என் மலர்
நீங்கள் தேடியது "அபராதம்"
- நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.
- பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தவும், பொது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் "தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025" நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
காற்றில் கலக்கும் நுண் துகள்களைக் குறைக்கும் நோக்கில், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தின் மேல்புறம் மற்றும் நான்கு பக்கவாட்டுகளும் தார்பாலின் கொண்டு முழுமையாக மூடப்படாமல் இருத்தல். கட்டுமானப் பொருட்கள் அல்லது தூசிகள் சாலையில் சிதறும் வகையில் ஏற்றிச் செல்லுதல்.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். மேலும், அபராதத் தொகையாக ரூ.25 ஆயிரம் அந்த இடத்திலேயே விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், அபராத தொகையை முழுமையாகச் செலுத்திய பின்னரே விடுவிக்கப்படும்.
சென்னை மாநகரைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை என்று கண்டுபிடித்தனர்.
- சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி ஏரா ளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்தநிலை யில், கடந்த 2015-2016-ம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று விஜய் கணக்கு காட்டியிருந்தார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 2015-ம் ஆண்டு கைப்பற்றிய ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை என்று கண்டுபிடித்தனர். இவ்வாறு வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சத்தை அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நடந்தது. அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்தநிலையில், வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி பிறப்பிக்க உள்ளார்.
- புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என குற்றச்சாட்டு.
- நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்.
வருமான வரித்துறையின் அபராத நோட்டீசுக்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு விஜய் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பு வழங்க உள்ளது.
வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில், நாளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என விஜய்க்கு வருமான வரித்துறை அபராதம் விதித்திருந்தது
இந்நிலையில், நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்.
- நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் குற்றம் சாட்டியது.
- மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப். பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை, பேஸ்புக்கிடம் கொடுத்து சமூக வலைதள சந்தையின் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம் சாட்டியது.
இதனால் மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வணிக ரீதியிலான இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த நியாயமற்ற நடைமுறையை உடனடியாக மெட்டா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சூர்யகாந்த், "நுகர்வோர் தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் நுகர்வோரின் தனியுரிமையுடன் நீங்கள் எப்படி விளையாட முடியும்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும். எங்கள் நாட்டின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது எங்கள் தரவின் ஒரு இலக்கத்தை கூட நீங்கள் பகிர்ந்து கொள்ள நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் மேலும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் உங்கள் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் பிப்ரவரி 9ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
- கடந்த 2021-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
- இலவச பயணம் என்றாலும் பயணிகள் கண்டிப்பாக டிக்கெட் வாங்க வேண்டும்.
நெல்லை:
தமிழக அரசு, பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மகளிர் விடியல் பயண திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வருகிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 2 பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.
அதாவது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை டவுன் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன்பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அதில், அந்த பஸ்சில் பயணித்த 2 பெண்களிடம் டிக்கெட் இல்லை. இதனால் டிக்கெட் பரிசோதகர்கள், 2 பெண்களுக்கும் தலா ரூ.100 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பஸ்சில் பயணம் செய்த பெண் பயணிகள் கூறும்போது, ''கண்டக்டர்கள் டிக்கெட் கொடுக்கும்போது 3 பேருக்கும் சேர்த்து ஒரு டிக்கெட், 6 பேருக்கு சேர்த்து ஒரு டிக்கெட் என மொத்தமாக கொடுக்கிறார்கள். ஆனால் டிக்கெட் வாங்கிய நபர் அவரது நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்றுவிட்டால் மற்றவர்களுக்கு டிக்கெட் இருக்காது.
இதுபோன்ற குளறுபடியான சம்பவத்தினாலேயே அந்த 2 பெண் பயணிகளிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளித்தும் அபராதம் விதித்துள்ளனர்'' என்றனர்.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பெண் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எந்த தகவலும் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலவச பயணம் என்றாலும் பயணிகள் கண்டிப்பாக டிக்கெட் வாங்க வேண்டும். கண்டக்டர்களும் தனித்தனியாக அனைவருக்கும் டிக்கெட் கொடுத்திருக்க வேண்டும்.
எனினும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பெண் பயணிகளிடம் அபராதம் வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களை எச்சரித்து அனுப்பி இருக்கலாம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வரவேற்பு பதாகைகள் அகற்றப்படவில்லை.
- கேரளாவில் முதன் முறையாக பாரதிய ஜனதா மேயர் பதவியை கைப்பற்றிய நிலையில், அந்த மாநகராட்சியே அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 23-ந் தேதி கேரள மாநிலம் வந்தார். திருவனந்தபுரத்தில் நடந்த ரெயில்வே மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். கேரளா வந்த அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் திருவனந்தபுரம் விமான நிலையம் முதல் விழா நடைபெற்ற புத்தேரிகண்டம் வரை பாரதிய ஜனதாவினர் வரவேற்பு பதாகைகள் அமைத்திருந்தனர்.
