என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Right to Education Act"

    • இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    • தேசிய ஆசிரியர் கல்விக் குழுமச் சட்டத்திலும் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்

    இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களை குறிப்பாக தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான ஆசிரியர்களை பாதிக்கும் அவசரமான மற்றும் முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆதரவைக் கோரி இன்று (25-11-2025) கடிதம் எழுதியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, பிரிவு 23 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம் 1993 பிரிவு 12A-ல் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, ஆசிரியர்களைப் பாதுகாப்பதுடன் பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும் குழந்தைகளின் கல்பியும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்திட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் சிவில் மேல்முறையீடு எண் 1405/2025, 1385/2025 மற்றும் 1396/2025 மற்றும் பிற வழக்குகளில் 01.09.2025 அன்று உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சமீபத்திய தீர்ப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் அப்பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் TET தகுதியைப் பெற வேண்டும் என்றும் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் பணியைத் தொடர அனுமதிக்கப்பட்டாலும், TET தகுதி பெறாவிட்டால் பதவி உயர்வுக்குத் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தனது கடிதத்தில் கட்டிக்காட்டியுள்ளார்.

    தேசிய ஆசிரியர் கல்வி குழுமமானது (National Council for Teacher Education-NCTE) 23-8-2010-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) போன்ற புதிய தகுதித் தேவைகளிலிருந்து ஆரம்பத்தில் விலக்கு அளித்திருந்தது. என்றும். இருப்பினும் கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தற்போதைய இந்தத் தீர்ப்புரை ஆசிரியர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட விலக்கினை மீறி TET கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர், இதன் விளைவாக இந்த ஆசிரியர்கள் இப்போது இரண்டு ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும்: இல்லாவிடில், அவர்களின் வேலை பறிக்கப்படும் என்ற நிலை பெருத்த திருவாக சிரமத்தையும், ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட சிரமத்தையும் ஏற்படுத்தும் என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்

    பணி நிபந்தனைகளில் இத்தகைய மாற்றம் மற்றும் நியமனத்திற்குப் பின் பதவி உயர்வுக்கான அவர்களின் நியாமன எதிர்பார்ப்பில் இடையூறு என்பது ஆசிரியர்களின் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது என்றும், இது ஆசிரியர்களின் நியமனத்தின்போது. நடைமுறையில் இருந்த சட்டப்பூர்வ விதிகளின் கீழ் முழுமையாக தகுதி பெற்று முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையோரை நேரடியாக மதிப்பதாக முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ நான்கு இலட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள். நியமனம் செய்யப்பட்ட நேரத்தில், அவர்கள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகளையும் பூர்த்தி செய்தவர்கள் என்றும் ஈட்டப்படியான மற்றும் முறையான செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்றும் அதோடு 2011-TET அறிமுகப்படுத்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பணியில் சேர்ந்தவர்கள் அவர்கள் என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    இந்த ஆசிரியர்களுக்கு TET-ஐ முந்தைய தேதியிட்டு அமல்படுத்துவது என்பது அவர்கள் பணியில் தொடர்வதற்கும் மற்றும் பதவி உயர்வுகளுக்கான தகுதிக்கும் நீண்ட காலமாக நிலைநிறுத்தப்பட்ட பணி உரிமைகளில் குறிப்பிடத்தக்க இடையூறை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள் இது மாநிலத்தில் நிர்வாகரீதியாக சாத்தியற்ற ஒரு நிலையை உருவாக்குகிறது என்றும், பள்ளிக் கல்வி அமைப்பின் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் கடுமையான அபாயத்தை ஏற்படுத்துகிறது என்றும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    முந்தைய தேதியிட்டு இதனை அமல்படுத்துவது என்பது பெரிய அளவிலான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாடு முழுவதும் கண்கூடாகத் தெரியும் என்றும் ஆட்சேர்ப்பு சுழற்சிகள், தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கும் தன்மை மற்றும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணிநிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் எந்த மாநிலத்திலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஆசிரியர்களை மாற்றுவது சாத்தியமற்றது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் கட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட தகுதியைக் காரணமாகக் கொண்டு மட்டும் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகளை மறுப்பது என்பது பெருத்த அளவிலான சிரமத்தையும் தேக்க நிலைமையும் ஏற்படுத்துவதாக கவலையோடு குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், RTE சட்டத்தின் பிரிவு 23-ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்புரைகள் காரணமாக நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்தக் குறிப்புரையினால் ஏற்படும் பாதிப்பு என்பது. பிரிவுக் கூறு 21-A-ன்கீழ் அரசியலமைப்பு ரீதியான கல்வி உரிமைக்கும் பேரடி தாக்கங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (The RTE Act. 2009) பிரிவு 20 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம் 1993 ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்திடுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அப்போதுதான் 23.08.2010 அன்று பணியில் இருந்த ஆசிரியர்கள் பாதுகாக்கப்படுவதுடன், பதவி உயர்வுகளுக்கு தகுதி உடையவர்களாக இருப்பதையும். குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்திட இயலும் என்று தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசு நிதி கொடுத்தால் தான் மாணவர் சேர்க்கை நடத்துவோம் என்று கூறுவதற்கு தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல...
    • மாணவர் சேர்க்கையை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்ததால் பள்ளியில் சேர வசதியில்லாத பல்லாயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் பள்ளியில் சேரவில்லை.

