என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மாநகராட்சி"

    • நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.
    • பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தவும், பொது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் "தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025" நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

    குறிப்பாக, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    காற்றில் கலக்கும் நுண் துகள்களைக் குறைக்கும் நோக்கில், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தின் மேல்புறம் மற்றும் நான்கு பக்கவாட்டுகளும் தார்பாலின் கொண்டு முழுமையாக மூடப்படாமல் இருத்தல். கட்டுமானப் பொருட்கள் அல்லது தூசிகள் சாலையில் சிதறும் வகையில் ஏற்றிச் செல்லுதல்.

    நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். மேலும், அபராதத் தொகையாக ரூ.25 ஆயிரம் அந்த இடத்திலேயே விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், அபராத தொகையை முழுமையாகச் செலுத்திய பின்னரே விடுவிக்கப்படும்.

    சென்னை மாநகரைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் பங்கேற்கும் சென்னை திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அறிமுகம் செய்யப்படும்.
    • சென்னை பக்கிங்காம் கால்வாய் வழித்தடத்தில் நகர்ப்புற பசுமையாக்கள் திட்டம் ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும்.

    சென்னை மெரிாவில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் வே கார் வழித்தடம் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

    மேலும் கூறிய அவர்,"சென்னை மாநகராட்சி பூங்காக்களில் மரங்கள் மூலம் பிராணவாயு உற்பத்தி செய்ய ஏதுவாக பசுமை சென்னை திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

    பொதுமக்கள் பங்கேற்கும் சென்னை திட்டம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அறிமுகம் செய்யப்படும்.

    சென்னை பக்கிங்காம் கால்வாய் வழித்தடத்தில் நகர்ப்புற பசுமையாக்கள் திட்டம் ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும்.

    சென்னையில் அண்ணா நகர், தி.நகர், நுங்கம்பாக்கம் , அடையாறு போன்ற இடங்களில் மின் வாகன மின்னேற்ற நிலையம் அமைக்கப்படும்" என்றார்.

    • மாநகராட்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் உள்ளது.
    • 1 லட்சத்து 47 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கால்நடை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பதாக கடந்த 2024-ம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1 லட்சத்து 47 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 16 ஆயிரத்து 611 தெரு நாய்களுக்கு தடுப்பூசியுடன், கருத்தடை சிகிச்சையும் அளிக்கப்பட்டு, கண்காணிக்க மைக்ரோ சிப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், தற்போது வரையில் 74 ஆயிரம் வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே அவற்றின் உரிமையாளர்கள் உரிமம் பெற்றும், ரேபீஸ் தடுப்பூசியும், மைக்ரோ சிப்பும் பொருத்தி உள்ளனர்.

    அடுத்த வாரத்தில் வளர்ப்பு நாய்கள் உள்ள வீடுகள் தோறும் சென்று அவற்றுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. எனவே, அதற்குள் சம்பந்தப்பட்டோர் உரிமம் பெறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது.
    • புதிய மேம்பாலங்கள், மழைநீர் வடிகால் பணி, பெண்களுக்கான புதிய திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வருகிற 18-ந்தேதி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அப்போது, சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. 20-ந்தேதி பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்திற்கு பின்னர் பட்ஜெட் மீது ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர், தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய பொருட்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

    கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது. இதேபோல, 300 பூங்காக்கள் சீரமைப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட 62 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

    சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய மேம்பாலங்கள், மழைநீர் வடிகால் பணி, பெண்களுக்கான புதிய திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது. கல்வி, சாலை வசதி, போக்குவரத்து, மழை நீர் வடிகால் உள்ளிட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தனித்தனியாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டு சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி பூங்காக்கள், மயான பூமிகள் உள்ளிட்ட இடங்களிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர பகுதியில் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தருதல், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கும் நோக்கில் ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரித்தல் மற்றும் புதிய கழிப்பறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாநகரின் பல பகுதிகளில் பொதுக் கழிப்பிடம் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 260 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 3271 கழிப்பிட இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக மேலும் 214 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் 1905 கழிப்பிட இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு இந்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    தற்போது வரை மொத்தமாக 474 இடங்களில் இலவச ஒப்பனைகள் 5176 கழிப்பிட இருக்கைகளுடன் பயன்பாட்டில் உள்ளது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1262 இடங்களில் இலவச ஒப்பனைகள் 10,437 கழிப்பிட இருக்கைகளாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த கழிப்பறைகள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

    முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளுடன் இந்த கழிப்பிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தனித்தனியாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டு சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த கழிப்பிடங்களில் மக்களின் கருத்துக்களை பெறவும் குறைகள் இருப்பின் அவற்றை விரைந்து நிவர்த்தி செய்யவும் கியூ ஆர் கோடு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது தவிர மக்களின் தேவைக்கேற்ப மாநகராட்சி பூங்காக்கள், மயான பூமிகள் உள்ளிட்ட இடங்களிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் கழிப்பறை கட்ட மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்திடும் தகவல்களின் அடிப்படையில் சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு கழிப்பறைகள் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • மழைநீர் வடிகால் பராமரிப்பு நடைமுறைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
    • முதலுதவி மற்றும் அவசரகால நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெற்றன.

    ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்து நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டம் சென்னை–கொசஸ்தலையாறு வடிநிலைப் பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நிறுவன வலுப்படுத்தல் மற்றும் சீர்திருத்த ஆலோசகர் (ISRC) இணைந்து, "தூய்மைப் பணியாளர்களுக்கான மழைநீர் வடிகால் பராமரிப்பு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பயிற்சி" என்ற தலைப்பில் பயிற்சி நிகழ்ச்சியை சென்னை மணலியில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம்–II அலுவலகத்தின் கவுன்சில்ஹாலில் நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக, தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது. இதை மண்டலம்–II (மணலி) மண்டல அலுவலர் தேவேந்திரன் வெளியிட, மண்டலம்–I (திருவள்ளூர்) மண்டல அலுவலர் பத்மநாபன் பெற்றுக்கொண்டார். அனைவரும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் காட்சி விளக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், மழைநீர் வடிகால் பராமரிப்பை பாதுகாப்பாகவும் முறையான மற்றும் சுகாதாரமான முறையிலும் மேற்கொள்ள உதவும் களவழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பயிற்சி அமர்வின்போது வெளியிடப்பட்ட இந்த புத்தகம், மழைநீர் வடிகால் பராமரிப்பு நடைமுறைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. பணியிடங்களில் ஏற்படும் பொதுவான ஆபத்துகள், பாதுகாப்பு நடைமுறைகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) பயன்படுத்துவதின் அவசியம், முதலுதவி மற்றும் அவசர கால நடவடிக்கைகள், உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மண்டலக்குழு தலைவர் (மண்டலம்–I திருவள்ளூர்) டி. எம்.தனியரசு மற்றும் மண்டலக்குழு தலைவர் (மண்டலம்–II மணலி) ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர், நகர்ப்புற வெள்ளத்தடுப்பில் தூய்மைப் பணியாளர்கள் வகிக்கும் முக்கியப்பங்கை எடுத்துரைத்தனர். மழைநீர் வடிகால்களை முறையாக பராமரிப்பது, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது, உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்வது மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது, பணியாளர்களின் நலனையும் சேவைத்தரத்தையும் உயர்த்தும் என பேசினர்.

    நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கி, ISRC குழுவின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷெரின் டேவிட் உரையாற்றினார். தூய்மைப் பணியாளர்களுக்கான தொடர்ச்சியான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், இத்தகைய எளிய மற்றும் நடைமுறை சார்ந்த பயிற்சி புத்தகங்களும், செயல்பாடு மற்றும் பராமரிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி, சென்னை நகரின் வெள்ள அபாயத்துக்கு எதிரான தயார்நிலையை மேம்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

    பயிற்சி நிகழ்ச்சியில், வெள்ளநீர் வடிகால் பராமரிப்பு, கழிவுகளை முறையாக அகற்றுதல், பராமரிப்பு நடவடிக்கைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை சரியாக பயன்படுத்துதல், பணியிடங்களில் முதலுதவி மற்றும் அவசரகால நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கலந்துரையாடல் அமர்வுகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியின் நிறைவாக, ISRC திறன்மேம்பாட்டு வல்லுநர் ஆபிரகாம் லிங்கன் நன்றி உரையாற்றினார். பயிற்சியில் கலந்துகொண்ட பணியாளர்களின் ஆர்வமான பங்கேற்பையும், நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த ஆதரவையும் அவர் பாராட்டினார்.

