search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Draupadiyamman Temple"

    • இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.
    • இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு பட்டியலின மக்கள் வழிபடக் கூடாது என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மக்களிடையே மோதல் நிலவி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திரவுபதியம்மன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இக்கோவில் பிரச்சினை தொடர்பாக இரு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க நேற்று அழைக்கப்பட்டனர்.

    அதன்படி இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த 80 பேரில் பட்டியலினத்தை சேர்ந்த 24 பேரும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த 38 பேரும் என 62 பேர் விழுப்புரத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நேரில் ஆஜர் ஆனார்கள்.

    இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி எழுத்துப் பூர்வமான விளக்கத்தை பெற்றுக் கொண்டார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    அப்போது தனி நபருக்கு சொந்தமான கோவில் என்பதால் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது என்பது எங்களது தனிப்பட்ட விருப்பம். இது தொடர்பாக நாங்கள் நீதி மன்றத்தை நாட உள்ளதாக ஒரு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்தனர்.

    இதே போல் கோவிலுக்குள் எங்களை அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், எங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவும் நாங்கள் ஊரை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக மறு தரப்பில் ஆஜரானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதனால் பேச்சு வார்த்தையில் இழுபறி நிலவியது. இரு தரப்புக்கும் சமரசம் ஏற்படாத சூழ்நிலையில் மீண்டும் இரு தரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும். விசாரணை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளர்.

    • மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.
    • கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    விழுப்புரம்:

    மேல்பாதியில் 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி நடை பெற்ற திருவிழாவில் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இரு சமுதாய மக்களிடையே பிரச்சினை உருவானது.

    கோவிலில் வழிபாடு மேற்கொள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 5 முறையும், மாவட்ட கலெக்டர் தலைமையில் 3 முறையும் பல்வேறு கட்டங்களில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் தீர்வு காணப்படவில்லை.

    இதனால் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று காலை தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்தனர்.

    அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் கோவில் அமைந்துள்ள பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் கோவில் அருகில் இரு தரப்பினரும் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இன்று 2-வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில் இரு தரப்பினரும் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை எழுத்து பூர்வமாக உரிய ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பின்னர் 2-ம் கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பட்டியலின மக்கள் தங்களை கோவிலில் வழிபட அனுமதி அளிக்குமாறு கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
    • 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

    விழுப்புரம்-சென்னை சாலையில் மேல்பாதி கிராமம் உள்ளது. இக்கிரா மத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற்றது.

    அப்போது பட்டியலினத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வழிபட வந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் காயம் அடைந்தனர். இதனால் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    பட்டியலின மக்கள் தங்களை கோவிலில் வழிபட அனுமதி அளிக்குமாறு கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் தங்கள் அடையாள அட்டையை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தாசில்தார், கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. மேலும் கலெக்டர் பழனி தலைமையிலும் இரு சமூத்தினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 8 முறை இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் சுமூக உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலுக்கு திடீரென சீல் வைக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் எடுத்துள்ளனர்.

    கோவிலுக்கு சீல் வைக்கப் பட்டதால் மேல்பாதி கிராமத்தில் பதட்டம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேல்பாதி கிராம முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள திரவுபதி அம்மன் கோவிலை சுற்றிலும் பேரி கார்டுகளை அமைத்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு வாகனங்களுடன் அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேல்பாதி கிராமம் அமைந்துள்ள விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் கூட்டு ரோடு வரையிலான கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை போலீசார் மூடினர்.

    விக்கிரவாண்டியில் இருந்து வரும் வாகனங்கள் முண்டியம்பாக்கம், விழுப்புரம் வழியாக திருப்பிவிடப்பட்டது. அதே போல் கோலியனூர் கூட்டு ரோடு வழியாக வரும் வாகனங்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பிவிடப்பட்டது.

    மேல்பாதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதற்கிடையே வருகிற வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் ஆஜராகுமாறு விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது.
    • அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்ச்சிகளும் மாலை 6மணிக்கு திமீதி திருவிழா நடைபெறுகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா பழங்காலம் தொட்டு மகாபாரத கதையை மையமாக வைத்து சித்திரை மாதத்தில் 22 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கோவில் முதல் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமிக்கு அலங்காரம், சிறப்புபூஜைகள், தெருக்கூத்து, இன்னிசை கச்சேரிகள் நடைபெறும். சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை இன்னிசையுடன் இரவில் சாமி திருவீதி உலாவும்,நடைபெறுகிறது.

    நேற்று 12-ம்நாள் திருவிழாவில் சாமி சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. வருகிற 4-ந் தேதி கரகத்திரு விழாவும் 5-ந் தேதி காலை 8 மணிக்கு அரவாண், வீரபத்திரன் சாமி வீதி உலாவும், 10 மணிக்கு அரவாண் சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும், அரவாண் களப்பலியும், 11மணி முதல் 1 மணி வரை மகாபாரத பஞ்சபாண்டவர்கள் கதையை மையமாக கொண்ட மாடு வளைத்தல்,கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் 3 மணியளவில் அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்ச்சிகளும் மாலை 6மணிக்கு திமீதி திருவிழா நடைபெறுகிறது. அதன் பிறகுமஞ்சள் நீராட்டு விழா, தர்மர் பட்டாபிஷேகம், தெப்ப திருவிழா, காவபூஜைகளும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    ×