search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Government"

    • இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
    • இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    ▪️ தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ பணிப் பலன்கள், மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை முறையாக பெற்று வழங்க அரசு நடவடிக்கை.

    ▪️ மணிமுத்தாறு அருகே அரசு சார்பில் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள 240 வீடுகளை தொழிலாளர்களுக்கு வழங்க அரசு தயராக உள்ளது. இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.

    ▪️ ₹11.54 லட்சம் மதிப்பு கொண்ட ஒரு வீட்டுக்கு அரசு ₹8.5 லட்சம் மானியமாக வழங்குகிறது. மீதம் ₹3.04 லட்சத்தை மட்டும் பயனாளிகள் செலுத்த வேண்டும். கூடுதல் மானியம் அளித்து வீடுகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

    ▪️ 55 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் மற்றும் நீட்ஸ் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் ஏற்பாடு செய்ய அரசு தயார்.

    ▪️ இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    ▪️ சிறு கால்நடைப் பண்ணை அமைக்க அல்லது கறவை மாடுகள், ஆடுகள் வாங்கிட வட்டியில்லாத கடன் வழங்க நடவடிக்கை.

    ▪️ குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பிய பள்ளியில் சேர்க்கவும், விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    ▪️ தொழிலாளர்களின் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை அவர்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றி வழங்க ஒற்றைச் சாரள முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    ▪️ தொழிலாளர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும் 'பர்மா பாம்பே டிரேடிங் கம்பெனி' நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது.
    • தமிழக விவசாய மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசினுடைய மிக முக்கிய கடமையாகும்.

    தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது மட்டும் அல்லாமல், முறைப்படி நீதிமன்றத்தையும் அணுகி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் உரிய நேரத்தில் அரசு பெற்று தர வேண்டும் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் டெல்டா பகுதி முழுவதும் பாலைவனமாக மாறிவரும் நிலையில், விவசாயிகள் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது.

    எனவே கர்நாடக அரசு தர மறுக்கும் தண்ணீரை உடனடியாக தமிழகத்திற்கு பெற்று நமது தமிழக விவசாய மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசினுடைய மிக முக்கிய கடமையாகும். எனவே நீதிமன்றத்திற்கு சென்ற பிறகும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியையும் கூட்டி தமிழக விவசாயிகள் நலனை காக்க மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமிழக அரசே முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்ற கூறியுள்ளார்.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளக் கூடாது.
    • தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான இந்தப் போக்கை கர்நாடக அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆணையின்படி வருகிற 31-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தினம் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு நேற்று ஆணையிட்டது. ஆனால் 'காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் போதுமான மழை பெய்யவில்லையென்றும்; 28 சதவீத அளவில் குறைவாக மழை பெய்து இருக்கிறதென்றும்; அதனால் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் கூறியுள்ள கர்நாடக அரசு, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை எதிர்த்து காவிரி நீர்மேலாண்மை வாரியத்திடம் மேல் முறையீடு செய்யப் போகிறோம்' என்றும் கூறி உள்ளது. இது தொடர்பாக கடந்த 14-ந் தேதி அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.


    கர்நாடகாவில் உள்ள ஹாரங்கி அணையில் 73 சதவீத தண்ணீரும் , ஹேமாவதி அணையில் 55 சதவீத தண்ணீரும் , கிருஷ்ணராஜசாகர் அணையில் 54 சதவீத தண்ணீரும், கபினியில் 96 சதவீதம் தண்ணீரும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கட்டின் முழு கொள்ளளவுக்கும் தண்ணீர் நிரம்பியுள்ளது. அவ்வாறு இருந்தும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது என கர்நாடகா அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான இந்தப் போக்கை கர்நாடக அரசு கைவிட வேண்டும்.

