search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Income Tax Department"

    • காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
    • சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் துறையினர் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதையும் மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    புதுவை இளங்கோ நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் வந்தனர். அவர்கள் அந்த வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

    சோதனையின் இடையே அவ்வப்போது அதிகாரிகள் வெளியே வருவதும் மீண்டும் வீட்டிற்குள் செல்வதுமாக இருந்தனர். இந்த சோதனை இரவு 8 மணிவரை நீடித்தது. சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

    அதில் சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்றதாக தெரிகிறது. பணம் எதையும் பறிமுதல் செய்து சென்றார்களா? என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிபாக்கத்தில் உள்ள வைத்திலிங்கம் எம்.பி.சம்பந்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த வருமானவரி சோதனை நடந்தபோது காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் காரைக்காலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். வருமானவரி சோதனை குறித்து அவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பா.ஜனதா வேட்பாளரான புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரின் உறவினர் வீடு, பா.ஜனதா வேட்பாளர் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவின் கணவர் அன்பரசு தனது காரில் கட்டு கட்டாக பணம் கொண்டு செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜீயபுரம் துணை போலீஸ் பிரண்டு பாலசந்தர் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் அந்தக் கார் எட்டறையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.

    உடனே இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 5 பேர் கொண்ட வருமானத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இது ரூ.1 கோடி அளவுக்கு இருக்கும் என கூறப்பட்டது.

    பின்னர் அந்த பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் அதன் பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவை விசாரணைக்காக அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனை அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு முன்பும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற முசிறி காவல் நிலையம் முன்பும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அன்பரசு அ.தி.மு.க. பிரமுகர் ஆவார்.

    • வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் ஒரு மணி நேரம் சோதனை.
    • வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் பரபரப்பு.

    சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளை கவனித்து வருகிறார்.

    இந்நிலையில், திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    வருமான வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் முதல் சுமார் ஒரு மணி நேரம் தீடீர் சோதனை நடத்தினர்.

    பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு, கடலூர் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இன்று (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு வந்து ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து விட்டு சென்றனர்.

    வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தொல்.திருமாவளவன் கூறுகையில்," எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது
    • நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது

    சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை ஆகிய 4 மத்திய அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் எனக்கோரி மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.பிக்கள் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்திற்கு வெளியே தர்ணா நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன் தலைமையில் டோலா சென், சாகரிகா கோஷ், சாகேத் கோகலே, சாந்தனு சென் ஆகிய எம்.பி.க்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டது.

    பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது என்ற தங்களது புகாரை தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் அளித்துள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர்.  

    • வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரான இவரது வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

    அவர்கள் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். 2 இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் வீடு, அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது.வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் 2பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது
    • நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது

    கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பேசினார் டி.கே.சிவகுமார். அப்போது, "நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. ஏற்கெனவே முடிந்து போன விவகாரத்தில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

    நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் இந்தியா கூட்டணி நிச்சயம் பதிலடி கொடுக்கும். தோல்வி பயத்தில்தான் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது
    • இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை

    வருமான வரித்துறை சார்பில் சுமார் 1,823 கோடி ரூபாய் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1,823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "நமது ஜனநாயக நாட்டில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை, ஆனால் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக நாங்கள் பயப்பட மாட்டோம், வரும் தேர்தலில் நம் நாட்டு மக்கள் பாஜகவுக்கு இதற்காக பதிலையே வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    பாஜகவின் 8,250 கோடி தேர்தல் பத்திர ஊழல் இந்திய நாட்டையே உலுக்கியது. ஆளும் கட்சி தங்களது நண்பர்களிடம் இருந்து பணத்தை பெரும் அதே சமயத்தில், வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியை குறிவைத்து 1800 கோடி அபராதம் விதித்துள்ளது.