    கல்வி பெறும் உரிமைச் சட்டப்படியான கட்டையாக கல்வி திட்டதில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை நடைமுறை வரும் 6-ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இந்நிலையில் இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பருவத்தே பயிர் செய்யத் தவறிய தமிழக அரசின் பொறுப்பற்ற செயலால் ஏழைகளிலும் ஏழைகளான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

    2009-ஆம் ஆண்டின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.

    இந்தப் பிரிவில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே செலுத்திவிடும் என்பதால் அக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்கிறது.

    இந்த இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மே மாதம் மாணவர் சேர்க்கை நடைபெறும். மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கையை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்ததால் பள்ளியில் சேர வசதியில்லாத பல்லாயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் பள்ளியில் சேரவில்லை.

    இந்த நேரத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், மாணவர் சேர்க்கைக்காக அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகள் அபத்தமாக உள்ளன. அதன்படி, இதுவரை பள்ளிகளில் சேராத எந்த மாணவரும் புதிதாக விண்ணப்பித்து தனியார் பள்ளிகளில் சேர முடியாது.

    மாறாக, ஏற்கனவே சேர்ந்த மாணவர்களில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றவர்கள் இருந்தால், அவர்கள் செலுத்தியக் கல்விக் கட்டணம் திருப்பித் தரப்படுமாம்.

    அவர்களின் எண்ணிக்கையும் 25%க்கும் கூடுதலாக இருந்தால், முதல் 25 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் வழங்கப்படுமாம்; மற்றவர்களுக்கு வழங்கப்படாதாம். தமிழக அரசின் விதிகள் அநீதியானவை.

    கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி கடந்த ஏப்ரல் மாதம் மாணவர் சேர்க்கைத் தொடங்காத நிலையில், அந்த சட்டத்தின்படி தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை இடங்களில் இலவசமாக சேரலாம் என காத்திருந்த மாணவர்களில் பெரும்பான்மையினர் எந்த பள்ளிகளிலும் சேரவில்லை.

    மீதமுள்ள மாணவர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள சிறந்த பள்ளிகளில் சேர முடியாமல், குறைந்த கட்டணம் வசூலிக்கும் சாதாரண பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    இப்போது மாணவர் சேர்க்கை தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு வகுத்திருக்கும் விதிகளின்படி இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களால் இனியும் சேர முடியாது; வேறு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களால் தங்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாறவும் முடியாது. அப்படியானால், மாணவர் சேர்க்கையை இப்போது தொடங்கியும் பயனில்லை.

    மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும், மாநில அரசு அதன் சொந்த நிதியில் கல்வி பெறும் உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கையை நடத்தி, நீதிமன்றத்தின் வாயிலாகவோ, அரசியல் அழுத்தத்தின் காரணமாகவோ மத்திய அரசிடம் நிதியை பெற்றிருக்க வேண்டும்.

