search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvannamalai"

    • தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

    ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெறுவதை ஒட்டி விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

    அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10 ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • ரேஷன் கடைகளும் மழை நீரில் மூழ்கி விட்டது.
    • அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பெஞ்ஜல் புயல்-மழையால் வட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

    திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. இந்த மழையால் பல்வேறு ஊர்களில் ரேஷன் கடைகளும் மழை நீரில் மூழ்கி விட்டது.

    அந்த கடைகளில் இருந்த உணவு பொருட்களும் வீணாகி விட்டது. தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

    உணவு மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடந்த 3 நாட்களாக விழுப்புரம்- கடலூர் மாவட்டங்களில் முகாமிட்டு ரேஷன் பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

    இதற்கிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து அரிசி, பருப்பு, துணிமணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதுதவிர விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ரேஷன் கடைக்கும் சென்று இலவசமாக பொருட்கள் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை மக்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்ட இடத்தை இன்று காலை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மண் சரிவு ஏற்பட்டு வீட்டினுள் சிக்கி இருக்கும் நபர்கள் குறித்து கேட்டறிந்தார். மழை பெய்து கொண்டே இருப்பதால் மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அப்பகுதிமக்களை முகாமில் தங்குமாறு அறிவுறுத்தினார். மேலும் மீட்பு படையினரிடம் விரைந்து செயல்பட வேண்டும்.

    முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மீட்பு பணியை துரிதப்படுத்த சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர்கள் 2 பேர் வருகிறார்கள். அவர்கள் வருகை பெரும் உதவியாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவில் சிக்காமல் இருப்பதற்காக பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

    • இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
    • 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.

    அந்த வீட்டுக்குள் வசித்தவர்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சேறும் சகதியுமாக மாறியது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.


    தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீயணைப்பு துறையினர் இரவு 8 மணிக்கு அங்கு சென்றனர்.

    மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். அப்போது உள்ளே ஆட்கள் இருப்பது போல மோப்பநாய் அடையாளம் காட்டியது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை பெய்ததாலும் மண் சரிவு ஏற்பட்டதாலும் இரவில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

    மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.

    அப்போது மழை பெய்ததால் மகா தீப மலையில் இருந்து மழை நீர் மீட்பு பணி நடந்த இடத்திற்கு வந்தது. இதனால் மேலும் மண்சரிவு ஏற்படாத வண்ணம் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

    இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-

    மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து பாறைகள் உருண்டு விழும் ஆபத்தான நிலை இருப்பதால் இரவில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருந்தது.

    இன்று காலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மண்ணில் புதைந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியில் மழை வெள்ளத்தால் சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.

    மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு 7 பேர் கதி என்ன என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மண்சரிவில் சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

    • ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
    • புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

    இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனையடுத்து புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கில் அமைந்துள்ளது.
    • திருவண்ணாமலையை பார்த்தபடி தெற்கு நோக்கி நரசிம்மர் காட்சி தருகிறார்.

    இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை உலக உயிர்களுக்கு மெய்பித்துக் காட்டியது, திருமாலின் அவதாரமான நரசிம்ம அவதாரம். அவர் உடனடியாக பக்தர்களுக்கு பலன் அளிப்பவர்.

    அப்படிப்பட்ட நரசிம்மர் அருளும் ஆலயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அப்படி ஒரு உன்னதமான தலம்தான், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைந்துள்ள சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோவில்.

    தொண்டை மண்டலத்தின் பல்குன்ற கோட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய போளூர், புலஸ்திய மகரிஷி தவம் இயற்றிய காரணத்தால் 'புலஸ்தியபுரம்' என்று புராணப் பெயர் பெற்றது. போளூர் நகரின் மேற்கே அமைந்துள்ளது, சம்பத்கிரி என்ற மலை.



    இங்கு குபேரனுக்கு அனைத்து சம்பத்களையும் (செல்வங்களையும், பொருளையும்) நரசிம்மர் வழங்கியதால், இது 'சம்பத்கிரி' என்று பெயர் பெற்றது.

