என் மலர்
நீங்கள் தேடியது "Tiruvannamalai Temple"
- 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
- நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும்.
தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 13-ந் தேதி வரை தரிசிக்கலாம்.
11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
நேற்று நள்ளிரவு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச லேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.
தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
- இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
- தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீப விழா நடைபெறும் திருவண்ணாமலையில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது
மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
- திருவண்ணாமலை கோவில் மலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
- உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை கோவில் மலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த விழாவின்போது உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வீதியுலா வரும்போது சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் அலங்கார மாலைகள் காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினரே அனுப்பி வைத்து வருகிறார்கள். இந்த மாலைகளே சுவாமிகளுக்கு சாற்றப்படுகின்றது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் 163-வது ஆண்டாக அலங்கார மாலைகளை திருவண்ணாமலை கோவிலுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் கே.கே.சிவகுமாரன் குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாலைகள் அனைத்தும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தீபாராதனைகள் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு சாத்தப்படும் மாலைகளை வணங்கி சென்றனர்.
- அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
- கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்து பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 29-ந் தேதி வெள்ளி தேரோட்டம் 30-ந் தேதி மகா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
இந்த நிலையில் தீபத்திருவிழா உற்சவத்தின் 10-வது நாளான இன்று மகா தீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.

இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.
பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.
மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா" என்று கோஷம் விண்ணதிர எழுப்பி வணங்கினர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.
பரணி தீபத்தை முன்னிட்டு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு இன்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் இன்று அதிகாலை வரை மழை பெய்ததால் காலையில் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
24 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4764 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. 130 இடங்களில் கார் நிறுத்த இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆந்திர முன்னாள் மந்திரி நடிகை ரோஜா, நீதியரசர் மகாதேவன், ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி.தர்மராஜன், கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், டாக்டர் சேஷாத்ரி, அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் டாக்டர் பழனி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கொட்டும் பனி மற்றும் சாரல் மழையிலும் பரணி தீப தரிசனம் கண்டு மனம் உருக வழிபட்டனர்.
வழக்கத்தைவிட இந்த ஆண்டு தீபத்திருவிழா கூடுதல் உற்சாகத்துடன் நடக்கிறது. இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவில் மகா தீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தீபத்தை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர்.
- கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.
கார்த்திகை தீபம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபம் தான். ஆன்மிக பூமி, சித்த பூமி, நினைத்தாலே முக்தியை தரும் அற்புதத் தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது, உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலம்.
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிப்பது மகா புண்ணியம் என்பார்கள். இந்த தீபத்தை தரிசிப்பவர்களின் பாவங்கள் நீங்கும், முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டுக்கான மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது.
திருக்கார்த்திகை திருநாள் பற்றி பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன. இருப்பினும், சிவபெருமான் ஜோதி வடிவாக மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி அளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் எனப் பலராலும் போற்றப்படுகிறது.
ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கு முடிவு காண, சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவபெருமான் "என்னுடைய முடியையும், அடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவர்களே பெரியவர்" என்று பதிலளித்தார். பின்னர், சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாக மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக மாறி நின்றார்.
இதையடுத்து பிரம்மதேவர், அன்னப் பறவை வடிவம் கொண்டு, சிவபெருமானின் முடியைக் காணவும், திருமால் வராக (பன்றி) வடிவம் எடுத்து ஈசனின் அடியைக் காணவும் புறப்பட்டனர். ஆனால் பல கோடி ஆண்டுகள் ஆகியும் அவர்களால் ஈசனின் அடியையும், முடியையும் காண முடியவில்லை. திருமால், தன்னால் அடியைக் காண இயலவில்லை என்பதை ஈசனிடம் தெரிவித்தார்.
ஆனால் பிரம்மனோ, தான் ஈசனின் முடியைக் கண்டுவிட்டதாக பொய் கூறியதுடன், அதற்கு சாட்சியாக சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றையும் அழைத்து வந்திருந்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில் இருக்காது என்றும், தாழம்பூவை இனி சிரசில் சூடமாட்டேன் என்றும் சாபம் அளித்தார்.
சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர். இதையடுத்து சிவபெருமான் மலையாக உருமாறினார். பின்பு வழிபடுவதற்கு ஏற்றவாறு சுயம்பு லிங்கமாக மலையடிவாரத்தில் தோன்றினார். அந்த சுயம்புலிங்கத்தை மையமாக வைத்தே, தற்போதைய அண்ணாமலையார் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.
சிவபெருமான் மலையாக வீற்றிருக்கும் காரணத்தால், திருவண்ணாமலை சிறப்புக்குரியதாக இருக்கிறது. பல யுகங்களை தாண்டி நிற்கும் இந்த மலையில் முனிவர்களும், சித்தர்களும் வலம் வந்து வழிபட்டிருக்கிறார்கள். சிவபெருமான் அக்னி ஜோதியாக தேவர்களுக்கு காட்சியளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் என்று கூறப்படுகிறது. எனவே கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும்.
கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அதிகாலையில் அண்ணாமலையார் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தில் இருந்து மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றுவார்கள். பின்னர் அந்த தீபங்களை ஒன்றாக்கி, அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். பரம்பொருளான சிவபெருமான் பல வடிவங்களாக இருக்கிறாா், அவரே பரம்பொருள் என்ற ஒருவராகவும் உள்ளார் என்பதே இதன் தத்துவம்.
பின்னர் அண்ணாமலையார் அருகில் வைக்கப்பட்ட தீபம் மலைக்கு கொண்டு செல்லப்படும். மாலையில் கோவில் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வெளியே வருவார். இந்த ஒருநாள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தைக் காண முடியும். மற்ற நாட்களில் அவர் சன்னிதியை விட்டு வெளியே வருவதில்லை. அவர் முன்பாக அகண்ட தீபம் ஏற்றப்படும்.
அதன்பிறகே, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்காக, 7½ அடி உயர கொப்பரையில், ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மகா தீபம் ஏற்றும் உரிமை, பர்வதராஜ குலத்தினருக்கு உரியது. இந்த மகா தீபம், தொடர்ச்சியாக 11 நாட்கள் எரியும். மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த தீபமானது, மலையை சுற்றியுள்ள சுமார் 30 கிலோமீட்டர் தூரத்துக்கும் தெரியும் என்கிறார்கள். எரிந்த தீபத்தில் இருந்து எடுக்கப்படும் கருப்பு நிற மையானது, ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.
- கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி, இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.58 மணிக்கு தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை 5.37 மணிக்கு முடிகிறது. அந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.
- மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை நடைபெற உள்ளது.
அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு ஆனந்த நடனத்துடன் எழுந்தருள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
நாளை முதல் 11 நாட்களுக்கு அண்ணாமலை உச்சியில் சிவபெருமான் தீப்பிழம்பாய் காட்சி தருவார். திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.
அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.
மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வருவதற்காகவும், மகா தீபத்தை தரிசிக்கவும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர்.
கிரிவலப்பாதையில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர கால உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதையை தூய்மையாக பராமரிக்க ஆயிரத்து 200 தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதை அரசு கலைக்கல்லூரி அருகில் மாட்டு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. மாட்டு சந்தையில் மாடுகள், குதிரைகள், ஒட்டகம் ஆகியவை விற்பனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
தீப தரிசனம் காண திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 பிரதான சாலைகள் வழியாகவும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
- தாழம்பூ, சிவபெருமான் முடியில் இருந்து வருவதாக கூறியதும், பிரம்மனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
- சிவன், ‘பிரம்மனே! பூவுலகில் உள்ள அந்தணர்களுக்கு செய்கின்ற பூஜை, உன் பூஜையாக விளங்கும்’ என்றார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீபத்திருவிழா வரலாறு வருமாறு:-
இந்த உலகத்தில் அனைத்து உயிர்களையும் படைக்கும் பிரம்மனுக்கு ஒருமுறை அளவில்லாத கர்வம் ஏற்பட்டது. அவர் காக்கும் கடவுளான திருமாலிடம் சென்று, திருமாலே! இந்த ஈரேழு லோகங்களையும் படைத்தவன் நான். நான் இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. நான் உலகத்தை படைக்காவிட்டால் உன்னால் எப்படி காப்பாற்ற முடியும் என்று ஆணவத்துடன் பேசினார்.
