என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#காதல்"

    • Hunter-style lover என்ற டேட்டிங் முறை சீனாவில் டிரெண்டாகி வருகிறது!
    • Gen Z தலைமுறையினர் இவ்வாறு அழைக்கின்றனர்.

    சீனாவில் Hunter-style lover என்ற டேட்டிங் முறை தற்போது ட்ரெண்டாகி வருகிறது!

    அன்பை எளிய முறையில் உணர்வுபூர்வமான பரிசுகள் மற்றும் செயல்கள் மூலம் காட்டுவதை Gen Z தலைமுறையினர் இவ்வாறு அழைக்கின்றனர்.

    இந்த டேட்டிங் முறையில், காதலர்கள் கொடுக்கும் பரிசை அதன் பண மதிப்பை விட அதற்காக அவர்கள் முயற்சியின் அளவை வைத்து மதிப்பிடுகிறார்கள். 

    • பெண்ணைக் காதலித்து வந்தபோதும், ஷிபாவுடனும் உறவைத் தொடர்ந்துள்ளார்.
    • குண்டு, ஷிபாவின் கன்னம் வழியாகப் பாய்ந்து மண்டை ஓட்டுக்குள் சிக்கிக் கொண்டது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் சிவாஜி நகரைச் சேர்ந்தவர் 19 வயதான ஷிபா ஷேக். இவர் ஒரு இளைஞரைக் காதலித்து வந்தார்.

    அந்த இளைஞர் ஏற்கனவே 25 வயதுடைய மற்றொரு பெண்ணைக் காதலித்து வந்தபோதும், ஷிபாவுடனும் உறவைத் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்ததும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்த 25 வயதுப் பெண், ஷிபாவை பேசுவதற்காக புர்கானியா மசூதி அருகே வருமாறு அழைத்துள்ளார்.

    அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தப் பெண் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஷிபாவை சுட்டுவிட்டுத் தப்பியோடினார்.

    தோட்டா ஷிபாவின் கன்னம் வழியாகப் பாய்ந்து மண்டை ஓட்டுக்குள் சிக்கிக் கொண்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் ஷிபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியான 25 வயது பெண்ணையும், அவருக்கு உதவியாக இருந்த 23 வயது இளைஞர் ஒருவரையும் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • கடந்த பிறவியில் தொடர்பு பெற்ற மனிதர்களை இந்தப் பிறவியில் நிச்சயம் சந்திப்போம்.
    • சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் இரண்டாம் திருமணம் நடக்கும்.

    ஒரு ஜோதிடரை சந்திப்பவர்கள் பூர்வீகம், குலதெய்வம், குழந்தை, அதிர்ஷ்டம், காதல் இந்த 5 விசயங்களை கேட்காமல் செல்வது இல்லை. பூர்வ ஜென்ம புண்ணிய பலப்படி ஒரு ஜாதகரின் வாழ்வில் நடைபெற வேண்டிய அனைத்து சம்பவங்களும் 5-ம் பாவகத்தில் தான் பதிவாகி இருக்கும். சென்ற ஜென்மத் தொடர்ச்சியே இந்த பிறவி என்பது நிதர்சனமான உண்மை. கடந்து வந்த ஜென்மத்தில் நிறைவேற்ற தவறிய நிறைவேற்ற முடியாமல் விட்டுப் போன கடமைகளை முடிக்கவே ஒரு ஜனனம் நிகழ்கிறது. இளம் பருவத்தினர் நான் காதல் திருமணம் செய்வேனா பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் செய்வேனா என்று அறிந்து கொள்ள விருப்புகிறார்கள்.

    ஒரு ஜாதகத்தில் 5ம் அதிபதியே ஒருவருக்கு காதல் வருமா வராதா என்பதை தெரிவிக்கும் ஸ்தானமாகும். ஒருவரின் ஆழ்மன எண்ணங்களை குறிக்கும் ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் நின்ற கிரகமும் ஐந்தாம் இடத்தை பார்த்த கிரகமும் ஐந்தாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்ற கிரகமும் ஐந்தாம் அதிபதியும் காதலை தீர்மானிக்கிறார்கள். ஒரு பாவக அதிபதி எந்த பாவத்தில் நிற்கிறாரோ எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கிறார்களோ அது தொடர்பான பலன்களே ஜாதகருக்கு நடக்கும்.

    மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரினால் நிச்சயிக்கப்படும் திருமணமா? அல்லது ஜாதகரின் விருப்ப திருமணமா? என்பதை எளிதாக கூற முடியும். ஒருவருக்கு காதல் திருமணம் நடைபெற பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடம் லக்னம் அல்லது லக்னாதிபதியுடன் சம்பந்தம் பெற்று இருக்க வேண்டும். இதை சஞ்சித கர்மா என்று கூறலாம். சஞ்சித கர்மா என்பது ஒருவரின் கடந்த கால செயல்களின் மொத்த விளைவுகளை குறிக்கும்.

    ஒருவரின் நல்வினை மற்றும் தீவினை பதிவுகள் அனைத்தையும் உள்ளடக்கியது, இது அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிக்கப்படும். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 5-ம்மிடம் மனம் புத்தியைக் குறிக்கும். ஒருவரின் விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்குமிடம். சென்ற ஜென்ம தொடர்புகளை அறியுமிடம். கடந்த ஜென்மத்துடன் தொடர்பு பெற்ற மனிதர்களுடன் தீர்க்கப்பட வேண்டிய சம்பவங்கள் உள்ள மனிதர்களை இந்தப் பிறவியில் சந்திப்போம். அதாவது கடந்த பிறவியில் தொடர்பு பெற்ற மனிதர்களை இந்தப் பிறவியில் நிச்சயம் சந்திப்போம். எனவே காதலிப்பவர்களுக்கு முதலில் 5-ம்மிடம் வேலை செய்ய வேண்டும்.

    பெரும்பான்மையாக ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புத்தி காலங்களில் அல்லது சுக்ரன், ராகு தசை புத்தி காலங்களில் ஒருவருக்கு காதல் ஏற்படும். அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் காதலுக்கான காரக கிரகம் புதன் மற்றும் 5,7-ம் பாவகத்தை வைத்தே ஒருவரின் திருமண வாழ்வைப் பற்றி கூற முடியும். 2,5,7, 11-ம் பாவக தொடர்பு மற்றும் புதன், கேதுவின் சம்பந்தம் வைத்தும் ஒருவரின் திருமணம் எத்தகையது என்பதை எளிதாக கூற முடியும். காதல் கிரகங்கள் 4-ம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் பள்ளி, கல்லூரி காலங்களிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்தில் அல்லது மத்திம வயதில் காதல் வரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

     

    சந்திரனும் காதலும்

    ஜோதிட சாஸ்திரத்தில் காதலுக்கு காரக கிரகம் புதனாக இருந்தாலும் மனதிற்கு காரக கிரகமான சந்திரனே ஒருவரின் காதலை நிர்ணயிக்கிறது. சந்திரன் பலம் வாய்ந்தவர்களுக்கு காதல் வராது. சந்திரன் பலவீனமாக உள்ளவர்களுக்கு மட்டுமே காதல் வரும். ஒருவரின் மனதில் நிறைவேறாத வெளியில் சொல்ல முடியாத ஒரு உணர்வுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய நட்பு கிடைக்கும்போது காதல் மலருகிறது. அந்த நட்பை அவர்கள் தமக்கு கிடைத்த பொக்கிஷமாக கருதுகிறார்கள். இந்த நட்பு இல்லை என்றால் தனக்கு வாழ்க்கை இல்லை என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் அவர்களால் தனது பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்ள முடியும்.

    சந்திரன் பலம் குறைவாக இருந்தால் அவர்களுக்கு பிறரின் உதவி தேவைப்படும். தனது மன உணர்வுகளை புரிந்த ஒரு நட்பை சந்திக்கும்போது அவர்கள் மேல் காதல் வந்து விடுகிறது. நல்லது எது கெட்டது எது என்பதை பகுத்தாய்வும் திறன் இல்லாமல் போய்விடுகிறது. மனதிற்கு தேவைப்படும் ஆறுதலை கூறும் நபர்கள் மட்டுமே உலகத்தில் உண்மையானவர்கள் மற்றவர்கள் தீயவர்கள் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். அதுமட்டு மல்லாமல் சிரித்துப் பேசுபவர்கள் மட்டுமே நல்லவர்கள் கோபப்படுபவர்கள் கெட்டவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் அதிகமாக இருக்கும்.