    காவிரிப் பிரச்சனையை பொருத்தமட்டில் கர்நாடகாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் ஒரே நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலோ இதிலும் அரசியல் தான் செய்யப்படுகிறது. இந்த நிலையை மாற்றி கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டிலும் காவிரி பிரச்சனையில் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

    "கர்நாடக அரசு போலவே தமிழ்நாடு அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதி களடங்கிய அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடி வெடுக்க வேண்டும்" என்று முதலமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.
    • ஒதுக்கீட்டை ரத்துசெய்து விடியா திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகிறேன்

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு அரசு, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்துள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.

    மருத்துவர்கள் தங்கள் நேரத்தை மற்றும் உழைப்பை பொதுமக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக அரசு அவர்களது கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இப்படி ஒரு முடிவை எடுப்பதன் மூலம், அரசு மருத்துவர்களின் எதிர்கால கனவுகளைத் தகர்த்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    விடியா திமுக அரசு, மத்திய அரசின் வேலை வாய்ப்பு ஒழிப்பு கொள்கைகளை எதிர்ப்பதாக கூறி மக்களிடம் கபட நாடகம் ஆடுவது இந்த உத்தரவின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதோ அல்லது மாற்றம் செய்வது ஏற்கத்தக்கதல்ல. இது முழுமையான இரட்டை வேடத்தை காட்டுகிறது.

    இது மருத்துவப் பட்டமேற்படிப்புகளை படிக்க விரும்பும் அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே உடனடியாக அரசு பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பிற்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்து விடியா திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • ரூ.5 லட்சம் குடும்ப நல நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மின்வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை.
    • நியாயமான கோரிக்கைகள் என்று கடந்த காலத்தில் கூறிய முதலமைச்சர், இப்போது அவற்றை நிறைவேற்ற மறுப்பது ஏன்?

    பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 55000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்குக் கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    மின்வாரியத்தில் நிரப்பப்படாமல் உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும். ஓய்வுக்கால பணபலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும். ரூ.5 லட்சம் குடும்ப நல நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மின்வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை. மின்சார வாரியம் செம்மையாக செயல்பட வேண்டும் என்றால் இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.

    மின்வாரிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவும் புதிதாக முன்வைக்கப்படுபவை அல்ல. இவை அனைத்தும் பல ஆண்டுகளாக வலியுறுத்தபட்டு வருபவை தான். இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியுள்ளார். அப்போது நியாயமாக தெரிந்த கோரிக்கைகள் இப்போது நியாயமானவையாக தெரியவில்லையா? அவை நியாயமான கோரிக்கைகள் என்று கடந்த காலத்தில் கூறிய முதலமைச்சர், இப்போது அவற்றை நிறைவேற்ற மறுப்பது ஏன்? தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுகளின் போது இந்த கோரிக்கைகளை ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ள மறுத்தது ஏன்?

    தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் மின்வாரியம் தான். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் மீது 100 மாதங்களுக்கும் மேலாக அகல்விலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதே நிலை மின்சார வாரியத்திற்கும் வந்து விடக்கூடாது. மின்சார வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு நடத்தி, அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது.
    • உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது. அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தெரிவித்ததோடு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன். இந்தத் துயரத்தில் வாடும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மீண்டு வருவதற்கான மன உறுதியை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இந்தக் கொலையில் சரணடைந்த குற்றவாளிகள், உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக

    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கொடுஞ்செயல் புரிந்தவர்களையும், தொடர்புடைய அனைத்து உண்மைக் குற்றவாளிகளையும், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதி போக்கப்பட்டிருக்கிறது.
    • சமூக நீதியில் அக்கறைக் கொண்ட ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு எந்த சமூகப் பிரிவினரையும் கொண்டு நிரப்பக் கூடாது என கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் பிறப்பித்த ஆணை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதி போக்கப்பட்டிருக்கிறது.

    கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் ஜூலை 2&ஆம் நாள் பிறப்பித்த ஆணையில் ''கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்து, அவற்றை நிரப்ப சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம். அதேநேரத்தில் பட்டியலின/ பழங்குடியின/ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    கல்லூரிக் கல்வி இயக்குனரின் ஆணை சமூகநீதிக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டி கடந்த 3-ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,'' பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்ப, அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின/பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்புவது சரியானது தான். அதன் மூலம் மாணவர் சேர்க்கை இடங்கள் வீணாவது தடுக்கப்படும். இதே அளவுகோல் தான் பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப அனுமதிப்பது தான் சரியானதாக இருக்கும். அதற்கு மாறாக, காலியாக உள்ள பட்டியலின/பழங்குடியினருக்கான இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்றால், அந்த இடங்கள் காலியாகவே கிடக்கும்" என்று கூறியிருந்தேன்.

    அதைத் தொடர்ந்து தமது ஆணையை திரும்பப் பெற்றுள்ள கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம், ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியிருந்த 22.05.2024-ஆம் தேதியிட்ட உயர்கல்வித்துறை அரசாணை எண் 110-இன்படி, பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/சீர்மரபினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

     

    அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையில் சமூகநீதிக்கு துரோகம் செய்த திமுக அரசு, பொதுவெளியில் அம்பலப்பட்டதால் அதன் தவறை இப்போது திருத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இது மட்டுமே போதுமானதல்ல. மாணவர் சேர்க்கை குறித்து ஏற்கனவே தெளிவான வழிகாட்டுதல்களுடன் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மாற்றி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்தது ஏன்? அவ்வாறு செய்ய அவரைத் தூண்டியது யார்? இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

    சமூக நீதிக்கு துரோகம் இழைக்க முயன்றதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். கல்லூரிக் கல்வி இயக்குனரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கி விட்டு, சமூக நீதியில் அக்கறைக் கொண்ட ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • சாதி கலவரத்தைத் தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல், மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
    • முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கடந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனையும் அவரது தங்கையையும் வீடு புகுந்து சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதலும் வன்முறையும் தலைதூக்கியிருப்பது ஆபத்து வாய்ந்தது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற மோதல்களை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்த்ரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற சில மாதங்களிலேயே திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுதொடர்பாக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

    திருநெல்வேலியில் மாணவர்களிடையே சாதி கலவரத்தைத் தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல், மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது போன்ற நிகழ்வு அதே பள்ளிகூடத்தில் ஏற்கனவே நிகழ்ந்ததுள்ளது. இன்றைக்கு மாணவர்களிடையே காணப்படும் சாதி மோதல் என்பது தொடர்கதையாக மாறினால், அவர்களின் எதிர்காலமும் வருங்கால சமுதாயமும் பாதிக்கூடிய வகையில் அமைய வாய்ப்பு இருக்கிறது.

    மாணவர்களுக்குள் எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஒரே மாதிரியான சீருடைகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், எத்தனை பாரதியார், பெரியார் வந்தாலும், சாதிகள் இல்லை என்று சொன்னாலும், இந்த சாதி வெறி என்பது. இளம் வயதிலேயே, அதுவும் பள்ளிக்கூடங்களிலிருந்து தொடங்குவது, எதிர்காலத் தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும். எனவே முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.

    • அரசுத்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
    • தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன.

    தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஜி.கே. வாசன் கூறியிருப்பதாவது,

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து வெடிவிபத்துகள் ஏற்படுவதும், தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இத்தகைய விபத்துகளுக்கு யார் காரணம் ? யார் பொறுப்பு என்பதை அறிய முடியாமலேயே விபத்துகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்துகளை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசுத்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார்.

