search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாடு"

    • இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.
    • இங்கு சிறப்பு அம்சம் என்னவென்றால் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழக-கர்நாடகா எல்லை அருகே இந்த கோவில் அமைந்துள்ளதால் இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குண்டத்தில் சிறப்பு அம்சம் கோவில் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு மலர் மற்றும் ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டன.

    தாளவாடி மாரியம்மனுடன் கும்டாபுரம் மாரியம்மனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9 மணிக்கு அம்மனுக்கு அலங்கார வீதி உலா தொடங்கியது. உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. இரவு கோவிலின் முன்பு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் முழுமையாக எரிந்து காலையில் குண்டம் தயார் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் இருந்து மேல தாளங்கள் முழங்க உற்சவர் சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்ட கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்கு சென்றனர்.

    அங்கு மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் சிலை பூசாரி சிவண்ணா தலையில் சுமந்து அம்மனை அழைத்து வந்தார். அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

    இளைஞர்கள் காவல் தெய்வங்கள் வேடத்தில் அலங்காரம் செய்து ஆடி வந்தனர். இதேபோல குறவர் ஆட்டம் ஆடிக்கொண்டு சில பக்தர்கள் வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    ஆற்றை கடந்து ஊர்வலம் வந்தபோது அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு காத்திருந்த பெண்கள் மலர் மற்றும் பழங்கள் வைத்து மாரியம்மனை வரவேற்றனர். பின்னார் தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் மாரியம்மனுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தலமலை ரோடு, ஓசூர் ரோடு பகுதியிலும் அம்மன் ஊர்வலம் சென்றது. அங்கிருந்து அம்மன் ஊர்வலம் போயர் வீதி, மற்றும் அம்பேத்கார் வீதிக்கு சென்றது. அங்கு பக்தர்கள் மலர்களால் மாலை அணிவித்து அம்மனை வரவேற்றனர்.

    அதை ஏற்றுக்கொண்ட மாரியம்மன் உற்சவ சிலை ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மேள தாளங்கள், தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை கொண்டு குண்டத்தை நோக்கி விரைந்து வந்தார்.

     அப்பொழுது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்தி கோஷங்கள் எழுப்ப 30 அடி நீளம், 4 அடி உயரம் உள்ள குண்டத்தில் இறங்கி கோவில் கருவறைக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    விழாவையொட்டி தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான கர்நாடக முறையில் பூஜைகள் நடைமுறைப்பட்டது. இந்த பிரம்மாண்ட குண்டம் விழாவில் கோவிலின் பூசாரி சிவண்ணா மட்டுமே தீ மிதித்தார். வேற யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. எனினும் பூசாரி தீ இறங்குவதை பார்க்க காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு குவிந்தனர்.

    கோவில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கும் போது கோவிலின் கோபுரத்தின் மேல் கருடர் வலம் வந்தார். அவர் குண்டம் இறங்கும்போது பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை தொட்டது. குண்டத்தில் இருந்து அவர் வெளியே றியதும் கூடியிருந்த பக்தர்கள் கையில் இருந்த பூமாலை, வேப்பிலை, உப்பு, சாம்பிராண்டி ஆகியவற்றை குண்டத்தில் வீசினார்கள். சாமி தரிசனம் செய்தனர்.

    குண்டம் விழாவையொட்டி தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரசாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.

    இதில், தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகம் என 3 மாநி லங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து, சாமியை வழிபட்டு சென்றனர். விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு ஓசூர் தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் விடிய, விடிய நடைபெற்றது.

    இந்த விழாவின் போது, விநாயகர், சந்திர சூடேஸ்வரர், மரக தாம்பிகை அம்மன், முருகர், ஆஞ்சநேயர் என 20-க்கும் மேற்பட்ட சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து வானவேடிக்கை மற்றும் மேள வாத்தியம் முழங்க தேர்பேட்டையில் வீதி உலா நடைபெற்றது.

    தேர்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு, தேர்பேட்டையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீ மரக தாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வர சாமியை தெப்பத்தில் வைத்து, நாதஸ்வர இசையுடன், குளத்தை சுற்றி 3 முறை வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஏராளமான பக்தர்கள் பூஜைப் பொருட்களை வழங்கி சாமியை வழிபட்டனர்.

    மேலும் இதில், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தெப்ப உற்சவத்தை காண, ஓசூர் மற்றும் சுற்று பகுதிகளிலிருந்து மக்கள் குவிந்ததால் ஓசூர் தேர்பேட்டையில் கூட்டம் அலைமோதியது.

    • இறை வழிபாட்டிற்கு, பக்திதான் பிரதானம்.
    • நீங்கள் எப்படி பூஜித்தாலும் பலன் ஒன்று தான்.

    * பஞ்சாயதன பூஜையை, காலை எழுந்தவுடன் குளித்து விட்டு பூஜை அறையில் அமர்ந்து செய்வது விசேஷம். இந்த பூஜை செய்யும் பொழுது வடக்கு திசை அல்லது கிழக்கு திசையை நோக்கி உட்கார்ந்து கொண்டு செய்வது சிறப்பானது. பஞ்சாயதன சிலைகளை கிழக்கு நோக்கி வைத்து நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்யலாம். அல்லது வடக்கு திசை நோக்கி பஞ்சாயதன சிலைகளை வைத்துவிட்டு, நாம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து பூஜிக்கலாம்.