    இந்த அமைப்பு உள்ளவர்கள் காதலில் தோல்வி அடைந்தால் மனநோயாளியாக மாறிவிடுகிறார்கள். சந்திரன் பலவீனமாக உள்ளவர்களுக்கு காதல் தோல்வியை எளிதில் தாங்க முடியாமல் தற்கொலை வரை செல்கிறார்கள். காதல் கலப்பு திருமண கிரக அமைப்புகள் வெளிநாட்டவர். வெளி மாநிலத்தினர், வேற்று இனம், மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ளுதல் கலப்பு திருமணமாகும். திருமணம் தொடர்பான பாவகங்கள் 1,2,7, 8 ஆகியனவாகும். காதல் பற்றி கூறும் பாவம் 5. இதில் 1, 2,7-ம் பாவங்களுடன் 5-ம் பாவகம் சம்பந்தம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். 9-ம் பாவகம் ஒருவரின் ஜாதி, மதம், குலம், கோத்திரம் ஆகியவற்றை கூறுமிடம். 1, 2, 5, 7-ம் பாவகத்துடன் 9-ம் அதிபதி சம்பந்தப்பட்டால் காதல் கலப்பு திருமணம் நடைபெறும்.

    மேலும் ஏழாமிடம் அல்லது ஏழாம் அதிபதிக்கு சுக்ரன், சனி அல்லது சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் ஜாதகர் கலப்பு திருமணம் செய்ததற்கான அமைப்பு உண்டாகும். 5, 7, 9-ம் அதிபதிகள் பலம் பெறுவதும் நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். மேலும் ஒன்பதாம் அதிபதி அல்லது ஒன்பதில் நின்ற கிரகம் நீச்சம் பெற்று அத்துடன் 1, 2, 5, 7-ம் பாவகம் சம்பந்தம் பெற்றால் தகுதி தரம் இல்லாத தனது குலத்தவரால் வெறுக்ககூடிய கலப்பு திருமணமாக அமைகிறது. 9-ம் பாவம் அதன் அதிபதி, குரு பலம் பெற்று 1,2,5, 7-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறும் அல்லது பெற்றோரே வேறு குலத்தில் வரன் பார்த்து திருமணம் நடத்துவார்கள்.

    ஏழாம் இடத்துடன் தனித்து சனி ராகு கேதுக்கள் இருந்தாலும் காதல் கலப்பு திருமணம் நடைபெறலாம். ராகு, கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். களத்திர காரக கிரகங்களான சுக்கிரன் மற்றும் செவ்வாய்க்கு ராகு கேது சம்பந்தம் இருப்பது வேற்று மதம், இனம் மொழி பேசுபவருடன் கலப்புத் திருமணத்தை ஏற்படுத்தும். ஏழாம் அதிபதியுடன் சனி, ராகு கேது சம்பந்தம் பெறுவதும் கலப்பு திருமணத்தை நடத்தும். 7-ம் இடத்தில் சனி, ராகு, கேது நட்சத்திரம் இருந்தாலும் கலப்பு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. 7, 8, 9-ம் பாவகம் அசுபத்தன்மையுடன் இணைந்து நடக்கும் காதல் கலப்புத் திருமணங்கள் தோல்வியை தழுவும். மேலே கூறிய இந்த பாகங்கள் தசா புத்தியுடன் சம்பந்தப்படும்போது வெளியூர் வெளிநாடு வெளி மாநிலம் செல்பவர்கள் காதல் கலப்பு திருமணம் செய்து அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

    ஐந்தாம் அதிபதியும் லக்னமும் ஒருவரின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களை கூறுவது ஐந்தாம் இடமாகும். இந்த ஐந்தாம் இடத்தில் பூர்வ ஜென்ம புண்ணிய படி அனுபவிக்க வேண்டிய பல்வேறு நல்ல தீய விளைவுகள் இருக்கும். பல்வேறு வினைகளில் இந்த ஜென்மத்தில் ஜாதகர் எதை அனுபவிக்க போகிறார் என்பது லக்னத்தை லக்னாதிபதியை தொடர்பு கொள்ளும் கிரகத்தை வைத்து நாம் முடிவு செய்ய வேண்டும். லக்னம் லக்னாதிபதியுடன் தொடர்பு கொள்ளக் கூடிய சம்பவங்கள் இந்த வாழ்க்கையில் ஜாதகரின் விருப்பப்படி எளிதாக சுலபமாக நிறைவேறிவிடும். லக்னாதிபதியுடன் தொடர்பு பெறாத பாவகங்களின் கிரகங்களின் பலன்கள் ஜாதகர் போராடிய வெற்றி பெற வேண்டும்.