இந்த பதாகைகளை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றும் திருவனந்தபுரம் மாநகராட்சி, பா.ஜ.க. நகர தலைவருக்கு நோட்டீசு அனுப்பியது. ஆனால் வரவேற்பு பதாகைகள் அகற்றப்படவில்லை. இதனை தொடர்ந்து பா.ஜ.க.வினருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டது.
இது பாரதிய ஜனதா கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் திருவனந்தபுரம் மாநகராட்சியை சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கைப்பற்றி, அந்த கட்சியை சேர்ந்தவர் மேயராக இருப்பது தான். கேரளாவில் முதன் முறையாக பாரதிய ஜனதா மேயர் பதவியை கைப்பற்றிய நிலையில், அந்த மாநகராட்சியே அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வருவாய் அதிகாரியாக இருந்த ஷைனி தற்போது திடீரென வருவாய் பிரிவில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவர் தான் பிரதமரை வரவேற்று பதாகைகள் வைத்த விவகாரத்தில் பா.ஜ.க.வினருக்கு அபராதம் விதித்தவர் என கூறப்படுகிறது. அதன் பின்னணியில் தான் இட மாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
- பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர்.
- பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து, புதிய ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்ததோடு, பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதையொட்டி அவரை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர். இது தற்போது பிரச்சினைக்குரியதாக மாறி உள்ளது.
கொடி மற்றும் பதாகைகள் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் தம்பானூர், கண்டோன்மென்ட் மற்றும் அருங்காட்சியக போலீசில் மாநகராட்சி இது தொடர்பாக புகாரும் அளித்துள்ளது. அதன்பேரில் கண்டடோன்மென்ட் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு அந்தக் கட்சியை சேர்ந்தவர் மேயராக உள்ள சூழலில், இந்த புகார் கொடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அனுமதியின்றி பொது இடங்களில் நெகிழ்வு பலகைகள், கொடிகள் மற்றும் பதாகைகளை வைத்ததற்காக, பா.ஜ.க. நகர மாவட்டக் குழுவிற்கு திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ.19.7 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
இது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளை 2 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. இருப்பினும், நடைபாதைகளின் குறுக்கே அமைக்கப்பட்ட பலகைகளை அகற்றுவதைத் தவிர, கட்சியிடமிருந்து குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் தான் தற்போது அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பதாகைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை பின்பற்றத் தவறியதால், பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது என்றார்.
இதற்கிடையில் பதாகைகள் வைக்கப்பட்டது தொடர்பாக கேரள ஐகோர்ட்டும் அதிருப்தி தெரிவித்து இருந்தது. தெளிவான நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத பலகைகள் மற்றும் கொடிகள் தொடர்ந்து நிறுவப்படுவது குறித்து வேதனை தெரிவித்ததது.
இது தொடர்பாக மாநகராட்சி வக்கீல் கூறுகையில், புகார்கள் வந்தவுடன், பொறுப்பான நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது உட்பட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும், வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது. தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் பொது இடங்களை அபகரிக்கும் வளர்ந்து வரும் கலாச்சாரம் மாற வேண்டும் என்றும் ஐகோர்ட்டு குறிப்பிட்டது.
- இலவசமாகத் தண்ணீர் வழங்க மறுத்து விலை கொடுத்துத் தண்ணீர் பாட்டிலை வாங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
- இலவசக் குடிநீர் வழங்குவது விதிமுறை என்று சுட்டிக்காட்டியும் ஹோட்டல் நிர்வாகம் அதனை ஏற்கவில்லை.
அண்மைக் காலமாக உயர்தர உணவகங்களில் தண்ணீரும் விலை கொடுத்து வாங்கும் சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் வாடிக்கையாளருக்கு இலவசக் குடிநீர் வழங்க மறுத்து, விலை கொடுத்து பாட்டில் தண்ணீரை வாங்க வற்புறுத்திய ஓட்டல் ஒன்றுக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள கார்டன் கிரில்ஸ் 2.0 என்ற ரெஸ்டாரண்டிற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆகாஷ் சர்மா என்பவர் சென்றுள்ளார்.
அங்கு அவர் குடிநீர் கேட்டபோது, ஓட்டல் ஊழியர்கள் இலவசமாகத் தண்ணீர் வழங்க மறுத்துள்ளனர்.