    * பூஜைக்கு வாசனை தைலம், பஞ்சகவ்யம், பஞ்சா மிர்தம், பசும்பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், அரைத்த சந்தனம், சுத்த ஜலம் ஆகியவை சிறப்பானவை. இவற்றில் நம்மால் எதைக் கொண்டு பூஜிக்க முடியுமோ, அதைக் கொண்டு பூஜை செய்யலாம்.

    'ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத் ஸ்ரியமிச்சேத் ஹுதாஸாத் ஈஸ்வராத் க்ஞானமன்விச்சேத் மோக்ஷமிச் சேஜ் ஜனார்தனாத்' என்ற ஒரு சுலோகத்தின்படி பஞ்சாயதன பூஜையில் சூரிய பகவானை பூஜிப்பதால் நல்ல ஆரோக்கியமும், சிவபெருமானை பூஜிப்பதால் நல்ல ஞானம் மற்றும் தெளிவான சிந்தனையும், மகாவிஷ் ணுவை போதிப்பதால் பட்டம், பதவி, புகழ், சத்ரு ஜெய மும், கணபதியை பூஜிப்பதால் தடைகள் விலகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அம்மனை பூஜிப்பதால் மங்கலம் உண்டாகும்.

    இந்த பூஜையை வழக்கமாக செய்யும் ஆண்கள் வெளியில் சென்று இருக்கும் பொழுதும், பெரியோர்கள் இல்லாத பொழுதும், பெண்களும் மேற்கொள்ளலாம்.

    * கிடைப்பதற்கு அரிய இந்த மானிட பிறவியில், வாய்ப்பைப் பயன்படுத்தி எளிய முறையில் இந்த பூஜையை செய்யலாம். சக்திக்கு ஏற்ற வகையில் பூஜை பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த வழிபாட்டிற்கு, பக்திதான் பிரதானம்.

    * பஞ்சாயதன பூஜையில் முக்கியமான விசேஷம் என்னவென்றால், ஒருவர் எந்த தெய்வத்தை பிரதானமாக கருதுகிறாரோ, அந்த தெய்வத்தை மையமாக வைத்தும், மற்ற தெய்வங்களை சுற்றி வைத்தும் பூஜிப்பார்கள். நடுநாயகமாக சிவபெருமானை வைத்து பூஜிப்பவர்கள், வடகிழக்கு திசையில் இருந்து வலமாக விஷ்ணு, சூரிய பகவான், கணபதி மற்றும் அம்பிகையை வைத்து பூஜிக்கலாம்.

    இதற்கு 'சிவ பஞ்சாயதன பூஜை' என்று பெயர். அம்பாளை பிரதானமாக வைத்து 'சக்தி பஞ்சாயதன பூஜை' செய்வார்கள். அம்பிகையை நடுவிலும், தென் மேற்கில் இருந்து வலமாக கணபதி, சூரியன், விஷ்ணு, சிவபெருமானை வைத்தும் பூஜை செய்வார்கள். மகா விஷ்ணுவை நடுவில் வைத்து பூஜிப்பவர்கள், தென் கிழக்கில் இருந்து வலமாக கணபதி, சூரியன், அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து 'விஷ்ணு பஞ்சாயதன பூஜை' செய்வார்கள்.

    விநாயகப் பெருமானை மையமாக வைத்து பூஜிப்பவர்கள், தென்கிழக்கில் இருந்து வலமாக விஷ்ணு, சூரியன். அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து செய்வது 'கணபதி பஞ்சாயதன பூஜை' ஆகும். சூரிய பகவானை பிரதானமாக வைத்து பூஜிப்பவர்கள், மையத்தில் சூரிய பகவானையும் தென்கிழக் கில் இருந்து வலமாக விஷ்ணு, கணபதி, அம்பிகை மற்றும் சிவபெருமானை வைத்து பூஜிப்பார்கள். இதற்கு 'சூரிய பஞ்சாயதன பூஜை' என்று பெயர். அவரவருக்கு விருப்பமான தெய்வங்களை பிரதானமாக வைத்து, ஐந்து விதமாக பூஜை செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் எப்படி பூஜித்தாலும் பலன் ஒன்று தான்.

     பூஜையின் போது சொல்ல வேண்டிய சுலோகம்

    நம: சிவாய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே

    ஸநந்தினே ஸகங்காய ஸவ்ருஷாய நமோ நம:

    நம: சிவாப்யாம் நவ யௌவனாப்யாம்

    பரஸ்பராச் லிஷ்ட வபுர்தராப்யாம்

    நகேந்த்ர - கன்யா -வ்ருஷ - கேதனாப்யாம்

    நமோ நம: சங்கர - பார்வதீப்யாம்

    சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் சுரேஷம்

    விச்வாகாரம் ககன ஸத்ருசம் மேக வர்ணம் சுபாங்கம்

    லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகி ஹ்ருத்யான கம்யம்

    வந்தே விஷ்ணும் பவபய ஹரம் ஸர்வலோகைக நாதம்

    ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே

    சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.

    இந்த சுலோகத்தைச் சொல்லி பூஜையை முடித்த பின்னர், ஐந்து முறை இறைவனை வணங்க வேண்டும்.

    • அற்புதமான பலன் தரக்கூடிய அபூர்வமான வழிபாட்டு முறை.
    • இந்த வழிபாட்டிற்கு எந்திரமோ, விக்கிரகமோ கிடையாது.