இதனால் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் உலகமே நடுநடுங்கியது.
திருமாலும், பிரம்மனும் சண்டையிடுவதால் உலகத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பதால் அதற்கு தீர்வு காண்பதற்காக தேவேந்திரனும், தேவர்களும் அல்லல் தீர்க்கும் அலகில் ஜோதியனை நாடிச் சென்று பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்த்து உலகை காக்கும்படி கூறி முறையிட்டனர். அவர்களின் துன்பத்தை நீக்க, சிவபெருமான் முன்வந்தார்.
தேவர்களின் துன்பத்தை தீர்க்கவும், திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் ஏற்பட்ட பகை நீங்கவும் இந்த உலக உயிர்களுக்கு அருள் புரிவதற்காகவும் மிகப்பெரிய ஒரு நெருப்பு உருவம் எடுத்து பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் முன்பு ஒளிப்பிழம்பாக உருமாறி நின்றார்.
மிகப் பெரிய நெருப்பு உருவம் தோன்றியதை பார்த்த பிரம்மனும், விஷ்ணுவும் சண்டையை நிறுத்தி ஆச்சரியமாக அந்த ஒளிப்பிழப்பை பார்த்தனர். பின்னர் இவ்வளவு பெரிய உருவத்தின் அடிப்பாகத்தையோ அல்லது மேல்பாகத்தையோ யாரால் கண்டுபிடிக்க முடிகிறதோ அவரே பெரியவர் என்று விஷ்ணுவும், பிரம்மனும் முடிவுக்கு வந்தனர்.
பின்னர் நெருப்பு உருவத்தின் அடியை நான் கண்டு பிடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு விஷ்ணு பன்றி வடிவம் எடுத்து பூமியை குடைந்து சென்றார். தான் முடியை கண்டு வருவதாக கூறி பிரம்மன் அன்னப்பறவையின் வடிவம் கொண்டு ஒரு நொடிக்கு லட்சக்கணக்கான மைல் வேகத்துடன் மேலே பறந்து சென்றார். பாதாளங்களுக்கு அப்பால் சென்றும் விஷ்ணுவால் அடியை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர் கீழ் நோக்கி பூமியை குடைந்து சென்று கொண்டிருந்தார். ஆனால் நெருப்பு ஒளியின் அடியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது சிவபெருமானின் செயலாகத்தான் இருக்கும் என்பதை அறிந்த விஷ்ணு தன்னால் அடியை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி வந்தார்.
மேலே பறந்து முடியை காண்பதற்காக அன்னப்பறவையாக மாறி சென்ற பிரம்மன் பல ஆயிரம் ஆண்டுகளாக பறந்து சென்ற காரணத்தால் அவரது இறகுகள் உதிர தொடங்கின. அவரும் உண்மையை உணர தொடங்கினார். தன் தவறை அவர் உணரும் நேரத்தில் தாழம்பூ ஒன்று பிரம்மனை நோக்கி கீழே வந்து கொண்டு இருந்தது. அந்த தாழம்பூவை கையில் பிடித்த பிரம்மன், 'நீ எங்கிருந்து வருகிறாய்' என்று கேட்டார். அதற்கு தாழம்பூ, 'தான் சிவபெருமானின் முடியில் இருந்ததாகவும், தவறி கீழே விழுந்து விட்டதாகவும், 40 ஆயிரம் ஆண்டுகளாக கீழே வந்து கொண்டிருப்பதாகவும்' கூறியது.
தாழம்பூ, சிவபெருமான் முடியில் இருந்து வருவதாக கூறியதும், பிரம்மனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர், தாழம்பூவிடம் இந்த நெருப்பு உருவத்தில் முடியை கண்டுபிடிப்பதற்காக மேலே பறந்து வந்து கொண்டிருந்தேன். நான் சிவபெருமானின் முடியை கண்டு அதில் இருந்து உன்னை எடுத்து வந்ததாக ஒரே ஒரு பொய் சொல்ல வேண்டும் என்று கூறினார். இதற்கு முதலில் தாழம்பூ அஞ்சினாலும் பின்னர் ஒப்புக்கொண்டது.
