search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madras HC"

    • தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
    • இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.

    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.

    இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 30-ந்தேதி நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி மஞ்சுளா முன்பு மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் நேற்று ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டார்.

    • ஜாமின் மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
    • மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

    சென்னை:

    சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கு எதிராக சைதாப்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 7-ந்தேதி கைது செய்தனர்.

    இந்நிலையில் ஜாமின் ,கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருக்கிறார்.

    மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும், காவலில் வைத்து போலீசார் விசாரித்த போது முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

    இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 3ம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.

    இதையடுத்து இன்று ஜாமின் மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
    • தற்காலிக சுகாதார பணியாளர்கள் சிலருக்கு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பல நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை, தூத்துக்குடி, கரூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்களாக பணியாற்றிய சீனு, பிரபாகரன், வி.ஜெயா, சி.பாப்பா, ஜி.மதியழகன், தேவிகா, மகேஸ்வரன் உள்பட 81 பேர் தங்களது பணியை நிரந்தரம் செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி, ''தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் இணைக்கப்பட்ட தற்காலிக சுகாதார பணியாளர்கள் 3 ஆண்டுகள் பணி செய்திருந்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய தகுதியானவர்கள் என்று ஐகோர்ட்டு 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் 2017-ம் ஆண்டு உறுதி செய்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்துறை கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்து, சுமார் 275 பேரது பணியை நிரந்தரம் செய்தது. இந்த அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று வாதிட்டார்.

    மாநகராட்சிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ''பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசு மனு தாக்கல் செய்து, அந்த மனு நிலுவையில் உள்ளது'' என்று கூறினர்.

    இதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், ''தமிழ்நாடு அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தாலும், ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் விதிக்கவில்லை.

    தற்காலிக சுகாதார பணியாளர்கள் சிலருக்கு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. அதனால், 3 ஆண்டுகள் தற்காலிக பணியை முடித்துள்ள மனுதாரர்களும் நிரந்தர பணி பெற தகுதியானவர்கள்தான்.

    அதனால், நகராட்சி நிர்வாகம் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, மனுதாரர்களின் பணியை 12 வாரங்களுக்குள் நிரந்தரம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

    • மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
    • உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

    இந்த நோட்டீஸை உயர் நீதிமன்றம் தொடர்ச்சியாக இருமுறை ரத்து செய்திருந்த நிலையில், அதைஎதிர்த்து அ.தி.மு.க. ஆட்சியில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் இருந்துவந்தது.

    இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை நாளை (இன்று) வழங்குவதாக கூறினார்.

    அதன்படி, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், தமிழ சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

    உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    • ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா?
    • குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். இந்த சம்பவத்தில் சில மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என ஏராளமானவர்கள் கைதானார்கள். ஆள்மாறாட்டத்துக்கு உதவியதாக இடைத்தரகர்கள் சிலரையும் போலீசார் பிடித்தனர்.

    ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 5 ஆண்டுகளாக நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் கிடப்பில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தது.

    மேலும், தமிழக மாணவர்களுக்காக வடமாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியவர்களின் விவரங்களை தேசிய தேர்வு முகமை தெரிவிக்காமல் இழுத்தடிப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் புகார் குறித்தும் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கு விவரங்களை தேசிய தேர்வு முகமை வழங்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    பின்னர் தேசிய தேர்வு முகமை சார்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தன் ஆஜராகி, இந்த விவகாரத்தில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என கோரினார்.

    இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, 2019-ம் ஆண்டில் நீட் தேர்வு நடந்தபோது வெளிநாட்டில் இருந்த மாணவனுக்காக இங்கு 3 மாநில மையங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மோசடி நடந்து இருக்கிறது. ஆனால் தமிழக நீட் தேர்வு மையங்களில் தேர்வு எழுத வருபவர்களின் தாலியைக்கூட கழற்றுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.

    ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்காததால், குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேர்வு முகமை செயல்படுகிறதா? அப்படி என்றால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.

    பின்னர், இதுகுறித்து தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க அவகாசம் வழங்கி, அடுத்த கட்ட விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    • வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
    • தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கிளாம்பாக்கம் பஸ் நிலையம் 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி திறக்கப்பட்டது.

    பஸ் நிலையம் அமைக்கும் போது, பயணிகள் சுலபமாக அணுக ஏதுவாக விமான நிலையம்-கிளாம்பாக்கம், வேளச்சேரி-தாம்பரம் மெட்ரோ ரெயில் இணைப்பு ஏற்படுத்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வரை, கோயம்பேட்டில் இருந்து முன்பு போல அரசு மற்றும் ஆம்னி பஸ்களை இயக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு, விமான நிலையம்-கிளாம்பாக்கம், வேளச்சேரி-தாம்பரம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் வரையும், புதியதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வான்வெளி நடைபாதை மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பெருங்களத்தூர் மார்க்கம் செல்லும் வாகனங்களுக்கு யு வளைவு பாலம் அமைக்கும் வரையில், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கவும், இலகு மற்றும் கனரக வணிக வாகனங்களை சென்னை அவுட்டர் ரிங் ரோடு வழியாக இயக்கவும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து, தனி நீதிபதி முன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை வாபஸ் பெற்று, தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

    • கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்சனை.
    • நினைவு மண்டபம் கட்ட பிரச்சனை இல்லை.

