என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விசிக"
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற திருமாவளவனின் முழக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
- திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளதாக திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ள மது ஒழிப்பு மாநாடும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுகிறதா என்று கேள்வி எழுந்தது. ஆனால் திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளதாக திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.
இன்று கோவை விமான நிலையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வந்தபோது, தொண்டர்கள் அவரை வரவேற்கும்விதமாக, "வருங்கால முதல்வர் அண்ணன் திருமாவளவன்" என கோஷமிட்டனர். இந்த கோஷம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சில சம்பவங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
- விசிக கூட்டணியில் இருந்து விலகும் என்று கூறப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு அறிவித்தது, அதன் பிறகு கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக அவர் பேசிய பழைய வீடியோ வெளியிடப்பட்டு, பிறகு அது டெலீட் செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகி விடும் என்பது போன்ற கருத்துக்கள் பேசு பொருளாக காரணமாக அமைந்துள்ளன. தொல் திருமாவளவனின் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் பேச்சுக்களுக்கு திமுக தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளன் நாளை காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்திய செயல்பாடுகள் சர்ச்சையானதைத் தொடர்ந்து திருமாவளவன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- "சீட் ஷேர் அல்ல, பவர் ஷேர் தான் முக்கியம்" என திருமாவளவன் பேசிய வீடியோ விவாதப் பொருளானது.
- மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் பேசிய உரையின் சுருக்கம்.
ஆட்சி, அதிகாரம், அமைச்சரவையில் பங்கு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
" சீட் ஷேர் அல்ல, பவர் ஷேர் தான் முக்கியம்" என திருமாவளவன் பேசிய வீடியோ விவாதப் பொருளானது.
1999ம் ஆண்டு தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்தபோதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், செப்டம்பர் 12ம் தேதி அன்று மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் பேசிய உரையின் சுருக்கம் என குறிப்பிட்டு திருமாவளவன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருமாவளவனின் எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட வீடியோவின் முழு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
"கடைசி மனிதனுக்கும் சனநாயகம்!எளிய மக்களுக்கும் அதிகாரம்! ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! - என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி " - என்று கடந்த செப்-12 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல… pic.twitter.com/ukP8YXsfqR
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 14, 2024
- அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.
- கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
மதுரையில் காவல்துறையினர் எடுத்துச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் மீண்டும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொடிகம்பத்தை மீண்டும் வழங்கியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் நடனமாடி கொண்டாடினர்.
புதூர் பகுதியில் அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்.
இதனால், கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், விசிக கொடுக்கம்பம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரேன் மூலம் எடுத்து வரப்பட்ட 62 அடி உயர கொடிக்கம்பத்தை நடுவதற்கான பணியில் விசிக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
விசிக கொடி ஏற்றுவதில் பல்வேறு காரணங்களை கூறி மதுரை ஆட்சியர் தடை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மூத்த அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என திருமாவளவன் கூறி இருந்த நிலையில் கொடிக்கம்பம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாஜக, பாமக தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
- கள்ளச்சாராய மரணங்களை அடுத்து தமிழ்நாட்டில் மீண்டும் மதுவிலக்கு கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிரணி சார்பில் உளுந்தூர்பேட்டையில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இந்த மாநாட்டிற்கு பாஜக, பாமக தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக அதிமுகவும், தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று அவர் அறிவித்துள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்க கூடாது என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது. ஆனால் அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
பின்பு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த தேர்தலில் பூரண மதுவிலக்கு என்ற கோரிக்கையை திமுக கைவிட்டது.
அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராய மரணங்களை அடுத்து மீண்டும் மதுவிலக்கு கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகமான ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்த போதிலும் மாநிலத்திற்கான வரி வருவாய் பங்கீடு மிக குறைவாகவே கிடைப்பதாக திமுக அரசு கூறி வருகிறது. பத்திரப்பதிவு மற்றும் டாஸ்மாக் வருவாய் தான் தமிழ்நாடு அரசின் பிரதான வருவாயாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் வருவாய் தமிழ்நாட்டின் பிரதான வருவாயாக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மூடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி மது, போதை ஒழிப்பு மாநாடு அறிவிக்கவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால் இதில் 2026 தேர்தல் கணக்குகள் முழுமையாக இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள்நல கூட்டணியில் இடம்பெற்ற விசிக கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்லமுடியவில்லை. பின்பு 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 2 தொகுதிகளில் விசிக வென்றது. சிதம்பரம் தொகுதியில் வென்று திருமாவளவன் எம்பி ஆனார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்ந்த விசிக 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது தொகுதி பங்கீடு விஷயத்தில் திமுக விசிக இடையே இழுபறி நீடித்தது. விசிக 3 மக்களவை தொகுதிகள் கேட்டது. ஆனால் இறுதியாக திமுக 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. இந்த தொகுதிப் பங்கீடு விசிகவிற்கு மனக்கசப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
இன்னும் ஒன்றரை வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த முறை போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளில் போட்டியிடவே விசிக விரும்பும். இந்நிலையில் சென்ற முறை ஒதுக்கிய 6 தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை விசிகவிற்கு திமுக ஒதுக்குமா? என்றும் உறுதியாக சொல்லமுடியாது.
