என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protest"

    • தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர்.
    • புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை.

    2025, நேபாள வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. பல்லாண்டுகளாக நீடித்த பழைய அரசியல் கட்டமைப்பை 1997 முதல் 2012 இடையில் பிறந்த 'ஜென்-சி' (Gen Z) என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் தங்கள் போராட்டத்தின் மூலம் தகர்த்தெறிந்துள்ளனர்.

    ஒரு புரட்சி தொடங்க 2 காரணிகள் உண்டு. ஒன்று நீண்டகால காரணி. மற்றொரு உடனடி காரணி.

    நேபாளத்தை அரசியல் மாற்றத்திற்கான விதைகள் 2025 தொடக்கத்திலேயே தூவப்பட்டன.

    பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மீது ஊழல் புகார்கள், பொருளாதாரத் மந்த நிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக இளைஞர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

    இதேநேரம் அரசியல் தலைவர்களின் மகன்களும் மகள்களும் ஆடம்பர வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரப்பப்பட்டன. தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர். இதுவே நீண்டகால காரணிகள்.

    புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை. அந்த வகையில் செப்டம்பர் 4, 2025 அன்று, அரசு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதித்தது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கையே நாடு தழுவிய போராட்டத்திற்கு உடனடி காரணியாக அமைந்தது.

    செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நேபாளத்தின் வீதிகள் போர்க்களமாக மாறின.

    பாராளுமன்றக் கட்டிடம், உச்ச நீதிமன்றம் மற்றும் பிரதமரின் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டிடங்கள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.

    பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் களம் இறக்கப்பட்டது.

    இந்தப் போராட்டங்களால் நேபாளத்திற்கு சுமார் 586 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    போராட்டத்தின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் செப்டம்பர் 9-ஆம் தேதி பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, நாட்டின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.

    சுவாரஸ்யமாக, இவரது தேர்வு Discord என்ற சமூக வலைதளம் மூலம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மற்றும் ராணுவம், ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தது.

    நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பொதுத்தேர்தல் 2026 மார்ச் 5 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025-ஆம் ஆண்டு நேபாள இளைஞர்கள் தங்களின் வலிமையால் ஒரு ஆட்சியையே கவிழ்க்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தனர்.

    வரும் 2026 தேர்தல், நேபாளத்தில் மீண்டும் பழைய அரசியல்வாதிகளின் கைகளுக்குச் செல்லுமா அல்லது புதிய இளம் தலைமுறைத் தலைவர்களை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

    இதேபோல் மற்ற சில நாடுகளிலும் அரசுக்கு எதிராக ஜென் z போராட்டங்கள் வெடித்தன.

    மடகாஸ்கர்: அகடோபர் மாதம் மடகாஸ்கரில் கடும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இதனை எதிர்த்துத் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம், விரைவிலேயே அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான மாபெரும் புரட்சியாக உருவெடுத்தது.

    இந்தோனேசியா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான வீட்டு வாடகைப் படிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் இந்தோனேசிய இளைஞர்கள் போராடினர்.

    இந்தப் போராட்டத்தின் தீவிரத்தால் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    மொராக்கோ: 2030 பிபா கால்பந்து உலகக் கோப்பைக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிய அதே வேளையில், கல்வி மற்றும் சுகாதாரம் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.

    'GenZ 212' என்ற ஆன்லைன் குழுவின் மூலம் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.

    பல்கேரியா: 2026-ஆம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட் ஊழலுக்கு வழிவகுப்பதாகக் கூறி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராடினர்.

    பிலிப்பைன்ஸ்: வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடந்த பெரும் ஊழலைக் கண்டித்து பிலிப்பைன்ஸ் இளைஞர்கள் களமிறங்கினர். தவறு செய்த அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அதிபர் மார்க்கோஸ் ஜூனியருக்கு அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

    கென்யா: கென்யாவில் வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து தொடங்கிய போராட்டம், 2025 ஜூலை மாதத்தில் போலீஸ் அராஜகத்திற்கு எதிரான போராட்டமாக மாறியது. இளைஞர்கள் கடத்தப்படுவதையும் சட்டவிரோதக் கைதுகளையும் எதிர்த்து அவர்கள் இடைவிடாமல் போராடினர்.