    தேர்தல் நேர்மையாக நடைபெறவேண்டும் என்பதையே ஜனநாயகம் விரும்புகிறது. வரி பயங்கரவாதத்தை அல்ல. ஒரு கட்சி பல ஆயிரம் கோடிகளை மிரட்டி வசூலித்துவிட்டு, மற்றொரு கட்சிக்கு பல ஆயிரம் கோடியை அபராதமாக செலுத்த உத்தரவிடுவது எப்படி நியாயம்?. பாஜக அரசு வரி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது" என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

    • இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சி வருமானவரி கணக்கில் முரண்பாடாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி வருமானவரி துறை சார்பில் ரூ.1,823 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்திலும் இந்த போராட்டத்தை நடத்த காங்கிரசார் முடிவு செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

    அப்போது போலீசார் 24 மணி நேரத்துக்கு முன்பே போராட்டத்துக்கு அனுமதி கேட்க வேண்டும். அதனால் நாளை நீங்கள் போராட்டம் நடத்தினால் தடையை மீறித்தான் நடத்த வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து காங்கிரசார் அப்படி ஒன்றும் அவசரம் இல்லை என்கிற எண்ணத்தில் நாளைக்கு போராட்டத்தை நடத்திக் கொள்கிறோம் என்று நழுவிச் சென்றுள்ளனர். முறையான அனுமதி கிடைத்த பிறகு பேராட்டம் நடத்திக் கொள்கிறோம் என்று கூறியுள்ள காங்கிரசார் நாளை போராட்டம் நடத்த காத்திருக்கிறார்கள்.

    • தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.
    • புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரின் சகோதரரும் தற்போதைய எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் டாக்டர் சி.என்.மஞ்சுநாத் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆகியோர் வாக்காளர்களுக்கு அதிகளவில் குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டினார். இந்த தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.

    மேலும் பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் வாக்காளர்களுக்கு கொடுக்க அவரது புகைப்படத்துடன் கூடிய சுமார் 10 லட்சம் பிரஷர் குக்கர் விநயோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 4 லட்சம் குக்கர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதற்கிடையே குமாரசாமி புகாரை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள னர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்பட்டது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குக்கர் உற்பத்தி நிறுவனத்திடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் இதே போன்ற புகாரின் பேரில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடதக்கது.

    • தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    • சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு இந்த தடவை மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடக்கும் என்று தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    வாக்காளர்களுக்கு நேரடி யாக பணம் கொடுப் பதை தவிர ஜிபே, போன்பே மூலமாகவும் பணம் கொடுக் கப்படலாம் என்று கருதப் படுகிறது. இதையடுத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்த னைகளை கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    குறிப்பாக டிஜிட்டல் மூலம் மிகப்பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்தால் அதுபற்றி விரிவாக விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதற்காக அவர்கள் தனித்தனி குழுக்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

    டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது. அதுபோல மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் வினியோகத்தை தடுப்பதற்கு ஜிஎஸ்டி துறை சார்பில் தனித்தனி குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    • பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இங்கு தயாரிக்கபடும் பொருட்கள் அரியாங்குப்பம், மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்களின் விற்பனை செய்யபட்டு வருகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த 20 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று புதுச்சேரிக்கு வந்தனர். ஒரே நேரத்தில் 3 குழுக்களாக பிரிந்து, தோல் தொழிற்சாலை மற்றும் விற்பனையகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வரி ஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
    • சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் 5 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை புரசைவாக்கத்தில் மட்டும் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    சென்னை புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் டி.வி.எச். லும்பானி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 9 பிளாக்குகள் உள்ளன. இதில் 4-வது பிளாக்கில் உள்ள அமித் என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இன்று காலையில் அமித் வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் சோதனை நடத்தினார்கள்.

    அமித், அரசு ஒப்பந்தங்களுக்கு மின்சார சாதனங்களை வினியோகித்து வந்தார். இவர் சட்டவிரோத பண பரிவர்த்தனை மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இவர் பொதுப்பணித் துறைக்கு மின்சார பொருட்களை மொத்தமாக சப்ளை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு செய்ததாக ஏற்கெனவே கிடைத்த தகவலில் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் தற்போது சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அமித் வீடு இருக்கும் பக்கத்து தெருவில் உள்ள ஜெயின் வில்லா அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் மகேந்திரா பி.ஜெயின் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மகேந்திரா பி.ஜெயினின் தம்பி ரமேஷ்குமார் டி.வி.எச். லும்பானி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது பிளாக், 3-வது மாடியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அண்ணன்- தம்பி இருவரும் சலீம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இங்கும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சென்னையில் மேலும் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மொத்தம் 5 இடங்களில் சோதனை நடந்தது.

    இதேபோல் சென்னையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரசாயன நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினாகள். இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டு வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக டெல்லியில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள். இந்த நிறுவனத்தின் கிளை அண்ணாநகரில் உள்ளது. அங்கும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    ×