என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை ஐகோர்ட்"
- ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
- ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன.
சென்னை:
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
அதில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது என நேர கட்டுப்பாடு விதித்து இருந்தது.
இதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு சார்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை.
- நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சென்னை:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விக்ரம் சவுத்ரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில், "அமலாக்கத்துறை வெளிப்படையாக இருப்பதுபோல ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் மறைந்துகொள்கிறது. எதற்காக சோதனை செய்கிறோம் என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போதுதான் ஞானம் வந்தது போல அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கொடுமை செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, 'மாநில போலீசார் பதிவு செய்த லஞ்ச வழக்குகளின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது'' என்று வாதிட்டார்.
இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ்சிங் வாதம் செய்தார். அவர், 'அமலாக்கத்துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை. மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும்?' என்று வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
அதன்படி இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினார்கள். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை என்று கூறி நீதிபதிகள், அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கோடிக்கணக்கான மக்களின் நிதி உரிமை சார்ந்ததாகும். இதில் மோசடி நடந்தால் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.
இதுபோன்ற நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வழக்கை பொறுத்தவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவதாக மனுதாரர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அரசியலை பொருத்தவரை 'ஏ' பார்ட்டி ஆட்சியில் இருக்கும் போது 'பி' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். 'பி' பார்ட்டி ஆட்சியில் இருக்கும்போது 'ஏ' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை கோர்ட்டு கவனிக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே கோர்ட்டு பரிசீலிக்க முடியும்.
இந்த வழக்கை பொருத்தவரை குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால் அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் என்று அறிவிக்க முடியாது.
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனை அடிப்படையில் சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
- ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
- சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இசை வேளாளர் சாதிச் சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தன் மகளுக்குச் சாதிச் சான்றிதழ் கோரி மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் எனக் குறிப்பிட்டுச் சாதிச் சான்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,
* ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
* தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப்பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.
* சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக்கூடாது.
* சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் உள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
- கள்ளச்சாராயம் குடித்து 60க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
- மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
கடந்தாண்டு ஜூன் 19-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான தாமோதரன், கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜூவுக்கு ஜாமின் வழக்கி உத்தரவிட்டார்.
மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கி உள்ளது.
- போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளார்.
- சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.
சென்னை:
போதைப்பொருள் கடத்தியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாபக் சாதிக் கைது செய்யப்பட்டார். இவர் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இதனை தொடர்ந்து சட்டவிரோத பரிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபக் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.
இதனிடையே, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து இம்மனு மீதான விசாரணையில், "போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளார். மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார். ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது" என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.
இந்த நிலையில், இன்று ஜாமின் மனு மீது நீதிபதி சுந்தரமோகன் தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பின் போது, டெல்லியின் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியாவின் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீமுக்கு முன் ஜாமின் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.
- ராம்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
- நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்.
சென்னை:
'ஜகஜால கில்லாடி' திரைப்படத் தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து சிவாஜி வீட்டில் எந்த பங்கும் இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராம்குமார் தரப்பில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால் இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, ராம்குமார் தரப்புக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆகவே அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவு தவறானது என்று பிரபு தரப்பில் வாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும், உரிமையும் இல்லை என ராம்குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து, அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை. எதிர்காலத்தில் எந்தவித உரிமையும் கோரமாட்டேன் என்று ராம்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று பிரபு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர். இதனால் வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
- குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல.
சென்னை:
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.
இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது. பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஜான் ஜெபராஜ் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனார். ஜான் ஜெபராஜ் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, பொதுநலனுக்காகவா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காகவா?
- தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை ஏன் தவறாக பயன்படுத்துகிறது?
சென்னை:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கிற்கு மத்திய அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து, பதில் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக சேர்ந்துள்ளவர்களின் மனுவுக்கு பதில் மனுவையும் அனைத்து தரப்பினரும் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கின் இறுதி விசாரணை 8-ந்தேதி (இன்று) மற்றும் 9-ந்தேதி (நாளை) நடைபெறும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று காலையில் சுமார் 11 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர்.
அப்போது, அரசு தரப்பில், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில், அடுத்த சில நிமிடங்களில் விசாரணைக்கு வர உள்ளது. அதனால், இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும்'' என்று மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ''அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, பொதுநலனுக்காகவா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காகவா? இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்டது.
இந்த வழக்கு இந்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் விசாரிப்பதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால், இந்த ஐகோர்ட்டில் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு திடீரென வழக்கு தொடர்ந்த காரணம் என்ன? அந்த காரணத்தை முதல் நாளே இந்த ஐகோர்ட்டில் தெரிவித்து இருக்கலாமே? ஏன் அதை செய்யவில்லை?
தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை ஏன் தவறாக பயன்படுத்துகிறது? இந்த ஐகோர்ட்டை ஏன் அவமானப்படுத்த வேண்டும்? இன்று காலையில் கூட சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை ஏன் எங்களுக்கு சொல்லவில்லை? இறுதி விசாரணைக்கு பட்டியலிட்ட பிறகு சுப்ரீம் கோர்ட்டு ஏன் செல்ல வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டை தமிழ்நாடு அரசு அணுக உரிமை உள்ளது. அதேநேரம், ஏன் இந்த ஐகோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் செல்ல வேண்டும்?'' என்று சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குதான் அமலாக்கத்துறை பதில் மனு அரசுக்கு கிடைத்தது. அதன்பின்னர், அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
- சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும்.
- மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.
சென்னை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 3-வது தெருவில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில், 17.30 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்ய உள்ளதாக அறநிலையத்துறை அறிவித்தது.
திருப்பணியில் ஒரு பகுதியாக கோவிலில் உள்ள 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், திருப்பணி என்ற பெயரில் கோவிலின் தல விருட்சமான 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.கே. ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகநாதன், அரச மரத்தை அப்பகுதி மக்கள் புனிதமாக கருதுவதால், அதை அகற்றக்கூடாது என்று வாதிட்டார்.
இந்து அறநிலையத்துறை சார்பில், சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும். பசுமையான சூழலைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விழிப்புடன் உள்ளனர். மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
- வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
- விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ''அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், ஆளும் கட்சியின் நிர்வாகி ஆவார். அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரனுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விரிவான விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.
- இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன.
- 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
மலைகளின் அரசியான ஊட்டிக்கு சாதாரண நாட்களை விட விடுமுறை தினங்களில் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவும் கோடை விடுமுறை சீசனில் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
கோடை சீசன் தொடங்க உள்ளதால், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரநாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது.
இந்த கட்டுப்பாடு ஏப்.1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என கல்லாறு, குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை செய்தனர்.
இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட இ-பாஸ் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், தற்போதைய வாகன கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மறு ஆய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.