    ஆதிசங்கரர் இந்து மதத்தில் பல பிரிவுகளாக சிதறிக்கிடந்த வழிபாடுகளை ஒருங்கிணைத்து, சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், சவுரம், கணாபத்யம் என்று வகைப்படுத்தினார். இதில் கவுமாரம் மற்றும் கணாபத்யம் ஆகியவை சைவ மதத்தின் துணைப் பிரிவுகளாகவே சிலரால் சொல்லப்படும். இந்த 6 வகையான வழிபாட்டு முறைகளையும் மேலும் எளிமைப்படுத்தி, அனைவருமே தினமும் எளிய முறையில் பூஜிக்கக்கூடிய, மறைந்திருந்த பஞ்சாயதன பூஜையை வெளிப்படுத்தினார். வசதி உள்ளவர்கள் இதை பெரிய அளவில் விஸ்தாரமாக தினமும் செய்யலாம். வசதி இல்லாதவர்கள் குறைந்தபட் சம் 10 அல்லது 15 நிமிடத்தில் இந்த பூஜையை செய்து முடித்து விடலாம். அற்புதமான பலன் தரக்கூடிய ஒரு அபூர்வமான வழிபாட்டு முறை இதுவாகும்.

    இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், இதற்கு எந்திரமோ அல்லது விக்கிரகமோ கிடையாது. இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து மூர்த்தங்களை வைத்து பூஜிக்கக்கூடிய முறை இது. எனவே இதற்கு 'பஞ்சாய தன பூஜை' என்று பெயர் வந்தது.

     சிவபெருமானுக்குரிய இயறகை மூர்த்தம்- பாண லிங்கம், அம்பாளுக்குரியது சொர்ணமுகி, விஷ்ணுவிற்குரியது சாளக்கிராமம், சூரியனுக்குரியது ஸ்படிகம், விநாயகருக்குரியது சோனாபத்திரம் என்னும் கல். ஈஸ்வரன், அம்பாள், மகாவிஷ்ணு, விநாயகப் பெருமான், சூரிய பகவான் ஆகிய ஐந்து பேர்களை சேர்த்து வைத்து பூஜை செய்யக்கூடிய இந்த முறை மிக விசேஷமாக கருதப்படுகிறது.

    இதில் சிவபெருமானுக்குரிய பாணலிங்கம் இயற்கையாகவே நர்மதை நதிக்கரையில் கிடைக்கும். பாணாசுரன் தன் ஆயிரம் கரங்களால் பாணலிங்கத்தை தினமும் பூஜித்து இந்த நதியில் விட்டதாக சொல்வர். இந்த பாணலிங்கத்தில் சிவ பெருமான் இருப்பதாக ஐதீகம்.

    அம்பிகையின் சொரூபமான சொர்ணமுகி என்னும் கல், ஆந்திராவில் சொர்ணமுகி ஆற்றில் இயற்கையாகவே கிடைக்கிறது. இதில் தங்க ரேகைகள் காணப்படும். அடுத்து, விஷ்ணு பகவானின் வடிவமாக விளங்கக் கூடிய சாளக்கிராமம். இது நேபாள தேசத்தில் முக்திநாத் ஷேத்திரத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கிறது.

    சூரிய பகவானுக்குரிய ஸ்படிகமும், தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் என்ற இடத்திற்கு அருகில் இயற்கையாகவே கிடைக்கிறது. விநாயகப்பெருனின் உருவத்திற்குரிய மூர்த்தமாக சொல்லப்படும் சோனா பத்திரக்கல், கங்கை கலக்கக்கூடிய சோனாநதியின் கரையில் கிடைக்கப்பெறுகிறது. இந்த ஐந்து மூர்த்தங்களையும், ஐந்து தெய்வங்களாக பாவித்து பூஜிப்பதால், சகல நலன்களும் தேடி வரும் என்கிறார்கள்.

    மேற்கண்ட தெய்வ மூர்த்தங்கள் அனைத்து சிறிய வடிவங்களிலேயே கிடைக்கப்பெறும். இவற்றில் சாளக்கிராமம் மட்டுமே சற்று பெரியதாக இருக்கும். இவை அனைத்தையும் ஒரு சின்ன மரப்பெட்டியில் வைத்துக்கொள்ள முடியும். இதற்கு எளிய முறையில்

    தினமும் அபிஷேகம் செய்யலாம். மந்திர உபதேசங்கள் தெரிந்தவர்கள் அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை ஜெபிக்கலாம். அல்லது எளிய முறையில் எட்டு அல்லது 16 நாமாவளி சொல்லி, துளசி, வில்வம் போன்ற இலைகளாலோ, சிறிய அளவிலான பூக்களைக் கொண்டோ பூஜை செய்யலாம்.

    சிறிய மரப்பெட்டியில் வைக்கப்படும் இந்த மூர்த்தங்களை, வெளியிடங்களுக்குச் செல்வதாக இருந்தாலும் கையில் எடுத்துச் சென்று அங்கு வைத்தும் பூஜையை நடத்த முடியும். இவற்றிற்கு நைவேத்தியமாக படைக்க பெரிய செலவு எதுவும் தேவையில்லை. நம்மால் எது முடியுமோ, அதை நைவேத்தியமாக படைக்கலாம்.

    உலர்ந்த திராட்சை, கல் கண்டு போன்றவை கூட போதுமானது. அதையே கொஞ்சம் விரிவாக செய்யக்கூடியவர்கள், தினமும் நீராடி, அன்னம் வைத்து நெய் (மகா நைவேத்தியம்) விட்டு பூஜிக்கலாம். வெளியே செல்லும்போது பூஜைக்குரிய சந்தனம், குங்குமம், துளசி, வில்வம் எடுத்துக்கொண்டு செல்லலாம்.