நிலைமை இப்படியிருக்க திமுக கூட்டணியில் பேரம் பேசும் வலிமையை அதிகரிக்க விசிக இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், திமுகவிற்கு எதிராக அதிமுக - தவெக (விஜய்) - நாதக (சீமான்) ஆகிய கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணி ஏற்பட்டால் விசிக கட்சி கூட்டணி மாறுவதற்கும் வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ள நிலையில், திமுகவின் நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆகியவற்றை பொறுத்துத்தான் விசிக எந்த கூட்டணியில் சேரும் என்று முடிவாகும்.
- போராட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது தொடர்பாக சீமான் கருத்து.
- புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது மதுவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் கூறியதாவது:-
பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை வெளியேற்றி, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை, அப்படியே கொடுக்க வேண்டும். அதுவே தமிழ் தேசியத்தின் விடுதலை. நீங்கள் செய்யவில்லை எனில், ஒருநாள் அதிகாரத்திற்கு வரும் போது, அதை நாங்கள் செய்வோம். வேளாளர் என்பதே எங்களின் குடிப்பெயர். எந்தத் தமிழ் சாதியில் பாண்டியன் எனும் பெயர் இல்லை என்பதை சொல்லுங்கள்.
இந்தியா ஒரு தேசமே இல்ல. மாநிலங்கள் மொழி வழியில் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இருந்த கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சிறப்பை சொல்லுங்க பார்ப்போம். புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என்று கல்வியயல் அறிஞர்கள் சொல்கிறார்கள். கல்வி எல்லாருக்கும் சமமாக இருக்கிறதா?
தாய் மொழி கல்வி என்பார்கள். அப்பறம் எதுக்கு சமஸ்கிருதம் உள்ளே வருகிறது. திருச்சி ஏர்போர்ட்டில் எதுக்கு சமஸ்கிருதத்தில் கல்வெட்டு. இதுதான் மொழி திணிப்பு. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், இந்தி இருக்கா, இல்லையா?
மது ஒழிப்புக்கு எதிராக இருந்தவர் ராமதாஸ். டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அப்புறம் என்ன ஆனது? திருமாவளவன், அ.தி.மு.க.,வுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவார், பின்னர் மீண்டும் டாஸ்மாக்கை திறக்கத் தானே செய்வார்கள்.
தி.மு.க.,வுடன் இருந்து கொண்டு திருமாவளவன் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா? விற்பனை குறைவானதற்கு டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த அரசு தான் தி.மு.க., அரசு.
ஒரு 5 ஆண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால், தமிழக மீனவனை இலங்கை கடற்படை தொட்டு விடுவானா? என்று பார்த்துக்கலாம். அப்படி தொட்டால், அன்னைக்கே பதவி விலகிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வி.சி.க. சார்பில் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
- இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார்.
திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை காலடிப்பேட்டையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அன்ன தானம் வழங்கும் விழாவில் பங்கேற்றார். அதன்பின், செய்தியாளர்களிடம் தமிழிசை பேசியதாவது:
மத்திய நிதி மந்திரி, ஜனாதிபதி என பெண்களுக்கு பல இடங்களில் பா.ஜ.க. முன்னுரிமை அளித்து வருகிறது. இங்குள்ள பெண்கள் சமையலறையில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ராகுல் காந்தி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
திருமாவளவன் மதுவைப் பற்றி பேசும்போது ஏன் மதத்தைப் பற்றி பேசவேண்டும். திமுக கூட்டணியில் இருந்தால் 2026-ம் ஆண்டு வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்துகொண்டு விட்டார்.
திருமாவளவன் நடத்தப் போகும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்பது புரியவில்லை. தி.மு.க.வில் இருக்கும் கூட்டணி கட்சிகள் தி.மு.க.வின் மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.
தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என கூறியது தவறு. தேசிய கல்விக் கொள்கையில் அப்பட்டமான அரசியலை ஸ்டாலின் அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.
- ஆணவப்படுகொலை என்பது வன்முறை அல்ல. பிள்ளைகள் மீதான அக்கறை என ரஞ்சித் பேசியிருந்தார்.