    மத்திய அரசு நிதி கொடுத்தால் தான் மாணவர் சேர்க்கை நடத்துவோம் என்று கூறுவதற்கு தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. மக்களின் நலன்களை காக்கும் பொறுப்பு அதற்கு உள்ளது. அதை செய்யத் தவறியதால் பல்லாயிரம் மாணவர்கள் நடப்பாண்டில் பள்ளிகளில் சேர முடியவில்லை. அவர்களின் கல்விக்கு விளம்பர மாடல் அரசு என்ன செய்யப் போகிறது?

    நடப்புக் கல்வியாண்டில் இதுவரை எந்தப் பள்ளிகளிலும் சேராத, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி பயனடைய தகுதி கொள்ள குழந்தைகளை அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர அனுமதிக்க வேண்டும்.

    அதேபோல், ஏற்கனவே பணம் கட்டி சேர்ந்த குழந்தைகளுக்கு கட்டணத்தைத் திருப்பி தருவதுடன், அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர வகை செய்ய வேண்டும். அதற்கேற்ற வகையில் நடப்பாண்டிற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டது.
    • 2025-25 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்வி உரிமைக் கட்ட 2009 (RTE Act)-இன் கீழ் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.

    மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கிட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha} திட்டத்திலிருந்து பிரித்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    மேலும் தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP), PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.

    இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு தாங்கள் செய்தது.

    உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, மத்திய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக 2025-25 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது. 

    • என் ஆட்சியில் விளையாட்டு அமைச்சர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்’’ என்று ஸ்டாலின் மார்தட்டல் வேறு.
    • ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாய் வரையில் வழங்க பரிசு அறிவித்தது அதிமுக.

    கல்வி உரிமை திட்டத்திற்கான நிதியை ஒதுக்காதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கல்வி உரிமைச் சட்டத்தின்படி ((Right to Education Act), தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவீத ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசே செலுத்தும்.

    அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் இத்தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்டாலின் மாடல் திமுக அரசு, இந்தத் தொகையை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக கல்வியாளர்களும், பெற்றோர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை துவங்காதது குறித்து பதில் அளிக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான, விளையாட்டு அமைச்சர் உதயநிதியும், அவரின் ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சுய புராணங்களைப் பாடுவதில் தீவிரமாக உள்ளனர்.

    இதில், ``என் ஆட்சியில் விளையாட்டு அமைச்சர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்'' என்று ஸ்டாலின் மார்தட்டல் வேறு.

    24 மணி நேரமும் முழு கவனமும் ரீல்ஸ்க்கு போஸ் கொடுப்பது உள்ளிட்ட விளம்பர வேலைகளில் மட்டுமே இருக்கும் இவர்கள், செயலில் என்னவாக இருக்கின்றார்கள்?

    பள்ளி மாணவர்களை தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பத் தவறியதற்கு காரணமாக இருந்தவர்கள் தானே இவர்கள்? நல் அமைச்சர்கள்!

    இந்த லட்சணத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது விளையாட்டுத் துறை அமைச்சரை மக்களுக்குத் தெரியாது என்கிறார்.

    SDAT உருவாக்கி, விளையாட்டுக்கான CM Trophy தொடங்கி, அதற்கான பயிற்சித் தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கி, வெற்றிபெறும் ஒவ்வொரு வீரருக்கும் தலா

    1 லட்சம் ரூபாய் வழங்கி, Sports Hostel உருவாக்கி, அதற்கான ஊக்கப் படியை 75 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

    மேலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாய் வரையிலும்;

    ஆசிய போட்டிகளில் வெல்வோருக்கு 50 லட்சம் ரூபாய் வரையிலும்; தெற்காசிய மற்றும் தேசிய போட்டிகளில் வெல்வோருக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும், பரிசு அறிவித்து வழங்கியது கழக அரசு.

    அனைத்திலும் முத்தாய்ப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தது எனது தலைமையிலான கழக ஆட்சியில்.

