என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காற்று மாசு"

    • 2025 காற்று தர வாழ்க்கை குறியீட்டு (AQLI) அறிக்கையின்படி, டெல்லி மக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் 8.2 ஆண்டுகளை இழந்துள்ளனர்.
    • டெல்லிக்கு வடக்கில் இமயமலையும், தென்மேற்கில் ஆரவல்லி மலைத் தொடரும் அரணாக அமைந்துள்ளன.

    நாட்டின் தலைநகரமான டெல்லி உலகின் மிகவும் காற்று மாசு கொண்ட நகரங்களில் பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக ஆண்டின் கடைசி மாதங்களில் குளிர்காலத்தில் டெல்லியின் காற்று மாசு மிகவும் மோசமடைகிறது.

    இதனால் சுவாசப் பிரச்சனைகள் உள்ளிட்ட மோசமான உடல்நலப் பிரச்சனைகளை டெல்லி மக்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு காற்று விஷமாக மாறும் நிலையை எட்டும் தருவாயில் உள்ளது.

    2025 காற்று தர வாழ்க்கை குறியீட்டு (AQLI) அறிக்கையின்படி, டெல்லி மக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் 8.2 ஆண்டுகளை இழந்துள்ளனர்.

    மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி 130 ஆக இருந்த டெல்லியின் காற்றின் தரம் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் 428 என்ற அபாயகரமான நிலையை எட்டியது. 

    இன்றும் டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400க்கும் அதிகம் என்ற மோசமான நிலையிலேயே உள்ளது. அடுத்த வாரத்திலும் இந்த நிலையே நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் மாதத்தில் டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் பயிர்கழிவுகளை எரிப்பதில் இருந்து வரும் புகையே டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணமாக பொதுவான கருத்து நிலவுகிறது.

    ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இதை நிராகரிக்கிறது. அதாவது டெல்லி காற்று மாசுக்கு விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதும் ஒரு காரணமே தவிர அதுவே முக்கிய காரணம் கிடையாது.

    மத்திய புவி அறிவியல் துறை வெளியிட்டிருக்கும் முடிவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் பயிர்க் கழிவுகளுக்கு தீ வைப்பதால் டெல்லிக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அக்டோபரில் பயிர்க் கழிவு தீ வைப்பால் டெல்லி காற்றுக்கு 2.62 சதவீத பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது.

    அந்த சமயம் டெல்லி காற்று தரக் குறியீடு 250 என்ற அளவிலேயே இருந்தது. இந்த நவம்பர் 12 டெல்லி காற்று தரக் குறியீடு 418 என்ற 'மிகவும் அபாய' நிலையை எட்டிய நிலையில் இதில் பயிர்க் கழிவுகள் எரிப்பின் பங்கு 22.47 சதவீதம் மட்டுமே ஆகும்.

    நவம்பர் 3 ஆம் வாரத்தில் பயிர்க் கழிவுகள் எரிப்பது குறைந்த போதும் டெல்லி காற்று மாசு குறையவில்லை.

    நவம்பர் 18 முதல் 20 வரை டெல்லி காற்று மாசில் பயிர்த் கழிவுகள் எரிப்பதன் பங்கு 5.4 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரை குறைந்தபோதிலும் டெல்லி காற்று தரக் குறியீடு 325-க்கு மேலேயே நீடித்தது.

     இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பயிர்க் கழிவுகளை எரிப்பது டெல்லி காற்று மாசுக்கு ஒரு காரணிதான் என்றபோதிலும் முக்கிய காரணம் அல்ல என மத்திய புவி அறிவியல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

    மாறாக டெல்லிக்கு காற்று மாசுக்கு காரணமாக மத்திய புவி அறிவியல் துறை குறிப்பிடும் தரவுகளில், டெல்லி காற்று மாசுக்கு சுற்றுப்புற நகரங்களாக கவுதம் புத்தா நகர், குர்கான், கர்னால், மீரட் உள்ளிட்ட டெல்லியைச் சுற்றியுள்ள நகரங்களின் பங்களிப்பு 29.5 சதவீதம் ஆகும்.

    டெல்லி போக்குவரத்தில் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, காற்று மாசுக்கு 19.7 சதவீதம் பங்களிக்கிறது.

    காற்று மாசுக்கு குடியிருப்புகளின் பங்களிப்பு 4.8 சதவீதம் ஆகவும், புறத் தொழிற்சாலைகளின் பங்களிப்பு 3.7 சதவீதம் ஆகவும், மற்றும் கட்டுமானப் தூசு 2.9 சதவீதம் ஆகவும் உள்ளன.

    மாறாக அதிர்ச்சியூட்டும் வகையில் டெல்லி காற்று மாசுக்கு, காரணமே அறியப்படாத, அடையாளம் காணப்படாத காரணிகளின் பங்களிப்பு 34.8 சதவீதம் உள்ளது.

    இந்த மூலங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால், மாசைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால் அவை என்னவென்றே தெரியாமல் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமற்றது என மத்திய புவி அறிவியல் துறை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    இதன்மூலம் டெல்லி காற்று மாசுக்கு பல காரணிகள் கூட்டுப் பங்களிப்பை செய்கின்றன. மேலும் டெல்லியின் புவியியலும் காற்று மாசு அதிகளவில் காணப்பட முக்கிய காரணமாகவும்.

