முஸ்லிம்களுக்கான 5% இடஒதுக்கீட்டை அதிரடியாக ரத்து செய்த மகாராஷ்டிர அரசு

மராத்தாக்களுக்கு 21% மற்றும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கியது.இந்த முடிவை ரம்ஜான் பரிசு என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களுக்கான 5% இடஒதுக்கீட்டை அதிரடியாக ரத்து செய்த மகாராஷ்டிர அரசு
Published on

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து மகாராஷ்டிரா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக, அப்போதைய காங்கிரஸ்-என்சிபி கூட்டணி அரசு அவசரச் சட்டம் மூலம் இந்த 5% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.

2014 தேர்தலுக்குப் பிறகு பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த அவசரச் சட்டம் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் அந்த அவசரச் சட்டம் காலாவதியானது.

மேலும், மராத்தாக்களுக்கு 21% மற்றும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கியது, உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை மீறுவதாகக் கூறி மும்பை உயர்நீதிமன்றமும் இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த சட்ட ரீதியான இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அந்த இடஒதுக்கீடு இனி செல்லாது என்பதை அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாஜக அரசின் இந்த முடிவை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி வர்ஷா கெய்க்வாட் "ஒருபுறம் அனைவருக்குமான வளர்ச்சி என்று பேசிக்கொண்டு, மறுபுறம் பின்தங்கிய சமூகத்தினரின் உரிமைகளைப் பறிப்பது இந்த அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் இம்தியாஸ் ஜலீல், இந்த முடிவை ரம்ஜான் பரிசு என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com