என் மலர்
தூத்துக்குடி
- மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது.
- உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் நெல், வெங்காயம், மிளகாய் உள்ளிட்ட பயிர்களை அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை தனியார் உப்பளத்தினர் ஆக்கிரமித்ததோடு, தங்களது தேவைக்கு ஏற்ப தண்ணீர் செல்லும் வழியை மறித்து பாலங்கள் அமைத்துள்ளனர் என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதனால் மழைநீர் முறையாக செல்வதற்கு வழியின்றி, விவசாய நிலங்களிலேயே மழைநீர் தேங்கி விவசாயப்பயிர்கள் அழுகும் நிலை தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக மேல்மாந்தை பகுதியில் உள்ள நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் உப்பள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என பலமுறை அப்பகுதி விவசாயிகள் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், தற்போது வரை உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
மேலும், இப்பகுதியில் 2 நாட்கள் பெய்த இந்த தொடர் மழைக்கே நீர் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காரணத்தால், விவசாயப் பயிர்கள் பெருமளவில் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், உப்பள ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர்.
ஆனால் இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உப்பள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மேலும், விவசாயிகள், எஞ்சியுள்ள பயிர்களையாவது பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு டிசம்பர் மாத மழைக்குள்ளாகவே இங்குள்ள உப்பள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- விடுமுறை நாள் என்பதால் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
- கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. மேலும் சுபமுகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்களும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுப முகூர்த்த தின நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள். மேலும் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் டிட்வா புயல் மற்றும் தொடர் மழை பெய்து வந்ததால், வழக்கத்தை விட சற்று குறைவான பக்தர்களே கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
- கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தூத்துக்குடியில் இன்று 5-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி:
இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் டிட்வா புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. தொலைவில் நகர்ந்த நிலையில் தற்போது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் சென்னையில் இருந்து தெற்கே 540 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தூத்துக்குடி:
வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வங்கக்கடலில் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டு வருகிறது.
இலங்கை கடல் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிம், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதன்படி மாட்டுக்குளம், ரத்தினபுரி, சீதக்காதி நகர், உச்சினிமாகாளியம்மன் கோவில் தெரு, பை-பாஸ் சாலை, காட்டு தைக்கா தெரு உள்ளிட்ட இடங்களில் சுமார் 500-க்கும் மேலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
சிவன் கோவில் வடக்கு அக்பர்ஷா நகர் பெரு வெள்ளத்தால் தத்தளிக்கிறது. அங்குள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், தீவு தெரு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது.
மழை வெள்ளத்தை வடிய வைப்பதற்காக நகராட்சி சார்பில் வாய்க்கால் வெட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இருந்த போதிலும் இந்த நடவடிக்கை மழை வெள்ளம் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு தருமா? என்கிற கேள்வியே எழுந்துள்ளது.
- விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பயிற்சி மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கார் மரத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த மருத்துவ மாணவர்களான சாருபன், ராகுல் செபஸ்டியன், முகிலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் ஆவர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த கிருத்திக்குமார், சரண் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர்.
- பாதாள சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிக சிரமத்துடன் சாலையில் நடந்து சென்றனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை திடீரென திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான ராமசாமிபுரம், நாலு மூலைக்கிணறு, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், காயாமொழி, தளவாய்புரம், வீரபாண்டிய பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கனமழை பெய்தது.
திருச்செந்தூரில் பெய்த கனமழையால் சிவன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பரமன்குறிச்சியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இன்று அதிகாலையில் இருந்தே லேசான மழை பெய்து வந்தது. திடீரென காலை 8.30 மணிக்கு மேல் சுமார் 1மணி நேரமாக கனமழை பெய்தது. 9 மணியளவில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர். சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர்.
திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்ததால் திருச்செந்தூர் நகரம் முழுவதும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஒடியது. இதனால் பாதாள சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சென்றதால் பொதுமக்கள் மிக சிரமத்துடன் சாலையில் நடந்து சென்றனர்.
திருச்செந்தூர் காய்-கனி மார்க்கெட் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் குளம் போல் காணப்பட்டது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
- பெயர் சூட்டும் நிகழ்வில் வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்தது
- உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரி மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடி அருகே குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வில் வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்ததில், விழாவுக்கு வந்த எதிர்வீட்டைச் சேர்ந்த பெண்ணின் 11 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடந்த இந்த துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
- நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்பு உள்ள கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது சீற்றத்துடனும், உள்வாங்கியும் காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது.
கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடலுக்குள் இருந்த பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தன.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.
திருச்செந்தூர்:
வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட 4 மாவட்டங்களில் இன்று பரவலான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உட்பட்ட சிவன் கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அங்கு தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
- கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது.
- பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடலானது அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்கி காணப்படுவதும், சில மணி நேரங்களில் வெளியே வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று பவுர்ணமி என்பதால் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
மேலும் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது. பக்தர்கள் கடல் உள்வாங்கி காணப்பட்டதை கண்டு செல்பி எடுத்து சென்றனர். ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர்.
- தென்காசி, கோவில்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றார்.
- விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நடக்கிறது.
இதற்கிடையே, தென்காசி, கோவில்பட்டி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அங்கிருந்து கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.
கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலையில் நகர திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் முன் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவில்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகர தி.மு.க. அலுவலகம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அங்கு நூலகத்தையும் திறந்துவைத்தார்.
இதில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