    வெற்றி பெற்றாலும் அது நீடித்த காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதற்கு எந்த உறுதியும் கூற முடியாது. லக்னாதிபதிக்கு தொடர்பு பெற்று நடக்கக்கூடிய சம்பவங்கள் ஜாதகருக்கு எளிதில் வெற்றியையும் நிலைத்த தன்மையையும் கொடுக்கும். லக்னாதிபதி ஐந்தாம் அதிபதியின் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். ஜாதகரை தேடி காதல் வரும். பூர்வ ஜென்ம தொடர்பு உண்டு. கடந்த ஜென்மத்தில் அனுபவித்த அனைத்து நற்பலன்களையும் இந்த ஜென்மத்தில் அனுபவிப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். செல்வாக்கு புகழ் அந்தஸ்து கவுரவம் உண்டு. தற்பெருமை பேசுவார்கள். கடந்து வந்த ஜென்மத்தின் வாசனை அவர்கள் ஆழ் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

    உள்ளுணர்வு நிரம்பியர்கள். தனது உள்ளுணர்வால் நடக்கப் போகும் அனைத்து நிகழ்வுகளையும் முன்னரே அறியும் சக்தி படைத்தவர்கள். கடந்து வந்த ஜென்மத்தில் சந்தித்த நபர்களை பார்க்கும்போது அவர்கள் மேல் இவர்களுக்கு உள் உணர்வு மிகுதியால் காதல் வரும். தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல பிறரின் வாழ்க்கைக்கும் நடப்பதை நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து சொல்வார்கள். அதிர்ஷ்டம் இவர்களை தேடி வரும். இவர்கள் காதலில் கவுரவம் நிரம்பி இருக்கும். அதிகப்படியாக உறவுகளிலேயே திருமணம் நடக்கும். பாரம்பரியத்தை கட்டிக்காப்பதில் வல்லவர்கள். தங்கள் குல கவுரவத்திற்கு ஒத்துவராத காதலில் ஈடுபடுவது இல்லை. குடும்ப சொத்து வெளியில் சென்று விடக்கூடாது என்று குடும்பத்திற்குள்ளேயே திருமணம் நடத்துபவர்களுக்கும் லக்னாதிபதி 5-ம் அதிபதி சம்பந்தம் உண்டு. லக்னாதிபதி ஐந்தில் இருந்தால் ஜாதகர் காதலை தேடிச் செல்வார். ஐந்தாம் அதிபத்தில் லக்னத்தில் இருந்தால் காதல் ஜாதகரை தேடி வரும்.

    காதல் வெற்றி தரும் கிரக சம்பந்தம்

    ஐந்தாம் அதிபதி ஏழில் இருந்தால் வெற்றி, செல்வம் இரண்டிற்கும் இவர்களே அதிபதிகள். குறைந்தது 2 முறை காதல் வரும். நம்பிக்கையானவர்கள் மேல் மட்டுமே காதல் வரும். காதல் நினைவுகள் பல வருடங்களுக்கு ஆறாத வடுவாக மனதில் இருக்கும். காதல் திருமணம் நடக்கும் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். ஈருடலும் ஓர் உயிருமாக வாழ்வார்கள். வாழ்நாள் முழுவதும் தம்பதிகள் காதலர்களாகவே வாழ்வார்கள். தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வதில் ஆர்வம் அதிகம். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும்.

    மனைவி வந்த பிறகு அதிர்ஷ்டம் கூடும். 5, 7ம் அதிபதிக்கு அசுப கிரக சம்பந்தம் இல்லாத வரை எந்த தொந்தரவும் இருக்காது. பால்ய வயது முதல் முதிய காலம் வரை நண்பர்களுக்குள் பரஸ்பர அன்பு நீடிக்கும். நல்ல வசதியான சமுதாய அந்தஸ்து நிறைந்த சம்பந்தம் கிடைக்கும். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் எளிதாக பிரிவினை உண்டாகும். சனி, செவ்வாய் தொடர்பு இருந்தால் இரண்டாம் திருமணம் நடக்கும். நண்பர்கள், கூட்டாளிகள் குறுகிய காலத்தில் பயனற்று போவார்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த சம்பந்தியாக வெளித்தோற்றம் மட்டுமே இருக்கும். சம்பந்தம் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிப்பார்கள்.

