என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spirituality"

    • தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி மாதம் வரை இருக்கிறது.
    • உத்தராயணம் பிறக்கும் நாள் கடவுளின் நாள் என்று கூறப்படுகிறது.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. நாளை முதல் சூரியனின் உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது.

    உத்தரம் என்றால் வடக்கு என்று பொருள். அயனம் என்றால் பயணம். சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள். அதன்படி தை மாதம் முதல் நாளான நாளை உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாள் ஆகும்.

    தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி மாதம் வரை இருக்கிறது. இந்த 6 மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார். இது முடிந்தவுடன் ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதை தட்சிணாயனம் என்று அழைக்கிறார்கள்.

    சூரியன் மிதுனத்தில் இருந்து மகர ராசியில் நுழையும் நேரம் உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. உத்தராயணத்தின் ஆரம்ப தினமான நாளை (வியாழக்கிழமை) நாம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

    சூரியன் இந்த ராசிக்கு மாறும்போது, மங்களகரமான மற்றும் சுபச் செயல்கள் நடைபெறத் தொடங்குகின்றன. உத்தராயணம் பிறக்கும் நாள் கடவுளின் நாள் என்று கூறப்படுகிறது. அதனாலேயே இதை உத்தராயண புண்ணிய காலம் என்று அழைக்கிறார்கள்.

    எனவே, புதிய வேலை, திருமணம் போன்ற மங்கல காரியங்களை இம்மாதத்தில் தொடங்குவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. அதிகபட்ச ஒளியைக் கொண்ட 6 மாத உத்தராயண புண்ணிய காலத்தில் யாருக்காவது உயிர் பிரிந்தால் அவர் மோட்சத்தை அடைவார் என்றும் அவருக்கு மறுபிறப்பு இல்லை என்றும் பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.

    மகாபாரதத்தில் பீஷ்மர் தன்னுடைய உயிர் பிரிவதற்கு உத்தராயண புண்ணிய காலம் வரும்வரை முள் படுக்கையில் படுத்து போர்க்களத்திலேயே காத்திருந்தார். உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாளான தை மாத முதல் நாளன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதும், அன்று பொங்கல் வைத்து சூரிய பகவானை வேண்டி வழிபடுவதும் பலன்களை தரும்.

    மனிதர்களின் ஒரு நாள், 24 மணி நேரம். அதில் 12 மணி நேரம் பகல் மற்றும் 12 மணி நேரம் இரவு நேரமாகும். அதே போல தேவர்களுக்கு, மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது ஒரு நாள் ஆகும். ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். உத்திராயணம் என்பது தேவர்களின் பகல் காலத்தை குறிக்கும்.

    • இன்று வழக்கமான பூஜைகளுடன் பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிராந்தி எனப்படும் மகர சங்கிரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.
    • மகர ஜோதியை காண சபரிமலையை சுற்றி 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற மகர சங்கிரம பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சுத்திகிரியை பூஜைகள் நடந்தது. கோவிலில் நேற்று முன்தினம் பிரசாத சுத்தி பூஜைகளும், நேற்று பிம்ப சுத்தி பூஜையும் நடந்தது.

    இன்று வழக்கமான பூஜைகளுடன் பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிராந்தி எனப்படும் மகர சங்கிரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். மாலை 6.15 மணிக்கு திருவாபரணம் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும். அவற்றை தந்திரி மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொண்டு ஐயப்பனுக்கு அணிவித்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடத்துவார்கள்.

    அப்போது பொன்னம்பலமேட்டில் சாமி ஐயப்பன், பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். தொடர்ந்து புஷ்பாபிஷேக வழிபாடுகள் நடைபெறும்.

    மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் நாலா திசைகளிலும் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கி ஓய்வெடுத்து வருகிறார்கள். குறிப்பாக பெரியானை வட்டம் பாண்டித்தாவளம், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் ஏராளமான பக்தர்கள் முகாமிட்டு உள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஏராளமான தன்னார்வ தொண்டர்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் நியமித்து உள்ளது. பாதுகாப்பு பணிக்கு பம்பை மற்றும் சன்னிதானத்தில் கூடுதலாக ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். மகர ஜோதியை காண சபரிமலையை சுற்றி 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    ஜோதி தரிசனம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,000 சிறப்பு பஸ்கள் தயார் நிலையில் உள்ளது.

    இதுகுறித்து தேவஸ்தான தலைவர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, 'மகரவிளக்கை முன்னிட்டு அனைத்து முன் ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. மகரஜோதியை காண சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள பக்தர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புல்மேடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து மகர ஜோதியை காண 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடாரம் அமைத்து ஓய்வெடுத்து வருகிறார்கள். மகரவிளக்கையொட்டி இதுவரை 12 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்' என்றார்.

    • மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா.
    • ஸ்ரீவைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-30 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி இரவு 7.43 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : அனுஷம் மறுநாள் விடியற்காலை 4.55 மணி வரை பிறகு கேட்டை

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று போகி பண்டிகை, சர்வ ஏகாதசி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று சர்வ ஏகாதசி. போகிப் பண்டிகை. சபரிமலையில் மகர ஜோதி தரிசனம். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா. மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவில்களில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், திருவல்லிக்கேணி, ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதி ருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர் ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சன சேவை.

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு, விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் ஆகிய கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. கரூரில் அமராவதி நதி வடகரையில் உத்தான சயனத்தில் அபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு, ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவகோட்டை ஸ்ரீ அரங்கநாதர், ஸ்ரீவைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-நிம்மதி

    கடகம்-பக்தி

    சிம்மம்-ஆதாயம்

    கன்னி-தனம்

    துலாம்- விவேகம்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- பணிவு

    மகரம்-தெளிவு

    கும்பம்-நன்மை

    மீனம்-பயணம்

    • அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர்.
    • குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன், வேதங்கள், ஆயகலைகள் என அனைத்து கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றான்.

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் உலக புகழ் பெற்ற ஆலயம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.

    அந்த வகையில், சபரிமலையில் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஐயப்பன், ஆண்டுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். கேரள முறைப்படி, மகர ராசியில் சூரியன் வரும் மாதம், 'மகர மாதம்' எனப்படுகிறது. இந்த மாதத்தின் முதல் நாளான மகர சங்கராந்தி அன்று, சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் கிடைப்பது வழக்கம். இந்த மகர ஜோதி தரிசனத்துக்கு ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது.

    மகிஷாசுரனின் சகோதரியான மகிஷி என்ற அரக்கி, தன் சகோதரன் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க நினைத்தாள். இதனால் பிரம்ம தேவரை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய பிரம்மரிடம், ''சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் புத்திரனால் மட்டுமே எனக்கு மரணம் ஏற்பட வேண்டும்'' எனும் வரத்தை கேட்டாள். அதன்படி வரத்தை பெற்ற மகிஷி, தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி வந்தாள்.

    அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது அமிர்தத்தை எடுத்து சென்ற அசுரர்களிடம் இருந்து அமிர்தத்தை மீட்க விஷ்ணு பகவான், மோகினியாக அவதாரம் எடுத்தார். மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும், சிவனுக்கு ஹரிஹர அம்சமாக அவதரித்தவரே, ஐயப்பன்.

    அதே வேளையில், பந்தள மன்னன் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் மிகவும் வருந்தினான். அவன் குழந்தை பாக்கியம் வேண்டி தினமும் சிவனிடம் மனம் உருகி வேண்டி வந்தான். சிவனும், விஷ்ணுவும் குழந்தை ஐயப்பனை காட்டில் ஒரு மரத்திற்கு அடியில் விட்டுச்சென்றனர். அந்த சமயம் காட்டில் வேட்டைக்கு வந்த பந்தள மன்னன், ஒரு குழந்தை இருப்பதை கண்டான்.

    அப்போது அங்கு வந்த ஒரு முனிவர், ''மன்னா, உங்களுடைய குழந்தையில்லாக் குறையை போக்கவே இவன் அவதரித்திருக்கிறான். எனவே, இவனை எடுத்து வளர்ப்பாயாக. பன்னிரெண்டு வயது வரும்போது இவன் யார் என்பதை அறிவாய்'' என்று கூறினார். அந்த குழந்தையின் கழுத்தில் துளசி மாலையுடன் மணியும் இருந்தது. எனவே அந்த குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயரிட்ட மன்னன், குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச்சென்று ராணியிடம் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ராணி, அந்த குழந்தையை மிகவும் பாசத்தோடு வளர்த்தாள். சிறுவயதிலேயே மணிகண்டன் பல அற்புதங்களை செய்தார்.

     

    குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன், வேதங்கள், ஆயகலைகள் என அனைத்து கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றான். குருவின் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான். இந்நிலையில் ராணிக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது. அதற்கு ராஜராஜன் என பெயர் சூட்டினர். தனக்கு மகன் பிறந்தாலும், மணிகண்டனுக்கே முடிசூட்ட வேண்டும் என்று மன்னன் விருப்பம் கொண்டார். ஆனால் இதை விரும்பாத மந்திரி ஒருவர், ராணியின் மனதை மாற்றி, மணிகண்டனை விரட்ட முடிவு செய்தான்.