உடனே பிரம்மன் வேகமாக கீழே வந்தார். அவர் திருமாலை பார்த்து, 'நான் சிவபெருமானின் முடியை கண்டுவிட்டேன். மேலும் அதில் இருந்து தாழம்பூவை எடுத்து வந்தேன்' என்று கூறினார். தாழம்பூவும், 'ஆமாம்! பிரம்மன் சொல்வது உண்மைதான்' என்றது. அந்த நேரத்தில் நெருப்பு மலை வெடித்து பேரொலி கேட்டது. அந்த சத்தத்தால் மூவுலகமும் நடுங்கியது. வெடித்த நெருப்பு மலையில் இருந்து சிவபெருமான் புன்னகையுடன் தோன்றினார்.
பிரம்மன் பொய் கூறியதால் அவரை பார்த்து, 'பிரம்மனே! உனக்கு இனிமேல் பூமியில் கோவிலும் இல்லை. பூஜையும் இல்லை' என்றார். தாழம்பூவை பார்த்து, 'பொய்சாட்சி கூறிய தாழம்பூவே, இன்று முதல் நான் உன்னை சூடிக் கொள்ள மாட்டேன்' என்று கூறினார் சிவபெருமான். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மன், சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டினார். பிரம்மனின் நிலை கண்டு மனம் இளகிய சிவன், 'பிரம்மனே! பூவுலகில் உள்ள அந்தணர்களுக்கு செய்கின்ற பூஜை, உன் பூஜையாக விளங்கும்' என்றார்.
அதன்பிறகு சிவபெருமான் பிரம்மனையும், விஷ்ணுவையும் பார்த்து, 'இன்று முதல் இந்த இடம் புனித தலமாக விளங்கும். இந்த ஒளிவடிவான மலை, சிறிய மலையாகி இங்கே நிற்கும். இந்த தலத்தில் பாவங்கள் நடக்காது. இதை சந்தேகப்படுபவர்களுக்கு முக்தி கிடைக்காது' என்று அருளாசி கூறினார். பிரம்மனும், திருமாலும் இந்த மலை மற்ற மலைகளைப் போலவே இருக்க வேண்டும். மலையின் உச்சியின் மீது எப்போதும் ஓர் ஒளி விளங்க வேண்டும் என்று வேண்டினர்.
அதற்கு சிவபெருமான், 'கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் மட்டும் மலையின் மீது ஒளி காட்டுவோம். இந்த ஒளியை காண்போர்க்கு துன்பங்கள் நீங்கும். இந்த ஒளியை கண்டு வணங்குபவரின் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும்' என்றார். அதன்படி தான் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் மகா தீப திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
- 'டிட்வா' புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
கடந்த ஆண்டு பெஞ்ஜல் புயல் காரணமாக கடுமையான மழை பொழிவு ஏற்பட்டு, அண்ணாமலையார் மலையில் நிலச்சரிவும், உயிர் சேதமும் ஏற்பட்டது. இதனால் மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் கடந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது 'டிட்வா' புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுனர் குழு அறிக்கையில் மலையேறும் பாதை தற்போது உறுதித் தன்மை அற்றும், ஏற்கனவே நிலைச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மையப் பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுனர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலை ஏறுவது தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது. மலையேற முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
- வடக்கு ராஜகோபுரத்தின் உயரம் 171 அடி ஆகும்.
- ராஜகோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிடக் கலை அம்சங்களை அதிகமாக காணலாம்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில், சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பிரமாண்ட ஆலயமாகும். இங்கு நான்குபுறமும் பெரிய கோபுரங்கள் மற்றும் உள்கோபுரங்கள் என மொத்தம் 9 கோபுரங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது கோபுரங்களும், ஒன்பது நுழைவாசல்களாக பார்க்கப்படுகின்றன. இதனால் திருவண்ணாமலையை 'நவதுவார பதி' என்றும் சொல்வார்கள்.
அம்மணி அம்மாள் கோபுரம்
வடக்கு ராஜகோபுரத்தின் உயரம் 171 அடி ஆகும். கிழக்கு பிரதான ராஜகோபுரத்தைப் போலவே 11 நிலைகளுடன், 13 கலங்களுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இது. அம்மணி அம்மாளின் பெரு முயற்சியால் நிறைவேறிய காரணத்தால், இந்த கோபுரத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.