    காதல் திருமணம் நல்லதா?

    காதல் திருமணங்களுக்கு ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே முக்கிய காரணமாகும். இந்தக் கிரக நிலைகள் அமைவதற்கு அவரவர் பூர்வ ஜென்ம கர்மவினையே காரணமாகும். சுக்கிரன். புதன், சனி, ராகு, கேது ஏழாம், ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை காதல் கலப்பு திருமணங்கள் நடக்கத் தூண்டுகின்றன. ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி காலங்களில் வீட்டைவிட்டு வெளியேறி ரகசிய திருமணம் நடத்துகிறார்கள். பெரியோர்கள் சம்மதம் ஆசிர்வாதம் இன்றி செய்யப்படும் ரகசிய திருமணங்கள் ஜாதகரின் வாழ்க்கையை நிர்மூலப்படுத்துகிறது. ஒரு திருமணம் நிச்சயமாக பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்கள் குலதெய்வத்தின் ஆசியுடனே நடக்க வேண்டும்.

    செல்: 98652 20406

    • சிறுமி கர்ப்பமாகி 10 வாரங்கள் ஆகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • வீட்டில் வைத்தே சிறுமியின் கருவை கலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு தாலுகா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 11-ம் வகுப்பு படித்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சிறுவயதிலேயே நெருங்கி பழகியுள்ளார். அந்த வாலிபர் சிறுமியை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து வந்துள்ளார்.

    யாருக்கும் தெரியாமல் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதுபோன்ற நேரங்களில் வாலிபர் 15 வயது சிறுமியிடம் காதல் வசனங்களை பேசி அவரது மனதை மாற்றியுள்ளார்.

    நாம் இருவரும் தான் சேர்ந்து வாழ போகிறோமே? எனவே திருமணத்திற்கு முன்னரே நாம் ஒன்றாக இருப்பதில் எந்த தவறும் இல்லை எனக்கூறி அந்த வாலிபர் சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி எதுவுமே தெரியாத நிலையில் எப்போதும் போல சிறுமி பள்ளிக்கும் சென்று வந்திருக்கிறார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென காய்ச்சல் மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போதுதான் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. சிறுமி கர்ப்பமாகி 10 வாரங்கள் ஆகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி குடும்பத்தினர் சிலருக்கும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் வெளியில் தெரிந்து விட்டால் நமது குடும்பத்துக்கு அசிங்கமாகிவிடும் என்று சிறுமியின் உறவினர்கள் கருதி உள்ளனர்.

    இதனால் வீட்டில் வைத்தே சிறுமியின் கருவை கலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதில் சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன உறவினர்கள் சிறுமியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு சிறுமியை பரிசோதித்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் அதிக அளவில் சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதால் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் 15 வயது சிறுமியான மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி காரணமாகவே சிறுமியின் உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட போது தான் அவர் கர்ப்பமானது தெரிய வந்துள்ளது.

    இது பற்றி உடனடியாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். அவர்கள் எந்தவித தகவலும் தெரிவிக்காத நிலையில், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும் மாணவி சிகிச்சை பெற்று உள்ளார். அங்கிருந்தும் முறையான தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை.

    இதன்பிறகு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் சிறுமி உயிரிழந்து உள்ளார்.

    சிறுமி கர்ப்பமானது பற்றி ஆரம்பத்திலேயே போலீசுக்கு தெரிய வந்திருந்தால் அவர்கள் முறைப்படி விசாரணை நடத்தி இருப்பார்கள். சிறுமிக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு கிடைத்திருக்கும்.

