என் மலர்
நீங்கள் தேடியது "Nayinar Nagendran"
- இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம்!
- குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே காமுகர்களாக உருமாறிவருவது நம்மை பயமுறுத்துகிறது.
திருவண்ணாமலையில் இளம்பெண்ணை 2 காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட கண்டன பதிவில்,
திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவர், ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
ஆளும் திமுக ஆட்சியில் தமிழகப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, பிற மாநிலப் பெண்களும் இதில் விதிவிலக்கல்ல என்பதை மீண்டுமொரு முறை உணர்த்தும் இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம்!
திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் பெருகிவரும் பெண்களுக்கெதிரான பாலியல் தொல்லைகள் ஒருபுறம் நம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றன.
குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே காமுகர்களாக உருமாறிவருவது மறுபுறம் நம்மை பயமுறுத்துகிறது. இப்படி மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா?
முதல்வர் திரு. ஸ்டாலின். அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையில் இத்தனை ஒழுங்கீனங்களை வைத்துக்கொண்டு, வெற்று விளம்பரங்களில் மட்டுமே வீண் கவனம் செலுத்தும் இந்த விடியா அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது" என்று தெரிவித்துள்ளார்.
- இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது.
- என்னை வைத்தே இவ்வாறு சித்தரித்து புகைப்படம் வெளியிடுவதை நான் மிகக்கடுமையாக கண்டிக்கிறேன்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நேற்று பகவான் ஸ்ரீ இராமருடன் என்னை ஒப்பிட்டு சில பதாகைகளில் போட்டிருப்பதாக அறிந்தேன். அதனை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறைசக்தியோடு என்றுமே மனித சக்தியை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது என்று ஆணித்தரமாக நம்புபவன் நான்.
சேது சமுத்திரம் விவகாரத்தில் இராமபிரானைக் குறித்து தவறான முறையில் பேச்சுகள் வந்தபோது, சட்டமன்றத்திலேயே கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்தவன் நான். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் தாயாரைக் குறித்து சர்ச்சைப் பேச்சு எழுந்தபோதும், முதலில் அதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான்.
நமது தெய்வங்களின் மீது நான் வைத்திருக்கும் பக்தியும், மரியாதையும் இவ்வாறாக இருக்கும்போது, என்னை வைத்தே இவ்வாறு சித்தரித்து புகைப்படம் வெளியிடுவதை நான் மிகக்கடுமையாக கண்டிக்கிறேன். இன்னொரு முறை இது போல நடக்காமல் இருப்பதை அன்பார்ந்த தாமரை சொந்தங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா?
- அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
திருப்பத்தூர் அருகே பள்ளியில் மூடப்பட்ட கிணற்றில் மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், மாணன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? போன்ற அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டம் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த செல்வன் முகிலன் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன், அப்பள்ளியில் உள்ள கிணற்றில் உடலில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஒன்றாம் தேதி முதல் வகுப்பிற்கு வராத மாணவனை அவரது பெற்றோரும் போலீசாரும் தேடி வந்துள்ள நிலையில், பள்ளியில் மூடியிருந்த கிணற்றில் பள்ளி சீருடையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா?
மாணவன் தொலைந்து இரண்டு நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அவரைத் தேடாதது ஏன்? இதில் அரசியல் தலையீடுகள் ஏதாவது இருக்கின்றனவா? போன்ற அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும். எவ்வித சமரசமுமின்றி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், கடந்த நான்காண்டுகளாக மாணவர்களின் மரணங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், படிக்கும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையையும், பள்ளியில் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கிடத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு முன்னெடுக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் பாஜக உறுதியாக நிற்கும்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மாற்று மதப்பெண்ணை காதலித்து திருமணம் செய்யவிருந்த இந்து பட்டியல் சமூக இளைஞரான தனுஷ் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.
நல்லமுறையில் கல்வி கற்று, கோவையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான தனுஷ் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை.
கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. குறிப்பாக, பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது.
ஆக, இவ்வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முறையான பிரேத பரிசோதனை செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு. அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் திமுக-விற்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் திமுகவின் வழக்கமான அராஜகப் போக்கிற்கு தமிழகக் காவல்துறை இணங்கக் கூடாது. ஆளுங்கட்சியின் வாக்கரசியலுக்கு துணை போகும் நோக்கத்தோடு ஒருதலை பட்சமாக காவல்துறை செயல்படக்கூடாது.
