என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணாமலையார் கோவில்"

    • அண்ணாமலையார் கோவிலில் வாஷிங்டன் சுந்தர் சாமி தரிசனம் செய்தார்.
    • வாஷிங்டன் சுந்தரை கண்ட பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 20 ஓவர் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பையில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார்.

    இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வாஷிங்டன் சுந்தர் சாமி தரிசனம் செய்தார்.

    வாஷிங்டன் சுந்தரை கண்ட பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

    • மாலை திருவூடல் தெருவில் சிவனும், பார்வதியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
    • கணவன்- மனைவி தம்பதியராக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை பலப்படும்.

    உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வருவதை போலவே, ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையாரும் கிரிவலம் வந்து அருள்பாலிப்பது வழக்கம். அதில், ஒன்று கார்த்திகை தீபத் திருநாளின் மறுநாள், மற்றொன்று தைப் பொங்கல் திருநாளின் மறுநாள்.

    கணவன் - மனைவி உறவில் ஊடலும், கூடலும் தவிர்க்க முடியாதவை. திருவண்ணாமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கூட இத்தகைய ஊடலை நடத்தி இருக்கிறார்கள். இதனை 'திருவூடல் விழா' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறார்கள். தை மாதம் பொங்கல் திருவிழாவுக்கு மறுநாள் இந்த விழா நடத்தப்படுகிறது.

    தீவிர சிவ பக்தரான பிருங்கி முனிவர், சிவபெருமானை தவிர வேறு யாரையும் வழிபட மாட்டார். ஒரு முறை பிருங்கி முனிவர், சிவனை வழிபடுவதற்கு கயிலாயமலைக்கு சென்றார். அப்போது சிவனும், பார்வதியும் சேர்ந்து அமர்ந்து இருந்தனர். உடனே வண்டு உருவம் கொண்ட முனிவர், சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வழிபட்டுவிட்டு நகர்ந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதிதேவி, "என்னை வழிபடாத உனக்கு, உன் உடலை இயங்கச் செய்யும் என்னுடைய சக்தி மட்டும் எதற்கு? எனவே என் சக்தியை திருப்பி கொடுத்துவிடு" என்றார்.

    உடனே பிருங்கி முனிவர், சக்தியை திருப்பி கொடுத்துவிட்டார். இதனால் நிற்கக்கூட முடியாமல் கீழே விழப்போன அவரை சிவபெருமான் கைத்தாங்கலாக பிடித்தார். இதனால் சிவனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் உண்டாகி, அவர்களுக்குள் ஊடல் ஏற்பட்டது. பார்வதிதேவி, சிவபெருமானை பிரிந்து திருவண்ணாமலை ஆலயத்துக்கு வந்து கதவை பூட்டிக் கொண்டார்.

    பார்வதிதேவியின் ஊடலை தணிக்க சுந்தரமூர்த்தி நாயன்மாரை சிவபெருமான் தூது அனுப்பினார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. இதனால் சிவபெருமான் தன் பக்தனான பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் கொடுத்து அருள்பாலித்துவிட்டு, ஆலயத்துக்கு திரும்பி அன்னையின் கோபத்தை தணிக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தலத்தில் பொங்கலுக்கு மறுநாள் நடக்கிறது. இந்த ஆண்டு இன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பிறகு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சுந்தரர் ஆகிய மூவரும் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். பின்னர் மாடவீதிகளில் மூன்று முறை சுற்றி வருவார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை குறிக்கும் வகையில் இந்த மூன்று முறை மாடவீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். அப்போது பக்தர்கள் மண்டகப்படி செய்து அண்ணாமலையாருக்கு சிறப்பு செய்வார்கள்.

    மாலை திருவூடல் தெருவில் சிவனும், பார்வதியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அப்போது, சிவபெருமான் மீது அம்பாள் கோபம் கொள்வது போல் காட்சிகள் அமையும். ஊடல் அதிகமானதும் அம்பாள் கோபத்துடன் புறப்பட்டு சென்று விடுவார். அவர் கோவில் உள்பக்கம் சென்று தனது சன்னிதி கதவுகளை மூடிக்கொள்வார். இதைத்தொடர்ந்து அவரை சமரசம் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அண்ணாமலையார் தனியாக புறப்பட்டு செல்வார். அவர் குமரன்கோவில் சென்று அமர்ந்து விடுவார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது ஆகும். ஆண்டுக்கு 2 தடவை மட்டுமே அண்ணாமலையார் தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் கிரிவலம் வருவது உண்டு. அதில் தை மாதம் நடைபெறும் இந்த கிரிவலமும் ஒன்றாகும்.

    அண்ணாமலையார் பின்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்று கிரிவலத்தை மேற்கொள்வார்கள். கிரிவல பாதையில் அண்ணாமலையாருக்கு சிறப்புகள் செய்யப்படும். பிருங்கி முனிவருக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்து அருள்புரிவார். அன்று மாலை அண்ணாமலையார் ஆலயம் திரும்புவார்.

    அப்போது உண்ணாமுலையம்மனுடன் சமரசம் செய்து கொள்வார். இதனால் அன்னையின் கோபம் தீர்ந்துவிடும். இறுதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் ஒருசேர அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். தன்னையே நம்பி இருக்கும் பக்தனுக்காக சிவபெருமான் எதையும் தியாகம் செய்வார் என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்தவே இந்த திருவூடல் திருவிழா நடத்தப்படுகிறது.

