என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய அரசியலமைப்பு தினம்"

    • பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மையை காத்துள்ளது.
    • பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகத்திலேயே மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு அளித்துள்ளது. இதில் இறையாண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மையை காத்துள்ளது.

    பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது. அண்ணலின் அரசிய லமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட தினத்தை இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாய், தந்தை, குரு, தெய்வமாக அரசியலமைப்பு உள்ளது.
    • ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை உலகிற்கு மீண்டும் புரிய வைத்தது.

    அரசியலமைப்பு சட்ட தினம் பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முதலாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிலையில் தனது உரையை தமிழ் மொழியில் தொடங்கினார். அவர் பேசியதாவது:-

    தாய், தந்தை, குரு, தெய்வமாக அரசியலமைப்பு உள்ளது. நமது அரசியலமைப்பு அரசியலமைப்பு சபையில் நமது அன்னை பாரதத்தின் சிறந்த தலைவர்களால் வரைவு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சுதந்திரத்திற்காகப் போராடிய மில்லியன் கணக்கான நமது நாட்டு மக்களின் கூட்டு ஞானம், தியாகம் மற்றும் கனவுகளை உள்ளடக்கியது.

    சிறந்த அறிஞர்கள், வரைவுக் குழு மற்றும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற நுண்ணறிவு மிக்க சிந்தனைகளை வழங்கினர். அவர்களின் தன்னலமற்ற பங்களிப்பு பாரதத்தை இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாற்றியது. நமது அரசியலமைப்பு அறிவு மற்றும் வாழ்ந்த அனுபவம், தியாகங்கள், நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளிலிருந்து பிறந்தது. நமது அரசியலமைப்பின் ஆன்மா பாரதம் ஒன்று, அது என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பதை நிரூபித்துள்ளது.

    370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, 2024 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல்களின் போது, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களித்தது ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை உலகிற்கு மீண்டும் புரிய வைத்தது.

    சமீபத்தில் நடைபெற்ற பீகார் தேர்தல்களில், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பெண்களின் வாக்களிப்பு, நமது தாய் பாரத ஜனநாயகத்தின் கிரீடத்தில் மற்றொரு விலைமதிப்பற்ற வைரத்தைச் சேர்த்துள்ளது. அரசியலமைப்பு சபையின் பெண் உறுப்பினர்களின் பங்களிப்புகள் ஒப்பிடமுடியாதவை என்றார். 




    • பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்.
    • நமது அரசியலமைப்பு மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

    ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியாவுக்கு என தனி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கினார்.

    அவர் வரைந்த அரசியலமைப்பு சட்டங்கள், பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையால் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இந்த தினத்தை அரசியலமைப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். கடந்த 2015-ம் ஆண்டு இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். 

    இந்நிலையில் இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,

    நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு கடமைகள் வலுவான ஜனநாயகத்திற்கான அடித்தளங்கள்.

    வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியதன் பொறுப்பை பிரதமர் வலியுறுத்தினார்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்.

    கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தே உரிமைகள் பிறக்கின்றன என்ற மகாத்மா காந்தியின் நம்பிக்கையை நினைவு கூர்ந்த அவர், கடமைகளை நிறைவேற்றுவது சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அரசியலமைப்பு தினத்தன்று, நமது அரசியலமைப்பை வடிவமைத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தொலைநோக்குப் பார்வை ஒரு வளர்ந்த பாரதத்தை கட்டியெழுப்புவதில் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.

    நமது அரசியலமைப்பு மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இது நமக்கு உரிமைகளை வழங்கும் அதே வேளையில், குடிமக்களாகிய நமது கடமைகளையும் நினைவூட்டுகிறது. அவற்றை நாம் எப்போதும் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். இந்தக் கடமைகள் ஒரு வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாகும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

     

    • இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல.
    • ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் செய்வோம்.

    சென்னை:

    அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல. அதன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இந்த அரசியலமைப்பு தினத்தில், பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ்வொரு சக்தியையும் எதிர்க்கும் நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

    நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் செய்வோம்.

    நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதே அரசமைப்புக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என கூறியுள்ளார்.

    • நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    நாகர்கோவில்:

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந்தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 26-ந் தேதி அன்று உள்ளாட்சி அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உறுதிமொழி எடுக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவக்குமார், செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, அம்பிளி, லூயிஸ், பரமேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

    • ஆண்டுதோறும், நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினம் என கொண்டாடப்படுகிறது
    • பல வழக்கறிஞர்கள் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டி கோரிக்கை வைத்தனர்

    இந்திய ஜனநாயகத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு சட்டம் அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டு 1949, நவம்பர் 26 அன்று இந்திய பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டது.

