என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜயின் அரசியல் வருகையால் தேர்தல் களத்தில் தாக்கம் இருக்கும்-  துரை வைகோ
    X

    விஜயின் அரசியல் வருகையால் தேர்தல் களத்தில் தாக்கம் இருக்கும்- துரை வைகோ

    • தி.மு.க. கூட்டணி ஏற்கனவே வலுவான கூட்டணியாக இருக்கிறது.
    • த.வெ.க. தலைவர் விஜய்க்கு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    கோவில்பட்டி:

    ம.தி.மு.க. முதன்மை நிலைய செயலாளர் துரை வைகோ எம்.பி. கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

    தி.மு.க. கூட்டணி ஏற்கனவே வலுவான கூட்டணியாக இருக்கிறது. சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறோம்.

    தற்போது தே.மு.தி.க., வரவால் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மேலும் வலுவடைந்துள்ளது.

    தமிழகத்தில் 4 முனைப்போட்டி இருந்தாலும் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் தான் பிரதான அணிகள். இந்த 2 அணிகளுக்கு இடையேதான் போட்டி.

    தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு எங்கள் இயக்கத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 22-ந் தேதிக்கு மேல் பேச்சுவார்த்தை தொடங்கும் என நினைக்கிறேன். அதன் பின்னர் தான் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம், யார் வேட்பாளர் என்பதை எல்லாம் சொல்ல முடியும்.

    ம.தி.மு.க.வுக்கு கூடுதல் எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்தால் மிகவும் சந்தோஷம். ஆனால் இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில் கூட்டணி தலைமைக்கு நெருக்கடியை உருவாக்க கூடாது.

    எல்லா இயக்கத்திற்கும் தொகுதிகள் வேண்டும் என்பது முக்கியம் தான். இந்த நேரத்தை பொறுத்தவரை, நாம் வெற்றி அடைய வேண்டும். வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் போட்டியிட வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் விருப்பம். எங்கள் கட்சித் தலைமையும், கூட்டணி தலைமையும் பேசி, சுமூகமான முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அவரது அரசியல் வருகையால் தேர்தல் களத்தில் ஒரு தாக்கம் இருக்கும். 15 சதவீத ஓட்டு பெறுவார். ஆனால் அது வெற்றியாக மாறுமா என்பது சந்தேகம் தான்.

    விஜய்யை பொறுத்தளவு, மத்திய பாரதீய ஜனதா அரசை எதிர்த்து அவரது குரல் ஒலிக்கவில்லை. எஸ்.ஐ.ஆர். பிரச்சினை உள்ளிட்ட தமிழகம் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசாமல் இருக்கிறார். தி.மு.க. மற்றும் பா.ஜனதாவை எதிர்ப்பதாக கூறும் விஜய், மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு இழைத்த அநீதிகள், திட்டங்கள், நிதி பிரச்சினைகள் குறித்து அவர் குரல் எழுப்ப வேண்டும். அதில் மவுனமாக இருக்கிறார்.

    விஜயின் அரசியல் வரவு என்பது இந்த தேர்தலை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என பார்க்கிறேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது. 8 ஆண்டுகளாக தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று வருகிறோம். குறிப்பாக, சமீபத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வரவு, கடந்த 4½ ஆண்டுகளில் அடித்தட்டு மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×