ஆட்சி மாற்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் தான் உள்ள நிலையில், ஆளும் திமுக-வின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், இவ்வழக்கின் உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டுமென தமிழக காவல் துறையினரை வலியுறுத்துகிறேன்.
மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் பாஜக உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் உருமாறியுள்ளது.
- மு.க.ஸ்டாலின் தனது துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தைப் பழுது பார்க்க வேண்டிய நேரமிது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதுடன், மேலும் ஒரு சிறுமி கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தங்கள் பிள்ளையை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சம்பவத்தில் பிடிபட்டுள்ள கொலையாளி குடிபோதையில் இருந்தான் என வெளியாகியுள்ள தகவல், போதைப் பொருட்களின் பிடியில் தமிழகம் சிக்கி சீரழிந்து கிடப்பதையும், பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் உருமாறியுள்ளது என்பதையும் நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்துகிறது. இதுதான் திமுக-வின் விடியல் ஆட்சியா?
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தானே குற்றங்கள் குறையும்? சட்டம் ஒழுங்கு செம்மையாக இருந்தால் தானே குற்றவாளிகளுக்கு பயமிருக்கும்?
இதுபோன்ற சம்பவங்களைக் காணும் ஒவ்வொரு குடும்பமும், "நாளை நம் குடும்பப் பெண்களுக்கும் இதே நிலைமைதானோ" என்ற பயத்தில் தான் தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பது வெட்கக்கேடானது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தைப் பழுது பார்க்க வேண்டிய நேரமிது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார்.
- தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?
ஜனவரி 1 அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சித்திரை 1 அன்று மௌன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல்! தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதல்வரை, தமிழகம் புறக்கணிக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நண்பகல் கடந்தும் நமது தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார்.
மேலும், இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் "ஆவின்" பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை.
ஆங்கிலப் புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதல்வருக்கு, ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?
'தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் திமுக" என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
- முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ள நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-
அதிமுக- பாஜக கூட்டணி மக்களின் விருப்பம். மக்கள் யாரை ஏற்கிறார்கள் என்பது தேர்தலில் தெரியும், திமுக தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.
திமுக அரசு செய்துள்ள ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படும். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாஜகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சென்ற அண்ணாமலையின் பணி முன் உதாரணமானது.
- பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக அண்ணாமலை ஆற்றிய பணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் புகழ்ந்து பகிர்ந்துள்ளார்.
அப்போது, பாஜகவின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சென்ற அண்ணாமலையின் பணி முன் உதாரணமானது.
பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் அமித் ஷா கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக பிரிவின் தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பரியது.
பாஜக கட்சியின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
- ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
அண்ணாமலை மாற்றப்படுவாரா? அல்லது அவரே தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற பேச்சும் பலமாக அடிபட்டது. அதுக்கு காரணம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான்.
இதுதொடர்பாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தலைமையில் கூட்டணிக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலையையும் அமித்ஷா அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதைதொடர்ந்து, அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபட்டதை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்தித்தார்.
இதற்கிடையே, தேர்தலில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த பரபரப்புக்கு இடையில் இன்று தமிழக பாஜக தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநில துணை தலைவருமான சக்கரவர்த்தியிடம் நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை வழங்கினார். நயினார் நாகேந்திரன் தவிர வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செயயப்படவில்லை.
இதனால், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவர் குறித்து நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.
- செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
- எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.
இதில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இன்று சென்னைக்கு வருகைத்தர உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
மேலும், எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கான பணிகளை ஒப்படைப்பது குறித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அப்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர ரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
- தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் பயணம்.
- டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் செய்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வாரம் பாஜக மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
- நயினார் நாகேந்திரன் உள்பட 3 பேரை கைது செய்து, நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு.
பாராளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நயினார் நாகேந்திரன் உள்பட 3 பேரை கைது செய்து, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 2-வது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில், " மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். என்னை முழுவதுமாக குறி வைத்துள்ளனர்.
அரசியல் சூழ்ச்சியாகவே இதை பார்க்கிறேன். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர்.
ரூ.4 கோடியை மட்டும் குறிவைத்து பேசுபொருளாக்கி வருகின்றனர். பிடிபட்ட பணத்திற்கும், எனக்கும் தொடர்பில்லை. பலமுறை கூறிவிட்டேன்.
போலீசார் கடமையை செய்கின்றனர். என் தரப்பில் முழு ஒத்துழைப்பு தருவேன்.