    சென்னை:

    கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் இன்று காலை 9 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கியது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இருமுறை வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.

    அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உடலை அடக்கம் செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம். கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்சனை, நினைவு மண்டபம் கட்ட பிரச்சனை இல்லை. பெரம்பூரில் அரசு அனுமதியுடன் நினைவிடம் கட்டிக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

    இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. அதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் பொத்தூர் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜயகாந்துக்கு அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
    • நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, இறந்த நபர் நல்ல முறையில் அடக்கம் செய்யப்படவேண்டும்.

    சென்னை:

    கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்த அவசர வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஹத்ராஸ் நெரிசல் சம்பவம் போல் எதிர்காலத்தில் ஏதேனும் நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்? என கேள்வி கேட்ட நீதிபதி பெரிய சாலை, பெரிய இடம் இருந்தால் கேட்டு சொல்லுங்கள் உத்தரவு பிறப்பிக்கிறேன். தற்போதைக்கு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக்கொள்ளலாம். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படக்கூடாது. இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டு சொல்லுங்கள், உத்தரவு பிறப்பிக்கிறேன் என்று கூறி வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

    இதன்பின் மீண்டும் 12 மணிக்கு வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    விஜயகாந்துக்கு அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது

    இதையடுத்து பேசிய நீதிபதி, புதிய இடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசிடம் புதிய மனு அளிக்க வேண்டும். விண்ணப்பித்ததை அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இப்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, இறந்த நபர் நல்ல முறையில் அடக்கம் செய்யப்படவேண்டும். உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது, நாளை பள்ளி திறக்க வேண்டும், மாணவர்கள் பள்ளிவர வேண்டும். அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது என்றார்.

    • இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
    • அரசு தரப்பு வக்கீல்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். அதனால் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருத முடியாது. அவ்வாறு கருதவும் கூடாது.

    தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்கு குறைந்த இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்குகிறது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக தொகை இழப்பீடு வழங்கப்படுகிறது? என்பது குறித்து பொதுமக்களுக்கு அரசு தெளிவுப்படுத்தவில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ இல்லை.

    அவர்களுக்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதை ஏற்க முடியாது. இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    பின்னர், இந்த இழப்பீட்டு தொகையை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியுமா? என்று அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு தரப்பு வக்கீல்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

    • தமிழகம் முழுவதும் அமல்படுத்தக் கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
    • ‘சன் கன்ட்ரோல் ஃபிலிம்’ ஒட்டியதாக 6,279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.31.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், ஊடகம் என ஸ்டிக்கர்கள் ஒட்டத் தடை விதித்துள்ளது. மேலும் தடையை மீறுபவர்களிடம் போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நடவடிக்கையை தமிழகம் முழுவதும் அமல்படுத்தக் கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது, வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது தொடர்பாக 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2.57 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த மே மாதம் வரை 'சன் கன்ட்ரோல் ஃபிலிம்' ஒட்டியதாக 6,279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.31.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை நடப்பது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
    • கள்ளக்குறிச்சிக்கு முன்னதாகவும் சாராய பலிகள் நிகழ்ந்துள்ளது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான விசாரணையை, சி.பி.ஐ.-க்கு மாற்ற வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்கு கடந்த ஓராண்டாக செய்தது என்ன? கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை நடப்பது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் ஓராண்டாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

    கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பலி. இதற்கு யார் பொறுப்பு? கள்ளக்குறிச்சிக்கு முன்னதாகவும் சாராய பலிகள் நிகழ்ந்துள்ளது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேலும் விழுப்புரம், மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

    • 7 பேரும் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர்.
    • ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் சுப்பையா வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    பட்டப்பகலில் நடுரோட்டில் அவரை சுற்றி வளைத்து கொலையாளிகள் வெட்டிக்கொன்றனர். எதிர் திசையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகளும் வெளியானதால் டாக்டர் சுப்பையா கொலை அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    7 பேரும் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. டாக்டர் சுப்பையாவுக்கும், பொன்னுசாமிக்கும் இடையில் இருந்த நிலப்பிரச்சனை, கொலை சதி திட்டம் பற்றி போலீஸ் தரப்பில் விவரிக்கப்பட்டது.

    கொலை செய்ய கூலிப்படையினருக்கு கொடுப்பதற்காக ரூ.7.5 லட்சம் பரிமாற்றம் செய்தது, அப்ரூவரானவரின் சாட்சியம் ஆகியவற்றையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு கூறப்பட்டது.

    டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்க தவறி விட்டனர். இதனால் 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    ×