search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வெற்றிக்கழகம்"

    • மாநாடு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
    • கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி நடக்கிறது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெறுகிறது.

    நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார்.இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    நேற்று முன்தினம் மாநாட்டிற்கு பந்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    அதை தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தினை சமன்படுத்தி அப்பகுதியில் உள்ள 6 கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணியும், மேடை அமைக்க அடித்தள பைப்புகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

    மாநாடு பந்தல் அமைக்க இரும்பு பைப்புகள் ஏற்றிவந்த லாரி ,மாநாடு திடலில் சேற்றி சிக்கி நின்றது.பின்னர் லாரியை கிரேன் கொண்டு அப்புறப்படுத்தினர்.

    மாநாட்டிற்கு வருகின்ற தொண்டர்களுக்கு உணவு,குடிநீர் தடையின்றி கிடைக்கும் வகையில் தனியார் கம்பெனியிடம் ஒப்படைக்க பட்டுள்ளது .ஆண்கள் பெண்களுக்கு 250 கழிவறை வசதி,வாகனங்கள் நிறுத்த சாலையின் இரு புறங்களிலும்45 ஏக்கர் அளவில் இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாநாடு மேடை அமைக்கும் பணி பிரத்யேகமாக சினிமா கலை அரங்க இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மேடை அமைக்கும் பணியை கலைஞர்கள் ஆய்வு செய்துள்ளனர் . மாநாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் உள்ள கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

    • தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும்.
    • பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

    வணக்கம்.

    உங்களை நானும். என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம்கூட இல்லை. ஏனெனில், நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம்.

    தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை. அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான். என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல்.

    இன்று, நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

    நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?

    நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா, அதுவும் வெற்றிக் கொள்கைத் திருவிழா, இப்படிச் சொல்லும்போதே. ஓர் எழுச்சி உணர்வு. நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது, தன் தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான்.

    இந்த வேளையில், ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

    பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.

    மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும்.

    நம் கழகம். மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை இளஞ்சிங்கப் படை, சிங்கப் பெண்கள் படை குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை.

    ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

    இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர்.

    இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர்.

    மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ. அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம்.

    இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளைத் தொடங்கித் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன்.

    இந்நிலையில், மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கிவிட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்கப் போகும் சந்தோசத் தருணங்களை இப்போதே மனம் அளவிடத் தொடங்கிவிட்டது.

    வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம்.

    வெற்றி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.

    • மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
    • மாநாட்டில் ஆண்கள், பெண்கள் அமருவதற்கு தனித்தனி வரிசை, இருக்கை அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாடு தொடர்பாக மாவட்ட தலைவர்களை சந்தித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    மாநாட்டுக்கு மாவட்ட வாரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதற்காக மாவட்டம், வட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாநாட்டுக்கு தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, மீண்டும் பாதுகாப்பாக அனுப்பி வைக்க கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பதிவெண் விவரங்கள் கட்சி தலைமை சேகரித்து வருகிறது.

    இந்த நிலையில், மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாநாட்டு பந்தல் கால் நடும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் விஜய் பங்கேற்க இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும், மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி, மேடை அமைக்கும் பணிகள் தொடங்குகிறது.

    மாநாட்டில் ஆண்கள், பெண்கள் அமருவதற்கு தனித்தனி வரிசை, இருக்கை அமைக்கப்படுகிறது. போதுமான அளவு கழிவறை, உணவருந்தும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படுகிறது. மாநாட்டில் 3 வழிப்பாதைகள் அமைக்கப்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவுடன் கூடிய வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.
    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

    சென்னை:

    நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

    கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். விஜய் கட்சி கொடியில் மேலும் கீழும் ரத்த சிவப்பு நிறமும், மைய பகுதியில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றுள்ளன. கொடியின் நடுவில் வாகைப்பூவும் அதன் இருபுறமும் காலை உயர்த்திய நிலையில் 2 போர் யானைகளும், 28 நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

    விஜய் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை, தங்கள் கட்சியின் சின்னம் என்றும், எனவே அதனை நீக்க வேண்டும் எனவும் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுத்தது.

    இந்த நிலையில் கட்சி கொடியில் யானை இடம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்ளது.

    அரசியல் கட்சிகளின் கொடிகளில் இடம்பெறும் சின்னங்கள், உருவங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ கொடுப்பது இல்லை. கட்சிக்கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. ஆனால் கொடிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை அந்தந்த கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சின்னமாக யானையை பயன்படுத்த முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஜய் தான் உங்களை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க என்னை அனுப்பி வைத்துள்ளார்.
    • 32 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவர்கள் நீங்கள்தான்.