    அதன்படி சதித்திட்டம் ஒன்றை தீட்டினான் மந்திரி. ராணியும் அதற்கேற்றார் போல் தீராத தலைவலி வந்தது போல நடித்தாள். ராணியின் தலைவலி தீர வேண்டுமானால் புலிப் பால் கொண்டு வரவேண்டும் என்று மருத்துவர்களை சொல்ல வைத்தான் மந்திரி. புலிப் பாலை கொண்டுவர முடியுமா? என அரசவையில் அனைவரும் திகைத்தனர். ஆனால், இது தனக்கு எதிரான சதித்திட்டம் என்பதை அறிந்தும், மணிகண்டன் ''நான் காட்டுக்குள் சென்று புலிப் பாலை கொண்டு வருகிறேன்'' எனப் புறப்பட்டான். காட்டுக்குள் சென்றால் நிச்சயம் திரும்பி வரமாட்டான் என்று மந்திரி பூரிப்புக்கொண்டான்.

    புலிப் பால் வேண்டி காட்டிற்கு சென்ற மணிகண்டன், அங்கு மனிதர்களை துன்புறுத்தி வந்த மகிஷி அரக்கியை அம்பு எய்து வீழ்த்தினான். தன்னை வீழ்த்தியது கண்டிப்பாக சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த ஒருவராகதான் இருக்கும் என்பதை உணர்ந்த மகிஷி, மறு உருவம் பெற்று எழுந்தாள். பின்பு, மணிகண்டனை வணங்கி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டினாள். ஆனால் மணிகண்டன், இந்த அவதாரத்தில் தான் பிரம்மச்சாரியாக வாழப்போவதாகவும், எனவே தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே 'மஞ்சமாதா' என்று அழைக்கப்படுகிறாள்.

    இதையடுத்து, ஒரு புலியின் மீது அமர்ந்தபடி பந்தள நாட்டு அரண்மனைக்கு திரும்பினார் ஐயப்பன். இதைப் பார்த்து வியந்த அனைவரும் பயபக்தியில் வணங்கி நின்றனர். மன்னன், ஐயப்பன் தெய்வ பிறவி என்பதை உணர்ந்தான். ஐயப்பன், தான் சபரிமலையில் ஒரு அம்பை எய்வதாகவும், அந்த அம்பு எந்த இடத்தில் விழுகிறதோ அங்கே ஒரு கோவில் கட்டும்படியும் அருளினார்.

    அதன்படி பந்தள நாட்டு மன்னன், சபரிமலையில் ஐயப்பன் கோவிலை கட்டினான். மகரசங்கராந்தி நாளில், பரசுராமர் உதவியுடன் கோவில் திறக்கப்பட்டது. மகரசங்கராந்தி நாளில், விரதம் இருந்து இருமுடி கட்டி தன்னை காண வரும் பக்தர்களுக்கு ஐயப்பன் ஜோதி வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    ஐயப்ப சுவாமி பந்தள அரண்மனையில் வளர்ந்தவர். இருப்பினும், அதன்பின்னர் சபரிமலையில் யோக நிலையில் அமர்ந்தவர். இதனால் ஆண்டுதோறும் ஐயப்பனை காண வரும்போது பந்தள மன்னன், பந்தளத்தில் இருந்து ஆபரணங்களை எடுத்து செல்வார். பின்பு, அதை ஐயப்பனுக்கு அணிவித்து வழிபட்டு மகிழ்வதாக கூறப்படுகிறது.

    இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மகர ஜோதி தினத்தில், பந்தளத்தில் இருந்து ஆபரணங்கள் கொண்டு வந்து சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிப்பார்கள். அதன்பின்பு, அன்றைய தினத்தில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். பொதுவாக, தை மாதம் முதல் நாள் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்கழி மாதம் 30-ம் நாள் (14-1-2026) மாலை 6.30 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனத்தை பெறலாம்.

    மகர ஜோதி தரிசனத்துக்காக, சபரிமலையில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருகை தருவார்கள். கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றார்கள். ஜோதி தரிசனத்தை காணும்போது, 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தர்கள் எழுப்பும் முழக்கம் விண்ணை தொடும் அளவு எதிரொலிக்கும். பக்தர்கள் மகர ஜோதி தரிசனத்தை பக்தி பரவசத்துடன் கண்டு களிக்கும் காட்சியை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும்.

    • சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
    • தை அமாவாசை.

