என் மலர்
நீங்கள் தேடியது "Sabarimala Temple"
- பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களில் இருந்து நெற்கதிர் கட்டுகள் சன்னிதானத்திற்கு எடுத்து வரப்பட உள்ளன.
- ஓணம் பண்டிகையையொட்டி 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். அதன்படி திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்பேரில் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது.
இதையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5.40 மணி முதல் 6.15 மணி வரை தந்திரி கண்டரு ராஜீவரரு தலைமையில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்காக பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களில் இருந்து நெற்கதிர் கட்டுகள் சன்னிதானத்திற்கு எடுத்து வரப்பட உள்ளன. அவ்வாறு எடுத்துவரப்படும் நெற்கதிர் கட்டுகளுக்கு பூஜை செய்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
அந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்து பாதுகாத்து வந்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், நோய் நொடிகள் அற்றுப்போகும் என்பது நம்பிக்கை. விவசாய அபிவிருத்திக்கும், அவர்களின் எதிர்கால சுபிட்சமான வாழ்க்கைக்கும் வேண்டி இந்த பூஜை நடைபெறுகிறது.
நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளுக்கு பின் அன்றையதினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ந் தேதி மாலையில் மீண்டும் திறக்கப்படும். 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
அதன்பிறகு ஓணம் பண்டிகையையொட்டி 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
- கடந்த 16-ந்தேதி தேவஸ்தான ஊழியர் ஒருவர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
- ரெஜிகுமாரின் அறையை போலீசார் சோதனை செய்தனர்.
திருவனந்தபுரம்:
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. இன்று வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. நடை திறக்கப்பட்டதையொட்டி ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி தேவஸ்தான ஊழியர் ஒருவர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் சன்னதியில் இருந்த காணிக்கை பெட்டியில் 10.95 கிராம் எடையிலான வளையலை காணிக்கையாக செலுத்தினார். ஆனால், இந்த வளையல் காணிக்கை வரவு கணக்கில் காட்டப்படவில்லை.
காணிக்கை பெட்டியில் போடப்பட்ட தங்க வளையல் மாயமாகி இருப்பது தேவஸ்தான அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இதுபற்றி சபரிமலை செயல் அதிகாரி லஞ்சஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து போலீசார் கடந்த 18-ந்தேதி சன்னிதானத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, சன்னிதானத்தில் திருநடை காணிக்கை பெட்டியில் போடப்படும் காணிக்கைகள் பெல்ட் மூலமாக காணிக்கை சேகரிக்கப்படும் அறைக்கு செல்வதும், அங்கு வந்த வளையலை பணியில் இருந்த தேவஸ்தான ஊழியரான ரெஜிகுமார் (வயது 45) என்பவர் திருடியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் மூலம் போலீசார் ரெஜிகுமார் திருடியதை உறுதிபடுத்தினர்.
பின்னர், ரெஜிகுமாரின் அறையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது தலையணைக்கு அடியில் மாயமான வளையல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தேவஸ்தான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரெஜிகுமாரை கைது செய்து அவரை பம்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பம்பை போலீசார் அவரை ரான்னி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சபரிமலைக்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
- பத்தினம்திட்டா மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் முறையில் மாநில அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் இங்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் பக்தர்கள் வசதிக்காக இக்கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கேரள அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதற்காக நிலம் தேர்வு செய்யும் பணி நடந்து, அதனை பற்றிய விபரங்கள் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் துறையினர் முதல் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். தற்போது சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க தேவையான அனுமதி கிடைத்துள்ளது. எனவே அங்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன. விரைவில் இப்பணிகள் தொடங்கும்.
பத்தினம்திட்டா மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் முறையில் மாநில அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் இங்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்த கட்டணம் செலுத்த வேண்டும்.
- சென்னை பக்தர் கொடுத்த புகார் தொடர்பாக பம்பை போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் செல்வார்கள்.
ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்த கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக சாமிக்கு தங்க அங்கி சார்த்தி வழிப்பட கோவிலில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதுபோல களபாபிஷேகம், நெய்யபிஷேகம் போன்றவற்றிற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சீசன் காலங்களில் கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்கள் ஏராளமானோர் காத்திருப்பார்கள். இதில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக களபாபிஷேகம், சாமிக்கு தங்க அங்கி சார்த்தி வழிபடுவதற்கான கட்டணம் போன்றவற்றிற்கு போலி ரசீது வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
இதில் சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவரிடம் ரூ.1.6 லட்சத்திற்கு போலி ரசீது கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. அந்த பக்தர் இதுதொடர்பாக பம்பை போலீசில் புகார் கொடுத்தார்.