    மெக்சிகோ: குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு மற்றும் மேயர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இளைஞர்கள் தேசிய மாளிகைக்குள் அதிரடியாகப் புகுந்து போராடினர்

    பெரு: அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் தினா பொலுவார்டே பதவி விலகக் கோரி செப்டம்பரில் போராட்டங்கள் வெடித்தன.

    2025-ஆம் ஆண்டில் 'ஜென் Z' இளைஞர்கள் வெறும் சமூக வலைதளங்களில் மட்டும் கருத்துகளைப் பதிவிடாமல், களத்தில் இறங்கி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு புதிய அரசியல் வடிவதற்கான ஆரம்பமாகவே இந்த உலகளாவிய போராட்டங்கள் பார்க்கப்படுகின்றன. 

    • போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை இடுவாய் அடுத்த சின்னகாளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டுவதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 3 பேர் மற்றும் போலீசார் 4 பேர் காயமடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனை கண்டித்து நேற்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து போலீசார் அண்ணாமலை உள்பட 600க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை இரவு விடுதலை செய்தனர்.

    இந்தநிலையில் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தடையை மீறி ஆர்ப்பா ட்டம் செய்தது, அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • சென்னையிலும் - மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • பா.ஜ.க. அரசையும் - ஒத்து ஊதும் அ.தி.மு.க.வைக் கண்டித்தும் முழக்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.

    தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது, வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, 'கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு' என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியும் - நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அடிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நாசகார சதிச் செயலையும் - அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.கவையும் கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் 'மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் 24.12.2025 புதன்கிழமை காலை 10.00 மணியளவில், தலைநகர் சென்னையிலும் - மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

    மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – மாநில நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சியைச் சார்ந்த அனைத்து கூட்டணி அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில், மாவட்ட கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசையும் - ஒத்து ஊதும் அ.தி.மு.க.வைக் கண்டித்தும் முழக்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.
    • தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    புதுச்சேரி:

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாளில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்ட நிலையில் தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்கவில்லை.

    இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து புதுச்சேரியில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் மற்றும் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

    அதன்படி புதுச்சேரியில் இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் சார்பில் மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றும் போராட்டம் சுதேசி காட்டன் மில் அருகே நடந்தது.

    தமிழக பா.ஜ.க. தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாதிரி தீபத் தூணில் தொழிலதிபர் குணசேகரன் தீபத்தை ஏற்றினார். திருக்கனூர் அருகேயுள்ள திருமங்கலம் ஸ்ரீ கணேச தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி பா.ஜனதா தலைவர் வி.பி.ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், செல்வம், தீப்பாய்ந்தான், இந்து முன்னணி தலைவர் சனில்குமார் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள், முருகபக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • வேலைவாய்ப்பு நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்படும்.
    • மத்திய அரசின் பங்களிப்பு 100%ல் இருந்து 60% ஆக குறைக்கப்படும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கூட்டணி அரசால் 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பா.ஜ.க. ஆட்சியில் இதற்கான நிதியை விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பல்வேறு மாநிலங்கள் குற்றம்சாட்டின.

    இதற்கிடையே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பதை விரிவுபடுத்தி பூஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் 125 நாள் வேலைத்திட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவின்படி வேலைவாய்ப்பு நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்படும். குறிப்பாக, மத்திய அரசின் பங்களிப்பு 100%ல் இருந்து 60% ஆக குறைக்கப்படும். இதனால் மாநிலங்களுக்கு நிதி சுமை ஏற்படும். இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

    • இந்துக்களை ஏமாளியாக நினைத்து ஓட்டு வாங்கலாம் என நினைக்கின்றனர்.
    • இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து.