    கடந்த 4-ந்தேதியே சிறுமி கர்ப்பமானது தெரிய வந்த நிலையில் அதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதன்பிறகு கடந்த 17-ந் தேதி ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகே ஆஸ்பத்திரி டாக்டர்கள் செங்கல்பட்டு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் காரணமாக கடந்த 12 நாட்களாக உயிருக்குப் போராடிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    • கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர்.
    • விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    காதலில் விழுந்தவர்கள் அதில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாளுவது சகஜமான விஷயம் தான். அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால் காதலிக்கும் பெண்ணை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் மனதையும் கவர வேண்டும் என்று நினைப்பர்.

    அப்படி நினைத்த ஒருவர், தான் காதலித்த பெண்ணின் மீது நண்பன் மூலமாக மோதச்செய்து விபத்தை ஏற்படுத்தி உள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையால், விபத்தை வாலிபர் திட்டமிட்டு அரங்கேற்றிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி மம்மூத்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன்(வயது24). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதுகுறித்து அந்த பெண்ணிடம் ரஞ்சித்ராஜன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பெண்ணோ பெரிய அளவில் விருப்பம் காட்டாமல் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மனதை கவர்ந்து, அதன் மூலமாக இளம்பெண்ணை காதலிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தார். தான் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினரை கவர, விபத்து நாடகத்தை சினிமா பாணியில் அரங்கேற்ற திட்டமிட்டார்.

    அதாவது தான் காதலிக்கும் பெண்ணை ஏதாவது ஒரு வாகனத்தை விட்டு மோதச்செய்து, அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்ப்பதன் மூலம் பெண்ணின் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்குவதே அவரது திட்டம் ஆகும்.

     

    கைதானவர்கள்

    இதுகுறித்து தனது நண்பரான கோன்னி பையனமான் பகுதியை சேர்ந்த அஜாஸ்(19) என்பவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார். இதையடுத்து விபத்தை எங்கு வைத்து நடத்துவது? எப்படி அரங்கேற்றுவது? என்று இருவரும் திட்டமிட்டனர்.

    ரஞ்சித் ராஜன் மற்றும் அஜாஸ் வெவ்வேறு கார்களில் செல்வதும், அஜாஸ் தனது காரால் ரஞ்சித் ராஜன் காதலிக்கும் பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதுமே அவர்களது திட்டமாகும். அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர். பின்பு இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித்ராஜன் காதலிக்கும் பெண்ணை, அஜாஸ் தனது காரில் பின்தொடர்ந்து சென்றார். பத்தினம்திட்டா அருகே உள்ள வாழமுட்டம் பகுதிக்கு சென்றதும் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது காரால் அஜாஸ் மோதினார்.

    பின்பு அவர் சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். கார் மோதிய வேகத்தில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டார். அதில் அவரது கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு காரில் ரஞ்சித் ராஜன் விபத்து நடந்த இடத்துக்கு வந்தார்.

    அவர் காயமடைந்து கிடந்த தான் காதலிக்கும் பெண்ணை மீட்டு, தனது காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய ரஞ்சித்ராஜனின் நண்பர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்துக்கு ரஞ்சித் ராஜன் உடனடியாக வந்தது எப்படி? என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்தது.

    இதனால் இந்த விபத்து தற்செயலாக நடந்திருக்காதோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அஜாஸ் மற்றும் ரஞ்சித் ராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

    இறுதியில் ரஞ்சித்ராஜன் தனது நண்பருடன் சேர்ந்து விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரஞ்சித்ராஜன் மற்றும் அஜாஸ் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். காதலித்த பெண்ணின் குடும்பத்தினரை கவருவதற்காக, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணின் மீது காரால் மோதச்செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனது காதல் தோற்றுப் போய்விட்டதாக கருதிய ஜெயபிரகாஷ், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
    • வெவ்வேறு நபர்களுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன.

    காதல்...

    அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்றால் அது "காதல்" தான். அதிலும் மனிதனின் காதல் தனித்துவமிக்கது. அது தரக்கூடிய உணர்வு மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். அப்படிப்பட்ட காதலில் விழுந்து, வாழ்க்கையில் இணைந்தவர்களும் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்தவர்களும் உண்டு.

    அதே நேரத்தில் தனது மனம் விரும்பிய ஒருவரை கரம்பிடிக்க ஆண்டுக்கணக்கில் காத்திருந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு திருமண பந்தத்தில் இணைந்த ஜோடிகளும் உண்டு. அப்படித்தான் வாலிப பருவத்தில் காதலித்த இருவர், தற்போது 60 வயதுக்கு பிறகு திருமணம் செய்துள்ளனர்.