சென்னை பக்தர் கொடுத்த புகார் தொடர்பாக பம்பை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பம்பையில் உள்ள விருந்தினர் மாளிகையில் கடந்த சீசன் காலத்தில் தங்கி இருந்த 2 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 420, 463, 468,469 மற்றும் 471 ஆகிய 5 பரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
- தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். இதுதவிர மாத பூஜை, திருவிழா காலங்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் இன்று கிடையாது. அதே சமயத்தில் கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.
நாளை (புதன்கிழமை) முதல் 19-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.
மேலும் தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 19-ந் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பின்னர் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை வருகிற 26-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27-ந் தேதி காலை 9.45 மணிக்கு திருக்கொடியை ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். ஏப்ரல் மாதம் 5-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.
- சபரிமலை கோவிலில் உண்டியல் காணிக்கை நாணயங்களை எண்ண நவீன வசதிகள் எதுவும் இல்லை.
- கோவில் நிர்வாகம் 479 பணியாளர்களை புதிதாக நியமனம் செய்தது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.
மண்டல பூஜை தொடங்கிய முதல் நாள் முதல் விழா முடியும் இறுதி நாள் வரை தினமும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பக்தர்கள் வந்தனர்.
பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோவில் வருவாயும் அதிகரித்தது. உண்டியல் காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை மூலம் சுமார் ரூ.330 கோடிக்கு வருவாய் கிடைத்தது.
இதில் உண்டியலில் போடப்பட்ட நாணயங்கள் மதிப்பு மட்டும் சேர்க்கப்படவில்லை. அவை முழுமையாக எண்ணப்பட்ட பிறகு கோவில் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.
கோவிலில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ண தற்போதுள்ள ஊழியர்களால் முடியாது என தெரிவிக்கப்பட்டதால் கூடுதல் ஊழியர்களை நியமித்து கொள்ள கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து கோவில் நிர்வாகம் 479 பணியாளர்களை புதிதாக நியமனம் செய்தது.
இவர்களையும் சேர்த்து இப்போது 700 ஊழியர்கள் உண்டியல் நாணயங்களை எண்ணி வருகிறார்கள். இதுபற்றி கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-
சபரிமலை கோவிலில் உண்டியல் காணிக்கை நாணயங்களை எண்ண நவீன வசதிகள் எதுவும் இல்லை. தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படவில்லை. இதனால் உண்டியல் நாணயங்கள் எண்ணுவது தாமதமாகி வருகிறது.
இப்போது காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சோர்வடைந்து உள்ளனர். எனவே புதிய ஊழியர்களை எண்ணும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தற்போதுள்ள நிலவரப்படி இங்குள்ள மொத்த உண்டியல் காணிக்கை நாணயங்களையும் எண்ணி முடிக்க மேலும் 10 நாட்கள் ஆகும் என தெரிகிறது.
- மகர ஜோதியை தரிசிக்க கடந்த இரண்டு நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- மகர ஜோதி அன்று ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும்போது, சன்னிதானத்தில் ஐயப்பன் திருவாபரணம் அணிந்து அருள்பாலிப்பார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு திருவிழா நடந்து வருகிறது.
மகர விளக்கு திருவிழாவின்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதனை காண நாடு முழுவதிலும் இருந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான மகர விளக்கு தரிசன நிகழ்ச்சி நாளை மாலை நடக்கிறது. அப்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதியாய் காட்சி அளிப்பார். அப்போது பக்தர்களின் சரண கோஷம் விண்ணை பிளக்கும்.
மகர ஜோதியை தரிசிக்க கடந்த இரண்டு நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜோதியை தரிசிக்க காட்டுப்பகுதியில் முகாமிட்டு தங்கி உள்ளனர்.
நாளை ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே அவர்கள் மலை இறங்குவார்கள். இதனால் சன்னிதானத்திலும், காட்டு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் தங்கி உள்ளதால் நாளை சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் நாளை பகல் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. மேலும் சன்னிதானம், பொன்னம்பலமேடு பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே மகர ஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து வரப்படும். இந்த திருவாபரண பெட்டிக்கு பக்தர்கள் பல இடங்களில் வரவேற்பு அளித்தனர்.
மகர ஜோதி அன்று ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும்போது, சன்னிதானத்தில் ஐயப்பன் திருவாபரணம் அணிந்து அருள்பாலிப்பார். அதனை காணவும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மகர ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே பக்தர்கள் சபரிமலையை விட்டு வெளியேறுவார்கள்.
- சபரிமலையில் நேற்று மாலை அரவணை விற்பனை நிறுத்தப்பட்டது.
- ஏலக்காய் இல்லாத அரவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டு, தயாரிப்பு பணியும் தொடங்கி விட்டது.