    துளசி, வில்வம் சற்று வாடினால் கூட கவலைப்பட வேண்டாம். தொடர் பயணத்தில் தினமும் எங்கு நமக்கு நேரம் கிடைக்கிறதோ, அங்கேயே பஞ்சாயதன பூஜையை செய்யலாம். சொர்ணசே பஞ்சாயதன பூஜையில் முருகனுக்குரிய வழிபாடு சொல்லப்படவில்லை.

    ஆனால் சிலர் முருகப்பெருமான் வழிபாடு செய்ய வேண்டும் என கருதுவார்கள். அவர்கள் வேல் வைத்து முருகப்பெருமானை மற்றவற்றோடு சேர்த்து பூஜிக்கலாம். வெளியில் செல்லும் போதும் அந்த வேலை எடுத்துச் செல்லலாம். (சில இடங்களில் வேலையும் சேர்த்து வழிபாடு செய்யும் வழக்கமும் உண்டு).

    எப்படி கூப்பிட்டாலும் பக்தியோடு அழைப்பவர்களுக்கு, இறைவன் கட்டாயம் வந்து அருள் செய்வார். சிவன், விஷ்ணு, கணபதி, சூரியன், அம்பாள் ஆகிய தெய்வங்களுடன் பஞ்சாயதன பூஜையை செய்பவர்களுக்கு வாழ்வில் நிச்சயம் ஏற்றம் உண்டு. சகல பாவங்களும் விலகும். பிரம்மஹத்தி, கோஹத்தி, சிசுஹத்தி போன்ற தோஷங்களும் நிச்சயமாக நீங்கும். இந்த ஒவ்வொரு மூர்த்தங்களிலும் இயற்கையாகவே சுவாமி இருக்கிறார் என்று அறிந்து நம் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

    பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் தான் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வரும் என்பார்கள். பஞ்சாயதன வழிபாட்டு முறையில் இறைவனை பூஜித்து வருபவர்களுக்கு, எந்த விதமான செய்வினைகளோ, கெடுதல்களோ, அகாலமரணமோ, விபத்துகளோ ஏற்படாது என சொல்லப்பட்டுள்ளது.

    • * ஓம் நிராபாதாயை நம: * ஓம் பேதநாசின்யை நம:
    • * ஓம் ஸுமுகாய நம: * ஓம் ஏகதந்தாய நம:

    விநாயகரை அர்ச்சிக்கும் நாமம்

    * ஓம் ஸுமுகாய நம:

    * ஓம் ஏகதந்தாய நம:

    * ஓம் கபிலாய நம:

    * ஓம் கஜ கர்ணகாய நம:

    * ஓம் லம்போதராய நம:

    * ஓம் விகடாய நம:

    * ஓம் விக்ன ராஜாய நம:

    * ஓம் விநாயகாய நம:

    * ஓம் தூமகேதவே நம:

    * ஓம் கணாத்யக்ஷாய நம:

    * ஓம் பாலசந்தராய நம:

    * ஓம் கஜானனாய நம:

    * ஓம் வக்ரதுண்டாய நம:

    *ஓம் சூர்ப்பகர்ணாய நம:

    * ஓம் ஹேரம்பாய நம:

    * ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:

    * ஓம் ஸித்திவிநாயகாய நம

    சிவபெருமானை அர்ச்சிக்கும் நாமம்

    * ஓம் பவாய தேவாய நம:

    * ஓம் சீர்வாய தேவாய நம:

    * ஓம் ஈசானாய தேவாய நம:

    * ஓம் பசுபதேர் தேவாய நம:

    * ஓம் ருத்ராய தேவாய நம:

    * ஓம் உக்ராய தேவாய நம:

    * ஓம் பீமாய தேவாய நம:

    * ஓம் மஹேதே தேவாய நம:

     விஷ்ணுவை அர்ச்சிக்கும் நாமம்

    * ஓம் அச்யுதாய நம

    * ஓம் அனந்தாய நம:

    * ஓம் கோவிந்தாய நம:

    * ஓம் கேசவாய நம:

    * ஓம் நாராயணாய நம:

    * ஓம் மாதவாய நம:

    * ஓம் புருஷோத்தமாய நம:

    * ஓம் விஷ்ணுவே நம:

    * ஓம் மதுஸூதனாய நம:

    * ஓம் த்ரிவிக்ரமாய நம:

    *ஓம் வாமனாய நம:

    * ஓம் ஸ்ரீதராய நம:

    * ஓம் ஹ்ருஷீகேசாய நம:

    * ஓம் பத்மநாபாய நம:

    * ஓம் தாமோதராய நம:

     அம்பிகையை அர்ச்சிக்கும் நாமம்

    * ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

    * ஓம் ஸ்ரீ மாத்ரே நம:

    * ஓம் ஸ்ரீ மஹா ராக்ஜ்ஞ்ன்யை நம:

    * ஓம் ஸ்ரீமத் ஸிம்ஹாஸனே ச்வர்யை நம:

    * ஓம் நிர்மமாயை நம:

    * ஓம் மமதா ஹந்த்ரியை நம:

    * ஓம் நிஷ்பாபாயை நம:

    * ஓம் பாபநாசின்யை நம:

    * ஓம் நிஷ்க்ரோதாயை நம:

    * ஓம் க்ரோத சமன்யை நம:

    * ஓம் நிர்லோபாயை நம:

    * ஓம் லோபநாசின்யை நம:

    * ஓம் நிஸம்சயாயை நம:

    * ஓம் ஸம்சயக்ன்பை நம:

    * ஓம் நிர்ப்பவாயை நம:

    * ஓம் பவநாசின்யை நம:

    * ஓம் நிர்விகல்பாயை நம:

    * ஓம் நிராபாதாயை நம:

    * ஓம் பேதநாசின்யை நம:

     சூரியனை அர்ச்சிக்கும் நாமம்

    * ஓம் மித்ராய நம:

    * ஓம் ரவயே நம:

    * ஓம் ஸூர்யாய நம:

    * ஓம் பானவே நம:

    * ஓம் ககாய நம:

    * ஓம் பூஷ்ணே நம:

    * ஓம் ஹிரண்யகர்ப்பாய நம:

    * ஓம் மரீசயே நம:

    * ஓம் ஆதித்யாய நம:

    * ஓம் ஸவித்ரே நம:

    * ஓம் அர்க்காய நம:

    * ஓம் பாஸ்கராய நம:

    • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி.
    • கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    சென்னை:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு உயிரை துறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தியானிப்பார்கள்.

    இயேசு சிலுவையில் உயிரை விடுவதற்கு முன்பு 7 வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகள் குறித்து ஆலயங்களில் தியானிக்கப்படும். அவர் சிலுவையில் முதலாவதாக பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே! என்று கூறினார். இவை உள்ளிட்ட 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கும் மும்மணி தியான ஆராதனை நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது.

    கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதேபோல சி.எஸ்.ஐ., மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட எல்லா திருச்சபைகளிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம். மும்மணி தியான ஆராதனை முடிந்த பிறகு தான் கிராஸ் பன், மோர் அல்லது கஞ்சி போன்றவற்றை சாப்பிடுவார்கள். முன்னதாக இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. தனது சீடர்களுடன் இயேசு கடைசி ராப்போஜனம் விருந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சியை நினைவுப்படுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து இயேசு சிலுவையில் அடித்து கொல்லப்படுகிறார். சிலுவையில் உயிரை விட்ட அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்து வருவதை தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    • மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு வரவேற்பு நிகழ்ச்சி.
    • நாளை கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.

    தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல் வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் வேறு எந்த ஸ்தலங் களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைப வத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.

    அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவில் நேற்று இரவு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நவரத்தினங்கள் பதித்த செங்கோல் மற்றும் சேவல் கொடி வழங்கி வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மன் ஆகியோர் இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மானசனத்தில் புறப்பட்டு வந்தனர். சுவாமிகளை பசுமலையை அடுத்த மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையடுத்து கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருமண சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். அங்கு மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். அதேநேரம் பெண்கள் புதிதாக தங்களது தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர்.

    பின்னர் திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட் டது. விழாவின் சிகர நிகழ்ச் சியாக நாளை காலை 6.00 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரில் கிரிவல பாதை வழியாக சுப்பிரம ணிய சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப் பார்.

    விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் திருப்பரங்குன்றம் கோவிலில் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    • 18 படிகள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஐயப்பன் எழுந்தருளி உள்ளார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    சென்னை:

    வடசபரி என்று அழைக்கப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் (ஆர்.ஏ.புரம்) 18 படிகள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஐயப்பன் சாமி எழுந்தருளி உள்ளார். இறைவனின் உத்தரவுப்படி புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், நவக்கிரகங்கள், ஆஞ்சநேயருக்கும் புதுபொலிவுடன் கோபுரங்கள் கட்டி பஞ்ச வர்ணங்கள் பூசப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த 24-ந்தேதி விநாயகர் பூஜை, முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 25-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாக பூஜை, 26-ந்தேதி 4 மற்றும் 5-ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7.15 மணி அளவில் 6-ம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.

    தொடர்ந்து 10.45 மணிக்கு சபரிமலையில் இருந்து வந்திருந்த மோகன் தந்திரி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ கே.பிச்சை குருக்கள் தலைமையில் கோபுர கலசத்துக்கும், அதை தொடர்ந்து மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

     இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'சாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு வெள்ளி ரதத்தில் ஐயப்ப சாமி எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

    விழா நாட்களில் வேதபாராயணம், தேவார இன்னிசையும், கலைநிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப சாமி கோவில் அறக்கட்டளை அறங்காவலரும், கும்பாபிஷேக திருப்பணிக்குழு தலைவருமான ஏ.சி.முத்தையா மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

    • மக்கா நகரம் புனிதமானது என்று அறிப்விக்கப்பட்ட தினம்.
    • மக்கா நகரில் இறைவன் கொலையைத் தடை செய்தான்.

    மக்கா நகரம் புனிதமானது என்று அறிப்விக்கப்பட்ட தினம்

    ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் மாத பிறை 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மக்கா மாநகரம் வெற்றி கொள்ளப்படுகிறது. மறுநாள் பிறை 18-ம் தினம் புதன் கிழமை அன்று நபி (ஸல்) அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கா மாநகரம் புனிதம் குறித்து பிரகடனம் செய்கிறார்கள்.

    அபூஷுரைஹ் (ரலி) அறிவிக்கிறார்: அம்ர் பின் ஸயீது என்பவர் (யஸீதுடைய ஆட்சியின் போது) மக்காவை நோக்கி ஓர் ராணுவத்தை அனுப்பியபோது, 'தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் ஆற்றிய உரையை எனது இரண்டு காதுகளும் கேட்டிருக்கின்றன. என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிய போது என் கண்கள் இரண்டும் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள்.

