என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
- பக்தர்கள் வருகையால் வாகன நெருக்கடியால் சாலை இருபுறம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் நகரத்திற்குள் இருந்து கோவிலுக்கு செல்ல பல மணி நேரம் ஆகிறது.
- தெருக்களில் பக்தர்கள் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தியதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு வெளியே வர சிரமப்பட்டனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் மற்றும் ரெயில் மூலம் வந்து கோவிலில் குவிந்தனர்.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதாலும், மார்கழி மாதம் என்பதாலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு காலசந்தி, 7.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது.
இன்று பிரதோஷம் என்பதால் மதியம் 2.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7.30 மணிக்கு ஏகாந்தம், 8 மணிக்கு பள்ளியறை பூஜை நடக்கிறது.
பக்தர்கள் வருகையால் வாகன நெருக்கடியால் சாலை இருபுறம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் நகரத்திற்குள் இருந்து கோவிலுக்கு செல்ல பல மணி நேரம் ஆகிறது.
தெருக்களில் பக்தர்கள் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தியதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு வெளியே வர சிரமப்பட்டனர்.
பொதுவாக முக்கிய நாட்களில் பக்தர்கள் வாகனங்களை நகரப் பகுதியில் வராமல் ஊருக்கு வெளியே தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிற்க ஏற்பாடுகள் செய்து உள்ளூர் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






