என் மலர்
நீங்கள் தேடியது "student dead"
- செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா?
- அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
திருப்பத்தூர் அருகே பள்ளியில் மூடப்பட்ட கிணற்றில் மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், மாணன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? போன்ற அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டம் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த செல்வன் முகிலன் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன், அப்பள்ளியில் உள்ள கிணற்றில் உடலில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஒன்றாம் தேதி முதல் வகுப்பிற்கு வராத மாணவனை அவரது பெற்றோரும் போலீசாரும் தேடி வந்துள்ள நிலையில், பள்ளியில் மூடியிருந்த கிணற்றில் பள்ளி சீருடையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா?
மாணவன் தொலைந்து இரண்டு நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அவரைத் தேடாதது ஏன்? இதில் அரசியல் தலையீடுகள் ஏதாவது இருக்கின்றனவா? போன்ற அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும். எவ்வித சமரசமுமின்றி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், கடந்த நான்காண்டுகளாக மாணவர்களின் மரணங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், படிக்கும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையையும், பள்ளியில் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கிடத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு முன்னெடுக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவன் நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரை காணவில்லை.
- மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன் (வயது 16). இவர் திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவன் நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரை காணவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் வீட்டிற்கு வந்தாரா என கேட்டனர். மகன் வீட்டிற்கு வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் எங்கள் மகன் உங்கள் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி தான் படித்து வருகிறான். அப்படி இருக்கும் போது எப்படி வீட்டிற்கு வருவான் என கேள்வி எழுப்பினர்.
அதன் பின்னர் கொத்தூரில் இருந்து பெற்றோர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் டவுன் போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மாணவனை தேடி வந்தனர். நேற்று இரவு பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மாணவர் பள்ளியின் பின்புறம் உள்ள கிணற்றுப் பக்கம் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் மாணவன் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இன்று காலை போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் மாணவனை தேடி வந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள இரும்பு கம்பியால் மூடப்பட்ட கிணற்றில் மாணவன் பிணமாக மிதந்தார். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மாணவனின் பிணத்தை போலீசார் மீட்டனர்.
மகனின் பிணத்தை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். மேலும் மாணவனின் தந்தை மகன் சென்ற இடத்துக்கு செல்கிறேன் என கூறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- மின் கசிவை சரி செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளான்.
- “நாடு போற்றும் நல்லாட்சி” என திமுக-வினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பகுதியில் ஏற்கனவே இரண்டு பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளதாகக் கூறும் நிலையில், மின் கசிவை சரி செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளான். ஒருநாள் மழைக்கே நீர் தேங்குமளவிற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும், பல நாள் புகாரளித்தும் ஒரு சிறு மின்கசிவைக் கூட சீர்படுத்த முடியாத நிர்வாகத்தையும் வைத்துக்கொண்டு "நாடு போற்றும் நல்லாட்சி" என திமுக-வினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
எனவே, மாணவனின் மரணத்திற்கு ஆளும் அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, அம்மாணவனின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டு தொகையாக அறிவிப்பதுடன், சென்னை மாநகரில் முறையான மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மகனை பள்ளியில் விடுவதற்காக சிவகணேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அமரேசை அழைத்து சென்றார்.
- விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராவணன் குட்டை தெருவை சேர்ந்தவர் சிவகணேஷ். கேபிள் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் அமரேஷ் (வயது 13). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலையில் மகனை பள்ளியில் விடுவதற்காக சிவகணேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அமரேசை அழைத்து சென்றார்.
மோட்டார் சைக்கிள் மன்னார்குடி ருக்மணிகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது பள்ளி மாணவன் அமரேஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். சிவகணேஷ் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகணேசை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான அமரேஷ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்ற போது விபத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தந்தையை இழந்த வெற்றியை அவரது தாய் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து படிக்க வைத்துள்ளார்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீட்டை இடிக்கும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் வெற்றி என்ற 14 வயது பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தந்தையை இழந்த வெற்றியை அவரது தாய் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில், சுவர் இடிந்து விழுந்ததில் வெற்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷ்ணுவின் தலையில் பலத்த காயமடைந்தது.
- அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் விஷ்ணு (15). அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த விஷ்ணு கடந்த 15-ந்தேதி அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாணாபுரம் புத்துமாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விஷ்ணுவின் சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்ணுவின் தலையில் பலத்த காயமடைந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகிய 2 பேர் மீதும் பகண்டை கூட்டுச்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- வழக்கம்போல் மாணவர் திவாகர் இன்று காலை 7.40 மணி அளவில் குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்திருந்தார். வேன் வந்ததும் அதில் ஏறி பள்ளிக்கு சென்றார்.
- வேன் தொடர்ந்து மற்ற மாணவர்களை ஏற்றி செல்ல கோனேரிபட்டி பேரேஜ் நோக்கி சென்றது. அப்போது வேனில் ஏறிய மாணவர் திவாகர் முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்தார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேடு என்ற பகுதியை சேர்ந்தவர் மாதையன், மில் தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. இவர்களுக்கு திவாகர் (13), ஜீவா (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
திவாகர் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் இவர் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வந்தார்.
வழக்கம்போல் மாணவர் திவாகர் இன்று காலை 7.40 மணி அளவில் குதிரைக்கல்மேடு பகுதியில் பள்ளி வேனுக்காக காத்திருந்தார். வேன் வந்ததும் அதில் ஏறி பள்ளிக்கு சென்றார்.