    பின்னர் இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனித நகரமாக்க வில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பியிருக்கும் எந்த மனிதனும் இங்கே ரத்தத்தை ஒட்டுவதோ, இதன் மரம். செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இங்கு ஒரு சிறு போர் நடத்தியதை ஆதாரமாகக் கொண்டு எவராவது அவ்வாறு இங்கே போரிடுவது அனுமதிக்கப்பட்டது என்று கருதினால், அவர் தெரிந்து கொள்ளட்டும், 'நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு மட்டுமே அனுமதியளித்தான், உங்களுக்கு அவன் அனுமதி அளிக்க வில்லை' என்று அவரிடம் கூறுங்கள். எனக்கு கூட அவன் அனுமதியளித்தது பகல் பொழுதின் சிறிது நேரத்திற்கு மட்டும்தான். இன்று அதன் புனிதம் நேற்றுள்ள அதன் புனிதம் போல் வந்துவிட்டது. இச்செய் தியை இங்கே வராதிருப்பவர்களுக்கு இங்கு வந்திருப்பவர்கள் தெரிவித்து விடட்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்:புகாரி)

    மக்காவின் புனிதம் குறித்து நபி (ஸல்) பிரகடனம் செய்தபோதிலும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் மக்காவின் மண்ணை புனிதமாக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக ஆக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக்கியது போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக்கினேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் அளவைகளான ஸாஉ, முத்து ஆகியவற்றில் அருள்வளம் கிடைத்திட பிரார்த்தித் தேன்.' (அறிவிப்பாளர்: இப்னு ஜைத் (ரலி), நூல்:புகாரி)

    'மக்கா நகரில் இறைவன் கொலையைத் தடை செய்தான். யுத்தம் செய்ய யாரும் அனுமதிக்கப் படவில்லை. இந்நகரின் முள் செடிகள் அகற்றப்படக்கூடாது. இதன் மரங்கள் வெட்டப்படக்கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை மக்களுக்கு அறிவிப்பு செய்பவரைத் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது' (நூல்:புகாரி)

    'வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப் படக்கூடாது ' (நூல்: புகாரி) என நபி (ஸல்) கூறினார்கள்.

    மேற்கூறப்பட்ட அனைத்தும் மக்காவின் புனித எல்லைப் பகுதிகளில் தடை செய்யப்பட்டவையாகும். இவற்றைப் பேணி அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். புனித மக்காவின் வடக்குப் பகுதி 'தன்ஈம்' ஆகும். தெற்குப் பகுதி 'அளாஹ்' ஆகும். கிழக்குப்பகுதி ஜிஃரானா' ஆகும். வடகிழக்குப் பகுதி வாதிநக்லா' ஆகும். மேற்குப்பகுதி 'ஹூதைபிய்யா' ஆகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவந்தாதி என்னும் நூலை இயற்றியவர்.
    • மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். நாயன்மார்களில் மூத்தவர்.

    எல்லோருக்கும் தாயும் தந்தையுமாக விளங்குகின்ற இறைவன், `அம்மையே' என்று அழைத்ததால் காரைக்கால் நகரில் பிறந்த இந்த சிவனடியாருக்கு காரைக்கால் அம்மையார் என்கின்ற திருநாமம் நிலைத்தது. காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். நாயன்மார்களில் மூத்தவர். கயிலை மலையின் மீது கால்கள் படக்கூடாது எனக் கருதி கைகளால் நடந்து சென்றவர். அந்தாதி நூல்களில் மிகப்பழமையான நூலாகக் கருதப்படும் அற்புதத் திருவந்தாதி என்னும் நூலை இயற்றியவர்.

    இந்த நூல் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இது தவிர, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோயிலில் தனி சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோயில் காரைக்கால் அம்மையார் கோயில் என்று மக்களால் அழைக்கப் பெறுகிறது. இவருடைய சிறப்புக்கள் சில.

     1. சிவபெருமானால் ''அம்மையே'' என்று அழைக்கப்பட்டவர்.

    2. இசையில் வல்லவர். இறைவன் நடனமாடும் போது கீழே அமர்ந்து இசைத்தபடி இருப்பார்.

    3. அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் இருப்பவர். மற்ற நாயன்மார்கள் நின்றபடியேபிரகாரத்தில் இருப்பர்.

    4. தமிழில் அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.

    5. திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையார் தங்கியமையால், ஞான சம்பந்தர் அத்தலத்தில் கால்பதிக்க தயங்கினார்.

    6. அம்மையாரின் பாடல்களை மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சைவத்தில் சிறப்பிக்கப்படுகிறது.

     காரைக்கால் அம்மையாரின் பெருமையை விளக்கும் மாங்கனித் திருவிழா தனிப்பெரும் விழாவாக ஜூன், ஜூலையில் காரைக்காலில் நடைபெறும். அவருடைய குருபூஜை தினம் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், அதாவது இன்று எல்லா சிவாலயங்களிலும், சிவனடியார்கள் இல்லத்திலும் அனுஷ்டிக்கப்படும். அன்று அபிஷேக ஆராதனைகள் செய்து காரைக்கால் அம்மையார் இயற்றிய பாடல்களை ஓதுவார்கள்.

    • மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரப்பன் கொட்டாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலை முதலே மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கூழ் ஊற்றுதல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி, சக்தி கரகம் எடுத்து வந்து வழிபட்டனர்.