    திருப்பூர்:

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கூடாது என காவல் துறையை வைத்து தடுப்பது இந்துக்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மனுதாரரையும் தடுத்து அரசு இரட்டை வேடம் போடுகிறது. தி.மு.க. இந்து விரோத அரசாக செயல்படுகிறது. 178 கோவில்களை தி.மு.க. அரசு இடித்துள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இப்படி செய்கின்றனர். இந்துக்களை ஏமாளியாக நினைத்து ஓட்டு வாங்கலாம் என நினைக்கின்றனர். காவல் துறையும் கூலிக்காரர்கள் போல நடத்தப்படுகிறார்கள். இதனை கண்டித்து வருகிற 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சட்டத்துறை அமைச்சர் தவறான தகவல்களை சொல்கிறார்.

    இந்த நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. ஆனால் மற்ற மதத்தை போல இந்துக்களை நடத்துவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனை அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    டெல்லியில் காற்று மாசுப் பிரச்சனையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று பாராளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் முகக்கவசத்துடன் வந்தனர்.

    இந்த நிலையில் டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்று முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    காங்கிரஸ் பாராளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரியங்கா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அப்போது சோனியா காந்தி நிருபர்களிடம் கூறும்போது, 'குழந்தைகள் இறந்து கொண்டு இருப்பதால் அரசு காற்று மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை போன்ற வயதானவர்களும் காற்று மாசு'வால் சிரமப்படுகிறார்கள் என்றார்.

    பிரியங்கா கூறும்போது, 'காற்று மாசுபாடு ஒரு அரசியல் பிரச்சனை அல்ல. இந்த பிரச்சனை குறித்து விவாதம் நடத்தி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அனைவரும் காற்று மாசுடன் தான் இருக்கிறோம். மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.

    காற்று மாசு பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேனர்களை வைத்திருந்தனர். மேலும் பிரதமர் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களையும் எழுப்பினார்கள்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக நேற்று முன்தினமும், புதிய தொழிலாளர்கள் சட்டத்துக்கு எதிராக நேற்றும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    3-வது நாளாக இன்று டெல்லி காற்று மாசு பிரச்சனையை தடுக்க கோரி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




    • கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
    • வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.

    கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ் நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் காலை 10 மணியளவில் 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

    இவ்வாறு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

    • திமுக அரசைக் கண்டித்து 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது.
    • மழை எச்சரிக்கையால் இந்த ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை மிரட்டி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை கண்டும் காணாமலும் இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 20-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.

    ஆர்ப்பாட்டம் காலை 10 மணியளவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் (காவலான் கேட்) நடைபெறும். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரித்து போராட்டம் நடத்தப்பட்டது.
    • அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

    பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உருவபொம்மையை எரித்துப்போராட்டம் நடத்தப்பட்டது.

    பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

    கோவை அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். உருவபொம்மையை எரித்தபடி சாலையில் ஓடியபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து கருப்பு கொடி போராட்டம் நடத்திய முற்போக்கு அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

    • சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
    • இதனால் ஆர்ப்பாட்டம் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில் 17.11.2025, திங்கட்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளதால், மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு 20.11.2025, வியாழக்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
    • குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன்.

    தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் அதை வெளிப்படுத்த ஒரு வழி தேவைப்படுகிறது. அதே போல், அதி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இயல்பாகவே நாம் தான் வன்னியர்களுக்கான சமூகநீதி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். எனவே, நமது பாட்டாளி சொந்தங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நாம் நடத்தவிருக்கும் 'வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தின்' நோக்கங்களை விளக்கும் துண்டறிக்கைகளை அனைத்துக் கட்சியினரிடமும் கொடுத்து, குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்புவதற்காக நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது. நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும். பாட்டாளிகளை அடைக்க தமிழ்நாட்டின் சிறைகள் போதாது என்று அஞ்சும் அளவுக்கும், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக்கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் டிசம்பர் 17-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×