி படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பராசக்தி படத்தை பாராட்டி நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "அன்புள்ள இளவல் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்

    பின்குறிப்பு:

    பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக்ஷன் கதையையும், இதன் இயக்குனர் திருமதி சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும்.

    இந்தச் சினிமாச் சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும். ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார். 

    • படத்தை தணிக்கை செய்வது தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும்
    • தணிக்கைக்கு செல்லும் படத்தின் காட்சிகளை திருத்தவும் நீக்கவும் வெளிப்படைத்தன்மை அவசியம்

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜன நாயகன் தணிக்கை விவகாரம் தொடர்பாக நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "பகுத்தறிவால் வழிநடத்தப்படும் இந்திய அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்தை உத்தரவாதம் செய்கிறது.

    இந்த தருணம் எந்த ஒரு படத்தையும் விட பெரியது, இது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் கலைக்கும் கலைஞர்களுக்கும் நாம் அளிக்கும் இடத்தை பிரதிபலிக்கிறது.

    சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, நியாயமான மற்றும் சரியான நேரத்தில் செயல்படும் ஒரு திட்டத்தைச் சார்ந்து வாழும் எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் சிறு வணிகங்களின் கூட்டு முயற்சியாகும்.

    தெளிவு இல்லாதபோது, படைப்பாற்றல் தடைபடுகிறது, பொருளாதார செயல்பாடு சீர்குலைகிறது. மேலும் பொது நம்பிக்கை பலவீனமடைகிறது.

    தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் சினிமா ஆர்வலர்கள் கலைகளுக்கான ஆர்வம், பகுத்தறிவு மற்றும் முதிர்ச்சியைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள்.

    இப்போது தேவைப்படுவது, தணிக்கை சான்றிதழுக்கான வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு மற்றும் ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட வெட்டு அல்லது திருத்தத்திற்கும் எழுதப்பட்ட, நியாயமான நியாயப்படுத்தலுடன் கூடிய சான்றிதழ் செயல்முறைகளை கொள்கை ரீதியான மறுபரிசீலனை செய்வதாகும்.

    முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து நமது அரசு நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாக்கும், அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும், அதன் கலைஞர்கள் மற்றும் அதன் மக்கள் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார்.
    • தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது.

    சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் படத்திறப்பு சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் ரஜினி பேசியதாவது:-

    ஏ.வி.எம். நிறுவனத்தில் நான் 11 படம் நடித்து இருக்கிறேன். அதில் 9 படங்கள் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படங்கள் ஆகும். ஒவ்வொரு படத்திலும் கதையை நாம் கேட்கவே வேண்டாம்.

    எந்த நடிகருக்கு எந்த மாதிரி படம் பண்ணனும், அவரது ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள். அது வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் ஆய்வு செய்து திரைக்கதை செய்து வைத்து விட்டு, நடிகர்களுக்கு அந்தந்த கதாபாத்திரத்துக்கு என்னென்ன பண்ணனும் என்பதை செய்து, இசை, படத்தொகுப்பு எல்லாவற்றிலும் அவரது கை இருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாது.

    மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில் கண்ணன் எந்த ஆயுதமும் ஏந்தாமல் ரதத்தில் உட்கார்ந்து எப்படி ஜெயித்தாரோ, அந்த மாதிரி அவர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே எல்லா படத்தையும் ஜெயிக்க வைத்தார். எல்லா படத்தையும் வெற்றிப்படமாக்கினார்.

    சினிமா மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஏ.வி.எம்.சரவணன் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடம் காலியாக இருந்த போது அதை ஏ.வி.எம்.சரவணன் பார்த்துள்ளார்.

    என்னிடம் அந்த இடத்தை ஏன் அப்படியே விட்டு விட்டீர்கள் என்று கேட்டார். காலி இடத்தை அப்படியே விடக்கூடாது. ஏதாவது கட்டணும் என்று சொல்லி அவரே பார்த்து டிசைன் பண்ணி அவரே ஆர்க்கிடெக்ட் செய்து கட்டியதுதான் ராகவேந்திரா மண்டபம்.

    எனது போயஸ்கார்டன் வீட்டுக்கு அவர் வந்தார். அதன் அருகில் காலி இடம் இருந்தது. அதை 15 மடங்கு விலை சொன்னார்கள். அதற்கு ஏ.வி.எம். சரவணன் அது என்ன விலை இருந்தாலும் சரி நீங்க வாங்கிடுங்க. அங்கு வேறு யாராவது வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றார். இந்த மாதிரி எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.

    சிவாஜி படம் பண்ணிய போது என்னிடம் சொன்னார். நீங்க 1990 கால கட்டத்தில் இருந்து 2 வருடத்துக்கு ஒரு படம், 3 வருடத்துக்கு ஒரு படம் பண்ணுகிறீர்கள். வயது ஆக ஆக பிசியா இருக்கணும், சுறுசுறுப்பா இருக்கணும். அது உடம்புக்கும், மனதுக்கும் நல்லது. வருடத்துக்கு ஒரு படம் பண்ணுங்க என்றார். அதை இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன்.