    மேலும் கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு வடை சுட்டு எடுத்து பக்தர் ஒருவர் நேர்த்திகடன் செலுத்தினார். இதில் வீரப்பன் கொட்டாய், புதுக்காடு, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர்க்கவுண்டர், கோவில் நிர்வாகிகள், பூசாரி மற்றும் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • சிவாலய ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • அற்புதங்கள் நிறைந்தது கோலவார் குழலாள் ஈஸ்வரி சோழராஜா கோவில்.

    ஆன்மிக பூமியான இந்திய நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள புண்ணிய தலமாக இருப்பது கன்னியாகுமரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நடைபெறும் 'சிவாலய ஓட்டம்' மிகவும் பிரசித்தி பெற்றது. முக்கடல் சங்கமிக்கும் இங்கு சிவபெருமானுக்கு என பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்கள் உள்ளன.

    அற்புதங்கள் நிறைந்த கோவில்

    அந்த வகையில் பல்வேறு அற்புதங்கள் நிறைந்தது கோலவார் குழலாள் ஈஸ்வரி உடனுறை சோழராஜா கோவில். இந்த கோவில் 'சோழராஜா கோவில்' என்று அழைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் அருகில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சோழ மன்னர் அமைத்த சிவன் கோவில்களில் ஒன்றாகும்.

    தற்போது உள்ள நாகர்கோவில் முன்பு கோட்டார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பின்னர் நகரமயமாதல் காரணமாக நாகர்கோவில் என்ற பெயரில் நகரப்பகுதிகள் மாறிவிட்டன. ஆகவே நாகர்கோவிலின் நுழைவு வாசலாக ஒழுகினசேரி திகழ்கிறது. 'உலக முழுதுடையான் சேரி்' என்ற பெயரே காலப்போக்கில் மருவி 'ஒழுகினசேரி' என்று மாறியதாக கூறப்படுகிறது.

    இங்கு 'அரவ நீள்சடையான்' என்ற பெயரில் மகா தேவரான சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பூம்குழலி என்ற பெயரில் கோலவார் குழலாள் ஈஸ்வரி அம்மன் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

     தஞ்சை பெரியகோவிலின் கட்டமைப்பு

    கி.பி. 10-ம் நூற்றாண்டில் சோழ மன்னர் ராஜேந்திர சோழனின் மகன் ராஜேந்திர சோழீஸ்வரனால் கட்டப்பட்டது, இந்த சோழ ராஜா கோவில். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை மாதிரியாகக் கொண்டு இந்த ஆலயத்தை வடிவமைத்து இருக்கிறார்கள். எனவே இதை குமரி மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவில் என்றும் கூறுகிறார்கள். இங்கு மூலவர் லிங்க வடிவில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    ராஜேந்திர சோழீஸ்வரன், சேர நாட்டை கைப்பற்றும் நோக்கத்துடன் தஞ்சையில் இருந்து பெரும் படைகளுடன் வந்து நாகர்கோவிலில் தங்கி உள்ளார்.

    அப்போது அவரது கனவில் சிவபெருமான் தோன்றி அங்கு கோவில் எழுப்பும்படி கூறி மறைந்துவிட்டார். அதைத்தொடர்ந்து இங்கு ராஜேந்திர சோழீஸ்வரனால் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு மூலவரான அரவ நீள்சடையான் சன்னிதி, உயரமான மேடை போல் அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் படி ஏறி தான் சன்னிதானத்துக்கு செல்ல வேண்டும். சோழ மன்னர் உருவாக்கம் செய்ததால் சோழ ராஜா கோவில்' என்ற பெயரில் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சோழ ராஜா கோவிலுக்கு வந்து வழிபட்டால் தடைகள் நீங்கி, உரிய காலத்தில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த கோவிலுக்கு வந்து சாமியை வழிபட்டால், குழந்தை தோஷங்கள் நீங்கி, புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு வந்து சிவனை வழிபட்டால், வாழ்வில் ஏற்படும் சோதனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    இக்கோவில் கல்வெட்டுகளில் அரவநீள்சடையான் என்று உள்ளதாகவும், மேலும் சோழீஸ்வரமுடையர், ராஜேந்திர சோழீஸ்வர முடைய நயினார், பெரிய நயினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இக்கோவில் அமைந்துள்ள சுற்றுப்புறத் தெருக்களும் சோழராஜா கோவில் தெரு என்ற பெயரில் அமைந்துள்ளன.

    தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவிலான விமானமும், நான்கு பக்க கற்சுவர்களின் மேற்கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன. சோழர்கள் காலத்திற்கு பிறகு பாண்டிய மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களால் இந்த கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    18 அடி உயரமுள்ள சிவலிங்கம் கோவில் கருவறையில் வீற்றிருக்கும் லிங்க வடிவான சிவபெருமானின் மொத்த உயரம் 18 அடி ஆகும். விட்டம் 16 அடி. இதில் 3½  அடி உயரத்திலும், நிலத்தின் அடியில் மீதிமுள்ள 14½ அடி மண்ணில் புதைந்த நிலையிலும் லிங்க வடிவில் கிழக்குப் பார்த்து அருள்பாலித்து வருகிறார். தூய மனதுடன் பக்தி பரவசத்துடன் கருவறையில் இருக்கும் அரவ நீள்சடையானை 'ஓம் நமசிவாய' என்று இருகரம் கூப்பி வணங்குபவர்கள் சிவபெருமானையே நேரில் பார்ப்பது போல் உணர்வதாக கூறுகின்றனர்.

