என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைதண்டனை நிறுத்திவைப்பு!
- வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
- பிணையில் வெளிவருகிறார் பி.ஆர்.பாண்டியன்.
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஓஎன்ஜிசி நிறுவன சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் இம்மாத தொடக்கத்தில் திருவாரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜுக்கு தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்நிலையில் பி.ஆர். பாண்டியன் மீதான தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதை அடுத்து பிணையில் வெளிவருகிறார்.