    'பொருள்' நிறைந்த ஊர் என்பதாக, சம்பத்கிரி மலைக்கு கீழே அமைந்த ஊரை 'பொருளூர்' என்று அழைத்தனர். அதுவே மருவி 'போளூர்' என்றானதாக சொல்கிறார்கள். சம்பத்கிரி மலையில் சப்தரிஷிகளும் தவம் இயற்றியதாக கூறப்படுகிறது.

    சப்தகிரி மலையில் புலஸ்தியர் மற்றும் பவுலஸ்தியர் ஆகிய இரு மகரிஷிகள், திருமாலை நோக்கி தவம்புரிந்து வந்தனர். அந்த தவத்தின் பயனாக கோவிந்தனிடம் இருந்து ஒரு மாம்பழம் பிரசாதமாக கிடைத்தது. அதை பங்கிடும் போட்டியில் பவுலஸ்தியரின் இரண்டு கரங்களும் சிதைந்தன.

    இதையடுத்து பவுலஸ்தியர், இம்மலைக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள சேயாற்றில் (செய்யாறு) தினமும் நீராடி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) நரசிம்மரை நினைத்து, இம்மலையை கிரிவலம் வந்தார்.

    48-ம் நாள் சேயாற்றில் மூழ்கி எழுந்தபோது, அவரது சிதைந்த கைகள் கூடி, அவர் கரங்களில் நரசிம்மர் விக்கிரகமும் கிடைத்தது. அந்த விக்கிரகத்தை ஊருக்குள் பிரதிஷ்டை செய்யும்படி அசரீரி கூறிட, அதன்படியே ஊருக்குள் பிரதிஷ்டை செய்தார்.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இம்மலையின் உச்சியில் கல் உடைக்கும்போது உளிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. அதை கண்டு அஞ்சிய மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    அன்றே ஊரில் இருந்த ஒரு பக்தரின் கனவில் தோன்றிய பெருமாள், தான் இங்கு லட்சுமி நரசிம்மராக, சுயம்பு வடிவில் எழுந்தருளி உள்ளதாகக் கூறி மறைந்தார். இதையடுத்து அங்கே ஆலயம் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் இன்றுவரை சிறப்புடன் நடந்து வருகிறது.

    மலை மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ள நரசிம்மமூர்த்திக்கு ஹொய்சாளர்கள் ஊருக்குள் ஒரு ஆலயம் எழுப்பினர். இந்த ஆலயத்திற்கு விஜயநகர அரசர்களால் திருப்பணிகளும் செய்யப்பட்டுள்ளன.

    பின்னாளில் விஜயநகர வம்சத்தில் வந்த ஓகூர் சீனிவாசராவ் என்பவர், உற்சவர் நரசிம்மரோடு ஸ்ரீதேவி - பூதேவி தாயார்களின் விக்கிரகத்தையும் இங்கே நிறுவியுள்ளார். மேலும் பாமா - ருக்மணி உடனான வேணுகோபால சுவாமியையும் கற்சிலையாக நிறுவினார்.

    இந்த சம்பத்கிரி மலை சுமார் 850 படிகளைக் கொண்டது. மலையடிவாரத்தில் சிறிய திருவடியான ஆஞ்சநேயருக்கும் சன்னிதி இருக்கிறது. அதோடு நான்கு ஓய்வு மண்டபங்களும் உள்ளன. இரண்டு குளிர்ந்த நீர் சுனைகள் காணப்படுகின்றன.

    மலை மீது ஏற, ஏற செங்குத்தான படிகள் அமைந்துள்ளன. மலை உச்சியில் அரண் போன்று மலையைச் சுற்றிலும் மதில்கள் அமைந்துள்ளன. நடுவே தென்முகம் பார்த்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆலயத்தின் முன்பு பலிபீடம், தீப ஸ்தம்பம், கருடாழ்வார் உள்ளனர். மின்னொளியில் மின்னும் வகையில், சங்கு, சக்கரத்துடன் திருநாமம் அமைக்கப்பட்டிருக்கிறது.