    இந்த பயிற்சியில், சென்னை மாநகராட்சி மண்டலம்–I மற்றும் மண்டலம்–II ஆகியவற்றைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த முயற்சி, பணியாளர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தி, பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதோடு, மழைநீர் வடிகால் மேலாண்மையை வலுப்படுத்தி, சென்னை நகரின் நகர்ப்புற வெள்ளத்தடுப்புத் திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.
    • கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விக்டோரியா மகால் அமைக்கப்பட்டது. கடந்த 1883-ம் ஆண்டு சீன செராமிக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம் தற்போது ரூ.32.62 கோடியில் அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    விக்டோரியா மகாலை பொதுமக்கள் பார்ப்பதற்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்து பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு ஸ்லாட் இருக்கும் வகையில் 60 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் வருவோரும் மகாலை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கியூ.ஆர்.கோடு மூலம் பெயர் பதிவு செய்யும் வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.

    கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.

    தற்போது பொதுமக்கள் காத்திருந்து பார்க்கக்கூடிய சூழல் நிலவி வருவதால் காத்திருப்பு அறை புதிதாக கட்டப்பட்டுள்ளது. மழை, வெயில் பாதிப்பு இல்லாமல் பார்வையாளர்கள் அரங்கிற்கு செல்வதற்கு முன்னதாக குளு குளு வசதியுடன் கூடிய காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த நவீன காத்திருப்போர் அறை 4 அமைக்கப்பட்டு இருப்பதால் அங்கு வரக்கூடிய பார்வையாளர்கள் அதில் சிறிது நேரம் தங்க வைக்கப்படுகின்றனர். ஒரு அறையில் 20 பேர் வரை அமரலாம். இந்த வசதியை பொதுமக்கள் வரவேற்று இருப்பதோடு வெயில் மற்றும் மழையில் இருந்து விலகி பாதுகாப்பாக காத்திருந்து செல்வதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டுகின்றனர்.

    • கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் தாங்கள் சுயமாக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
    • விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சென்னையில் சமீப காலமாகவே கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மழை காலங்களில் தான் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் நிகழ்வுகள் அரங்கேறும். ஆனால் இப்போதெல்லாம் கோடை காலத்தில் கூட கொசுக்கடிக்கு பஞ்சமில்லை. மழைக்காலம், குளிர்காலம், கோடை காலம் என எல்லா பருவ காலத்திலுமே சென்னையில் கொசுக்களின் தொல்லை அதிகரித்தே வருகிறது.

    அதிலும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் ஆதிக்கம் மிகவும் அதிகரித்து விட்டது. புற்றீசல் போல பல்கிப் பெருகிய கொசுக்கள் காரணமாக சென்னை மக்கள் பெரும்பாலானோர் இரவு தூக்கத்தை தொலைப்பது தினமும் அரங்கேறி வருகிறது. இரவு 7 மணிக்கு மேல் பொது வெளியில் சாலையோரம் சிறிது நேரம் நின்றாலே கொசுக்கள் மொத்தமாக மொய்த்துக்கொண்டு கடிக்கின்றன.

    இதுவரை இல்லாத வகையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் தாங்க முடியாத சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி எந்த அக்கறையும் காட்டவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாகனங்களில் கொசுமருந்து புகை அடிப்பது பெயரளவுக்கு மட்டுமே நடப்பதாகவும், அதனால் கொசுக்கள் ஒழியவில்லை என்பதும் பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.

    கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் தாங்கள் சுயமாக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். கொசுவர்த்தி ஏற்றினாலும், கிரீம் பயன்படுத்தினாலும் அவற்றுக்கு கொசுக்கள் சீக்கிரமே பழகி விடுவதாகவும், அதனால் நிரந்தர பலனில்லை என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

    பெரும்பாலானோருக்கு அலர்ஜி பாதிப்பு இருப்பதால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கும் ஸ்பிரே உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் பொதுமக்கள் தவிக்கிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பால் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் கொசுக்களை ஒழிப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் புதிதாக கையாண்டு வருகிறார்கள். மழைநீர் வடிகால்களுக்கு கொசுவலை போர்த்தும் திட்டம் தான் அது. முதல் கட்டமாக திருவொற்றியூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இந்த பணிகள் நடந்து வருகிறது.

    சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை வடிகால்வாயில் விழச் செய்வதற்காக ஆங்காங்கே சிறிய அளவிலான தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டிகளின் மூடியை திறந்து கொசுவலை போர்த்தி, அதன் மேல் மீண்டும் மூடி வைக்கப்படுகிறது. மழைநீர் வடிகால்வாய் தொட்டிக்குள் உள்ள கொசுக்கள் தொட்டி மூடியில் உள்ள துளை வழியே வெளியேறுவதை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் இந்த முயற்சியானது பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக வலைதளங்களில் வறுத்தெடுக்கிறார்கள்.