    இதையொட்டி, 2015லிருந்து ஆண்டுதோறும் நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இன்று நாடு முழுவதும், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய குழுவின் தலைவரான டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் உயரிய சித்தாந்தங்களும், கோட்பாடுகளும் மக்களால் நினைவுகூரப்படும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    இதன் தொடர்ச்சியாக, இன்று இந்திய நீதித்துறையின் தலைமையிடமாக விளங்கும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 7 அடி உயர சிலை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியுடன், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    அம்பேத்கர், வழக்கறிஞர் உடையுடன் தனது கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வைத்து கொண்டிருப்பதை போல் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம், பல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலை ஒன்றை நீதிமன்ற வளாகத்தில் நிறுவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் சமர்ப்பித்திருந்ததை அடுத்து உடனடியாக இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    • அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி நிகழ்ச்சிகள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2004 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும் உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாறிய அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
    • 11 அமர்வுகளில் அரசியலமைப்புச் சட்டம் விவாதிக்கப்பட்டது.

    இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று சம்விதன் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் பீம் ராவ் அம்பேத்கரின் 133வது பிறந்தநாளுடன் இந்த நாள் இணைந்துள்ளது. ஆரம்பத்தில் சட்ட தினமாக கொண்டாடப்பட்ட இந்த நாள் 2015 இல் இந்திய அரசாங்கத்தால் அரசியலமைப்பு தினம் என மறுபெயரிடப்பட்டது.

    1949-ம் ஆண்டு நவம்பர் 26-ல் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி நடைமுறைக்கு வந்தது.

    அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மதிப்புகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.



    டாக்டர் அம்பேத்கர் தலைமையில் வரைவு கமிட்டி அமைக்கப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. 11 அமர்வுகளில் அரசியலமைப்புச் சட்டம் விவாதிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 17 நாள்கள் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் பணிகள் நீண்டன.

    இந்தியா முழுவதிலும் பொதுவாகக் காணப்படும் டாக்டர் அம்பேத்கரின் சிலைகள், முன்னேற்றம் மற்றும் உத்வேகத்தைக் குறிக்கும் வகையில், அவரை உயர்த்திய கையுடன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்முன்னிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியை கௌரவிக்கும் வகையில், அவரது கையில் அரசியல் சாசனத்தின் நகலை ஏந்தியவாறு ஒரு வழக்கறிஞர் உடையில் சிலை உள்ளது. 

    • இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
    • அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது.

    இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று சம்விதன் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில அரசியலமைப்பு தினமாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    என்றும் பரிணமித்துக் கொண்டிருக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நமது விடுதலை வீரர்கள் கண்ட இலட்சிய இந்தியா எதிரொலிக்கிறது.

    அரசியலமைப்புச் சட்ட முகப்புரையை வாசித்து, அதில் கூறப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்களையும் - அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்ட முகப்புரையை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் உள்பட அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்பட அனைத்துத் துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து துறைகள், ஐகோர்ட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துறைகளின் தலைமை அலுவலகங்களிலும் துறைகளின் தலைவர்கள் சட்ட முகப்புரையை வாசித்தனர்.

    இதே போல் பள்ளி, கல்லூரிகளிலும் வாசித்தனர். வாசிக்க வேண்டிய முகப்புரையை அரசு அனைத்து துறைகளுக்கும் அனுப்பி இருந்தது. அதன் விவரம் வருமாறு:-

    இந்திய மக்களாட்சிக்கு இது பெருமைமிகு தருணமாகும். நமது அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் 75 ஆண்டுகாலம் பயணித்து. நாட்டின் ஒருமைப்பாட்டையும் கூட்டாட்சிக் கட்டமைப்பையும் எல்லாத் தருணங்களிலும் அப்படியே தக்க வைத்திருக்கிறது. இத்தருணத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நம் முன்னோர்களின் பேரறிவுக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் நாம் வணக்கம் செலுத்துவோம். வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க அவர்கள் கண்ட கனவுகளுக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் ஏற்பப் பயணிப்போம்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மிக உயரிய விழுமியங்களைக் கடைப்பிடிக்க நாம் பாடுபடுவோம்.

    • இந்திய அரசியல் சாசனத்தை 299 பேர் இணைந்து உருவாக்கி, அமல்படுத்திய நாள் இன்று
    • இந்தியாவால் ஒருங்கிணைந்து ஒரு ஜனநாயக நாடாகச் செயல்பட முடியுமா என்று உலகநாடுகள் ஐயப் பார்வை பார்த்தன.

    இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று சம்விதன் திவாஸ் என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

    அரசியலமைப்பு தினத்தை ஒட்டி நடிகரும் மக்கள்நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "75 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள், இந்திய வரலாற்றில் மறக்க இயலாத அத்தியாயம் எழுதப்பட்டது. நம்மை 'இந்தியப் பிரஜைகளாகிய நாம்' ஆட்சி செய்வதற்கு வழிகோலும், மிகுமதிப்பு வாய்ந்த இந்திய அரசியல் சாசனத்தை, ஆண்களும் பெண்களுமாக 299 பேர் இணைந்து இரண்டாண்டுகள் பதினொரு மாதங்கள், பதினேழு நாட்கள் அயராத சிந்தனையின் விளைவாக உருவாக்கி, அமல்படுத்திய நாள்.