    கருவறைக்குள் சுயம்புவாக திருவண்ணாமலையை பார்த்தபடி தெற்கு நோக்கி நரசிம்மர் காட்சி தருகிறார். இவருக்கு முன்பாக லட்சுமி தேவியின் நரசிம்மமூர்த்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    இவரது சன்னிதிக்கு வலது புறம் கனகவல்லி தாயாருக்கு தனி சன்னிதி உள்ளது. மலை மீது பிரம்ம தீர்த்தமும், மலையின் கீழ் புலஸ்திய தீர்த்தமும் இருக்கின்றன. பாஹுநதி என்னும் செய்யாறும் இத்தலத்தின் தீர்த்தமாக விளங்குகிறது.

    இவ்வாலயத்தில் உள்ள இறைவனுக்கு சுவாதி, மாத பிறப்பு, ஏகாதசி, திருவோணம், புனர்பூசம், ரோகிணி, பஞ்சமி திதி, சப்தமி திதி ஆகிய நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றன.

    சித்திரை வருடப்பிறப்பில் படிவிழா, வைகாசியில் 10 நாள் பிரமோற்சவம், ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், தனுர் (மார்கழி) மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதசி போன்றவை மலைக் கோவிலில் நடைபெறும் விசேஷ நிகழ்வுகளாகும்.

    திருமணவரம், புத்திரப்பேறு, அரசு வேலை, கடன் நிவர்த்தி, தொழில் முன்னேற்றம் மற்றும் அமானுஷ்ய - மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபட, பிரதோஷ நாட்களில் சம்பத்திரி லட்சுமி நரசிம்மருக்கும், ஊரில் உள்ள பாமா - ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி மற்றும் உற்சவர் நரசிம்மருக்கும் திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சாற்றி, பானகம் மற்றும் வெல்லத்தினால் ஆன நைவேத்தியங்களை படைத்து கிரிவலம் வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கில் அமைந்துள்ளது சம்பத்கிரி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்.

    சனிக்கிழமை மட்டும்...

    மலை மீது உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

    அதே நேரம் கீழே உள்ள வேணுகோபாலர் கோவில் தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    • பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
    • நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    சென்னை:

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்களும், பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் பெருந்திட்ட வரைவின் கீழ் ரூ.36.41 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், 2024 - 2025-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்ட மன்ற மானியக் கோரிக்கையின்போது, "திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலின் கிரிவலப் பாதையில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.23 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்" எனவும், "கோவிலில் பக்தர்களின் வசதிக்காக புதியதாக பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அரசுக்கு சொந்தமாக 15 இடங்களில் கழிவறைகள் மற்றும் குளியலறைகள் ஏற்படுத்துதல் மற்றும் 2 இடங்களில் 7 பக்தர்கள் இளைப்பாறும் கூடங்கள் அமைத்தல், ரூ.50 கோடி மதிப்பீட்டில் பக்தர் கள் தங்கும் விடுதி – 2 அமைத்தல் போன்றவை குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாம் நல்லமுறையில் செய்து தந்திட வேண்டும்.

    கிரி வலப்பாதையில் அமைக்கப்படும் கழிவறைகள் மற்றும் குளியலறைகளின் உயரம் சுமார் 13 அடி உயரம் கொண்டதாகவும், நல்ல காற்றோட்டத்துடன் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுவதோடு, அதற்கான அணுகு சாலை கலை நயத்துடன் செம்மையாக அமைக்கப்பட வேண்டும்.

    பக்தர்கள் தங்கும் விடுதியானது நீருற்றுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாக இருந்திட வேண்டும். இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கையினை உடனடியாக தயார் செய்து பணிகளை விரைவுபடுத்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் ஜோதி, அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கோபி நயினார் இயக்கத்தில் மனுசி என்ற படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
    • இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆண்ட்ரியா, நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    தற்போது அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் மனுசி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

    இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே தவளகிரீஸ்வரர்.
    • இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் இந்திர தீர்த்தம்.

    திருமாலுக்கும், பிரம்மனுக்கும் திருவண்ணாமலையில், ஆதி அந்தம் இல்லாத பெருஞ்ஜோதியாக நின்று காட்சி கொடுத்தவர், சிவபெருமான். அவர் தனது மகன் முருகப்பெருமானுக்கு, ஜோதி ரூபமாக திருக்காட்சி கொடுத்த திருத்தலம் தான், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்குன்றம். இந்த ஊரை 'தவளகிரி' என்றும் அழைப்பார்கள்.

