என் மலர்
இந்தியா
- பெண்கள் பிரிமீயர் லீக் டி20 தொடர் மும்பை புறநகரான நவி மும்பையில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
மும்பை:
டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தான்.
நான்காவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 தொடர் மும்பை புறநகரான நவி மும்பையில் நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 192 ரன்களைக் குவித்தது.
193 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 37 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்று கைகொடுத்தார். தனது 10-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்த அவர் அதன் பிறகு இரண்டு முறை கண்டம் தப்பி அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தார்.
இந்நிலையில், பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.
இந்தப் பட்டியலில் மும்பை அணி வீராங்கனையும், இங்கிலாந்து ஆல் ரவுண்டருமான நாட் ஸ்கீவர்-பிரண்ட் முதலிடத்தில் உள்ளார். அவர் 1,101 ரன்களுடன் உள்ளார். ஹர்மன்ப்ரீத் 1,016 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய டெல்லி அணி 158 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி-உ.பி. அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
கேப்டன் மெக் லானிக் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். ஹர்தின் தியோ 47 ரன்னில் ரிடயர்டு அவுட்டில் வெளியேறினார்.
டெல்லி அணி சார்பில் ஷபாலி வர்மா, மரிஜான்னே காப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா- லீசெல் லீ ஜோடி அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாலி வர்மா 36 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய லீசெல் லீ அரை சதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய்வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் லீ செக் யூ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
- மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.
போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்களைப் பெற்று அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
போகிப் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2020 முதல் 14.012026 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre) ரப்பர் ட்யூப் (Rubber Tube), நெகிழி (Plastic), காகிதக் கழிவுகள், அட்டைப் பெட்டிகள், மரக்கழிவுகள், உலோகக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.
மேலும், இதுகுறித்து பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2026 முதல் 14.012026 வரை 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட பொருட்கள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் (RRC) பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பயன்படுத்த இயலாத பொருட்கள் எரியூட்டி சாம்பலாக்கும் எரியூட்டும் ஆலைக்கு (Incinerator Plant அனுப்பப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- அய்யப்பன் வருகிற 17-ந்தேதி வரை திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.
- 19-ந்தேதி இரவு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகாலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கி டிசம்பர் 27-ந்தேதி வரை நடந்தது.
அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று (14-ந்தேதி) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது.பின்பு பிற்பகல் 2:45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3:08 மணிக்கு மகர சங்கிரம பூஜை தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடை பெறுகிறது.
இந்தநிலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் இன்று மதியம் பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து மாலையில் சன்னிதானத்திற்கு திருவாபரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.
மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியை அடையும் திருவாபரணங்கள், சன்னிதானத்திற்கு 6.15 மணியளவில் கொண்டு வரப்பட்டது. அதனை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, சபரிமலை மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்.
பின்பு அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு மாலை 6:30 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது பொன்னம்பலமேட்டில் அய்யப்பன் மூன்று முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை லட்சக் கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தார்கள்.
பம்பை ஹில் டாப், சன்னிதான திருமுற்றம், மாளிகப்புரம் கோவில், அன்னதான மண்டபம், பாண்டித்தாவளம், டோனர் இல்ல முற்றம், ஓட்டல் வணிக வளாக பின்புற மைதானம், தரிசன வணிக வளாக பகுதிகள், பி.எஸ்.என்.எல். அலுவலக பின் பகுதி, தேங்காய் சேகரிக்கும் பகுதி, கற்பூர ஆழியின் சுற்றுப்பகுதி, ஜோதி நகர், வனத்துறை அலுவலக பகுதிகள், நீர்வளத்துறை அலுவலக பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து மகரஜோதியை பக்தர்கள் தரிசித்தனர்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சன்னிதானத்துக்கு திருவாபரணங்கள் கொண்டுவரப்பட்டதை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு பிறகு நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் காலை 11 மணி முதல் பம்பாவில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனும திக்கப்படவில்லை. முன் அனுமதி சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மாலையில் அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்ட பிறகே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அய்யப்பன் வருகிற 17-ந்தேதி வரை திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். 18-ந்தேதி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 19-ந்தேதி இரவு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.
- காய்கறி மார்க்கெட் வருகிற 17-ந் தேதி இயங்காது.
- பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் வழக்கம் போல செயல்படும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி ராஜசேகர் கூறும்போது, விவசாய தொழிலாளர்கள் மற்றும் மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர்.
இதனால் காய்கறி மார்க்கெட் வருகிற 17-ந் தேதி இயங்காது. அதேநேரம் பழம் மற்றும் பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் வழக்கம் போல செயல்படும் என்றார்.
- பஞ்சாப் மாநில முதல்வர் இங்கிலாந்து, இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார்.
- மத்திய வெளியுறவுத்துற அமைச்சகம் அனுமதி கொடுக்கவில்லை எனத் தகவல்.
முதலீட்டை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா ஆகியோருக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி வழங்க மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற அனுமதி மறுப்பு இது முதல்தடவை அல்ல எனவும் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் முதலமைச்சர் பகவத் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் செல்ல உள்ளனர். அவர்களுடன் சில அரசு அதிகாரிகளும் செல்ல உள்ளனர். அனுமதி கொடுக்கப்பட்டால் சரியான தேதி இறுதி செய்யப்படும். எனினும் மத்திய அரசு அரசியல் அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. காரணம் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சீனியர் தலைவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து அரசியல் அனுமதி பெறுவது அவசியமாகும்.
- சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.
- அரசு சார்பில் சுமார் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கடந்த 6 நாட்களில் மட்டும் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் 3.35 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 9ம் தேதிகளில் இருந்து இன்று மாலை வரை 3,35,150 பயணிகள் ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
ரயில், அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகள் என அனைத்தையும் சேர்த்தால், சென்னையில் இருந்து மட்டும் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.