    13-ந் தேதி (செவ்வாய்)

    * மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

    * சுவாமிமலை முருகனுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * குரங்கணி முத்துமாலை அம்மன் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந் தேதி (புதன்)

    * சர்வ ஏகாதசி.

    * போகிப் பண்டிகை.

    * சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (வியாழன்)

    * தைப் பொங்கல்.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் விழா தொடக்கம்.

    * மதுரை செல்லத்தம்மன் காலை சப்பரத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் நின்ற திருக்கோலம், மாலை தங்கப் பல்லக்கில் ஊஞ்சல் சேவை.

    * சமநோக்கு நாள்.

    16-ந் தேதி (வெள்ளி)

    * மாட்டுப் பொங்கல்.

    * பிரதோஷம்.

    * மதுரை கூடலழகர் பெருமாள் கணு உற்சவ விழா தொடக்கம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (சனி)

    * உழவர் திருநாள்.

    * மதுரை செல்லத்தம்மன் விருட்சப சேவை.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.

    * கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் சிவபெருமான் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (ஞாயிறு)

    * தை அமாவாசை.

    * தென்காசி விசுவநாதர், சங்கரன்கோவில் சங்கர நாராயணன் தலங்களில் லட்சதீபம்.

    * மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    19-ந் தேதி (திங்கள்)

    * மதுரை செல்லத்தம்மன் ரத உற்சவம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலக்காப்பு.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் விழா தொடக்கம்.

    * மேல்நோக்கு நாள்.

    • ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
    • மகரவிளக்கு பூஜை நடக்கும் நாளைய தினம் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மகரவிளக்கு பூஜை கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது.

    அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தபடி உள்ளனர். மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் தொடக்கத்தில் இருந்தே பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாக இருக்கிறது.

    இந்தநிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் சபரிமலையில் நாளை (14-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.

    திருவாபரண ஊர்வலம் நேற்று இரவு ஆயரூர் புதியகாவு தேவி கோவிலில் தங்கியது. பின்னர் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டது. திருவாபரணங்கள் அடங்கிய பெட்டியை அதற்காக விரதமிருந்த பக்தர்கள் தூக்கி வந்தனர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் பக்தர்கள் திரண்டு நின்று திருவாபரணத்தை வரவேற்று வழிபட்டனர்.

    திருவாபரண ஊர்வலம் இன்று இரவு தேதிலாகா வனத்துறை சத்திரத்தில் தங்குகிறது. பின்பு நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு, மதியம் பம்பை கணபதி கோவிலிக்கு வந்து சேருகிறது. அங்கிருந்து புறப்பட்டு, சன்னிதானத்திற்கு மாலை 6 மணியளவில் திருவாபரணங்கள் வந்து சேரும்.

    மகரவிளக்கு பூஜை நடக்கும் நாளைய தினம் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்பு 2:45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு பிற்பகல் 3:08 மணிக்கு மகர சங்கிரம பூஜை தொடங்குகிறது.

    அதன் தொடர்ச்சியாக மாலை 6:30 மணியளவில் திருவாபரணங்கள் சன்னிதானத்தை வந்தடைகிறது. அவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். அப்போது பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மூன்று முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    மகரஜோதி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களாகவே சபரிமலைக்கு வந்த பக்தர்கள் ஆங்காங்கே பல இடங்களில் குடில் அமைத்து தங்க தொடங்கினர். பெரியானை வட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விரிகளில் ஆயிரக்கணக்கானோர் தங்கியிருக்கின்றனர்.

    அது மட்டுமின்றி பம்பை மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் டெண்ட் அமைத்து தங்கி வருகின்றனர். இன்று வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் சாமி சரிதனத்துக்கு பின் ஆங்காங்கே தங்கியிருக்கின்றனர். இதனால் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காணப்படுகின்றனர்.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    • குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-29 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : தசமி மாலை 5.36 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : விசாகம் பின்னிரவு 2.20 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், திருத்தணி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி வரும் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், திருத்தணி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    திருநெல்வேலி மூன்றாம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய திருத்தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயாார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநாரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தாமதம்

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-சுபம்

    கடகம்-வரவு

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-நன்மை

    துலாம்- மேன்மை

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- சுகம்

    மகரம்-பாராட்டு

    கும்பம்-இன்பம்

    மீனம்-கண்ணியம்

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
    • திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-26 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி நண்பகல் 12.33 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : அஸ்தம் இரவு 7.37 மணி வரை பிறகு சித்திரை

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    பெருமாள் கோவில்களில் வரதராஜ மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய்க் காட்சி. மாலை தந்தப் பரங்கி நாற்காலியில் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பாலாபிஷேகம். நயினார்கோவில் அன்னை ஸ்ரீ சவுந்தர நாயகி திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் ஆகிய கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் கோவில், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார சிறப்பு திருமஞ்சன சேவை. திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மாற்றம்

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-தெளிவு

    கடகம்-மேன்மை

    சிம்மம்-நிறைவு

    கன்னி-பரிசு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- தனம்

    மகரம்-அனுகூலம்

    கும்பம்-சுபம்

    மீனம்-சுகம்

    • 25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
    • வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் 24-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25-ந்தேதி ரத சப்தமி விழா கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி காலை, இரவு பல்வேறு வாகனச் சேவைகள் நடக்கின்றன.