    உலக மக்கள் அனைவரும் அறிந்துணரும் வகையில், வேதங்களின் கருத்துக்களை மக்களிடையே பரப்பும்படி, வியாச மகரிஷிக்கு சிவபெருமான் உத்தரவிட்டார். அந்த பணியை செய்வதற்கு முன்பாக வியாசர், பூலோகத்தில் பல்வேறு புண்ணிய தலங்களை தரிசிக்க எண்ணினார்.

    அப்படி அவர் வந்த போது தென் திசையில் வெண்ணிற மலை ஒன்றைக் கண்டார். அங்கே சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அந்த தீர்த்த நீரில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார்.

    வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே, 'தவளகிரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 'தவளம்' என்பதற்கு 'வெண்மை' என்று பொருள். வெண்மையான மலையில் வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு இப்பெயர் வந்தது. வியாச முனிவரால் உருவாக்கப்பட்ட இங்குள்ள தீர்த்தம், 'வியாச தீர்த்தம்' என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

    ஒரு முறை கங்காதேவி இந்த ஆலயத்திற்கு வந்தாள். பலரும் தன் நதியில் நீராடுவதால் ஏற்பட்ட பாவத்தை போக்குவதற்காக கங்காதேவி இவ்வாலயம் வந்து, வியாச தீர்த்தத்தில் நீராடி, இத்தல சிவபெருமானை வழிபட்டு தூய நிலையை அடைந்ததாக சொல்லப்படுகிறது.

    இதுதவிர இந்திரன் மற்றும் தேவர்கள் ஆகியோரும் இங்கு வந்து தவளகிரீஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம், 'இந்திர தீர்த்தம்' என்ற பெயரில் இங்கு உள்ளது.

    தாரகாசுரன் என்ற அசுரனை அழித்த பிறகு, முருகப்பெருமான் பல்வேறு தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தார். அதன்படி அருணகிரி எனப்படும் திருவண்ணாமலை வந்து ஈசனை வழிபட்டார்.

    பின்னர் அவரை ஜோதி வடிவில் வழிபட வேண்டும் என்ற எண்ணத்தில் ஈசனை நினைத்து தியானித்தார். அப்போது அங்கே தோன்றிய சிவபெருமான், "குமரா! முன்பொரு சமயம் திருமாலும், பிரம்மனும் காணுமாறு ஆதியந்தமில்லா பெருஞ்ஜோதியாக இங்கே நான் நின்றேன்.

    பின்பு கார்த்திகை பவுர்ணமி நாளில் இத்தலத்து அர்த்தநாரி ஆனோம். இதே தலத்தில் மீண்டும் ஜோதி வடிவை காட்டுவதற்கு பதிலாக, நீ தவளகிரியில் என்னுடைய ஜோதி வடிவத்தை காணலாம்" என்று கூறி மறைந்தார்.

    அதன்படி தவளகிரி சென்ற முருகப்பெருமான், அங்குள்ள தவளகிரீஸ்வரரை வழிபட்டு, தன்னுடைய கூரிய வேலால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, ஈசனுக்கு அபிஷேகம் செய்தார். அவ்வேளையில் குன்றின் மீது சிவபெருமான் ஜோதிரூபமாக தோன்றி காட்சி அளித்ததுடன், அங்கேயே சிவலிங்க ரூபமாக மாறிப்போனார்.

    முருகப்பெருமானுக்கு திருக்காட்சி நல்கிய அந்த சிவபெருமான், இன்றும் இவ்வாலயத்தில் 'அருணாசலேஸ்வரர்' என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    முருகப்பெருமானால் உண்டான தீர்த்தம் 'குமார தீர்த்தம்' என்று வழங்கப்படுகிறது. பல்வேறு ரிஷிகளும், சித்தர்களும் இத்தல தவளகிரீஸ்வரரை வழிபட்டிருக்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் இரண்டு பழங்கால கல்வெட்டுகள் உள்ளன. அவை பல்லவர் காலத்து கல்வெட்டுகளாகும். இவ்வாலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று அதிகாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பிறகு முருகப்பெருமான் மலையடிவாரத்திற்கு எழுந்தருளுவார்.

