என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செந்தூர் கோவில்"

    • விடுமுறை நாள் என்பதால் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
    • கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. மேலும் சுபமுகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்களும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுப முகூர்த்த தின நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள். மேலும் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் டிட்வா புயல் மற்றும் தொடர் மழை பெய்து வந்ததால், வழக்கத்தை விட சற்று குறைவான பக்தர்களே கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். 

    • கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
    • ஐப்பசி மாதம் கடைசி சுப முகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த னர்.

    இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று ஐப்பசி மாதம் கடைசி சுப முகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டத்துடன் மணமக்கள் வீட்டார்கள் கூட்டமும் கோவில் அதிகமாக காணப்பட்டது.

    • பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
    • நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்பு உள்ள கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது சீற்றத்துடனும், உள்வாங்கியும் காணப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது.

    கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடலுக்குள் இருந்த பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தன.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவில் நிர்வாகம் நேற்று முதல் புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
    • கோவில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் ஆகியோர் இந்தப்பணியில் ஈடுபட்டனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதினால் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலையில் பக்தர்கள் மறுநாள் சுவாமியை தரிசனம் செய்யலாம் என கருதி இரவு நேரங்களில் கடற்கரை பகுதியில் தங்குவது வழக்கமாக இருந்தது.

    இந்த நிலையில் சமீப காலமாக கடற்கரையில் தங்கும் பக்தர்கள் உடைமைகள் திருட்டு போவதாக புகார்கள் வந்தவாறு உள்ளது.

    எனவே பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவில் நிர்வாகம் நேற்று முதல் புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதன் பேரில் கடற்கரை பகுதியில் யாரும் இரவு நேரங்களில் தங்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. நேற்று கோவில் கடற்கரை பகுதியில் தரிசனத்திற்காக குடும்பத்துடன் தங்கி இருந்த பக்தர்களை கோவில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் ஆகியோர் இந்தப்பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் யாரும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கோவில் கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.



    நேற்று கடற்கரை பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதி வரை உள்ள கடற்கரை பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாதவாறு கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடற்கரையில் தங்கிய பக்தர்களை போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி கோவில் வளாகம் மற்றும் அங்குள்ள மண்டபங்களில் தங்கிக் கொள்ளுமாறும் கூறினர்.

    இதனால் தற்பொழுது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையானது இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 

    • கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது.
    • பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடலானது அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்கி காணப்படுவதும், சில மணி நேரங்களில் வெளியே வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று பவுர்ணமி என்பதால் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

    மேலும் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது. பக்தர்கள் கடல் உள்வாங்கி காணப்பட்டதை கண்டு செல்பி எடுத்து சென்றனர். ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர். 

    • கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
    • மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந் தேதி மாலையில் நடந்தது.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான 28-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று மாலையில் சுவாமி குமர விடங்கபெருமான் மாலை மாற்று வைபவத்திற்காக தெப்பக்குளம் அருகில் வந்து அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    அன்று இரவு 12 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    29-ந் தேதி (புதன்கிழமை) இரவு குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். 30, 31, மற்றும் நேற்று வரை 3 நாட்களிலும் தினமும் மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடைபெற்று வந்தது.

    திருச்செந்தூர் கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள்

     

    கந்த சஷ்டி திருவிழா 12-ம் நாளான இன்று விழா நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    இன்று மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. கந்த சஷ்டி திருவிழா நிறைவு நாள் மற்றும் ஞாயிறு விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்

    அவர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    • முருகனை திருமணம் செய்வதற்காக தெய்வானை தவம் இருக்கிறாள்.
    • 3 நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார்.

    கந்தசஷ்டி திருவிழாவின் 7-ம் திருநாளான, சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

    சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவில் திருக்கல்யாணம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப்பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள்பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது.

    மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார். அடுத்த 3 நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிபடுத்துகின்றனர்.

    • ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன.
    • அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார்.

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் தலமாக இருப்பது பழனியும், திருச்செந்தூர் திருத்தலமும் தான். பழனி தலத்திற்கு சென்று வழிபட்டால் தீராத நோய்கள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் திருச்செந்தூர் சென்று வழிபட்டால், முருகனின் ஆறுபடை வீடுகளையும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு மும்மூர்த்திகளின் வடிவமாக முருகப் பெருமான் காட்சி தருகிறார். அதிசயங்கள் பல நடக்கும் முருகன் கோவிலாக சித்தர்கள் பலராலும் பாராட்டப்பட்ட கோவில் என்றால் அது பழனியும், திருச்செந்தூரும் தான்.

    உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. இருந்தாலும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும் தலம் திருச்செந்தூர் தலம் தான். இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் நடக்கும் உற்சவங்கள், அவற்றின் சிறப்புகள் பற்றி பலரும் அறியாத விஷயங்களை உள்ளது.

    மாப்பிள்ளை சுவாமி

    கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால் திருச்செந்துார் முருகன் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமாள் என 4 உற்சவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதியும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என அழைக்கின்றனர். இவரே திருக்கல்யாணத்தின் போது உற்சவ மூர்த்தியாக எழுந்தருள்வார். அதே போல் சூரசம்ஹாரத்தின் போது ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சக்தி வேல் தாங்கி, சூரனை சம்ஹாரம் செய்வார். இந்த நான்கு உற்சவர்களையும் தரிசித்து, வழிபட்டால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.

    12 நாள் சஷ்டி விழா

    முருகத்தலங்களில் கந்தசஷ்டி விழா 6 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்துடன் சஷ்டி திருவிழா நிறைவடையும். சில தலங்களில் மட்டும் 7 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்துடன் சஷ்டி விழா நிறைவடையும். ஆனால் திருச்செந்துாரில் மட்டும் மொத்தம் 12 நாட்கள் சஷ்டி விழா நடைபெறும். முதல் ஆறு நாட்கள் வரை சஷ்டி விரதமும், அதன் முடிவில் சூரசம்ஹாரமும் நடக்கும். ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அதனை அடுத்து ஐந்து நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடக்கும்.

    சந்தன மலை

    ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன. ஆனால் திருச்செந்துாரும் மலைக்கோவிலே. கடற்கரையில் இருக்கும் சந்தனமலையில் தான் கோயில் இருந்தது. எனவே இத்தலத்தை, கந்தமாதன பர்வதம் என்பர். தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறுகுன்றாக இருப்பதைக் காணலாம். அதே போல் ஆறுபடை வீடுகளில் முருகன் சன்னதி தரை மட்டத்திற்கு கீழ் இருப்பதும், முருகப் பெருமான் கடலை பார்த்தவாறு அமர்ந்திருப்பதும், சிவ பூஜை செய்த நிலையில் கையில் பூ உடன் இருப்பதும் திருச்செந்தூரில் மட்டுமே.

    தோஷம் போக்கும் ஞானகுரு

    அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார். எனவே திருச்செந்துார் குரு தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்கள் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன. திருச்செந்துார் முருகனை வணங்கினால், குருதோஷம் மறையும். ஏனெனில் திருச்செந்துாரில் ஞான குருநாதராக முருகன் அருள்புரிகிறார்.

    வெற்றிக்களிப்பில் முருகன்

    திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) வருவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு செல்வார். ஆறாம் நாளன்று கடற்கரையில் சூரனை வதம் செய்வார். அதன்பின் வெற்றிக் களிப்பில் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

    • திதி தேவதை பிரம்ம தேவனின் மானச புத்ரி.
    • முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது.

    சஷ்டி என்பவள் ஒரு திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். சஷ்டி எனும் திதி தேவதையானவள் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள்.

    இவள் பணி அதோடு மட்டும் நின்று போவதில்லை. மாதர்களுக்கு கரு உருவாக்குபவள், உருவாக்கிய கருவை உடனிருந்து காப்பவள், அக்கரு சிறப்பாக வளர உதவி புரிபவள், பிறந்த அந்த சிசுக்களை பலாரிஷ்ட தோஷங்கள் ஏற்படாமல் காப்பாற்றுபவள்.

    திதி தேவதை பிரம்ம தேவனின் மானச புத்ரி. முன்பொரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றபோது இவள் தேவர்கள் சேனையின் பக்கம் இருந்து உதவி புரிந்ததால் தேவசேனையென்றும் ஓர் பெயர் பெற்றாள். (இந்திரனின் மகளாகப் பிறந்து முருகப் பெருமானை திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்த தெய்வானை என்பவள் வேறு இவள் வேறு) அப்போது அந்த தேவசேனைகளின் பதியாகத் திகழ்ந்த (தேவசேனாபதி) முருகனுக்கு இந்த திதி தேவதையான சஷ்டி தேவி மிகவும் பிரியமுடையவளாக திகழ்ந்தாள். அதனால்தான் முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது.

    • வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.
    • முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

    தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதாக உள்ளன. தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.

    கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினை புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளை தெளிவுப்படுத்துகின்றது. வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறை பொருளாக அமைந்துள்ளது.

    வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று ெபாருதவீரன், துங்கவடிவேலன், பிரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப் பெற்று பரலாயிற்று, ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

    வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார். வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடு என குறிப்பிட்டுள்ளார்.

    வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது. திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் ெபாருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

    • திருச்செந்தூர் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பானகம் உள்ளிட்ட பானங்களை வழங்கி மகிழ்வார்கள்.
    • ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் தரிசனம் செய்ய தவறமாட்டார்கள்.

    திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் கந்த சஷ்டி விழா அனைத்துக்கும் சிகரமாக போற்றப்படுகிறது. கந்தன் தனது பிறப்பின் நோக்கமான சூரனை வென்று அவனை ஆட்கொண்ட இடம் இத்தலம் ஆகும். சூரனுக்கும் முருகனுக்கும் யுத்தம் நடந்ததை மெய்ப்பிக்கும் வகையில் கோவில் அருகில் நீண்ட கடற்கரை பகுதி அமைந்துள்ளது.

    மலைகளில் கோவில் கொள்ளும் விளக்கம் கொண்ட முருகன் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் சந்தன மலைமீது எழுந்தருளி உள்ளார். மூலவர் இருக்கும் பகுதி குடைவரை கோவிலாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதியை மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெருமாள் சன்னதியில் காணலாம். கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறு விதமான விரதங்களை மேற்கொள்வார்கள்.

    சிலர் மவுன விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உணவு உண்பார்கள். சிலர் பழங்கள் மற்றும் பழச்சாறு குடித்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த ஆறு நாட்களும் கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பாலசுப்பிரமணிய சுவாமி முன்பு சிறப்பு ஹோமங்கள் நடைபெறும். பின்னர் சாமி சண்முக மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.

    கந்தசஷ்டி கவசம் கந்தகுரு கவசம் கோவில் வளாகத்தில் ஒலிக்கும். கந்தசஷ்டி விழா கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக அமையும். ஆண்டுதோறும் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளமாக உள்ளனர். சஷ்டி விரதம் இருப்பதற்காக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகள் என உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.

    திருச்செந்தூர் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பானகம் உள்ளிட்ட பானங்களை வழங்கி மகிழ்வார்கள். சிலர் கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட முருகன் பாராயண நூல்களை அச்சிட்டு பக்தர்களுக்கு வழங்குவார்கள். 24 மணி நேரமும் பக்தர்கள் முருகனின் நாமத்தை உரைத்தபடி இருப்பார்கள். செந்தூர் கடல்அலையும் ஓம் ஓம் என்று மந்திரம் இசைத்துக் கொண்டே இருக்கும். கடலில் குளித்து வந்தால் கவலைகள் எல்லாம் கரைந்து மறைந்து விடும்.

    ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் தரிசனம் செய்ய தவறமாட்டார்கள். அந்த அளவுக்கு முருகன் அவர்களை ஆட் கொண்டு விடுவார். மதுரையில் சிவபெருமான் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார். அதே போல திருச்செந்தூரில் முருகனின் திருவிளையாடல் பல நிகழ்ந்துள்ளன.

    திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் ஒரு அற்புதமான நிலையில் அமைந்து உள்ளது. கடலை எல்லையாகக் கொண்ட இக்கோவிலை மக்களின் பாதுகாப்பு அரண் என்றே கூறலாம்.

    • திருச்செந்தூர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்
    • கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது.

    திருச்செந்தூர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் பலர் விரதம் இருக்க தொடங்கினர்.

    வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கோவில் வளாகத்தில் 18 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்து வருகிறது.

    இதுதவிர யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை அடுத்தடுத்து நடந்து வருகிறது.

     

    திருச்செந்தூரில் நேர்த்திக்கடனுக்காக பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து வந்த பக்தர்கள்.

    கந்தசஷ்டி திருவிழாவையொட்டி நேற்று சில பக்தர்கள் சிவன், பார்வதி, கிருஷ்ணர், விநாயகர், முருகர், நாரதர் உள்ளிட்ட சாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது.

     

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை காணலாம்.

    சூரசம்ஹாரத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    7-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.

    மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கிறார். அதன்பிறகு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

    ×