பொங்கல் முடிந்து ஊர் திரும்புவதற்காக (ஜனவரி 16 - 19) அரசு சார்பில் சுமார் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- மகாத்மா காந்தி பட்டியலின மக்களை ஹரிஜன்ஸ் என அழைத்தார்.
- அதன் பொருள் கடவுளின் மக்கள் என்பதாகும். எனினும் அம்பேத்கர் அவ்வாறு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அரியானா மாநிலத்தின் அனைத்து துறைகளின் அலுவலக தொடர்புகளில் ஹரிஜன், கிரிஜன் வார்த்தைகளை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக பட்டியலின மக்களை, பழங்குடியின மக்களை குறிப்பிட ஹரிஜன் மற்றும் கிரிஜன் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து துறை செயலார்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் " இந்திய அரசியலமைப்புச் சட்டம் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரைக் குறிக்க இந்தச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதில்லை" என்று அந்தக் கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் மாநில அரசால் ஆய்வு செய்யப்பட்டபோது, சில துறைகள் மேற்கூறிய அறிவுறுத்தல்களைக் கடுமையாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கவிட்டது.
மகாத்மா காந்தி பட்டியலின மக்களை ஹரிஜன்ஸ் என அழைத்தார். அதன் பொருள் கடவுளின் மக்கள் என்பதாகும். எனினும் அம்பேத்கர் அவ்வாறு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களை தலித் என அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- கிராமப்புற வாழ்க்கையின் இதயமாக உள்ள கால்நடைகளின் புனிதத்தைக் கொண்டாடுகிறோம்.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் திருநாளில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறுவடைத் திருநாளை நாம் கொண்டாடும் வேளையில், நமது பண்ணைகளை நிலைப்படுத்தவும், நம் குடும்பங்களை வளர்த்தெடுக்கவும், நமது எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஏராளமான ஆசீர்வாதங்களை வழங்கும் பூமித் தாய் மற்றும் சூரிய கடவுளுக்கு நமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திறமையும், பக்தியும், விடாமுயற்சியும் நிலத்தை வளமாக்கி, வாழ்வை நிலைநிறுத்தும் நமது விவசாய சமூகத்தை இந்நாளில் வணங்குகிறோம்.
இத்துடன், மாட்டுப் பொங்கலில் பங்கெடுத்து, பண்டிகை உணர்வில் கலந்து, விவசாயம் மற்றும் கிராமப்புற வாழ்க்கையின் இதயமாக உள்ள கால்நடைகளின் புனிதத்தைக் கொண்டாடுகிறோம்.
பழங்கால பாரம்பரியங்களில் வேரூன்றி, தலைமுறை தலைமுறையாக முன்னெடுக்கப்படும் பொங்கல் பண்டிகை, நமது பாரதிய ஆன்மிகம் மற்றும் கலாசார பாரம்பரியத்தின் பெருமைமிக்க கொண்டாட்டமாகும். இது எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது.
காணும் பொங்கல் நன்னாளில் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி பண்டிகை உணர்வுடன் ஒன்றுபட்டு, ஒரே ஒருமைப்பாட்டின் பல்வேறு விதத்தை பிரதிபலிக்கிறோம் - அதுவே ஒரே பாரதம் உன்னத பாரதம்!
இந்த பொங்கல் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, புதுப்பிக்கப்பட்ட செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை நிரப்பி, ஒற்றுமை, அமைதி மற்றும் முன்னேற்றத்தின் உணர்வை வலுப்படுத்தி, 2047-ஆம் ஆண்டுக்குள் நம்மை ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி வழிநடத்தட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கிராமப்புறங்களில் தகுதியான பெண்களை தேர்வு செய்து துப்பாக்கிச்சுடும் பயிற்சியை இந்திய ராணுவம் அளிக்கிறது.
- பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதால் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் மலைகளுக்கு மிக அருகில் வசிக்கும் கிராமங்களில் உள்ள பெண்களுக்கு இந்திய ராணுவம் துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளித்து வருகிறது.
பயங்கரவாதிகள் நுழைந்தால் எதிர்த்து போராட கிராமப்புற ஆண்களுக்கு முன்னதாக ராணுவம் துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளித்திருந்தது.
கடும் குளிர்காலங்களில் வேலைக்காக கிராமப்புற ஆண்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது பெண்கள், முதியோர் தனியாக உள்ளனர்.
கடும் குளிர், ஆண்கள் துணையின்றி பெண்கள் இருப்பதை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதால் பயிற்சி அளிக்கப்பட்டது.
கிராமப்புறங்களில் தகுதியான பெண்களை தேர்வு செய்து துப்பாக்கிச்சுடும் பயிற்சியை இந்திய ராணுவம் அளிக்கிறது.
துணிச்சலான பெண்களை தேர்வு செய்து கிராம பாதுகாப்பு காவலர்கள் என்ற பெயரில் அவர்களுக்கு ராணுவம் அங்கீகாரம் வழங்குகிறது.
பயங்கரவாதிகளை எதிர்த்து போராடுவது, கிராமத்தில் உள்ளவர்களை காப்பது, ராணுவத்திற்கு தகவல் அளிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
- கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.
- இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை:
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று நள்ளிரவு 24 மணி நேர நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 2,238 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4,390 பஸ்கள் இயக்கப்பட்டு, 2 லட்சத்து 1940 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 9-ந்தேதி முதல் நேற்று நள்ளிரவு வரை, மொத்தம் 15 ஆயிரத்து 762 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதில் மொத்தம், 6 லட்சத்து 90ஆயிரத்து 720 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை 2 லட்சத்து 73ஆயிரத்து 152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்து உள்ளார்.