    பெரம்பலுார்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இதை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்து விஜய் ஏற்கனவே கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இதை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறார். நேற்று அவர் பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டிற்கு குடும்பத்துடன் வர வேண்டும். கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன், பெண்களை மாநாட்டிற்கு பாதுகாப்புடன் அழைத்து வரவேண்டும்.

    கட்சியின் தலைவர் விஜய் தான் உங்களை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க என்னை அனுப்பி வைத்துள்ளார். எனவே மாநாட்டிற்கு அனைவரும் வர வேண்டும். கட்சியின் முதல் அரசியல் மாநாடு வெற்றி மாநாடாக தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    கட்சிக்கு உண்மையாக உழைப்பவா்களுக்கு மட்டும் தான் பதவிகள் வழங்கப்படும். அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும் மக்களுக்கு சேவை செய்து கொண்டு நலத்திட்டம் கொடுத்த இயக்கம், கட்சி என்று சொன்னால் அது தமிழகம் வெற்றிக்கழகம் தான். இப்போது விஜய் உச்சத்தில் இருப்பதால் கட்சிக்கு பலர் வருவார்கள். அவர்களை வரவேற்கிறோம். வர வேண்டாம் என்று சொல்லவில்லை.

    ஆனால், 32 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவர்கள் நீங்கள்தான். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தலைவர் விஜய் வந்து நிற்பார். தமிழக வெற்றி கழகம் துணை நிற்கும்.

    எனவே, சந்தேகப்பட வேண்டாம். எதுவாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிறகுதான். காசு, பணம் இருந்தாலும் ரசிகர்களை மீறி எதுவும் நடக்காது. ஒரே ஒரு தொண்டனாக இருந்தாலும் சரி, தோழனாக இருந்தாலும் சரி, அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அரியலூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் புஸ்சி ஆனந்த் பேசுகையில், அடுத்த மாதம் நடைபெறும் மாநாட்டில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும்போது கவனமாக வருகை தர வேண்டும். 2026-ல் கட்சித் தலைவர் விஜய்யை தமிழக முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
    • கட்சி நிர்வாகிகளுடன் டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஈரோடு:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வரும் அக்டோபர் மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தினர் கட்சிக் கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

    இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ராஜாஜிபுரத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கட்சி கம்பம் நடப்பட்டது. கட்சிக்கொடி மட்டும் ஏற்றப்படாமல் இருந்தது. கம்பம் நடுவதற்காக மாநகராட்சியில் கட்சி நிர்வாகிகள் அனுமதி கடிதம் அனுப்பி இருந்தனர்.

    ஆனால் பதில் வரவில்லை. பின்னர் மீண்டும் தமிழக வெற்றிக்கழகத்தினர் நினைவூட்டம் கடிதம் அனுப்பி இருந்தனர். அதற்கும் பதில் வரவில்லை. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமிழக வெற்றிக்கழகத்தினர் கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. நேற்று மாலை 6.30 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கட்சிக்கொடியேற்றுதல் நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதால் நாளை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    தமிழக வெற்றிக்கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து டவுன் டி.எஸ்.பி. முத்துக்குமரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அப்போது கட்சி நிர்வாகிகளுடன் டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதால் நிகழ்ச்சி நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதற்கு கட்சி நிர்வாகிகள் நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்தும் இதுவரை பதில் வரவில்லை. அனுமதி கடிதம் ஆவணங்களை உங்களிடம் காட்டுகிறோம் என்று கூறி செல்போனில் ஆவணங்களை காட்டினர்.

    ஆனால் இது செல்லுபடியாகது. முறைப்படி அனுமதி கடிதம் பெற்றால் தான் நிகழ்ச்சி நடத்த முடியும். மீறி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது டவுன் டி.எஸ்.பி.யிடம் கட்சி நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு 9.30 மணி வரை இந்த பிரச்சனை நீடித்தது.

    பின்னர் ஒரு வழியாக சமாதானமாகி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உரிய அனுமதி பெறாமல் எந்தவித நிகழ்ச்சியும் நடத்தப்படமாட்டது என்றும் மீறி நடக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவதாக கட்சியினர் கடிதம் மூலம் உத்தரவாதம் அளித்தனர்.

    இதனை ஏற்று போலீசார் கலைந்து சென்றனர். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
    • காவல்துறையினர் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் மாநாட்டில் நிறுத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளன.

    நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்)27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாநாடுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சி நிர்வாகிகள், வக்கீல்களுடன் சென்று மனு அளித்திருந்தார். மாநாடு நடத்துவதற்கு 33 நிபந்தனைகளை காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்டு அனுமதிக்காக காத்துள்ளனர்.