- நடிகர் ரஞ்சித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக புகார்.
இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள புதிய படம் கவுண்டம்பாளையம். அண்மை காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னர் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஆணவப்படுகொலை தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ஆணவப்படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது. தங்கள் பிள்ளைகள் மீதான அக்கறையின் வெளிப்பாடு தான் அது. நாம் பயன்படுத்தும் பைக்கை ஒருவர் திருட முயற்சிக்கிறார் என்றால் அவரையே தாக்க முற்படுகிறோம். நாம் பயன்படுத்தும் காலணியை ஒருவர் மாற்றி எடுத்துக் சென்றால் அவரிடம் சண்டையிட தயாராகிறோம். அப்படி இருக்கும் போது குழந்தைகள் என்பது அவர்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கு தான் தெரியும். இவை அனைத்தும் உணர்ச்சிவசப்பட்டு செய்வது தான் என விளக்கம் அளித்தார்.
இவர் அளித்த இந்த பேட்டியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இவரை திட்டி கமெண்டுகளை பதிவிட்டனர்.
இந்நிலையில், சமூக அமைதியை சீர்குலைப்பதாக நடிகர் ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வி.சி.க. மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில், "ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தில் திட்டமிட்டு விசிக-வை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளன; தணிக்கை குழுவிடம் புகார் அளித்த பின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது. இப்படத்தில், ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தும் வகையில் ரஞ்சித் கருத்துகளை தெரிவித்துள்ளார். சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வரும் ரஞ்சித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வன்னியரசு தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எந்த தலித் இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தலாம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறும் என இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், 'ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர்," கூலி வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற அரசியல் அறியாமையில் உலவுகிற சில அற்பர்கள், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை, விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை இயக்கத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிற நிலையில் நாம் அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்க கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது.
ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும், யாரோடும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யாரும் வந்து நம்மை அழைக்கலாம், இணைந்து செய்யலாம் என்று குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அவர்கள் திமுகவுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதனை திமுக எதிர்கொள்ளும் அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எல்லாவற்றிலும் நம்மை இணைத்து, இழுத்து, வம்பு இழுத்து விமர்சனங்களை செய்கிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. எந்த தலித் இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை.
நம்மை வேண்டுமென்றே ஏதோ சொந்த புத்தி இல்லை, சொந்த கால் இல்லை என்பதைப் போல சில அற்பர்கள் அவதூறுகள் பரப்பி இருக்கிறார்கள். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. நம்மை வைத்துக்கொண்டு நம்முடன் நின்று கொண்டு திமுக கூட்டணிக்கு எதிராக திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் கும்பல் ஏராளம் இருக்கிறார்கள்.
எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தலாம்.. போராட்டங்களை நடத்தலாம்.. இதனை நான் ஒரு வேண்டுகோளாக உங்களுக்கு வைத்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். இது நம்முடைய கட்சியின் தனித்துவத்தை எந்த விதத்தையும் பாதித்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்வில் இந்த கருத்தை நான் வைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
- குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்.
- அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களைச் சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைவழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழகத்தில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் ஆண்டுதோறும் ஏராளமான தோழர்களுடன் நாக்பூருக்குச் சென்று வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். சென்னை-பெரம்பூர் பகுதியில் அவரது இல்லத்தின் அருகில் பௌத்த விகார் ஒன்றைக் கட்டியுள்ளார். பண்பாட்டுத் தளத்தில் பௌத்தமே மாற்று என்பதை முன்னிறுத்தியவர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி மாயாவதி அம்மையாரின் நன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை - எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அண்மையில்தான் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு முதலாம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.
அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.
- மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும்.
மதுரை மேலவளவு படுகொலை 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. அரசு மதுபானங்கள் கள்ளச்சாராய மரணங்களுக்கு தீர்வல்ல. ஆகவே மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். ஆகவே தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் தடுக்க முடியும்.
கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் முழு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
- மெத்தனால் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- முழு மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர். முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே இக்கொடுமையைத் தடுக்கும் நிரந்தரத் தீர்வு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் 24-06-2024 அன்று மாலை 3.00 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கள்ளக்குறிச்சியில் 'மெத்தனால்' என்னும் அடர் ஆல்கஹால் கலந்த சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை குடித்த அப்பகுதிகளைச் சார்ந்த 140- க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பேரவலம் நாட்டைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் குரூரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.
மெத்தனால் என்னும் நஞ்சு கலந்த கள்ளச்சாராயம் கூடுதல் போதை அளிப்பதாகச் சொல்லி, சட்டத்துக்கு விரோதமாக ஒரு கும்பல் இந்த வணிகத்தில் ஈடுபட்டுவருகிறது.