    அனைவருக்கும் நீதி, சமத்துவம், சுதந்திரம் என்கிற இந்திய இறையாண்மையின் குறியீடாக, ஜனநாயக ஆட்சியின் அடிக்கல்லாக, ஒரு பெரும் நல்நோக்கத்தோடு இணைந்த இந்த தீர்க்கதரிசிகள் நம் நாட்டுக்கு அரசியல் சாசனத்தைக் கையளித்தார்கள்.

    ஆயினும்கூட, நவீன இந்தியாவை நிர்மாணிக்க நம் சிற்பிகள் நமது கதியைத் தீர்மானிக்கவிருக்கும் ஆவணத்தை உருவாக்க பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் கூடியபோது, முன்னுதாரணமில்லாத பெரும் சவால்களை நாடு எதிர்கொண்டிருந்தது. தேசப்பிரிவினையின் போது ஏற்பட்ட மதக் கலவரத்தால் மனித குல வரலாற்றிலேயே இல்லாதபடி லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்கூட்டமாக இடம்பெயர நேர்ந்தது. எல்லைப் பகுதிகளில் யுத்தம் அடர்த்தியாயிற்று. புதிதாகப் பிறந்த நாடு, பல்வேறு மொழி பேசுபவர்களையும், வெவ்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களையும், மாறுபட்ட கலாசாரங்களோடு வாழ்ந்தவர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டிய பெரும்செயலை எதிர்கொண்டிருந்தது. இந்தியாவால் ஒருங்கிணைந்து ஒரு ஜனநாயக நாடாகச் செயல்பட முடியுமா என்று உலகநாடுகள் ஐயப் பார்வை பார்த்தன.

    ஆனால், அரசியல் சாசனத்தை உருவாக்கிய தேசபக்தர்கள் இதைச் சவாலாகப் பார்க்காமல், வாய்ப்பாகவே அணுகினார்கள். இந்தியாவின் அனைத்துக் குடிமக்களும் மனப்பூர்வமாகவும் ஒன்றுபட்டும் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, வரலாற்றில் முதன் முறையாக ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது இந்தியாவுக்கு மாத்திரமல்ல, உலகுக்கே ஒரு பொருள்பொதிந்த தருணமாகத் திகழ்ந்தது.

    இந்தியாவின் புராதனக் கலாசாரம், சுதந்திரப்போரின் குறிக்கோள்கள், கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஓர் ஆவணத்தை அவர்கள் உருவாக்கினர். அது சட்டம் தொடர்பான வெறும் சாசனம் மட்டுமல்ல; பிரஜைகளாக நாம் யார், நாம் எதை விழைகிறோம், ஒவ்வொரு பிரஜையின் உரிமையையும் மரியாதையையும் நாம் எப்படிப் பேணிக்காக்கப் போகிறோம் என்பதற்கான பிரகடனம் அது. அரசியல் சாசனத்தை உருவாக்கிய பெருமக்கள், ஆள்வதற்கான திட்டவரைவை மட்டும் தரவில்லை; சுதந்திரமான, ஒருங்கிணைந்த இந்தியாவுக்கான தீர்க்கதரிசனத்தையும் கொடுத்தனர்.

    அரசியல் சாசனத்தின் அந்த மகத்தான வார்த்தைகள் இந்திய வரலாற்றின் பாதையை மாற்றியதோடு நின்றுவிடவில்லை;

    சுதந்திர இந்தியாவில் இன்று நாம் வாழ்வதற்கும் சுவாசிப்பதற்குமான அந்த குறிப்பிடத்தக்க வார்த்தைகள் இந்தியாவின் வரலாற்றின் போக்கை மாற்றியது மட்டுமல்லாமல், இன்று ஒரு பெருமைமிக்க, சுதந்திரமான இந்தியாவில் நாம் வாழவும் சுவாசிக்கவும் காரணமாக இருக்கிறது; ஜனநாயகப் பாதையை உலகம் பின்பற்றுவதற்கான கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து பிரகாசித்துவருகிறது.

    தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியரும் நமது அரசியலமைப்பின் விழுமியங்களைப் படிக்கவும், புரிந்து கொள்ளவும், நிலைநிறுத்தவும், இந்தியராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி சிந்திக்கவும், இந்த சாசனத்தை உருவாக்கியவர்களின் எண்ணத்தைப் பெருமைப்படுத்தவும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இன்று அரசியலமைப்பு தினத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், இந்த சாசனத்தில் அடங்கியிருக்கும் லட்சியங்களை மனதில் கொள்வோம்; இதை உருவாக்கிய அந்த 299 பெருமக்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இன்னும் நிறைவேறாத புதிய இந்தியாவுக்கான கனவுகளை நனவாக்க உழைப்போம்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    ×