என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viduthalai chiruthaigal katchi"

    • கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்போம்.
    • பா.ஜ.க.வால் அ.தி.மு.க உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. அந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு ஆய்வு அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவோம்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் மீதான சந்தேகங்களை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பும்போது இதன் மீதான விவாதம் தீவிரமாக இருக்கும்.

    எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் சூழல் உருவாகி இருப்பது கவலைக்குரியது.

    இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை உறுதி செய்ய இந்திய அரசு, இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் உண்மையான பூர்வகுடிகளின் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது.

    கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்போம்.

    செங்கோட்டையன் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் என்றாலும், தற்போதைய அ.தி.மு.க சூழலில் அவரது நிலை அந்தக் கட்சிக்கு சாதகமானது அல்ல. த.வெ.க.வில் அவர் இணைந்தது அவரது சொந்த விருப்பம்.

    பா.ஜ.க.வால் அ.தி.மு.க உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையன் த.வெ.க.வுக்கு சென்றது பா.ஜ.க நடத்திய சித்து விளையாட்டின் விளைவு என்றார். 

    • தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.
    • சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை உயர்நீதிமன்றக் கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்.

    தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ளவர்களில் ஏழு பேர் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்களாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர்களாகவும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

    தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது சாதி மத அரசியல் சார்பு அடிப்படையிலேயே இருக்கிறது. சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.

    தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதி திராவிடர் மற்றும் இதுவரை நீதிபதி நியமனங்களில் இடம்பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சமூக நீதிக்கு எதிராகத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் செய்வதை கொலேஜியம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு பக்கம் நடிகர் விஜய் மூலம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்துவதும் மறுபக்கம் அதிமுகவையே பலவீனப்படுத்துவதும் தான் பாஜகவின் சதி உத்தி.
    • தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார்.

    சென்னை :

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எச்சரிக்கை

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் நடிகர் விஜய் தலைமையில் த.வெ.க.வில் இணைவதற்கு பின்னால் பாஜக தான் இருக்க வேண்டும். ஏனென்றால்,

    அதிமுகவிலிருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டவுடனே தில்லிக்கு பறந்து அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன்.

    "அமித்ஷாவை சந்தித்து அடுத்து என்ன செய்யலாம்" என ஆலோசனை கேட்கத்தான் வந்ததாக வெளிப்படையாக சொன்னார். இப்போது, தவெகவில் இணைவதும் அமித்ஷாவின் ஆலோசனை தானா என்னும் அய்யம் எழுகிறது.

    எடப்பாடி பழனிசாமி அவர்களை தடுமாற வைத்து, பாதிக்கு பாதி தொகுதிகளை பெறுவது தான் பாஜகவின் உத்தி. (பீகார் போல)

    ஒரு பக்கம் நடிகர் விஜய் மூலம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்துவதும் மறுபக்கம் அதிமுகவையே பலவீனப்படுத்துவதும் தான் பாஜகவின் சதி உத்தி.

    தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார். அதற்கு பின் பாஜக முழுமையாக

    அதிமுகவை கையகப்படுத்தும். அதற்கான உத்திகளை பாஜக தொடங்கி விட்டது.

    நடிகர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நடிகர் விஜய்யை ஏற்றுக்கொள்வதில் எந்த மனத்தடையும் இருக்காது என்பதையே செங்கோட்டையன் தவெகவில் இணைவதை காட்டுகிறது என்று கூறியுள்ளார். 

    • கேரள அரசும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை SIR பணிகளை ஒத்திவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
    • தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்டவைகள் மேற்கொள்காட்டி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் கேரள அரசும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை SIR பணிகளை ஒத்திவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

    மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு கடிதம் எழுதியுள்ள கடிதத்தில்,

    தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் குழப்பமானது, வற்புறுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து பல அதிகாரிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது. எனவே அதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

    இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த உத்தரவிடக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    வி.சி.க. தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் நடைபெறும் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது முரணானது என்று தெரிவித்துள்ளது.

    • பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் விளைச்சல் தான்.
    • மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எஸ்.ஐ.ஆர்.வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 24-ந் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. எஸ்.ஐ.ஆர். என்பது பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்துகிற ஒரு கூட்டுச் சதி. அவர்கள் குடியுரிமையை பறிப்பதற்கான ஒரு செயல் திட்டமாகவும் எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான ஒரு செயல் திட்டமாகவும் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

    எனவே, இது உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். பழைய முறைப்படி எஸ்.ஆர்.என்கிற திருத்த முறையையே இந்த தேர்தலுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

    பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் விளைச்சல் தான். பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

    மேலோட்டமாக வாக்காளர் பட்டியல் சீராய்வு என்று சொல்லப்பட்டாலும் குடியுரிமையை பறிக்கிற தேசிய குடிமக்கள் பேரேட்டை உருவாக்குகிற சட்டத்தை நடை முறைப்படுத்துகிற சதி முயற்சிதான் இது. வெளிப்படையாக அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அதுதான் உண்மை என்பதை உணர வேண்டும். இது நாட்டுக்கு நல்லதல்ல.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எப்படி பிரசாரம் செய்தாலும் இனி பா.ஜ.க. தலைமைக்கு இவர் மீது நம்பிக்கை இல்லை.
    • ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது. இதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும். முதலில் தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வரும் வலியுறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய 3 சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இதனை நடைமுறைப்படுத்த கூடாது. பீகாரில் வாக்கு திருட்டு நடந்ததை போல் தமிழ்நாட்டிலும் நடைபெறும். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் திரள வேண்டும்.

    பல்கலைக்கழக மசோதா சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் மறுசீராய்வு செய்வதாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தொடர்ந்து பா.ஜ.க.வின் பொறுப்பில் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்ட நிலையில் அரசியல் செய்வதற்கு களம் இல்லாமல் போனதால் விரக்தி அடைந்துள்ளார். எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராக அவதூறாக பேசிவருகிறார். எப்படி பிரசாரம் செய்தாலும் இனி பா.ஜ.க. தலைமைக்கு இவர் மீது நம்பிக்கை இல்லை.

    ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. புதிய சட்டம் சட்டமன்றத்தில் இயற்ற தமிழக முதல்வர் அறிவிப்பு வரவேற்கத்தக்க வகையில் உள்ளது. நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்துள்ளது. ஆணையம் இல்லாமலேயே மசோத சட்டம் கொண்டு வரலாம். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் இயற்றபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுயில் எதாவது ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுமா என்ற கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு நடைபெறும்போது முடிவு செய்யப்படும் என்றார்.

    • தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் நான் தான் என பல பேர் போட்டி போடுகிறார்கள்.
    • 12 ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். மட்டும் தான் காரணம்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே காட்டாத்தி உஞ்சியவிடுதி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் முதன்மை செயலாளர் உஞ்சைஅரசன் 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்தது.

    நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு உஞ்சை அரசன் நினைவிடத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் பேசுகையில்,

    தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் நான் தான் என பல பேர் போட்டி போடுகிறார்கள். அந்த இடத்திலும் நாம் இல்லை, ஆனாலும் நம்மை ஏன் அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்றால், நாம் கருத்து களத்திலே தெளிவாகவும், துடிப்பாகவும் இருக்கிறோம், கண்ணில் விழுந்த தூசியாக இருக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் என்கிற துரும்பு கண்ணில் விழுந்து விட்டது. கண்ணை கசக்கி கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு நெரூடலாக இருக்கிறது.

    12 ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். மட்டும் தான் காரணம். குடியரசு தலைவராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பா.ஜ.க. தீர்மானிப்பதல்ல, ஆர்.எஸ்.எஸ். தான் தீர்மானிக்கிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். தான் பா.ஜ.க. அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதவாத அமைப்பாக இருப்பதை தாண்டி சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி எம்.எல்.ஏ. அசோக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும்.
    • அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டும்.

    திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே கடந்த மாதம் 7-ந் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதை பார்த்த வி.சி.க.வினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பைக் மீது எனது கார் மோதவில்லை. பிரச்சனை செய்தது அந்த தம்பிதான் என்று கூறி இருந்தார். மேலும் எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' எனவும் கூறினார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து திருமாவளவனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்நிலையில் திருமாவளவின் சந்தேகம் நியாயமானது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் மாநிலங்களை உறுப்பினருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது. இன்னொரு தம்பி பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது. தம்பி திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும். அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    • பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • தமிழ்நாடு அரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பி.கவாய் மீது சனாதன ஆதரவு வழக்கறிஞர் காலணி வீசி தாக்குதல் நடத்திய முயற்சியை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது திருமாவளவன் வந்த கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதை பார்த்த வி.சி.க.வினர் அந்த பைக்கில் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பைக் மீது எனது கார் மோதவில்லை. பிரச்சனை செய்தது அந்த தம்பிதான் என்று கூறி இருந்தார்.

    மேலும், திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞரின் பைக் மீது மோதவில்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

    இந்நிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் 07 அன்று எனது காரை வழிமறித்த நிகழ்வு 'தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி' என்பது தெரிய வருகிறது.

    ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்றும் எமது விசாரணையில் உறுதிபட தெரிகிறது.

    எனவே, தமிழ்நாடுஅரசு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்திட வேண்டும். பின்னணியில் உள்ள சதியினைக் கண்டறிய வேண்டும்.

    அத்துடன், உடனடியாக இதனை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சிகளைச் சார்ந்தவர்களையும் முழுமையாக அய்யமற விசாரித்திடவேண்டுமென கோருகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
    • ராமதாஸ் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் சேரன் உள்ளிட்டோர் நேற்றுமுன்தினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் நேற்று நேரில் சென்று உடல்நலம் விசாரித்தனர். இதற்கிடையில் டாக்டர் ராமதாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தகவல், இமயமலையில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ரஜினிகாந்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் உடனடியாக டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

    இதனை தொடர்ந்து, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நேற்று மாலை 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், "எனக்கு எப்போதும் ஓய்வே கிடையாது" என கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில், டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். 

    • விஜய் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாது.
    • வருகிற சட்டசபை தேர்தலில் விஜயால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

    சென்னை:

    கரூர் சம்பவத்தில் விஜய் மீது போலீசார் ஏன் இதுவரையில் வழக்கு பதிவு செய்யவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்கமாக கேள்வி எழுப்பியதை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள அவர் இவ்வாறு கருத்து கூறிய நிலையில் அதற்கு தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் திருமாவளவனிடம் இது குறித்து சிறப்பு பேட்டி காணப்பட்டது. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி:- கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தியதன் நோக்கம் என்ன?

    பதில்:- விஜய் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாது. அவரை கைது செய்து சிறையில் அடக்க வேண்டும் என்ற விருப்பமில்லை. இந்த சம்பவத்தில் புஸ்சி ஆனந்த் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களும் விஜயை போல அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான். ஆனால் விஜய் மீது மட்டும் வழக்கு போடவில்லை. இது ஒரு தலைப்பட்சமான அணுகுமுறை என்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள். அதைத்தான் நான் பிரதிபலிக்கிறேன்.

    பொதுச்செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யும்போது ஏன் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது. அவரும் அங்கு வந்து சென்றிருக்கிறார். காவல்துறை ஒரு சாரராக செயல்படுவதாக நான் அறிகிறேன்.

    கே:- தி.மு.க. கூட்டணியில் தாங்கள் இருந்து கொண்டு அவர்களுக்கு எதிராக கருத்து கூறுவது சரியா?

    பதில்:- கரூர் சம்பவத்தை பொருத்தமட்டில் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் சரியானது தான். இதை அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதாக ஏன் பார்க்க வேண்டும். விஜய்க்கு எதிராக பேசுவதாக ஏன் பார்க்க வேண்டும். போலீஸ் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்க கூடிய நிலையில் ஒரு சிலர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்துவிட்டு விஜய் மீது வழக்கு ஏன் பதிவு செய்யவில்லை. கரூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால் அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்திருக்கலாமே?

    இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. இதனால் தி.மு.க. கூட்டணியில் முறிவு ஏற்பட வாய்ப்பு இல்லை.

    கேள்வி:- கரூர் சம்பவம் அரசியல் கட்சிகளுக்கு பாடமாக அமைந்துள்ளதா?

    பதில்:- இந்த சம்பவம் விஜய்க்கு மட்டும் பாடமல்ல பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் பாடம்தான். பொதுக்கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வரக்கூடிய அரசியல் தலைவர்கள் அவர்களை பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்ற சமூகப் பொறுப்பை கொடுத்துள்ளது. இது அனைவருக்கும் மிகப்பெரிய பாடம்.

