என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டியலின மக்கள்"

    • தமிழ்நாட்டில் அருந்ததியர்களையும் சேர்த்து பட்டியலினத்தில் உள்ள 76 சமூகங்களுக்கு 18% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
    • 16 மாதங்களாகியும் அந்தத் தீர்ப்பை திமுக அரசு செயல்படுத்த மறுக்கிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்தியாவில் பட்டியலின மக்களில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மக்கள் தொடர்ந்து அதே நிலையிலேயே இருக்கிறார்கள்; அவர்களின் நிலையை முன்னேற்றவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் பயன்களை அவர்கள் வென்றெடுக்கவும் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நீதியரசர் பி.ஆர்.கவாய் கூறியிருக்கிறார். இது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை பெரும்பாலான மாநிலங்கள் செயல்படுத்தியுள்ள நிலையில், அத்தீர்ப்பை திமுக அரசு சற்றும் மதிக்காதது கண்டிக்கத்தக்கது.

    தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையொட்டி ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்திருக்கும் நீதியரசர் கவாய், சமூக, கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டு பட்டியலின மக்களுக்கு சமூகநீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற தீர்ப்பை தாம் இடம்பெற்றிருந்த 7 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு அளித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தத் தீர்ப்பின் நோக்கங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

    பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், முதல் மாநிலமாக தெலுங்கானம், கடந்த மார்ச் மாதம் பட்டியலினத்தவருக்கான 15% இட ஒதுக்கீட்டை முறையே 1%, 9%, 5% என 3 பிரிவுகளாக பிரித்து சட்டம் இயற்றியது. அதேபோல், கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் 17% இட ஒதுக்கீட்டை பட்டியலினம் (வலது) 6%, பட்டியலினம் (இடது) 6%, பிற பட்டியலினத்தவருக்கு 5% என 3 பிரிவுகளாக உள் இட ஒதுக்கீடு வழங்கி அம்மாநில அரசு ஆணையிட்டுள்ளது.

    ஆந்திரமும் பட்டியலின மக்களுக்கான 15% இட ஒதுக்கீட்டை முறையே 6.5%, 7.5%, 1% என 3 பிரிவுகளாக பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து 2009-ஆம் ஆண்டில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டுக்குப் பிறகு, வேறு எவருக்கும் இன்று வரை உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் அருந்ததியர்களையும் சேர்த்து பட்டியலினத்தில் உள்ள 76 சமூகங்களுக்கு 18% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் பெரும்பாகான சமூகங்களுக்கு இன்னும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவில்லை. அதைக் கருத்தில் கொண்டு தான் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதன்பின் 16 மாதங்களாகியும் அந்தத் தீர்ப்பை திமுக அரசு செயல்படுத்த மறுக்கிறது.

    உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் பி.ஆர்.கவாய் இடம் பெற்றிருந்த அமர்வு தான் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு ஆணையிட்டது. அதன்பின் இன்று வரை 1335 நாள்களாகியும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதற்காக ஏராளமான நடவடிக்கைகளை எடுத்தும், போராட்டங்களை நடத்தியும் கூட எந்த பயனும் ஏற்படவில்லை.

    தமிழ்நாட்டைப் பொருத்தவரை வன்னியர்களாக இருந்தாலும், பட்டியலினத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகநீதி வழங்கக்கூடாது என்பது தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசின் கொள்கையாக உள்ளது. தமிழ்நாட்டின் இரு பெரும் சமூகங்களுக்கு அநீதி இழைக்கும் திமுக அரசுக்கு அந்த சமூகங்கள் வரும் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை புகட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாத்தினார் தடுக்கின்றனர்.
    • மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் செய்வதாக புகார்

    தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில் பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாதியினர் தடுக்கும் அராஜகம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை மீறி பள்ளி மாணவர்கள் பொது பாதையை பயன்படுத்தினர்.

    கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், "தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில், காலம்காலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த, பொது பாதையினை, சாதிய ஆதிக்கத்தின் பெயரில், பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என தடுக்கும் அராஜகம்....... சிபிஐ(எம்),தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், மிக வன்மையாக கண்டிக்கிறோம்!

    மாவட்ட நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் காட்டியது மென்மேலும் வன்முறையை அதிகரிக்கச் செய்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.

    • காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    • பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் பாஜக உறுதியாக நிற்கும்.

    தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மாற்று மதப்பெண்ணை காதலித்து திருமணம் செய்யவிருந்த இந்து பட்டியல் சமூக இளைஞரான தனுஷ் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

    நல்லமுறையில் கல்வி கற்று, கோவையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான தனுஷ் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை.

    கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. குறிப்பாக, பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது.

    ஆக, இவ்வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முறையான பிரேத பரிசோதனை செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு. அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் திமுக-விற்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் திமுகவின் வழக்கமான அராஜகப் போக்கிற்கு தமிழகக் காவல்துறை இணங்கக் கூடாது. ஆளுங்கட்சியின் வாக்கரசியலுக்கு துணை போகும் நோக்கத்தோடு ஒருதலை பட்சமாக காவல்துறை செயல்படக்கூடாது.

    ஆட்சி மாற்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் தான் உள்ள நிலையில், ஆளும் திமுக-வின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், இவ்வழக்கின் உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டுமென தமிழக காவல் துறையினரை வலியுறுத்துகிறேன்.

    மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் பாஜக உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க. அரசு என எச்.ராஜா குற்றச்சாட்டியுள்ளார்.
    • மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் தல்லா குளத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு கோரிக்கை மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது. இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. அவர்களை அம்பேத்கார்தான் தட்டிக்கேட்க வேண்டும். எனவே தான் அவரது சிலைக்கு மனு கொடுத்து உள்ளோம்.

    திராவிட கட்சிகள் பட்டியலின மக்களுக்கு அநீதி செய்கிறது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் தி.மு.க.வுடன் திருமாவள வன் எதற்காக கூட்டணி வைத்துள்ளார். மத்திய அரசு பட்டியலின சமூகத் துக்கு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தா மல் அதனை தமிழக அரசு திருப்பி அனுப்பி மோசடி செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் சுசீந்திரன் உடனிருந்தார்.

    • பட்டியலின மக்கள் தங்களை கோவிலில் வழிபட அனுமதி அளிக்குமாறு கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
    • 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்-சென்னை சாலையில் மேல்பாதி கிராமம் உள்ளது. இக்கிரா மத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற்றது.

    அப்போது பட்டியலினத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வழிபட வந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் காயம் அடைந்தனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    பட்டியலின மக்கள் தங்களை கோவிலில் வழிபட அனுமதி அளிக்குமாறு கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் தங்கள் அடையாள அட்டையை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தாசில்தார், கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. மேலும் கலெக்டர் பழனி தலைமையிலும் இரு சமூத்தினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 8 முறை இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் சுமூக உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்கு திடீரென சீல் வைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் எடுத்துள்ளனர்.

    கோவிலுக்கு சீல் வைக்கப் பட்டதால் மேல்பாதி கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேல்பாதி கிராம முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள திரவுபதி அம்மன் கோவிலை சுற்றிலும் பேரி கார்டுகளை அமைத்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு வாகனங்களுடன் அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேல்பாதி கிராமம் அமைந்துள்ள விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் கூட்டு ரோடு வரையிலான கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை போலீசார் மூடினர்.

    விக்கிரவாண்டியில் இருந்து வரும் வாகனங்கள் முண்டியம்பாக்கம், விழுப்புரம் வழியாக திருப்பிவிடப்பட்டது. அதே போல் கோலியனூர் கூட்டு ரோடு வழியாக வரும் வாகனங்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பிவிடப்பட்டது.

    மேல்பாதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதற்கிடையே வருகிற வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் ஆஜராகுமாறு விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.
    • கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    விழுப்புரம்:

    மேல்பாதியில் 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி நடை பெற்ற திருவிழாவில் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இரு சமுதாய மக்களிடையே பிரச்சினை உருவானது.

    கோவிலில் வழிபாடு மேற்கொள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 5 முறையும், மாவட்ட கலெக்டர் தலைமையில் 3 முறையும் பல்வேறு கட்டங்களில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் தீர்வு காணப்படவில்லை.

    இதனால் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று காலை தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.

    அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் கோவில் அமைந்துள்ள பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் கோவில் அருகில் இரு தரப்பினரும் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இன்று 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில் இரு தரப்பினரும் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்து பூர்வமாக உரிய ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பின்னர் 2-ம் கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.
    • இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு பட்டியலின மக்கள் வழிபடக் கூடாது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மக்களிடையே மோதல் நிலவி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திரவுபதியம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இக்கோவில் பிரச்சினை தொடர்பாக இரு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க நேற்று அழைக்கப்பட்டனர்.

    அதன்படி இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த 80 பேரில் பட்டியலினத்தை சேர்ந்த 24 பேரும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த 38 பேரும் என 62 பேர் விழுப்புரத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நேரில் ஆஜர் ஆனார்கள்.

    இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி எழுத்துப் பூர்வமான விளக்கத்தை பெற்றுக் கொண்டார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    அப்போது தனி நபருக்கு சொந்தமான கோவில் என்பதால் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது என்பது எங்களது தனிப்பட்ட விருப்பம். இது தொடர்பாக நாங்கள் நீதி மன்றத்தை நாட உள்ளதாக ஒரு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்தனர்.

    இதே போல் கோவிலுக்குள் எங்களை அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், எங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவும் நாங்கள் ஊரை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக மறு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதனால் பேச்சு வார்த்தையில் இழுபறி நிலவியது. இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும். விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளர்.

    • இளைஞர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
    • அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வேட்டவலம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 250-க்கும் மேற்பட்ட பொது பிரிவினரும், 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பொதுப்பிரிவினர் மட்டும் வழிபாடு செய்வார்கள். அதேபோல் பட்டியலின மக்கள் வழிப்பாடு செய்ய அவர்களுக்கென தனியாக காளியம்மன் கோவிலும் உள்ளது.

    இந்நிலையில் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என சிலர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    இதற்கு பொது பிரிவினர் சமூக வலைத்தளம் மூலமாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இளைஞர்கள் மாறி, மாறி தங்கள் கருத்துகளை பதிவிட்டதால், இருத்தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று இருத்தரப்பினரும் நேரில் சந்தித்தனர். அப்போது இளைஞர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிராமத்தில் நேற்று முதல் பதட்டமான சூழல் நிலவியது. தகவல் அறிந்த சப்-கலெக்டர் மந்தாயினி மற்றும் போலீசார் செல்லங்குப்பம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சம்பவம் தொடர்பாக இருத்தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

    • வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2-ம் காலாண்டிற்கான ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது,

    மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தவறுடையதாக கருதப்படும் வழக்குகளின் விசாரனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தற்போது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத வழக்குகள், நீதிமன்ற விசா ரணை நிலுவை வழக்குகள், பிழையுடையதாக கருதப்பட்ட வழக்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு விவாதிக்கப்பட்டது. அனைத்து வழக்குகளின் மீதும் விசாரணைகள் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவிகள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும், ஆதிதிராவிட மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பாகவும், மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்தும், விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் வன்கொடுமை அதிக அளவில் நடைபெறும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறும், பட்டியலின மக்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நடவடி க்கைகள் மேற்கொள்ளவும், இக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியதன்படி, நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்பு டைய அலுவலர்கள், காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரமேஷ், மனோஜ்குமார், மகேஷ் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • செல்லங்குப்பம் கிராமத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
    • போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், செல்லங்குப்பம் கிராமத்தில் 300 குடும்பத்தினர் பொதுப்பிரிவினரும் 200 குடும்பத்தினர் பட்டியல் இனத்தவரும் வாழ்ந்து வருகின்றனர்.

    ஊருக்குள் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இதில் பொது பிரிவினர் மட்டும் சாமி கும்பிட்டு வந்தனர். 50 வருடங்களுக்கு மேலாக பட்டியலினத்தவர்களை அனுமதிப்பது இல்லை.

    பல ஆண்டுகளாக கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முகநூல் மூலமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் செல்லங்குப்பம் கிராமத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து தாங்களும் இந்த கோவிலுக்குள் வருவோம் என்று பட்டியலின மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    மேலும் அந்த கிராமத்தில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
    • குஷ்பு மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    நாகர்கோவில் :

    ஆதித்தமிழர் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமையிலான நிர்வாகிகள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்தை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    நடிகை திரிஷா குறித்து அநாகரிகமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகையும் மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜனதாவை சேர்ந்த குஷ்பு தனது இணையதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்டிருந்தார். இதற்கு தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பி பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை குஷ்பு அவரது இணையதள பதிவில் "சேரி மொழியில் பேச முடியாது" என பதிவிட்டிருந்தார். சேரி என்ற வார்த்தையை இழிவு படுத்தி ஒட்டுமொத்த பட்டியலின மக்களை இழிவு படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விவரங்களை அறிவித்துள்ளது.
    • தீர்ப்பு அக்டோபர் 21ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.

    கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அறிவித்துள்ளது.

    கடந்த 2014ம் ஆண்டு மரகும்பி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு மீதான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது.

    தீர்ப்பு அக்டோபர் 21ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.

    இதில், 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை கொப்பல் மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.

    வழக்கில் தொடர்புடைய சிறார்களை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், தீர்ப்பு விவரங்களை கேட்ட உடனே ஆயுள் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

    ×