    அதன் விவரம் வருமாறு:-

    25-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 6.45 மணியளவில் சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளும் உக்ர சீனிவாச மூர்த்திக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

    மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா, இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

    ரத சப்தமி விழாவையொட்டி 25-ந்தேதி கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ஆகிய ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம், வி.ஐ.பி. புரோட்டோக்கால் முக்கியஸ்தர்களை தவிர அனைத்து வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் 24-ந்தேதி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    மேலும் ரத சப்தமியையொட்டி திருப்பதியில் 24 முதல் 26-ந்தேதி வரை இலவச தரிசன பக்தர்களுக்கான டைம் ஸ்லாட் டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்
    • மூன்று அல்லது ஒன்பது வாரங்கள், இதேபோல் வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    திண்டுக்கல் நகரின் மத்திய பகுதியில் கோபாலசமுத்திரம் குளக்கரையில் 108 விநாயகர் கோவில் உள்ளது. எந்தவிதமான பிரச்சனையாக இருந்தாலும் இங்கு வந்து திருவுளச்சீட்டு போட்டுப்பார்த்து நன்மை பெறுகிறார்கள். சங்கடஹர சதுர்த்தியில் விநாயாகருக்கு தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். விநாயகரின் 32 வடிவங்களில் ஒன்று 'உச்சிஷ்ட கணபதி'. ஒரு பெண்ணை அணைத்தபடி உள்ள வடிவம்தான் 'உச்சிஷ்ட கணபதி' வடிவமாகும். இந்த உச்சிஷ்ட கணபதியை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தீவனூர் கிராமம். இங்குள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் ஆலயத்தில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அவ்வூர் மக்களின் நம்பிக்கை.

    திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார் 'பெருநாட்டு பிள்ளையார்.' இந்தக் கோவில், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தான் திறந்திருக்கும். இந்த கோவிலின் சிறப்பே அரை மணிநேரத்திற்கு நடக்கும் அபிஷேகம் தான். அதைக் கண்டு தரிசித்தால் தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, திருமணம் கைகூடுவது என்று அனைத்து வேண்டுதல்களும் சில மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில், கோரையாற்றின் கரையில் வீற்றிருக்கிறார் மதுரவிநாயகர். திருமணத்தடை உள்ளவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து, கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும். சிவப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து, அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள், இதேபோல் வணங்கி வந்தால் திருமணத் தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    நெல்லை காந்திமதி அம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்கிறார்கள். குழந்தை பிறந்ததும் கோவில் சன்னிதிக்கு வந்து, இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில் குழந்தையை உட்புறமாகத் தந்து, வெளிப்புறமாக வாங்கிக்கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • திருவிடைமருதூர் ஸ்ரீ முருகன் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-25 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி காலை 11.23 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : உத்திரம் இரவு 6.06 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : சித்த/அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

     திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான கிளி வாகன சேவை

    தேய்பிறை சஷ்டி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். இயற்பகை நாயனார் குருபூஜை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ முருகன் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பெருந்திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கோவிலில் காலை அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் காலை சிறப்பு பால் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-பக்தி

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- பரிசு

    மகரம்-உழைப்பு

    கும்பம்-பெருமை

    மீனம்-கடமை

    • ஒரு நாளைக்கு சராசரியாக 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துள்ளனர்.
    • தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி இரவு வைகுண்ட துவார வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் சாமானிய பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னுரிமை என்ற அடிப்படையில் திருப்பதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் 5 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட்டது.

    வைகுண்ட துவார தரிசனம் வழியாக தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

    வைகுண்ட துவார தரிசனம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு கோவிலில் தினசரி வழிபாடு வழக்கம்போல் நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 9 நாட்களில் 7, 09,831 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    ஒரு நாளைக்கு சராசரியாக 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துள்ளனர். ரூ.36.86 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். மேலும் தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பதியில் நேற்று 85, 752 பேர் தரிசனம் செய்தனர். 19,443 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×