    தொடர்ந்து மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள தவளகிரீஸ்வரருக்கும், ஆறுமுகப்பெருமானுக்கும், இதர மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெறும். பின்னர் மாலை 6 மணியளவில் தவளகிரி மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

    பெரிய இரும்பு கொப்பரை முழுவதும் நெய் நிரப்பி ஏற்றப்படும் இந்த தீபம், சுற்றுவட்டாரத்தில் 10 கிலோமீட்டர் தூரத்துக்குத் தெரியும் என்கிறார்கள். 3 நாட்கள் தொடர்ந்து எரியும் இந்த தீபத்தை தரிசிப்பதன் மூலம் ஈசன் மற்றும் அவரது மகன் முருகனின் அருளையும் சேர்த்துப் பெறலாம்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், தவளகிரீஸ்வரரை வேண்டி விரதம் இருப்பதுடன், உப்பு, மிளகு எடுத்துச் சென்று மலையில் உள்ள குன்றின் உச்சியில் போட்டுவிட்டு நேர்த்திக்கடன் முடிப்பார்கள். குறிப்பாக தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெண்குன்றம் கிராமம். இங்கே சுமார் 1,500 அடி உயரத்தில் தவளகிரி மலை உள்ளது. இந்த மலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    • திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
    • பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    அதன்படி பவுர்ணமி வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி வருவதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
    • ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிபில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

     அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது.

     

    இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதால் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, வணங்கான் படத்தின் டிரைலர் நாளை மறுநாள் ஜூலை 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை.
    • பாதாள லிங்கேஸ்வரர் என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம். இந்த கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ளது பாதாள லிங்கம்.

    இங்கு 'பாதாள லிங்கேஸ்வரர்' என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்ய, சில படிகள் பாதாளத்தில் இறங்கிச் சென்று வழிபட வேண்டும். இந்த சிவலிங்கத்திற்கு முன்பாக நந்தி சிலையும் இருக்கிறது.

    ஆன்மிக மற்றும் ஞானத்திற்கான தேடலுடன் திருவண்ணாமலைக்கு வந்தவர், ரமண மகரிஷி. அவருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது, இங்குள்ள பாதாள லிங்கத்தின் சன்னிதியில் சென்று வழிபட்டார். அங்கு ஒரு புற்று இருந்தது. அதற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து ஞானம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

    மரண பயத்தை போக்கும் இந்த பாதாள லிங்கமும், கிரிவலப் பாதையின் மலைக்கு பின்புறம் அமைந்த அடி அண்ணாமலை என்ற பெயரில் அமைந்த தனி ஆலயத்தில் உள்ள சிவலிங்கமும் விசேஷமானது. இந்த இரண்டு லிங்கங்களையும் மனமுருக வழிபட்டால், மரணபயம் விலகும், மன நிறைவு உண்டாகும்.

    ஷோடச லிங்க பலன்கள்

    * புற்று மண் லிங்கம் - முக்தி கிடைக்கும்

    * ஆற்று மணல் லிங்கம் - பூமி லாபம் உண்டு

    * பச்சரிசி லிங்கம் - பொருள் பெருக்கம் ஏற்படும்

    * சந்தன லிங்கம் - இன்பங்கள் வந்துசேரும்

    * மலர்மாலை லிங்கம் - நீண்ட வாழ்நாள் அமையும்

    * அரிசி மாவு லிங்கம் - உடல் வலிமை பெறும்

    * பழம் லிங்கம் - நல்லின்ப வாழ்வு

    * தயிர் லிங்கம் - நல்ல குணம்

    * தண்ணீர் லிங்கம் - மேன்மைகள் உண்டாகும்

    * சோறு (அன்னம்) லிங்கம் - உணவு பெருக்கம்

    * முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) - முக்தி கிடைக்கும்

    * சர்க்கரை வெல்லம் லிங்கம் - விரும்பிய இன்பம் கிடைக்கும்

    * பசுவின் சாணம் லிங்கம் - நோயற்ற வாழ்வு அமையும்

    * பசு வெண்ணெய் லிங்கம் - மனமகிழ்ச்சி பெருகும்

    * ருத்திராட்ச லிங்கம் - நல்ல அறிவு

    * திருநீற்று விபூதி லிங்கம் - ஐஸ்வரியம் வந்துசேரும்

    ×