மீளமுடியாத போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் தாம் அந்த வகையான கள்ளமதுவுக்கு வாடிக்கையாளர்களாக மாறி வருகின்றனர்.
இத்தகைய கள்ளவணிகம் கள்ளக்குறிச்சிப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. அதன்விளைவாக தற்போது 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த நச்சு சாராயத்தைக் குடித்து 22 பேர் உயிரிழந்தனர் என்பதை நாடறியும். அந்த நேரத்தில் 'மெத்தனாலின் கள்ள வணிக நடமாட்டத்தைக் கண்காணிப்போம்; இந்த கள்ளச்சந்தையில் ஈடுபட்டுவரும் மஃபியா கும்பலின் சட்டவிரோத கட்டுப்படுத்துவோம்' என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கள்ளச் சந்தையில் மெத்தனால் கட்டற்றமுறையில் புழக்கத்திலிருப்பது உறுதியாகியுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
அவ்வாறு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டிருந்தால்
இந்த உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாமே என்னும் கவலை மேலோங்குகிறது.
எனவே, இனியாவது மெத்தனால் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயிரிழந்த ஒவ்வொருவரது குடும்பத்துக்கும் தலா 10 இலட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சற்று ஆறுதலை அளிக்கிறது. இந்நடவடிக்கைகளை வரவேற்கிற அதேவேளையில், மெத்தனாலின் கள்ளவணிகத்தோடு தொடர்புடைய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள்மீது கடும்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே அரசின் சார்பில் மதுக்கடைகள் நடத்தப்படுவதாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையவாதமாக இல்லை என்பதை இத்தகைய சாவுகள் உறுதிப்படுத்துகின்றன.
அரசின் மதுபானம் தாரளமாகப் புழக்கத்திலிருந்தும் கள்ளச்சாரய வணிகம் வெளிப்படையாக நடக்கிறது. சில பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக ஊரறிய ஏலம் விடப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதிலிருந்து 'பாதுகாப்பான' அரசு சாராயத்தின் மூலம் கள்ளச்சாராய வணிகத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது.
அரசின் ' டாஸ்மாக் ' மதுக்கடைகளில் தொடர்ந்து மது அருந்தி போதைப்பழக்கத்திற்கு ஆளாகி மீளமுடியாத அடிமைகளாக மாறியவர்கள்தாம், அரசின் மதுவிலுள்ள போதை பற்றாத நிலையில் இத்தகைய நச்சு கலந்த கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர். எனவே, அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள்தாம் மதுபோதை அடிமைகளை உருவாக்குகிறது என்பதுவும் அதன் காரணமாகவே கூடுதல் போதைக்கான கள்ளச்சாராயத்துக்கு வழி வகுக்கிறது என்பதுவும் நாம் உணரவேண்டிய உண்மைகளாக உள்ளன.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு மாநில அரசுக்கான வருவாய் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், குடி நோயாளிகளால் மாநிலத்துக்கு ஏற்படும் மனிதவள இழப்பு, அவர்களால் மாநில அரசுக்கு ஏற்படும் சுகாதார செலவினச் சுமை ஆகியவற்றைக் கணக்கிட்டால் மதுக்கடைகளின் மூலம் வரும் வருவாயை விட இந்த இழப்பு அதிகம் என்பதை உணரலாம். எனவே, மதுக்கடைகள் நடத்துவதற்கு வருவாய் ஒரு காரணமாக சொல்லப்படுவது ஏற்புடையதாக இல்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
முழு மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டுமல்ல; இந்திய ஒன்றிய அரசுக்கும் உள்ளது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ( Directive Principles) அதுகுறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படியே, 1954 இல் இந்திய அரசின் திட்டக்குழுவின் சார்பில் "மதுவிலக்கு விசாரணைக் குழு" என ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 1955 செப்டம்பர் 10 ஆம் நாளன்று அறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையில் சில பரிந்துரைகளை முன்வைத்தது.
" *மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் தெளிவான ஒரு கால வரையறையை அறிவித்து அதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்;
*ஒன்றிய அரசின் மதுவிலக்குத் திட்டங்களுக்கு முழுமையாக மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒன்றிய அரசானது மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதன் மூலமாக மதுவிலக்கை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்;
* 1958 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய அளவில் இதற்கென சட்டம் ஒன்று இயற்றப்பட்டு அது அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். "
இவை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் உள்ளன. அந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்திருந்தால் மனிதவள இழப்புகளிலிருந்து இந்தியா மீண்டிருக்கும். எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கும்.
எனவே, இப்போதாவது அக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், நச்சு சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பதை விடவும் முழுமையான மதுவிலக்கின் தேவை குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்பதை மாநில அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்