search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேல்பாதி கோவில் வழிபாடு விவகாரம்: இரு தரப்பினரிடம் நடத்திய விசாரணையில் இழுபறி
    X

    மேல்பாதி கோவில் வழிபாடு விவகாரம்: இரு தரப்பினரிடம் நடத்திய விசாரணையில் இழுபறி

    • இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.
    • இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு பட்டியலின மக்கள் வழிபடக் கூடாது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மக்களிடையே மோதல் நிலவி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திரவுபதியம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இக்கோவில் பிரச்சினை தொடர்பாக இரு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க நேற்று அழைக்கப்பட்டனர்.

    அதன்படி இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த 80 பேரில் பட்டியலினத்தை சேர்ந்த 24 பேரும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த 38 பேரும் என 62 பேர் விழுப்புரத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நேரில் ஆஜர் ஆனார்கள்.

    இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி எழுத்துப் பூர்வமான விளக்கத்தை பெற்றுக் கொண்டார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    அப்போது தனி நபருக்கு சொந்தமான கோவில் என்பதால் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது என்பது எங்களது தனிப்பட்ட விருப்பம். இது தொடர்பாக நாங்கள் நீதி மன்றத்தை நாட உள்ளதாக ஒரு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்தனர்.

    இதே போல் கோவிலுக்குள் எங்களை அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், எங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவும் நாங்கள் ஊரை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக மறு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதனால் பேச்சு வார்த்தையில் இழுபறி நிலவியது. இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும். விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளர்.

    Next Story
    ×