search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra"

    • மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் பாஜகவின் முதல் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது
    • உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி போலியானது - மோடி

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் பாஜகவின் முதல் தேர்தல் பிரசார பேரணி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றனர்.

    அப்போது பேசிய மோடியும் அமித் ஷாவும் , உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி போலியானது என்று தெரிவித்தனர்.

    இதற்கு விளக்கம் அளித்த உத்தவ் தாக்கரே "சிவசேனா போலியானது என்கிறார் நரேந்திர மோடி. அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். எங்கள் கட்சி அவரது கல்லூரி பட்டமல்ல" என்று கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும், அமித் ஷாவிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களது இந்த தேர்தல் பிரசாரத்தில் உங்களிடம் உள்ள தலைவர்களில் எத்தனை பேர் பாஜகவில் இருந்து வந்தவர்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்திய மக்களை தனது அடிமைகளாக நடத்தும் மோடி, 'பாரத் சர்க்கார்' என்பதற்குப் பதிலாக 'மோடி சர்க்கார்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இந்த அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள நாங்கள் கோழைகள் அல்ல, இதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள்
    • போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.

    திருநங்கைகள் யாசகம் பெறுவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி திருநங்கைகள் யாசகம் பெற முயன்றால், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்துள்ளனர்
    • பூனையை மீட்க கிணற்றில் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6வது நபர் காவல்துறையினரால் மீட்கப்பட்டார்

    மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணமடைந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

    கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பூனையை மீட்க கிணற்றில் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6வது நபர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அது விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணறு என போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

    • மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது
    • மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.பி உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்துள்ளார்.

    ஜல்கான் தொகுதி எம்.பி உன்மேஷ் பாட்டீலுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில், அவர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

    மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதில், ஜல்கான் தொகுதி சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த தொகுதியில் சிவசேனா சார்பில், உன்மேஷ் பாட்டீல் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

    இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அஜித்பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே பேசியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா பா.ஜ.க. கூட்டணியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    கூட்டணியில் இருந்து கொண்டே போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி வகித்து வருகிறார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம்
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் சரத் பவார், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய ராகுல்காந்தி, "மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம். ஆனால் விவசாயிகளின் கடனை பாஜக ஒருபோதும் தள்ளுபடி செய்யவில்லை. பாஜக அரசு ஒரு சில பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக அரசால் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமானால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களின் கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை.

    விவசாயிகள் தற்போது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் விவசாயிகளின் குறைகளை தீர்க்க பாஜக அரசுக்கு நேரமில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க பாஜக அரசு தவறி விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம்.

    அதானி 18 சதவீத ஜி.எஸ்.டி செலுத்துகிறார். அதே சமயம் விவசாயிகள் கூட ஜி.எஸ்.டி செலுத்துகின்றனர். ஜி.எஸ்.டி மட்டுமில்லாமல், விவசாயிகள் பல்வேறு வகையான வரிகளால் சிரமப்படுகின்றனர். இது விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக குறைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஏதேனும் ஒரு வரி மட்டும் செலுத்துவதை உறுதிசெய்வோம். மேலும், ஜிஎஸ்டி வரி வரம்பிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க முயற்சிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

    • திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக கதவைப் பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் நகரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக மண்டபத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.

    அந்த சிசிடிவி வீடியோவில், 'திருமண மண்டபத்தின் கதவு பக்கத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் மொபைல் போனில் கேம் விளையாடி கொண்டிருக்கிறான். அப்போது கதவின் உள்ளே சிறுத்தை ஒன்று மெதுவாக வருகிறது. அதனை பார்த்த சிறுவன் எந்த பதட்டமும் இல்லாமல் வெளியே சென்று மண்டபத்தின் கதவை பூட்டி விடுவது' பதிவாகியுள்ளது.

    பின்னர், அச்சிறுவன் ஊர் மக்களிடம் இதை பற்றி தகவல் சொல்ல, அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    இன்று காலை 7 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுவனின் தந்தை அந்த மண்டபத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • அவுசா தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் பசவராஜ் பாட்டில்
    • மகாராஷ்டிராவில் இருக்கும் முக்கிய லிங்காயத்து தலைவர் இவர்

    காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பசவராஜ் பாட்டில் பாஜகவில் இணையவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் இன்று அவர் பாஜகவில் சேருவார் என்று கூறப்படுகிறது.

    அதற்கேற்ப இன்று காலை மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் வீட்டில் அவரை சந்தித்து பேசியுள்ளார் பசவராஜ் பாட்டில்.