    கேரளாவில் அரங்கேறியிருக்கும் அந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் தனது வாலிப பருவத்தில் ரஷ்மி என்ற பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அதனை அவரிடம் கூற பயந்திருக்கிறார். பின்பு வெகுநாட்களுக்கு பிறகு தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், ரஷ்மிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். தனது காதல் தோற்றுப் போய்விட்டதாக கருதிய ஜெயபிரகாஷ், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    இறுதியில் அவரும் திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு நபர்களுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் தங்களது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரின் துணைகளும் அடுத்தடுத்து இறந்தனர்.

    ரஷ்மியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பும், ஜெயபிரகாசின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பும் திடீரென இறந்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் தங்களின் குழந்தைகளே வாழ்க்கை என நினைத்து, வேறு திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தனர்.

    கணவரை இழந்த வேதனையிலிருந்து மீள்வதற்காக ரஷ்மி, கலாச்சார நிகழ்வுகளில் ஈடுபட்டார். மேலும் குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். ஜெயபிரகாஷ் தனது குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் மறுமணம் செய்ய திட்டமிட்டார். அதற்காக பெண் தேடும் படலத்திலும் ஈடுபட்டார்.

    இந்தநிலையில் ரஷ்மி நடித்த ஒரு குறும்படத்தை ஜெயபிரகாஷ் பார்த்தார். தனது வாலிப பருவ காதலி குறும்படங்களில் நடிப்பதை அறிந்து அவர் உள்ளத்தில் மகிழ்ந்தார். அவரை தொடர்பு கொண்டு பேச துடித்தார். இறுதியில் குறும்பட இயக்குனரிடமிருந்து ரஷ்மியின் மகள் செல்போன் எண்ணை வாங்கினார்.

    அதில் தொடர்பு கொண்டு ரஷ்மியிடம் பேசினார். இதையடுத்து அவர்களுக்கு இடையே பழைய உறவு மீண்டும் துளிர்விட்டது. அதே நேரத்தில் இருவரின் துணைகளும் இறந்த விவரத்தை இருவரும் அறிந்துகொண்டனர். தற்போது மறுமணத்துக்கு பெண் தேடி வரும் விவரத்தை ரஷ்மியிடம் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

    அப்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார். அதுபற்றி ரஷ்மி தனது மகள் மற்றும் மருமகனிடம் கூறினார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனர்.

    இதையடுத்து ரஷ்மி திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாக ஜெயபிரகாஷிடம் தெரிவித்தார். உடனே அவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. 60 வயதுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இருவரின் திருமணம் கொச்சியில் மிகவும் எளிமையான முறையில் நடந்தது.

    அதில் ஜெயபிரகாஷ்-ரஷ்மி ஆகிய இருவரின் குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இருவரின் திருமணத்தை அவர்களது குழந்தைகள் முன்னின்று நடத்தி வைத்தனர். "உண்மையான காதல் நிச்சயம் ஒரு நாள் ஜெயிக்கும்" என்பதற்கு சாட்சியாக வாலிப வயதில் காதலித்த ஜோடி, தங்களின் 60 வயதிற்கு பிறகு ஒன்றிணைந்துள்ளனர்.

    ஜெயபிரகாஷ்-ரஷ்மி ஆகிய இருவரின் திருமண புகைப்படத்தை ரஷ்மியின் மகள் சமூக வலைதளங்களில், "எந்த குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும்" என்ற நெகிழ்ச்சியான வாசகத்துடன் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.

    மும்பை சாந்தாகுரூஸ் கிழக்கு, கலினா பகுதியில் உள்ள ஜம்லிபாடா எனும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 42 வயது நபரும், 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்தப்பெண் நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த நபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று காதலனும் சென்றுள்ளார். இருவரும் வீட்டில் இருந்தபோது, மீண்டும் திருமண பேச்சு எழுந்துள்ளது. அப்போதும் அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தப்பெண் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் மர்ம உறுப்பை துண்டித்துள்ளார்.