அதற்குப் பதிலாக, விலை கொடுத்துத் தண்ணீர் பாட்டிலை வாங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இலவசக் குடிநீர் வழங்குவது விதிமுறை என்று சுட்டிக்காட்டியும் ஹோட்டல் நிர்வாகம் அதனை ஏற்கவில்லை. இறுதியில் அவர் 40 ரூபாய் கொடுத்து இரண்டு பாட்டில் தண்ணீரை வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஆகாஷ் சர்மா நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 3,000 ரூபாய் இழப்பீடும், அவர் தண்ணீர் பாட்டிலுக்காகச் செலவழித்த 40 ரூபாயைத் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
- இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனத்தில் ஒன்று இண்டிகோ விமான நிறுவனம்.
- கடந்த மாதம் தாமதங்கள் மற்றும் சேவை ரத்தால் பயணிகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ கடந்த மாதம் தாமதங்கள் மற்றும் சேவை ரத்துகளால் பயணிகளுக்கு இன்னல்கள் ஏற்படுத்தியது.
ஊழியர்களின் பணி நேரத்தைஅளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியது, போதிய மாற்றுத் திட்டங்கள் இல்லாதது, மேலாண்மை குறைபாடுகள் ஆகியவற்றால் சுமார் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தக் குறைபாடுகளை ஆராய்ந்த வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், முறையான திட்டமிடல் இல்லாததற்காக ரூ.1.80 கோடியும், தொடர்ந்து 68 நாட்களாக விதிமுறைகளை மீறியதற்காக நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வீதம் ரூ.20.40 கோடியும் என மொத்தம் ரூ. 22.20 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இப்படி ஒரு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் இது முதல் முறை ஆகும்.
- நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
- தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் தெரிவிப்பு
மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னையின் பெருமையாகவும், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தரும் முக்கிய சுற்றுலாதலமாகவும் விளங்கும் மெரினா கடற்கரை, சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழ்கிறது. மெரினா கடற்கரையை சர்வதேசதரத்தில் மேம்படுத்தி பாதுகாத்திட பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மெரினா கடற்கரையை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 (Solid Waste Management Rules, 2016)ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக, மெரினா கடற்கரையின் தூய்மையை உறுதி செய்வதற்காக Chennai Enviro Solutions Pvt. Ltd (SPV) என்ற தனியார் நிறுவனம் மூலம் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் 7 இயந்திரங்கள் (Beach Cleaning Machines) மற்றும் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 274 தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளிலிருந்து மட்டும் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது.
மேலும், பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 53 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், பொதுமக்களின் போதியஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால், கடற்கரையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் காணப்படுவதால் அழகற்றதாகவும், சுகாதார குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. குறிப்பாக, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடாமல், திறந்த வெளிகளில் வீசப்படுகிறது.
இதன் காரணமாக சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையின் அழகும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதோடு, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சென்னை நகரின் நற்பெயருக்கும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளுக்கு பெருமளவில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் போது, அனைவரும் பொறுப்புனர்வோடு குப்பை கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மை பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதனை மீறி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் படி ரூ.5,000/– அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும் இதன்மூலம் கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. தூய்மையான கடற்கரை – சுகாதாரமான சென்னை – அனைவரின் பொறுப்பு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்கள் மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அத்துமீறி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், காய்ந்து போன மரங்களை அகற்றுதல், மாற்று இடங்களில் மரங்களை நடுதல் மற்றும் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு இதுவரை அரசு மற்றும் தனியார் விண்ணப்பங்கள் வனத்துறை மூலமாக பெறப்பட்டு, இந்த விண்ணப்பங்கள் மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சேவையினை பொதுமக்கள் எளிமையாக பயன்படுத்துவதற்கும் காலதாமதத்தை குறைத்து துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி ஒரு புதிய முன்னெடுப்பை தற்பொழுது மேற்கொண்டுள்ளது.
அவ்வாறாக மரங்கள் அகற்றுதல் மற்றும் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வனத்துறை மூலமாக நேரடியாக விண்ணப்பித்த நிலையை மாற்றி 12-ந்தேதி முதல் அனைத்து விண்ணப்பதாரர்களும், விண்ணப்பங்களை மாநகராட்சி இணையதளம் (https://chennaicorporation.gov.in/gcc/) மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.
மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும், மரக்கிளை களை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூபாய் 15 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்.
எனவே சென்னை மாநகராட்சி பகுதிகளில் மரங்கள் அகற்றுதல் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் நம்ம செயலி மூலமாக பொதுமக்கள் விண்ணப்பித்திட வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் கடந்த 3-ந் தேதி 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
- இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் கடந்த 3-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 2-வது இன்னிங்சின் போது இந்திய அணி மெதுவாக பந்து வீசியது தெரிய வந்துள்ளது. இதற்காக இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்காலிக கேப்டனாக கேஎல் ராகுல் கூற்றத்தை ஒப்புக்கொண்டதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.