    சினிமா உலகத்துக்கு வெளியேயும் ஏ.வி.எம். சரவணனுக்கு மரியாதை இருந்தது. ஏனென்றால் அவர் அப்படி வாழ்ந்தார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. இருந்தாலும் எம்.ஜி.ஆர். அவரை ஷெரீப் ஆக்கி அழகு பார்த்தார். ஜெயலலிதா அவர் மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தார். கலைஞரும் அவர் மீது நிறைய மரியாதை வைத்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வளவு வேலையை விட்டு விட்டு இங்கு வந்திருக்கிறார். தேர்தல் நேரம் என்று சொன்னால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிக்க முடியாது. அந்த மாதிரி இருந்தும் அதை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறார். இங்கு வந்திருப்பதால் அவருக்கு 100 ஓட்டுகள் அதிகமாக கிடைத்து விடாது.

    ஆனாலும் கூட அவர் இங்கு வந்திருப்பது ஏ.வி. எம்.சரவணன் எந்த மாதிரி வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன மாதிரி ஒரு அன்பும், பண்பும் கொண்டவர், உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதற்கு எடுத்துக்காட்டு.

    அசையாத சொத்துக்கு எப்போதுமே மதிப்பு அதிகம். நம் வாழ்க்கையில் நம்மை விரும்புகிறவர்கள், நமது நலனில் அக்கறை கொண்டவர்கள் ஒரு சில பேர்தான் இருப்பார்கள். அவர்கள் அசையாத சொத்துக்கள். எனக்கு அசையாத சொத்துக்களாக கே.பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாசலம், ஆர்.எம்.வீரப்பன், சரவணன், கலைஞர் ஆகியோர் இருந்தனர்.

    காலத்தின் சட்டமோ என்னவோ, நாம் யார் மீது பிரியமாக இருக்கிறோமோ அவர்களை காலம் சீக்கிரமே கொண்டு சென்று விடுகிறது. ஒவ்வொருவரும் பிரியும் போது நமக்கு எவ்வளவு பணம், பேர், புகழ், குடும்பம் இருந்தாலும், அனாதையாக உணர்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கமல்ஹாசன் பேசியதாவது:-

    நான் சொல்ல வேண்டிய கதை 65 வருடத்து கதை. அதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. சின்ன குழந்தையாக நான் ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு போனேன். அங்கிருந்த மாந்தோப்பில் மாம்பழத்தை கடித்து விட்டு சினிமா என்றால் என்ன என்று புரிந்து கொண்டேன்.

    என்னை அந்த வயதில் இருந்து பார்த்துக் கொண்டவர்கள். அவர்கள் ஒரு குழந்தையை கொஞ்சுவது போல்தான் எனது படத்தின் தலைப்பை வைத்தனர். ஏ.வி.எம்.சரவணனுக்கு பொருந்தும் விஷயங்கள் எனக்கும் பொருந்தும்.

    அவரும் சகலகலா வல்லவர்தான். தனக்கு இருக்கும் புகழை எல்லாம் அவர் மற்றவர்களுக்கு கொடுப்பார். அவரிடம் நான் தைரியமாக பேசுவேன். அவர் ஒரு முதலாளி என்று புரிவதற்கே எனக்கு நிறைய நாள் ஆகி விட்டது. அதிக பிரசங்கம் செய்யக்கூடாது என்று எனக்கு சொல்லிக் கொடுத்தவர் எஸ்.பி.முத்துராமன்.

    ஏ.வி.எம். குடும்பத்துடன் ஒட்டிக் கொள்வதில் எனக்கு பெரிய பெருமை. அந்த உரிமையை அவர்கள் கொடுத்ததற்காக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்.

    ஏ.வி.எம். நிறுவனத்தில் படித்தேன் என்பது எனக்கு பெருமை. நான் அங்கு படித்த விஷயங்கள்தான் எனக்கு இன்று வரை கை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    இங்கு பள்ளிக்கூடம் கட்டி இருந்தால் நான் படித்தும் இருப்பேன். என்னை வேறு பள்ளிகளில் சேர்க்க யோசித்தார்கள். என்னுடைய குணாதிசயம் தெரிந்து என்னை எப்படி வழி நடத்த வேண்டும் என்று தெரிந்த பள்ளி ஏ.வி.எம். பள்ளி. சிறப்பாக கற்றுக் கொடுத்தார்கள். நான் தவறு செய்யும் போது சத்தமாக சொல்லாமல், நான் நல்லது செய்யும் போது என்னை தோளில் தூக்கி கொண்டாடியவர் ஏ.வி.எம்.சரவணன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • ரஜினிகாந்த் படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். மூவரும் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தொடக்கம் குறித்து ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்தது.