வேன் தொடர்ந்து மற்ற மாணவர்களை ஏற்றி செல்ல கோனேரிபட்டி பேரேஜ் நோக்கி சென்றது. அப்போது வேனில் ஏறிய மாணவர் திவாகர் முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்தார். வேன் கோனேரிபட்டி பேரேஜ் கதவணை மின்நிலைய சோதனை சாவடி அருகே சென்றபோது டிரைவர் திடீர் பிரேக் போட்டார்.
அப்போது வேனுக்குள் இருந்த மாணவர் திவாகர் நிலைதடுமாறி முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே தவறி விழுந்தார். அப்போது அந்த வேனின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் திவாகர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த மற்ற மாணவர்கள் அலறி சத்தம் போட்டனர். இதையடுத்து டிரைவர் வேனை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது திவாகர் பின்பக்க சக்கரத்தில் சிக்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது.
பின்னர் சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான மாணவர் திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் பள்ளி வேன் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி டிராக்டருக்கு அடியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதில் சாலையில் உருண்டு கனகராஜ் உயிர் தப்பினார்.
- டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மீனா சுந்தரி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள முதுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகள் மீனாசுந்தரி (வயது 22). இவர் தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பில். படித்து வந்தார்.
தினமும் தனது கிராமத்தில் இருந்து அவர் காடவராயன்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து பின்னர் பேருந்தில் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று காலை பஸ் நிறுத்தத்திற்கு தனது அண்ணன் கனகராஜூடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சோளம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிகவும் குறுகிய சாலையாக இருந்தததால் குறிப்பிட்ட தூரம் வரை டிராக்டரை எந்த வாகனமும் முந்திச் செல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால் அதனையும மீறி கனகராஜ் அந்த டிராக்டரை முந்த முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி டிராக்டருக்கு அடியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதில் சாலையில் உருண்டு கனகராஜ் உயிர் தப்பினார். ஆனால் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மீனா சுந்தரி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை மற்றும் உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார். இதைப்பார்த்த அவரது அண்ணன் கனகராஜ் கதறி அழுதார்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவி மீனாசுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மகள் பிணமாக வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் கதறித் துடித்தனர். மாணவி பலியானதையடுத்து முதுகுளம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
- விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள காளவாய்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் சாரதி (வயது 15). திருவெள்ளறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளிக்கு விடுமுறை நாளாகும்.
இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் சாரதியின் அண்ணன் சுபாஸ் (29), அவரது நண்பர் சரத் (27) ஆகியோருடன் சாரதி ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திருவெள்ளறையில் இருந்து மண்ணச்சநல்லூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு புறப்பட்டனர். அவர்கள் மண்ணச்சநல்லூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
சாரதி இருசக்கர வாகனத்தின் நடுவில் அமர்ந்திருந்தார். அவரது அண்ணன் சுபாஸ் வாகனத்தை ஓட்டினார். திருவெள்ளறை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது.
இதில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். அடுத்த விநாடி அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய சாரதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று இறந்த சாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இன்று காலை நடந்த இந்த விபத்து பலியான சாரதியின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மூச்சு திணறல் ஏற்பட்டு 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்து போனார்.
- சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் மேட்டுதெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தச்சு தொழில் செய்து வருகிறார். இவரது சித்தி பரமேஸ்வரி. இவரது மகன் விசித்திரன் (வயது13). கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரமேஸ்வரி இறந்து விட்டார். அவரது கணவர் சுந்தரமூர்த்தியும் பிரிந்து சென்று விட்டதால் விசித்திரனை சீனிவாசன் தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார்.
விசித்திரன் ராம்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விசித்திரனுக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதனால் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் காண்பித்த போது அந்த நோய்க்கான உபகரணங்கள் தற்போது ஆஸ்பத்திரியில் இல்லை என்றும், உபகரணங்கள் வந்த பின்னர் தகவல் தெரிவிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விசித்திரனை சீனிவாசன் கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் விசித்திரன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினான். சிறிது நேரத்தில் மூச்சு பேச்சியின்றி விசித்திரன் கிடப்பதை கண்டு சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விசித்திரனை நெட்டப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு விசித்திரன் வரும் வழிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தனது மகனை ஆசிரியை அடித்ததால் தான் படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
- மாணவர் மேஜையில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம். விகாராபாத் மாவட்டம், புதூர் மண்டலம் கேசவரெட்டிபள்ளியில் தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கார்த்திக் (வயது 8) என்ற மாணவர் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
கார்த்திக் வகுப்பு ஆசிரியை கொடுத்த வீட்டு பாடத்தை செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மாணவனை பிரம்பால் அடித்துள்ளார்.
இதில் மாணவர் கார்த்திக்குக்கு ரத்தக்காயம் ஏற்பட்டு உடல் நலம் குன்றியது.
இதுகுறித்து மாணவனின் பெற்றோருக்கு போன் செய்த பள்ளி நிர்வாகம் கார்த்திக் வகுப்பறையில் தவறி விழுந்து காயம் அடைந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து கார்த்திகை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மகனை ஆசிரியை அடித்ததால் தான் படுகாயம் அடைந்து இறந்து விட்டதாக போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
மாணவர் மேஜையில் இருந்து தவறி விழுந்ததை அடுத்து அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்குதான் மாணவன் உயிரிழந்தான் என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த தகவலை கேள்விப்பட்ட மாணவர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவன் சாவுக்கு ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகமே காரணம். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் விபத்தில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாகித்தியன். இவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடையநல்லூரில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே வரும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் விபத்தில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