    படுகாயமடைந்த அந்த நபர், வலியால் துடித்த நிலையிலும் அந்த பெண்ணிடமிருந்து தப்பித்து, உடனடியாக தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரது சகோதரர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக வி.என்.தேசாய் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும், அவர் மீது பாரதிய நியாய சன்கிதா சட்டப்பிரிவுகளின் கீழ், ஆபத்தான ஆயுதங்களை கொண்டு காயம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    • சிறிது நேரத்திற்கு பிறகு அவரது காதலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக அந்த அரங்கில் தெரிவிக்கப்பட்டது.

    ரஷிய அதிபர் புதின், வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டி அளித்தார். இதில் அவரிடம் உக்ரைன் - போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    அப்போது இளம் நிருபர் கிரில் பஜானோவ் என்பவர் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று எழுதப்பட்ட சுவரொட்டியை காண்பித்தப்படி தனது காதலியிடம் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

    அப்போது அவர் கூறும்போது 'என் காதலி இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும், என்னை மணந்துகொள் என்றார். இதை அங்கிருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு அவரது காதலி திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதாக அந்த அரங்கில் தெரிவிக்கப்பட்டது.

    உடனே ரஷிய அதிபர் புதின் மற்றும் அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது புதின் கூறும்போது, நீங்கள் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகிவிட்டீர்கள் என்றார்.

    அதற்கு பஜானோவ் புதினிடம், எங்கள் திருமணத்திற்கு நீங்கள் வந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றார்.

    • நூல் வெளியீட்டு விழாவில் சேரன் பங்கேற்றார்.
    • பொறாமை படுபவர்கள்தான் அடுத்தவர்களுடைய காதலை கள்ளக்காதல் என்று சொல்வார்கள்.

    இயக்குனரும் நடிகருமான சேரன் தனது வெளிப்படையான கருத்துகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார்.

    அண்மையில் சேலத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் சசிகுமார் எழுதிய 'கன்னக் குழியில் விழுந்த கண்கள்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சேரன் பங்கேற்றார்.

    அதில் பேசிய அவர், "பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்று இல்லை. நாம் ஒரு உயிர் மேல் வைக்கும் அன்பு தான் காதல். பெண்கள் மீது மட்டுமே காதல் என்பது கொச்சையானது. காதலில் நல்ல காதல் கள்ளக்காதல் என்று ஏதுமில்லை.

    சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம்தான் கள்ளக்காதல். நமக்கு இது கிடைக்கலையே.. நம்மால் இதுபோல காதலிக்க முடியலையே! என்று பொறாமை படுபவர்கள்தான் அடுத்தவர்களுடைய காதலை கள்ளக்காதல் என்று சொல்வார்கள்.

    அதனால் அனைவரும் வாழ்க்கையின் சுமைகளை விட்டு யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்து விடுங்கள்" என்றார்.  

    • நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார் சமந்தா
    • சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் சமந்தாவுக்கும், தி பேமிலி மேன் 2 இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.

    தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படதில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    • இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு கொடுத்த பரிசு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
    • பூங்கொத்து செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.

    காதல் ஜோடிகள் தங்கள் இணையர்களுக்கு வித்தியாசமான பரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு கொடுத்த பரிசு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தன் காதலனுக்கு அவருக்கு பிடித்த குட்கா பாக்கெட்டுகளால் ஆன சிறப்பு பூங்கொத்தை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், என்னை சந்திக்க வந்த ஒரு வாடிக்கையாளரான பெண் ஒருவர் அவரது காதலனுக்கு குட்கா மிகவும் பிடிக்கும் என்பதால் அதை பூங்கொத்து போல செய்து தருமாறு கூறினார். எனவே நான் நீல நிற பாக்கெட்டுகளில் குட்கா பாக்கெட்டுகளை ஒட்டி பூங்கொத்து உருவாக்கி கொடுத்தேன் என கூறினார்.

    அவர் குட்கா பூங்கொத்து செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது. அதில், ஒரு குச்சியில் 2 குட்கா பாக்கெட்டுகளை ஒட்டி அவற்றை பூக்களை போல அடுக்கி வைத்தி நீல நிற குட்கா பூங்கொத்து தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்கள் காதலும் ஒரு புற்றுநோய் போல தான் என விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.

    • தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் கத்தியால் மாணவியை குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    சம்பவம் குறித்து அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×