    இது தொடர்பான விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கொசுவலை முயற்சியால் உண்மையிலேயே பயன் இருக்குமா என்கிற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெர்மாக்கோல் மிகவும் பிரபலமானதை யாரும் மறந்துவிட முடியாது. வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க அப்போது அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ அணை நீரின் மேற்பரப்பில் தெர்மாகோலை மிதக்கவிட்டார். ஆனால் தண்ணீரில் ஏற்பட்ட அலையால் அனைத்து தெர்மாக்கோல்களும் சில நிமிடங்களிலேயே கரை ஒதுங்கின. அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

    அந்த தெர்மாக்கோல் முயற்சியுடன், இந்த கொசுவலை முயற்சியை தொடர்புபடுத்தி 'அன்று தெர்மாக்கோல் இன்று கொசுவலை' என்று பலரும் இப்போது நகைச்சுவையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த விமர்சனங்கள் வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

    'கொசுவை பிடிக்க வலைவிரிக்கும் சென்னை மாநகராட்சி... வாகன ஓட்டிகளே உஷார்!', கொசு வலைகளை கரையான் அரிக்காமல் இருக்க பூச்சி மருந்து தெளிக்கப்படுமா?, 'கொசு உற்பத்தியை தடுக்க புதிய வழி... நீங்க ஒரு சிட்டி விஞ்ஞானி!', 'தெர்மாக்கோல் சம்பவமே இதைவிட பரவாயில்லை போல!', 'மதுரைக்கு தெர்மாக்கோல்,,, சென்னைக்கு கொசுவலை...' என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.

    திரைப்படத்தில் வரும் 'என் கட்சிக்கு மட்டும் நிதி நெருக்கடி இல்லாமல் இருந்திருந்தால் ஒரு பிரமாண்டமான கொசுவலையை வாங்கி தொகுதி முழுவதும் பந்தல் போட்டு மூடி இருப்பேன்... என்னால் முடியவில்லையே...' என்று நடிகர் வடிவேல் பேசும் சினிமா டயலாக்கையும் பதிவிட்டு வருகிறார்கள்.

    கவுண்டமணி, செந்தில் காமெடியில் செந்தில், கவுண்டமணியிடம், செந்தில் கேள்வி எழுப்புகிற 'மீனுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்? மீன் இருக்கும். மானுக்கு வலை போட்டா வலைக்குள் என்ன இருக்கும்? மான் இருக்கும். கொசுவுக்கு வலைபோட்டா வலைக்குள் என்ன இருக்கும்? என்ற காமெடியையும் பதிவிட்டுள்ளனர்.

    எது எப்படியோ சென்னையில் கொசு ஒழிந்தால் போதும்... அதுதான் பொதுமக்களின் விருப்பம்.

    • இந்தத் திட்டம் சுமார் ரூ.6.36 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
    • சென்னையின் 15 மண்டலங்களிலும் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்தப் பலகைகள் நிறுவப்பட உள்ளன.

    சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் ரூ.6.36 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.

    முதற்கட்டமாக, மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை நுழைவு வாயிலில் ஒரு டிஜிட்டல் பலகை சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மற்ற 100 இடங்களிலும் இந்தப் பலகைகளைப் பொருத்தும் பணிகள் 2026 பிப்ரவரி இறுதிக்குள் நிறைவடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னையின் 15 மண்டலங்களிலும் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்தப் பலகைகள் நிறுவப்பட உள்ளன. இதில் காற்றின் தரம், பி.எம் 2.5, பி.எம் 10, நச்சு வாயுக்களின் அளவு, காற்றின் வேகம், வெப்பநிலை மற்றும் மழை அளவு உள்ளிட்ட 19 வகையான தரவுகள் காட்சிப்படுத்தப்படும்.

    இந்தத் திட்டம் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் இயக்கப்படுகிறது. அதாவது, இந்தத் திரைகள் தினமும் 15 மணிநேரம் செயல்படும். இதில் இரண்டு மணிநேரம் அரசு அறிவிப்புகள் மற்றும் காற்றின் தர விவரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள 13 மணிநேரம் வருவாயை ஈட்டுவதற்காக வணிக ரீதியான விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படும். 

    • இது போன்ற மாற்றங்கள் மற்ற நகரங்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகம் ஆகும்
    • பயோ மைனிங் முறை மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளது.

    சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த பெருங்குடி குப்பைக் கிடங்கு, தற்போது பசுமை நிறைந்த Eco பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

    'பயோ-மைனிங்' தொழில்நுட்பம் மூலம் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு, அந்த நிலம் Eco பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது

    இந்த மாற்றத்தைப் பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், பல தசாப்தங்களாகக் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்த பெருங்குடி கிடங்கு, சென்னை மாநகராட்சியின் தீவிர முயற்சியால் தற்போது மரங்கள் மற்றும் நடைபாதைகள் கொண்ட அழகிய பூங்காவாக உருமாறியுள்ளது.

    இதைச் சாதித்துக் காட்டிய சென்னை மாநகராட்சிக்கு எனது பாராட்டுகள். இது போன்ற மாற்றங்கள் மற்ற நகரங்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகம் ஆகும்" என்று பதிவிட்டுள்ளார்.

    ஆனந்த் மஹிந்திரா பதிவுக்கு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    அதில், நன்றி திரு. ஆனந்த் மஹிந்திரா.. சென்னை மாநகராட்சி, மொத்தம் 90 லட்சம் மெட்ரிக் டன் பழமையான குப்பைகளில் இருந்து, பயோ மைனிங் முறை மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளது.

    மீதமுள்ள குப்பைகளை பிப்ரவரி 2027-க்குள் அகற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் தற்போது, குப்பைகளை நிலத்தில் கொட்டுவதை முற்றிலுமாகத் தவிர்ப்பதிலும், திறமையான கழிவு மேலாண்மையை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி, அறிவியல் பூர்வமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மைத் தீர்வுகளைச் செயல்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
    • தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் தெரிவிப்பு

    மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னையின் பெருமையாகவும், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தரும் முக்கிய சுற்றுலாதலமாகவும் விளங்கும் மெரினா கடற்கரை, சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழ்கிறது. மெரினா கடற்கரையை சர்வதேசதரத்தில் மேம்படுத்தி பாதுகாத்திட பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மெரினா கடற்கரையை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 (Solid Waste Management Rules, 2016)ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக, மெரினா கடற்கரையின் தூய்மையை உறுதி செய்வதற்காக Chennai Enviro Solutions Pvt. Ltd (SPV) என்ற தனியார் நிறுவனம் மூலம் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் 7 இயந்திரங்கள் (Beach Cleaning Machines) மற்றும் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 274 தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளிலிருந்து மட்டும் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது.

    மேலும், பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 53 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், பொதுமக்களின் போதியஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால், கடற்கரையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் காணப்படுவதால் அழகற்றதாகவும், சுகாதார குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. குறிப்பாக, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடாமல், திறந்த வெளிகளில் வீசப்படுகிறது.

    இதன் காரணமாக சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையின் அழகும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதோடு, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சென்னை நகரின் நற்பெயருக்கும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

    எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளுக்கு பெருமளவில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் போது, அனைவரும் பொறுப்புனர்வோடு குப்பை கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மை பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதனை மீறி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் படி ரூ.5,000/– அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும் இதன்மூலம் கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. தூய்மையான கடற்கரை – சுகாதாரமான சென்னை – அனைவரின் பொறுப்பு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விண்ணப்பங்கள் மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அத்துமீறி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், காய்ந்து போன மரங்களை அகற்றுதல், மாற்று இடங்களில் மரங்களை நடுதல் மற்றும் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு இதுவரை அரசு மற்றும் தனியார் விண்ணப்பங்கள் வனத்துறை மூலமாக பெறப்பட்டு, இந்த விண்ணப்பங்கள் மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சேவையினை பொதுமக்கள் எளிமையாக பயன்படுத்துவதற்கும் காலதாமதத்தை குறைத்து துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி ஒரு புதிய முன்னெடுப்பை தற்பொழுது மேற்கொண்டுள்ளது.

    அவ்வாறாக மரங்கள் அகற்றுதல் மற்றும் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வனத்துறை மூலமாக நேரடியாக விண்ணப்பித்த நிலையை மாற்றி 12-ந்தேதி முதல் அனைத்து விண்ணப்பதாரர்களும், விண்ணப்பங்களை மாநகராட்சி இணையதளம் (https://chennaicorporation.gov.in/gcc/) மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.

    மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும், மரக்கிளை களை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூபாய் 15 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்.

    எனவே சென்னை மாநகராட்சி பகுதிகளில் மரங்கள் அகற்றுதல் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் நம்ம செயலி மூலமாக பொதுமக்கள் விண்ணப்பித்திட வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    ×