    அவுசா தொகுதியில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் பசவராஜ் பாட்டில். மேலும் அம்மாநில அமைச்சராகவும் ஒருமுறை அவர் இருந்துள்ளார். குறிப்பாக மகாராஷ்டிராவில் இருக்கும் முக்கிய லிங்காயத்து தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

    அதே சமயம் இந்த தகவலை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், பசவராஜ் பாட்டிலிடம் இருந்து எங்களுக்கு எந்த ராஜினாமா கடிதமும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    • 5 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஐ.நா பொதுச்சபை தலைவர்
    • மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், 5 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இன்று முதல் ஜன.26 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    இந்த பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்ட ஐ.நா தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், "இந்தியா இரண்டாவது தீபாவளியை கொண்டாடும் இந்த நன்நாளில் டெல்லி-க்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இனிவரும் நாட்களில் அமைதி, முன்னேற்றம், செழிப்பு மற்றும் நிலைத்தன்மை பற்றிய பயனுள்ள விவாதங்களை எதிர்பார்க்கிறோம்" என பதிவிட்டிருந்தார்.

    5 நாள் பயணமாக இந்தியா வந்த ஐ.நா தலைவர், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு மும்பை செல்கிறார். அங்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். மேலும் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, பலதரப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    ஐ.நா–இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜன.26 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    • விழா மேடையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை.
    • காவலரை அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    புனேவில் உள்ள சாசன் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுத் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார், சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவீந்திர தங்கேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது விழா மேடையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்து மேடையில் இருந்து கீழே இறங்கிய போது சுனில் காம்ப்ளே தடுமாறினார். அப்போது கோபமடைந்த அவர் பாதுகாப்பு பணிக்காக படிக்கட்டில் நின்றிருந்த காவலரை கன்னத்தில் அறைந்தார்.


    இதை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளே அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். துணை முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் எம்.எல்.ஏ. ஒருவர் காவலரை அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    இதனிடையே காவலரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குற்றச்சாட்டுகளை மறுத்த காம்ப்ளே, "நான் யாரையும் தாக்கவில்லை. நான் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர் வழிமறித்து வந்தார். அவரைத் தள்ளிவிட்டு முன்னால் சென்றேன்" என்று கூறியுள்ளார்.

    காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 353, அதாவது அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது குற்றவியல் செயலின் கீழ் காம்ப்ளே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதி.
    • மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 81,72,163 ஆக அதிகரிப்பு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (டிசம்பர் 25) மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒன்பது பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இன்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 28 பேரில் ஒருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்படவில்லை. புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையுடன், அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 72 ஆயிரத்து 163 ஆக அதிகரித்து இருக்கிறது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

    "மாநிலத்தில் இதுவரை 153 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 142 பேர் வீட்டில் இருந்தபடி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். 11 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மட்டும் ஐ.சி.யு.-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்," என்று சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

    • 2021ல் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கியது
    • அனைத்து மராட்டியர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி வருகிறார் மனோஜ்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி சில வருடங்களுக்கு முன் போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து மராட்டியர்கள் இட ஒதுக்கீடு பெறும் வகையில் அங்கு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.

    2021 மே மாதம், உச்ச நீதிமன்றம் இச்சட்டத்தை செல்லாது என தீர்ப்பளித்தது.

    இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை அவ்வப்போது அங்கு கிளம்பி வந்த நிலையில், மீண்டும் மனோஜ் ஜராங்கே-பாட்டீல் என்பவர் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. அனைத்து மராட்டியர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி அக்டோபர் 25 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த மனோஜ் உடன், இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தொலைபேசியில் பேசி இவ்விவகாரத்தில் நல்ல முடிவு எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மனோஜ், நீர் அருந்தி விரதத்தை நிறைவு செய்தார்.

    மராட்டியர்களில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் குன்பிஸ் எனப்படும் பிரிவினருக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால், மனோஜ் இதனை ஏற்க மறுத்து போராடி வருகிறார்.

    அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

    முழுமையற்ற இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மராட்டியர்களும் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீடு வேண்டும். இதற்காக ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டி அரசு ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இது குறித்து மேலும் ஆலோசிக்க நிபுணர்கள் கூட்டம் ஒன்று நடத்த உள்ளோம். மராட்டியர்கள் அமைதி வழியில் இதற்காக போராடுகின்றனர். இது நிறைவேறும் வரையில் அரசியல் தலைவர்கள் கிராமங்களுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். தற்போது பந்த நடத்தும் எண்ணம் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி நாசிக் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கோட்சே ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், ஹிங்கோலி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹேமந்த பாட்டீல் மக்களவை செயலக அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேபினெட் கூட்டத்தை கூட்டினார். இதில் பிற்படுத்தப்பட்டவர்களின் தற்போதைய கல்வி மற்றும் சமுதாய நிலை குறித்த தகவல்களை திரட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்யும் என முடிவானது.

    ×