என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai High court"

    • குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரின் தொலைபேசி உரையாடல்கள், தரவுகளை ஒட்டுக்கேட்க முடியாது.
    • குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனிநபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அனுமதிக்கதக்கது அல்ல.

    சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்திருந்தது. மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி கிஷோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரின் தொலைபேசி உரையாடல்கள், தரவுகளை ஒட்டுக்கேட்க முடியாது. இது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது.

    குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனிநபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அனுமதிக்கதக்கது அல்ல" என நீதிமன்றம் தெரிவித்தது.

    மேலும் பொது அவசரம், பொது பாதுகாப்பு ஏதம் சம்பந்தப்படவில்லை என்பதால் அனுமதி ரத்து செய்யப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • யானை சின்னத்தை தவெக கொடி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி மனு தாக்கல் செய்திருந்தது.
    • பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் தவெக கொடிக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என தவெக தரப்பு தெரிவித்திருந்தது.

    தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 3-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    பகுஜன் சமாஜ் கொடியில் உள்ள யானை சின்னத்தை தவெக கொடி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலர் இளங்கோவன் சென்னை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் தாக்க செய்த பதில் மனுவில், "பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் தவெக கொடிக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல மாறுபாடுகள் உள்ளன. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை எனவே, அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுட செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    • சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது.
    • இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    காதல் திருமண பிரச்சனையால் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கேவி குப்பம் எம்.எல்.ஏ.வும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இதற்காக அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நேற்று முதல் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணைக்காக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ஜாமீன் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.

    அந்த விசாரணையில், கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

    மேலும், உங்களுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும், உங்கள் பெயரை பயன்படுத்தினாலும் குற்றம்தான்.

    சட்டமன்றத்தில் பேசத்தான் மக்கள் வாக்களித்தனர். அதனை மறந்து கட்டபஞ்சாயத்து செய்வதா?. விசாரணை நடத்த வந்த காவல்துறையினரை உங்கள் கட்சிக்காரர்கள் தடுத்தது ஏன்?

    நீதிமன்றம் நினைத்திருத்திருந்தால் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்க முடியும்.

    MLA மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர கட்ட பஞ்சாயத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

    பதவியை தவறாக பயன்படுத்தினால் வேடிக்கை பார்க்க முடியாது. எம்பி, எம்.எல்.ஏ.க்கள் உதாரணமாக இருக்க வேண்டும்.

    போலீசார் விசாரணைக்கு எம்எல்ஏ ஒத்துழைக்காவிட்டால் சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்.

    விசாரணைக்கு தனியாக செல்ல வேண்டும் என கூறிய நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து 46 வாரங்கள் கடந்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
    • குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரியும் அங்குள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருவண்ணாமலை கோவில் தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

    ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து 46 வாரங்கள் கடந்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை.
    • உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவில் குழு.

    சாதிச்சான்றிதழ்கள் முழுமையான விசாரணைக்கு பிறகே வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சாதிச் சான்றிதழ்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.

    மேலும், பட்டியலின, பழங்குடியினர் சாதிசான்றிதழ்கள் வழங்க விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

    சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கான விதிகளை பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராய போதுமான எண்ணிக்கையில் மாநில அளவில் குழு அமைக்க நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளது.

    குழுக்கள் விதிகளின்படி விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • தனக்கும் அன்னை இல்லத்திற்கும் தொடர்பு இல்லை என ராம்குமார் தரப்பு கூறியது.

    சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராம்குமாரின் மகன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணைக்கு போது, "சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை" என பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு, "ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த பிரபு தரப்பினர்,"நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது" என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, " தனக்கும் அன்னை இல்லத்திற்கும் தொடர்பு இல்லை" என ராம்குமார் தரப்பு கூறியது.

    சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து ரத்து.
    • அமைச்சர் ஜெயக்குமார் கைதின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவரது மகன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றதத்தில் நீதிபதிகள் முன் நடைபெற்றது.