வல்லாள மகாராஜா கோபுரம்
1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு வரை, இந்த கோபுரத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதாக கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. திருவண்ணாமலை ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் இதுதான். இந்த கோபுரம் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைத்தவர், கிருஷ்ணதேவராயர். ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தை, 216 அடியாக நிர்மாணித்தார். அதை விட ஒரு அடியாவது பெரியதாக திருவண்ணாமலை ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என எண்ணினார், கிருஷ்ண தேவராயர்.
இதற்கான பணியை 1550-களில் தொடங்கினார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு, ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் அந்தப் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே, கிருஷ்ணதேவராயர் இறந்துவிட்டார். இதையடுத்து சில ஆன்மிகப் பெரியவர்கள், தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம், இந்தப் பணியை முடிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
அதற்கிணங்க, திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரத்தை, கிருஷ்ணதேவராயரின் விருப்பப்படியே, தஞ்சை பெரிய கோவில் விமானத்தை விட, ஒரு அடி அதிகமாக வைத்து 217 அடியுடன் கட்டி முடித்தார். இந்தக் கோபுரம், தமிழ்நாட்டில் 2-வது பெரிய ராஜகோபுரமாக விளங்குகிறது. 11 நிலைகள் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிடக் கலை அம்சங்களை அதிகமாக காணலாம்.
கிளி கோபுரம்
திருவண்ணாமலை கோவிலில் உள்ள கோபுரங்களிலேயே மிகவும் பழமையானதாக இந்த கோபுரம் கருதப்படுகிறது. இது கிழக்கு ராஜகோபுரத்தின் நேராக மேற்கு பகுதியில் உள்ளது. இதனை 'பேய்க்கோபுரம்' என்று அழைக்கிறார்கள்.
தெற்கு கட்டை கோபுரம்
திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் 'தெற்கு கட்டை கோபுரம்' என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு மகா தீபம் காட்சி அளிக்கும் 11 நாட்களும் மலை ஏற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான மகா தீபம் வருகிற 3-ந் தேதி ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். வழக்கமாக மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியின் போது அண்ணாமலையார் மலை மீது ஏறி சென்று தீப தரிசனம் காண சுமார் 2,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த கன மழையினால் அண்ணாமலையார் மலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் மலை அடிவாரத்தில் திருவண்ணாமலை வ.உ.சி.நகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒரே வீட்டில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பல தெருக்களில் மண் சரிவினால் மண்ணும், கற்களும் அடைத்து பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறையினர் மூலம் ஆய்வு செய்து மலையின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தனர். அதன் பின்னர் கடந்த ஆண்டு மகா தீபம் காட்சி அளிக்கும் 11 நாட்களும் மலை ஏற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான மகா தீபம் வருகிற 3-ந் தேதி ஏற்றப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்காணிப்பு குழு அமைத்து ஆய்வுகள் நடத்தி வருகிறது. மேலும் மழை பொழிவை பொருத்தும், மலையில் உள்ள மண்ணின் உறுதி தன்மையை பொருத்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு இந்த ஆண்டு மகா தீபத் தரிசனத்திற்கு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கலாமா, இல்லையா என்பது குறித்து மகா தீபத்தையொட்டி தெரிவிக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் வருகிற 30-ந்தேதி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகா தீபத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது வரை மழை பெரிய அளவில் பெய்யாததால் இந்த ஆண்டு மகா தீபத்திற்கு மலை ஏற அனுமதி அளிக்கப்படுமா? என்று உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மகா தீபத்திற்கு மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி உண்டா, இல்லா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
- முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தொலைதூரப் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதி நவீன சொகுசு பஸ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
மேலும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிர் சாதனம் மற்றும் குளிர்சாதனம் இல்லாத மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் வருகிற 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in இணையதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. செயலி ஆகியவற்றின் மூலமாக புறப்பாடு மற்றும் வருகை என இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை-9445014426, திருநெல்வேலி-9445014428, நாகர்கோவில்-9445014432, தூத்துக்குடி-9445014430, கோவை-9445014435, சென்னை தலைமையகம்-9445014463 மற்றும் 9445014424 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