    "திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை" என்பார்கள். திருவூடல் திருவிழாவை ஆரம்பம் முதல் மறுகூடல் வரை பார்ப்பவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவி தம்பதியராக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை பலப்படும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

    • ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்`டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்`டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

    டீசல் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், டீசல் படம் வெற்றி பெறவேண்டி நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி உள்ளிட்ட படக் குழுவினர் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    • மெத்யூவ் கார்மென்ட்ஸ் நிறுவனம் அன்னைதெரசா பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து வந்தனர்.
    • இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை:

    பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான மெத்யூவ் கார்மென்ட்ஸ் முன்பக்கம் அண்ணாமலையார் படமும் பின்பக்கம் அன்னை தெரசா படம் மற்றும் அந்த நிறுவனத்தின் பெயரும் பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து வந்தனர்.

    இதுகுறித்து இந்து முன்னணியினர் கோயில் இணை ஆணையர் குமரேசனிடம் முறையிட்டனர். இது போன்று பக்தர்களை மதமாற்றம் செய்ய தூண்டும் வகையில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள் ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைதொடர்ந்து இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் குமரேசன் இந்த செயலில் ஈடுபட்ட சோமநாத குருக்கள், முத்துக்குமாரசாமி குருக்கள் ஆகி இருவரையும் 6 மாதத்திற்கு பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் திருக்கோவிலில் இந்த 6 மாத காலத்தில் சாமிக்கு எந்த அபிஷேகம் ஆராதனைகள் செய்யக்கூடாது எனவும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    • திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது.
    • ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    திருப்பூர்:

    திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலின் கிழக்கு கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலின் ராஜகோபுரமாக உள்ள கிழக்கு கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    அதேவேளையில், கூட்ட நெரிசலால் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய முடியவில்லை என்றால் கிழக்கு கோபுரத்தை தரிசனம் செய்கின்றனா்.இந்நிலையில், கோவிலின் கிழக்கு கோபுரத்தை 30 அடி உயரத்துக்கு மறைத்து வணிக வளாகம் கட்டினால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, பக்தா்களின் வசதிக்காகவும், கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர ஆரம்பித்து அது முடியும் நாள் வரை இந்த அபிஷேகம் நடத்தப்படும்.
    • திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தாராபிஷேகத்திற்கு தனி சிறப்பு உண்டு.

    அக்னி நட்சத்திரம் நேரத்தில் எல்லா சிவன் கோவில்களிலும் தாராபிஷேகம் நடைபெறும். அதிலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர ஆரம்பித்து அது முடியும் நாள் வரை இந்த அபிஷேகம் நடத்தப்படும். அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதியில் தாராபிஷேகம் தொடங்கப்படும். அனைத்து சிவன் கோவிலிலும் உள்ள மூலவருக்கு மேலே பாத்திரம் ஒன்றைக் கட்டி தொங்க விடுவார்கள். இந்த பாத்திரத்தில் பன்னீர், வெட்டிவேர், விளாமிச்சை வேர் பச்சிலை, ஜடா மஞ்சி, பன்னீர், பச்சை கற்பூரம் ஏலக்காய். ஜாதிக்காய். கடுக்காய். மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்த நீரை நிரப்புவார்கள் பாத்திரத்தின் அடியில் உள்ள சிறிய துவாரம் வழியே அருணாச்சலேஸ்வரர் லிங்கம் மீது குளிர்ச்சியான பன்னீர் சொட்டு சொட்டாக விழும்.

    இந்த தாராபிஷேகம் அக்னி நட்சத்திரம் முடியும் நாளான மே 28ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். அதேபோல் மற்ற சிவன் கோவில்களிலும் தாராபிஷேகம் தொடங்கப்பட்டுவிட்டது.


    அக்னி நட்சத்திரத்தை ஒட்டி வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவருக்கு தாராபிஷேகம் தொடங்கிவிட்டது தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாராபிஷேகம் நடைபெறும். இதே போல் ஏராளமான கோவில்களில் அக்னி நட்சத்திரத்தை ஒட்டி சிவனுக்கு தாராபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிவனுக்கு தாராபிஷேகம் செய்வதால் கோடையின் வெயிலின் உக்கிரகம் தணிந்து ஓரளவு இதமான சூழ்நிலை ஏற்பட மேகக் கூட்டங்கள் கூடி வரும் சிவபெருமானின் அருள் கிடைக்கும். அதனால் நமக்கு அக்னி நட்சத்திரத்தின் சூட்டின் வேகம் குறையும். முதல் வாரம் அக்னி நட்சத்திரத்தில் இருக்கும். சூட்டின் வேகம் செல்ல செல்ல படிப்படியாக குறைந்து இதமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும். பல நூறு ஆண்டுகளாக இந்த தாராபிஷேகம் அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெறுகின்றன. அதிலும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தாராபிஷேகத்திற்கு தனி சிறப்பு உண்டு. ஏனென்றால் அது அக்னி தலம் அல்லவா!


    கோடையில் தாக்கம் குறைந்து போதிய மழை பெய்யும் என்பது நம்பிக்கை சில தலங்களில் தோஷ நிவர்த்தியாகவும், இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. மே 28 தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீங்களும் தாராபிஷேகம் நடைபெறும் கோவிலில் தாராபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து சிவபெருமானின் அருளை பெறலாமே.

    ×