    பூமிக்கடியில் இருந்தும் இறைவன் அருள் செய்வதால், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இங்கு வந்து முறையிட்டால் உடனே தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோவிலில் அமர்ந்து ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபட்டால் இறையுணர்வு அதிர்வலைகளை உணரமுடியும் என்றும் கூறுகிறார்கள். கோவிலின் சுற்றுப் பகுதியின் தென்மேற்குப் பகுதியில் விநாயகப்பெருமானும், வடமேற்குப் பகுதியில் ஆறுமுக நயினாரும், கிழக்கு பார்த்து தனித்தனி சன்னிதிகளில் அமர்ந்து அருள்புரிந்து வருகின்றனர். இரு சன்னிதிகளுக்கு இடையே நாகராஜரும் அருள்தருகிறார்.

    மேலும் தட்சிணாமூர்த்தி மற்றும் ஐயப்பன் சன்னிதிகளும் அமைந்திருக்கின்றன. இந்த கோவிலில் 2 பிரகாரம் உள்ளது. 2 பிரகாரம் கோவிலின் நந்தவனம் ஆகும்.

    சிவனை ஓரக்கண்ணால் பார்க்கும் அம்பாள் இத்திருத்தலத்தில் அம்பாள், கோலவார் குழலாள் ஈஸ்வரி என்ற பெயரில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற கோவில்களில் அம்பாள் எப்போதும் பக்தர்களை நேரில் பார்த்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இங்கு அம்மன், தனது முகத்தை சற்று இடதுபுறமாக சாய்த்து, சிவனை ஓரக்கண்ணால் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருப்பது ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.

    அம்பாள் சன்னிதிக்கு மேல்பக்கம் ஒரு கிணறு உள்ளது. முன்பெல்லாம் கோவில்களின் விக்கிரங்களை தூய்மைப் படுத்துவதற்கும், அபிஷேகத்திற்கும் கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுப்பார்கள். காலப்போக்கில் அவை மாறிவிட்டன.

    தல விருட்சம் வில்வம்

    இக்கோவிலின் தலவிருட்சம் வில்வ மரமாகும். இந்த விருட்சம் அருகில் உள்ள கொன்றை மரத்துடன் சேர்ந்து பூஜிக்கப்படுகிறது. கொன்றை மரம் பங்குனி, சித்திரை மாதங்களில் மாத்திரமே பூக்கிற இயல்பு கொண்டது. ஆனால் இங்குள்ள கொன்றை மரம் வருடத்தில் எல்லா மாதங்களிலும் பூத்துக் குலுங்குவது இக்கோவிலின் சிறப்பு. கோவிலின் வெளிப்பக்கம் பெரிய அளவில் தற்போது சுற்றுச்சுவரும், தென்பகுதியில் ஒரு கலையரங்கமும், கோவில் நுழைவு வாசலுக்கு வடக்கு பக்கம் நவக்கிரக சன்னிதியும், பைரவர் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் சோழர்களின் பண்பாட்டை பற்றி தெரிந்துகொள்ள இந்த கோவில் உதவுகிறது. அதிலும் குறிப்பாக 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 7 சோழர் கால கல்வெட்டுகள், அவர்கள் நிர்வாகத்தினையும் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கி.பி.17-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் பழுதுபார்க்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

    குமரி மாவட்டம் வரும் ஆன்மிக பக்தர்கள் நிச்சயம் சோழராஜா கோவிலுக்கு வந்து வணங்கினால் ஈசன், அம்பாளின் முழு அருளை பெற முடியும் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

    வருஷாபிஷேகம்

    இந்த கோவிலில் கொடிமரம் மற்றும் பலிபீடம் இல்லை. கோவில் நுழை வாசலில் அழகிய கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. 2017-ம் ஆண்டு மே மாதம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதன் பின்னர் வருடம் தோறும் வரு ஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான வருஷாபிஷேகம் விரைவில் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருஷாபிஷேகம் அன்று சாமிக்கும், அம்பாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    பூஜைகள்

    இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் மாதம் ஒரு முறை சங்கடஹர சதுர்த்தி பூஜை விநாயகருக்கு நடை பெறும் முக்கிய பூஜைகள் ஆகும். ஐயப்ப சாமிக்கு பங்குனி உத்திரம் மற்றும் கார்த்திகை மண்டல பூஜை நடைபெறும். தட்சிணாமூர்த்திக்கு குரு பெயர்ச்சி மற்றும் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் அர்ச்சனை வழிபாடும், மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரம் மற்றும் ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் நாகர் தேவதை பூஜையும் நடக்கிறது.

    மேலும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி மற்றும் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு, மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிறு தோறும் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடை பெறுகிறது. அம்பாளுக்கு மாதந்தோறும் பவுர் ணமி மற்றும் நவராத்திரி பூஜை, ஆடி செவ்வாய் வழிபாடு மற்றும் பரிகார பூஜைகள் அர்ச்சனை செய்யப்படுகிறது.

    மூலவருக்கு மாதம் வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், புஷ் பாஞ்சலி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    குறிப்பாக மகா சிவராத்திரி வழிபாடு கோவிலில் சிறப்பாக நடத்தப்படும். அன்று பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதும். தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும். கோவில் நடை காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு 10.30 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படும். இந்த கோவிலுக்கு மொத்தம் 7 பிரகாரங்கள் இருந்துள்ளது. ஆங்கிலேயர் வருகை உள்ளிட்ட பல்வேறு படையெடுப்பு காரணமாக 2 பிரகாரங்கள் மட்டுமே தற்போது இருப்பதாக கூறப்படுகிறது.

    ×