    பட்டாசு ஆலை வெடி விபத்துகள் இனி நிகழாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது பாதியில்தான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமாகும்.
    • மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக தண்ணீர் திறந்து விடப்படும் நாளான ஜூன் 12-ந் தேதியாகிய இன்று, நடப்பு குறுவை பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

    ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது பாதியில்தான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமாகும். அதுவரை குறுவை சாகுபடியை தாமதிக்க முடியாது. அவ்வாறு தாமதித்தால், குறுவை பயிர்கள் வடகிழக்குப் பருவமழையில் சிக்கி சேதமாகும் ஆபத்துள்ளது. அனைத்துக் காரணிகளையும் ஆய்வு செய்து பார்க்கும் போது நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யப்படுவதை ஊக்குவிப்பது தான் சாத்தியமான, புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்.

    எனவே, உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்ய வேளாண்மைக்காக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது.
    • தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு இருபோக நெல் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது.

    மேலும் தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பின்னர் 2022ம் ஆண்டு மேலும் இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களையும் சேர்த்து ஐவர் குழுவாக மாற்றப்பட்டது.

    தற்போது குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் தலைமை பொறியாளர் ராஜேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி தொழில்நுட்பக் குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர் பாசனத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் வேணு, நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி ஆய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஆய்வு தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் வருகிற 13, 14-ந் தேதிகளில் மத்திய கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும் முல்லைப்பெரியாறு அணையின் பலம் குறித்து கேரளா சந்தேகம் எழுப்பி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. தற்போதும் பரபரப்பான இந்த சூழலில் மத்திய கண்காணிப்புக்குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம்.
    • கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணை பலம் இழந்து வருவதாகவும், அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு தமிழக அரசு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு கேரள அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் அணை பலமாக இருப்பதாகவும், அதனை இடித்து புதிய அணை கட்டத் தேவையில்லை எனவும் உத்தரவிட்டனர். மேலும் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் எனவும் உத்தரவிட்டது.

    அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் நீர்வரத்து, தண்ணீர் திறப்பு, கசிவு உள்ளிட்டவற்றை பார்வையிட மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகளை உள்ளடக்கிய மூவர் குழுவும், அவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் அவ்வப்போது அணை பகுதியை பார்வையிட்டு அதன் அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடந்த கேரள சட்டசபைக் கூட்ட தொடரில் முல்லைப்பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்க கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் குழுவுக்கு அறிக்கை அளித்தது.

    இதன் மீதான விசாரணை நாளை மறுநாள் (28-ந் தேதி) வர உள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த விவகாரம் வெளியில் தெரியாத நிலையில் தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசின் கடிதம் விசாரணைக்கு வர உள்ள தகவல் தமிழக விவசாயிகளிடம் தெரிய வந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீரினை பயன்படுத்தும் 5 மாவட்ட விவசாயிகள் நாளை (27-ந் தேதி) மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் ஒன்று திரண்டு விவசாயிகள் அங்கிருந்து கேரள எல்லையான குமுளிக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

    ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை அமலில் இருப்பதால் எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி நாளை லோயர் கேம்ப்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு திரண்டால் அதனை தடுத்து நிறுத்தி கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் எந்தவித அமைப்பினரோ, குழுவினரோ போராட்டம் நடத்தக்கூடாது. இது வரை விவசாயிகள் அமைப்போ, வேறு எந்த அமைப்போ போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அளிக்கவில்லை. அவ்வாறு கடிதம் அளித்தாலும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்றனர்.

    இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. இது தமிழக விவசாயிகளின் உணர்வு பூர்வமான விஷயம். எங்கள் எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் மட்டுமே தெரிவிக்க முடியும். தமிழக அரசு கடிதம் எழுதி விட்டால் அனைத்தும் நடந்து விடும் என்று நினைக்கின்றனர். இது தவறு. கேரள அரசு தாங்கள் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிக்காதவர்கள். எனவே அவர்களிடம் கடிதம் எழுதினால் நடந்து விடும் என்று தமிழக அரசு நினைப்பது தவறு. விவசாயிகள் போராட்டத்தை தடுத்தால் அது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என்றனர்.

    இதனிடையே பேரணிக்கு திட்டமிட்டுள்ள லோயர் கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    ×