    கேள்வி:- கரூர் நெரிசல் சம்பவம் தமிழக அரசியல் கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

    பதில்: இந்தப் பிரச்சனை தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் விஜய்யை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., ஜி.கே.வாசன் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர்.

    தேர்தல் வரை இந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டால் கவலை தருவதாக அமைந்துவிடும். இதை வைத்து எந்த அரசியல் கட்சியும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்பதுதான் என் விருப்பம்.

    கேள்வி:- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை பற்றி?

    பதில்:- கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் செயல்பாடு பாராட்டுக்குரியது. அவர் நேரில் சென்றதால் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய உயிர் பலி தடுத்து நிறுத்தப்பட்டது.

    கேள்வி:- கரூர் சம்பவத்தில் விஜயின் அணுகுமுறை எப்படி?

    பதில்:- அவருடைய பேச்சுக்கள் எல்லாம் தி.மு.க. மீது வெறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் பொதுக்கூட்டத்தில் எந்த செய்தியும் கொடுக்கவில்லை. அவருடைய பேச்சு அணுகுமுறை இதே நிலையில் நீடித்தால் விஜய் பொது மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு விடுவார்.

    கேள்வி:- விடுதலை சிறுத்தையின் தேர்தல் பணிகள் எவ்வாறு உள்ளது?

    பதில்:- விடுதலைச் சிறுத்தைகள் பொருத்தவரையில் தேர்தல் பணி ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு தான் தொடங்கும். புதிய மாவட்ட செயலாளர்கள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நியமிக்கப்படுவார்கள். பூத் கமிட்டி அமைக்கப்பட்டு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் ஜனவரி மாதத்தில் இருந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளேன்.

    கேள்வி:- வருகின்ற தேர்தல் தி.மு.க. கூட்டணிக்கு எப்படி இருக்கும்?

    பதில்:- வருகிற சட்டசபை தேர்தலில் விஜயால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. திரைப்படத்தின் அடிப்படையில் ரசிகர்கள், இளைஞர்கள் அவரிடம் இருக்கிறார்கள். அவரால் தி.மு.க. கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது. ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    • விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை; முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம்.
    • விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார்.

    திருச்சி:

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும். அது நடைமுறைக்கு வந்தால்தான் இளம் தலைமுறையை காப்பாற்ற முடியும். அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளில் இளைஞர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். அவர்களில் கணிசமானோர் போதையில் பங்கேற்பதை நானே கவனித்து இருக்கிறேன்.

    த.வெ.க. தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு, காவல்துறை அஞ்சுகிறதா? த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும்.

    விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை எனில் ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும்?

    விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு காரணம் என்ன? திமுக-தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா? விஜய் மீது வழக்குபதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார்? ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பி விடுவார்கள் என விஜய் வீடியோவில் அவ்வாறு பேசி உள்ளார்.

    மூன்று நாட்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்எஸ்எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார்.

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. விஜய்யை சுற்றி இருக்கும் அனைவரும் பா.ஜ.க. பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். திமுக கூட்டணிக்கான சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் மூலம் பிரிப்பதே பாஜகவின் திட்டம். பாஜக-அதிமுக கூட்டணியில் கண்டிப்பாக விஜய்யை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். கரூர் துயர சம்பவத்தில் விஜய்யை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது.

    விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை; முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம். விஜய்யின் கொள்கை எதிரியான பாஜகவே அவரை பாதுகாக்க முயற்சிக்கிறது. பாஜக பாதுகாக்க முயல்வதன் மூலம் விஜய்யின் சாயம் வெளுத்துப் போய்விட்டது.

    அண்ணா ஹசாரே போன்று விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. விஜய்யை பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்திற்கு வர பாஜக முயல்கிறது.

    தமிழக அரசு, காவல் துறைதான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட ஆட்சி நிர்வாகம் தோல்வியடைந்து விட்டது. இப்படியெல்லாம் மடைமாற்றம் செய்ய பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜய்யால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. குற்றவுணர்வே இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது விஜய் பழிபோட முயற்சிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×