திருவனந்தபுரம், ஜன. 12-
சபரிமலை அய்யப்பன் கோவிலில் முக்கிய பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் இதனை வாங்கி வீட்டுக்கு வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இதனால் அரவணை பிரசாதம் டின்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் பிரசாதம் வாங்குவதை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடு இல்லாமல் இருக்க லட்சக்கணக்கான அரவணை டின்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு அதிக வருவாயும் வருகிறது.
இந்த நிலையில் அர வணையில் சேர்க்கப்ப டும் ஏலக்காய் தரம் குறைந்திருப்பதாகவும் அதில் பூச்சிக்கொல்லி மருந்து அளவு அதிகமாக இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக தனியார் நிறுவனம் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரவணை பிரசாதத்தை ஆய்வுக்கு உட்படுத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் நடத்த ப்பட்ட ஆய்வில், அரவணை தயாரிப்பில் தரமற்ற ஏலக்காய் பயன் படுத்தி இருப்பதும், அதில், பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது.
இதற்கிடையில் 350 கிலோ அரவணையில் 750 கிராம் ஏலக்காய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது மொத்தப் பொருட் களில் வெறும் 0.20 சதவீதம் தான் என தெரிவிக்கப்ப ட்டது. மேலும் அர வணை 200 டிகிரிக்கு மேல் வெப்பநிலையில் தயாரிக்கப்படுவதால் அது தீங்கு விளைவிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஓத்தி வைக்கப்பட்டது.
அதே நேரம் தரமற்ற ஏலக்காயில் தயாரிக்கப்பட்ட அரவணை விற்பனையை நிறுத்துமாறு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், பிஜி அஜித்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சபரிமலையில் நேற்று மாலை அரவணை விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 6½ லட்சம் டின் அரவணைகள் வீணானது. இதன் மதிப்பு சுமார் ரூ.6½ கோடியாகும்.
இதுகுறித்து திருவிதா ங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஆனந்த கோபன் கூறுகையில், ஐகோர்ட் உத்தரவுப்படி ஏற்க னவே தயாரித்து இருப்பு வைக்கப்ப ட்டிருந்த அரவணை விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. ஏலக்காய் இல்லாத அரவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டு, தயாரிப்பு பணியும் தொடங்கி விட்டது. 2½ லட்சம் டின்கள் அர வணையை ஓரே நேரத்தில் தயார் செய்யலாம். ஆர்கானிக் ஏலக்காயை கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து வருகிறோம். அப்படி கொள்முதல் செய்யப்பட்டால், அது அரவணை தயாரிக்கப் பயன்படுத்தப்படும். ஆனால் நாம் முதலில் தரத்தை சரி பார்க்க வேண்டும் என்றார்.
அதன்படி புதிதாக ஏலக்காய் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட அரவணை இன்று முதல் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
- சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சன்னிதானத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.
- தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து தற்போது மகரவிளக்கு திருவிழா நடந்து வருகிறது.
சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகரஜோதி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இதனை காண இப்போதே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சன்னிதானத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும் அங்கு தற்காலிக ஆஸ்பத்திரிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சன்னிதானத்தில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அவருடன் வந்தவர்கள் அவரை அருகில் உள்ள சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் சென்னை, மயிலாப்பூர் நொச்சி நகரை சேர்ந்த கன்னியப்பன் (வயது 74) என தெரியவந்தது.
இதுபோல விருதுநகர் மாவட்டம் தம்பாபிள்ளி பகுதியை சேர்ந்த முருகன் (62) என்பவரும் நேற்று சன்னிதானத்தில் தரிசனத்திற்கு காத்திருந்தார். அப்போது அவரும் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இருவரின் உடல்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கேரள போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சன்னிதானத்தில் சாமி தரிசனத்திற்கு வந்த தமிழக பக்தர்கள் இறந்த சம்பவம் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
- மகரவிளக்கு தினத்தன்று கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி சன்னிதானம் செல்லவும், அங்கு 18-ம் படி ஏறவும் தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது.
சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மகர ஜோதி தரிசன நாளில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் என கோவில் நிர்வாகிகள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
இதையடுத்து சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பம்மை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் நெரிசலின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சன்னிதானம் மற்றும் சபரிமலை முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மகரவிளக்கு தினத்தன்று கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். இதனை சன்னிதான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீஸ் சூப்பிரண்டு பிஜூமோன் தெரிவித்தார்.
இதற்கிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி சன்னிதானம் செல்லவும், அங்கு 18-ம் படி ஏறவும் தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. இதற்காக நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் வரை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் இவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை தவிர பேரிடர் மீட்பு படையினர், சுகாதார துறையினர், தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.