    அமைச்சர் பெயர் முக்கியமல்ல திரு. ஸ்டாலின் அவர்களே, செயல் தான் முக்கியம்! அந்த செயல்வீரர்கள் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள். இது மக்களுக்கு நன்றாகத் தெரியும்!

    தமழ் நாட்டின் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாடு செல்ல வைத்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. பாஸ்போர்ட்டே இல்லாமல், "நாச்சியப்பன் பாத்திரக் கடை" கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட் எடுத்தவர்கள் தானே நீங்களும், உங்கள் விளையாட்டு அமைச்சரும்?

    மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லை என்று சொல்லிவிட்டு, உங்கள் மகன் ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக மக்கள் வரிப் பணத்தை கரியாக்கி, தெண்ட செலவு செய்து கார் ரேஸ் நடத்தியது தான் உங்கள் ஆட்சியின் சாதனை!

    முதலீடு வாங்க வருகிறேன் என்ற உல்லாச பயணத்தில், டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்து "ஆகா! ஆகாயத்தில் அதிசயம்" என்று ட்வீட் போட்டதையெல்லாம் சாதனை லிஸ்டில் சேர்ப்பீர்கள் என்றால், மக்கள் சிரிப்பார்கள்!

    விளையாட்டுத் துறை, விளையாட்டு வீரர்களை Promote செய்ய வேண்டும். அமைச்சரை அல்ல.

    மாணவர்களின் கல்வித் தொகையை செலுத்த வக்கில்லாத இந்த தி.மு.க. அரசு இருந்து என்ன பயன்?

    மத்திய அரசின் "புதிய கல்விக் கொள்கை"யை ஏற்க மறுத்ததால், நிதி இல்லை என்று திமுக அரசு சால்ஜாப்பு சொல்வதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? இது மாநில அரசு விடுவிக்க வேண்டிய நிதி. அதை கொடுக்க துப்பில்லாமல், வழக்கம்போல் யார் மேலாவது பழியைப் போட்டு தப்பிக்க முயல்வது, இன்னும் எத்தனைக் காலம்?

    இதைவிடக் கொடுமை என்னவென்றால், இத்தத் திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான நெட் சேவையும் இந்த ஸ்டாலின் மாடல் அரசால் முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது.

    "மாணவர்களை Apply பண்ண விட்டாதானே Fees கொடுக்கணும்?" என்று யாராச்சும் உங்களுக்கு ஆலோசனை கொடுத்தார்களா ஸ்டாலின் அவர்களே?

    உடனடியாக, கட்டாயக் கல்வி உரிமைத் திட்டத்தை முழுமையாக, முறையாக செயல்படுத்த வேண்டும் என்று ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஏழை குழந்தைகளை கட்டணம் செலுத்தும்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி.
    • மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பல தனியார் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் மாணவர்களும் முழுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது சட்டவிரோதம் ஆகும். நிர்வாகங்களின் மிரட்டலுக்கு பணிந்து கட்டணம் செலுத்தும் பெற்றோர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படுவதில்லை.

    இதை கண்காணிக்க வேண்டிய மாவட்டக் கல்வி அதிகாரிகளும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால், பள்ளி களின் கட்டணக் கொள்ளை யைத் தடுக்க முடியவில்லை. இதனால், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடம் கிடைத்தாலும் கூட, கட்டணம் செலுத்த வழி இல்லாததால் அந்த இடத்தில் சேர முடியாத நிலைக்கு ஏழைக் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி அரசு வழங்கும் கட்டணம் குறைக்கப்பட்டால், அதை எதிர்த்து அரசிடம் முறையிடலாம், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தலாம்? அதை விடுத்து அரசிடமும் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஏழைக் குழந்தைகளையும் கட்டணம் செலுத்தும்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும். இதை அரசும் வேடிக்கை பார்ப்பதை அனுமதிக்க முடியாது.

    கல்வி உரிமைச் சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சேர்ந்து பயில்வதையும், அவர்களிடம் எந்த கட்ட ணமும் வசூலிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணம் குறைக்கப்பட்டதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    இது தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்களை அரசு அழைத்து பேசி, இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் எந்த மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×