விஜய்க்கு விழுந்த அடுத்த அடி... வருமான வரித்துறை சார்ந்த வழக்கில் அதிர்ச்சி கொடுத்த நீதிபதி

அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை.அபராதத்தை ரத்து செய்வது தொடர்பாக தீர்ப்பாயத்தை அணுக அனுமதி.
விஜய்க்கு விழுந்த அடுத்த அடி... வருமான வரித்துறை சார்ந்த வழக்கில் அதிர்ச்சி கொடுத்த நீதிபதி
Published on

நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது.

இந்தநிலையில், கடந்த 2015-2016ம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று விஜய் கணக்கு காட்டியிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 2015-ம் ஆண்டு கைப்பற்றிய ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை என்று கண்டு பிடித்தனர்.

இவ்வாறு வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சத்தை அபராதம் விதித்து கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

அபராதம் விதித்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு இறுதி விசாரணைக்காக வந்தது.

அப்போது விஜய் தரப்பில், ஆஜரான நிலையில் சட்டப்படி அபராத உத்தரவை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக, சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது சட்டப்படி தவறு. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார்.

வருமான வரித்துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், 6 மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இன்று தீர்ப்பு அளித்தார். அதில், அபராதம் விதித்ததில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இதில் இந்த ஐகோர்ட்டு தலையிடவும் விரும்பவில்லை. எனவே, விஜய் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, நீதிபதி உத்தரவை வாசித்த பின்னர் விஜய் தரப்பினர் தீர்ப்பாயத்தை அணுக அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிபதி, அபராதத்தை ரத்து செய்வது தொடர்பாக தீர்ப்பாயத்தை அணுக அனுமதி வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com