    அப்போது, காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அப்போது, "காவல்துறைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்காமல் முடித்து வைத்தது தவறு" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • அமலாக்கத் துறையினருக்கு உயர்நிதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் மது விற்பனை நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கவும் அமலாக்கத் துறையினருக்கு உயர்நிதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    'டாஸ்மாக்' நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸமாக் தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.

    அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மதுபானங்கள் ரூ. 10 முதல் ரூ. 30 வரை கூடுதலாக வசூல் செய்தது.

    டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது, கொள்முதல் விலையை குறைத்து காட்டியது. பணியிட மாற்றம், பார் உரிமம் உள்ளிட்டவைகளை பெற லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

    அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை கோரி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

    அப்போது டாஸ்மாக் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம், "எதற்காக சோதனை நடத்தப்பட்டகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தீர்களா? இரவு நேரத்திலும் சோதனையா?" என்று கேட்டனர். அதற்கு, "இரவில் சோதனை நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை; யாரையும் துன்புறுத்தவில்லை" என்று அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறும் போது, "எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என்று தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்? அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்கள் உள்ளிட்டவைகளை பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்" என்று அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    பின்னர் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வரும் 25ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு தடைவிதித்த நீதிபதிகள், அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    முன்னதாக "சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவு 17-ன் படி அமலாக்கத்துறை சோதனை அதிகாரம் குறித்து விளக்கியுள்ளது. சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்" என்று டாஸ்மாக் தரப்பில் வாதிடப்பட்டது.

    மேலும், "சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக ஆதாரம் இல்லை. அமலாக்கத்துறை பிரிவு 17ன் படி எல்லா இடங்களிலும், ஆதாரங்கள் இல்லாமல் விசாரணை நடத்த முடியுமா? 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் சிறை பிடித்து வைத்துள்ளனர்" என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும்.
    • அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என நீதிபதி.

    இதேபோல், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.

    வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மின்சார வாகனங்ளுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

    ஊட்டி, கொடைக்கானலுக்கான கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது.
    • விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவு.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2021-22-ம் கல்வியாண்டுக்கு 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்த நிலையில், நடப்பு 2022-23-ம் கல்வியாண்டுக்கு மொத்தமுள்ள 100 சதவீத இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்துவது குறித்து மத்திய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் ஸ்ரீஹரி பிரசாந்த் உள்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தமிழக அரசு 2020-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கி, கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி அவர்கள் மனுவில் கோரியிருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 2021-22-ம் ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டுகளுக்கு நீட்டிக்கவில்லை எனவும் கூறி, மத்திய அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வக்கீல் சண்முகசுந்தரம் தமிழக அரசின் அரசாணைக்கு, உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால் கந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நடப்பு கல்வியாண்டுக்கு பொருந்துமா என்பதை உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தார். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசோ, மனுதாரரோ விளக்கம் பெற 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். அதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.

    • ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும்.

    சென்னை :

    மின்சார இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வக்கீல் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், ''ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்தபின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்க எந்த ஒரு சட்டத்திலும் இடமில்லை. எனவே, இதுதொடர்பான அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், ''இந்த அரசாணை முறையாக பிறப்பிக்கப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன், வாடகைக்கு குடியிருப்பவரின் ஆதார் எண்ணை இணைத்து, மின்சார மானியம் பெறுவது என்பது வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைதாரர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை'' என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 19-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

    • கடந்த 2016-ம் ஆண்டு மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியை பறிமுதல் செய்தனர்.
    • வழக்கிற்கு தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

    சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

    அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.

    இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19-ந்தேதி அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த முறை சென்னை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. தரப்பில் 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    அந்த கூடுதல் குற்றப் பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருந்ததால் அதனை திருத்தம் செய்தும் சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் குறித்த விபரங்களை இணைத்தும் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை 7 பேருக்கு எதிராக வழக்கை நடத்த மட்டுமே மத்திய-மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றிருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பிழைகளை முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் யார் யாருக்கு எதிராக வழக்கை நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

    இதனிடையே இந்த வழக்கிற்கு தொடர்பில்லாமல் முடக்கப்பட்ட அசையா சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கின் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்யாத நிலையில் சொத்துக்களை விடுவிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

    ×