    இந்நிலையில் மாநாடு நடைபெறும் நாளன்று தீயணைப்பு வாகனம் பாதுகாப்பிற்கு நிறுத்த விக்கிரவாண்டி தீயனைப்பு நிலையத்திலும் ஆம்புலன்ஸ் நிறுத்த முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், சாலைகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம், ரெயில்வே நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் தயார் செய்து வருவதால் காவல்துறையினர் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை மாலை நடைபெறுகிறது.
    • பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. மாநாட்டு முன்னேற்பாடுகள் பற்றி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை மாலை நடைபெறுகிறது.

    இதுபற்றி மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அடுத்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டி வி சாலை என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மாநாடு முன்னேற்பாடுகள் பற்றி கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.

    கூட்டத்தில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தவறாமல் பங்கேற்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

    மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பங்கேற்போரின் எண்ணிக்கை வாகனங்களின் எண்ணிக்கை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ள விவரத்தை எடுத்துக்கூறி அதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை புஸ்சி ஆனந்த் கொடுத்தார்.
    • காவல் துறையினர் கூறிய நிபந்தனைகளை கடைபிடிப்பது குறித்து நாங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளோம்.

    விழுப்புரம்:

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். சமீபத்தில் நடந்த இக்கட்சியின் கொடி அறிமுக விழாவின் போது, கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து முதல் மாநில மாநாட்டில் அறிவிப்பதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை இம்மாதம் 23-ந்தேதியன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதாகவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு ஏற்கனவே காவல்துறையிடம் அக்கட்சியினர் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய நாட்கள் இல்லை என்பதாலும், இதனிடையே விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் வெளியானதாலும், மாநாடு தேதி தள்ளிப்போனது.

    மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இந்நிலையில் மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதையடுத்து அந்த தகவலை மீண்டும் மனு மூலம் காவல்துறையிடம் கொடுத்து அனுமதி பெறுவதற்காக நேற்று மாலை அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.

    அங்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலை சந்தித்து, மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ள விவரத்தை எடுத்துக்கூறி அதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை புஸ்சி ஆனந்த் கொடுத்தார்.

    அந்த மனுவில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு மாநாட்டை நடத்துவதாகவும், ஏற்கனவே காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளை எந்தெந்த முறைகளில் பின்பற்ற இருப்பதாகவும், அது தொடர்பான விரிவான விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன. அம்மனுவுடன், மாநாட்டு திடல், மேடை, வாகனங்கள் நிறுத்துமிடங்கள், வழித்தடங்கள், தேசிய நெடுஞ்சாலை இவற்றை உள்ளடக்கிய மாதிரி வரை படத்தையும் இணைத்துக் கொடுத்தனர்.

    இம்மனுவை பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால், இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து பதில் தெரிவிப்பதாக கூறினார்.

    அதன் பின்னர் வெளியே வந்த புஸ்சி ஆனந்த், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி நடத்தப்படும் என்று எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதற்காக மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்ட விவரம் குறித்து காவல் துறையிடம் மனு அளித்துள்ளோம். அதில் காவல் துறையினர் கூறிய நிபந்தனைகளை கடைபிடிப்பது குறித்து நாங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளோம்.

    இம்மாநாடு மிக சிறப்பாக வெற்றி மாநாடாக நடைபெறும். மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் விவரம் உள்ளிட்ட எந்தவொரு தகவலாக இருந்தாலும் அதனை எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார். மாநாடு திட்டமிட்டபடி அக்டோபர் 27-ந்தேதி நிச்சயம் நடைபெறும். மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்திற்குள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விழுப்புரம்-கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, மாவட்ட தலைவர் குஷிமோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் ஜி.பி.சுரேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    மாநாட்டையொட்டி செஞ்சி, விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக்கழகத்தினர் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக கிராம புறங்களில் அதிகளவில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது.

    • இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்!
    • விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில்,

    என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே...

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.

    கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024). மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நமது வெற்றிக் கொள்கை மாநாடு. நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

    தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

    இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்!

    இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.

    விரைவில் சந்திப்போம்!!

    வாகை சூடுவோம்!!

    இவ்வாறு விஜய் கூறியுள்ளார். 

    • பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக்கழத் தலைவர் விஜய் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்து இருந்தார்.

    சென்னை:

    தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பெரியார் பிறந்தநாளில் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என இன்று காலை விஜய் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,

    பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாரத பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.

    ×