    ஆனால் சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். எதிர்பாராத காரணங்களால் விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே அண்மையில் செய்தியார்களிடம் பேசிய கமல் ஹாசன், 'அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்' என்றார்.

    இந்நிலையில், ரஜினியின் 173 வது படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பதாக ராஜ் கமல் பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
    • அது மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும்.

    தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து 'அரசன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வடசென்னை கதையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

    இதனிடயே, கமல்ஹாசன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் ஒரு புதிய படத்திற்காகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், கமல்ஹாசன் - வெற்றிமாறன் கூட்டணி பிரமாண்டமான படத்திற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், அது மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    • இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
    • நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது.

    கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கமல் ஹாசன் அக்கூட்டணியால் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில் கமல் ஹாசன் எம்.பியாக தான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய முதல் கேள்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பெட்ரோலுடன் வழக்கமான 10 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் E20 திட்டம் குறித்து கமல் ஹாசன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.  

    கமல் ஹாசனின் கேள்விகள்:

    1)E20 எரிபொருளால் வாகனத்தின் மைலேஜ் மற்றும் எஞ்சின் பாகங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா?

    2) பழைய வாகனங்களுக்கு ஏற்ற E10 பெட்ரோல் நாடு முழுவதும் கிடைப்பது நிறுத்தப்பட்டது ஏன்? அதனை மீண்டும் கொண்டுவரும் திட்டம் உள்ளதா?

    3) E20 பயன்பாட்டால் எஞ்சின் சேதமடைந்தால் அதற்கான உத்தரவாதம் அல்லது காப்பீடு குறித்து வழிகாட்டுதல்கள் உள்ளனவா?

    நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த பதில்:

    நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது. E20 எரிபொருள் குறித்து நடத்தப்பட்ட கள சோதனைகளில் வாகனங்களின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை.

    பழைய வாகனங்களில் கூட, E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் எஞ்சின் தேய்மானமோ அல்லது செயல்திறன் குறைவோ ஏற்படவில்லை என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருளை மட்டும் சார்ந்தது அல்ல. முறையான பராமரிப்பு, டயர் காற்றழுத்தம் மற்றும் ஏசி பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.

    எத்தனால் கலப்பு அதிகரிப்பது நாட்டின் இறக்குமதிச் செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது.
    • ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, பாராளுமன்றத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இதில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது? கருத்து என்ன? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு கமல்ஹாசன், இதில் கருத்து தான் சொல்ல முடியும். காந்தியார் அவர்களின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழக அரசின் மீது சுமை கூடுகிறது. ஏழைகளுக்கு சேர வேண்டிய பணம், உதவி, நலத்திட்டங்கள் எல்லாம் குறைகிறது. அதை மீட்கவும், காக்கவும் தான் முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு வேறு இடத்தில் விளையாட கூடாது என்று தான் என்னுடைய தாழ்மையான கருத்து என்றார்.

    தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் வருகை தர உள்ளனர். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதை நான் எப்படி சொல்லமுடியும்? மக்கள்தான் சொல்லமுடியும் என்றார்.

    2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக உண்டு என்று கூறினார். 

    • முப்பெரும் விழா கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்
    • சிறப்பு பாடல் வீடியோ வெளியீடு

    நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் பிறந்தநாள், சினிமாவில் 50வது ஆண்டு, 25 ஆண்டுகளுக்கு பின்னர் படையப்பா ரீரிலீஸ் என முப்பெரும் விழாவாக, மகிழ்ச்சியாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    மேலும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், முதலமைச்சர், சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ரஜினியின் பிறந்தநாளையொட்டி சிறப்பு பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    "உன் போல் யாருமில்லையே.. ஈரேழு உலகம் தேடியுமே.. மாறாத வைரம் உன் அகமே.. என் அரும் நண்பனே.. நண்பனே... நண்பனே... ஊர் போற்றும் இன்பனே... இன்பனே... இன்பனே... நீ தனி நான் தனி என்றில்லை... என்றுமே நாம் அது நிரந்தரமே.. நாம் அது நிரந்தரமே" எனும் வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன. 


    • ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
    • ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஏவிஎம் என்ற தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு மரம் நான் என்று கமல் பேசியிருந்தார்.

    இந்நிலையில் ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறி உள்ளார்.

    ஏ.வி. மெய்யப்பன் தொடங்கிய பழம்பெரும் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது.
    • பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது.

    சென்னை :

    திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம் என்று கூறியுள்ளார். 



    • நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.
    • இனிவரும் நாட்களில் ‘தலைவர் 173’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.

    இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது 'தலைவர் 173' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.



    படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருவதால் இனிவரும் நாட்களில் 'தலைவர் 173' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கருக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் அபயங்கர் தற்போத சூர்யாவின் 'கருப்பு', ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்', அல்லு அர்ஜூன் - அட்லீயின் கூட்டணியில் உருவாகி வரும் AA22XA6 மற்றும் கார்த்தியின் மார்ஷல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×