என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும்' - அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக தவெக வழக்கு!
- குடிநீர், கழிவறை வசதிகள், முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்
- பல்வேறு விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ஜன.5ஆம் தேதி அரசு வெளியிட்டது.
தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கூட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே தொண்டர்களை அனுமதிக்க வேண்டும்; முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்; அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50% மேல் மக்கள் கூடினால் அது விதிமீறலாகக் கருதப்படும்; குடிநீர், கழிவறை வசதிகள், முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்; அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் நடத்த 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ஜன.5ஆம் தேதி அரசு வெளியிட்டது.
இந்நிலையில் அரசியல் கட்சிகளின் சாலைவலங்களை முறைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றுவதற்கு சாத்தியமில்லாத வகையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளால் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.