    டெல்லிக்கு வடக்கில் இமயமலையும், தென்மேற்கில் ஆரவல்லி மலைத் தொடரும் அரணாக அமைந்துள்ளன. இதனால் குளிர்காலத்தில் தூய காற்று நுழைவதை இந்த இரு அரண்கள் தடுக்கிறது.

    எனவே டெல்லியில் மாசுபாடு காற்றில் தேக்க நிலையை அடைந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டு தரம் குறைவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    தூய காற்றை சுவாசிப்பது மக்களின் உரிமையாகும். இந்த பிரச்சனைக்கு டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒருமித்த கருத்துடன் தீர்வை நோக்கிய வியூகத்தை வகுத்து செயல்படுவதே முழுமுதற் தீர்வாகவும். மேலும் மக்களின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியமாகும்.    

    • டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அபாய வரம்பை தொட்டுள்ளது.
    • மருத்துவமனைகள், தீயணைப்பு சேவைகள் உள்ளிட்டவற்றிற்கு இந்த 50 சதவீத வரம்பு கிடையாது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாக ஆபத்தான அளவிற்கு உயர்ந்து வருகிறது.

    காற்று மாசுபாடு அபாய வரம்பை தொட்டுள்ளதால் பொது சுகாதாரத்தை பாதுகாக்க அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள டெல்லி அரசு கட்டாயப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களின் மொத்த பணியாளர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே நேரடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும். மீதமுள்ள ஊழியர்கள் கட்டாயம் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

    அவசர பணிகள் அல்லது பொது பயன்பாடு சேவைகள் மேற்கொள்ள வேண்டிய சூழலில் மட்டுமே கூடுதல் பணியாளர்களை நேரடியாக அழைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிநேரங்களை கட்டம் கட்டமாக மாற்றி அமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள், தீயணைப்பு சேவைகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பொது போக்குவரத்து , தூய்மை பணிகள், பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் மாசு கட்டுப்பாடு தொடர்பான அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு இந்த 50 சதவீத வரம்பு அமலுக்கு வராது.

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கருத்தில் கொண்டு மக்கள் அத்தியாவசிய பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும், முக கவசம் பயன்படுத்தவும், வீட்டுக்குள் காற்று சுத்திகரிப்பு சாதனங்களைப் பயன்படுத்தவும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

    • நச்சுக் காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது நுரையீரலை கடுமையாக சேதப்படுத்தும்.
    • மாசுபாடு அதிக இறப்பு விகிதங்களுடன் கடுமையான வைரஸ் அல்லது பாக்டீரியா நிமோனியாவை ஏற்படுத்துகிறது.

    டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை 'மோசமான' பிரிவில் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு காலை 8 மணிக்கு 245 ஆக பதிவாகியுள்ளது.

    மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியின் பல கண்காணிப்பு நிலையங்களில் பதிவான காற்றின் தரக் குறியீடு 'மோசமாக' இருந்தது. சில இடங்களில் 'மிதமான' மற்றும் 'மிகவும் மோசமான' காற்றின் தரத்தையும் பதிவு செய்தன.

    இந்த நிலையில் டெல்லி தலைநகரில் காற்று மாசுபாடு அபாயகரமான உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நுரையீரல் நிபுணர் டாக்டர் கோபி சந்த் கில்னானி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக நுரையீரல் நிபுணர் டாக்டர் கோபி சந்த் கில்னானி கூறுகையில், உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடிந்தால் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுங்கள். நச்சுக் காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது நுரையீரலை கடுமையாக சேதப்படுத்தும். நாள்பட்ட சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் ஆயுட்காலத்தை கூட குறைக்கும்.

    மாசுபாடு அதிக இறப்பு விகிதங்களுடன் கடுமையான வைரஸ் அல்லது பாக்டீரியா நிமோனியாவை ஏற்படுத்துகிறது. தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது, ஏற்கனவே சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் கடினமான காலமாக இருக்கும். ஏனெனில் பெரும்பாலான மக்கள் சுவாசிக்கக் கூட சிரமப்படுகிறார்கள். நாள்பட்ட பாதிப்பில் உள்ளவர்கள் முடிந்தால் டிசம்பர் வரை தலைநகரை விட்டு வெளியேறுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    • சல்பர் டை ஆக்ஸைடு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முறை ஃபுளு கேஸ் டி-சல்பியூரிசேசன் என்று அழைக்கப்படுகிறது.
    • இது சுவாசப் பிரச்சனைகள், இதய நோய்களுக்கு முக்கிய காரணம்

    நாட்டில் 78% நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு நச்சு வாயுவை பிரித்தெடுக்கும், காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தை நிறுவுவதில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது.

    நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்போது அனல் மின் நிலையங்களில் சல்பர் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த துகள்கள் புகைப்போக்கி வழியாக வெளியேறும். இவை காற்றில் கலந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும்.

    இந்த சல்பர் டை ஆக்ஸைடு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முறை ஃபுளு கேஸ் டி-சல்பியூரிசேசன் என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரு மில்லியன் (10 லட்சம்) அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களின் 10 கி.மீ. சுற்றளவுக்கு வெளியே உள்ள அனல் மின் நிலையங்கள் இந்த முறையை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பொது சுகாதாரத்தை விட நிறுவனங்களின் வசதிக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர் சாடியுள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முடிவுக்கு காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நிலக்கரி எரிப்பு இந்தியாவின் PM2.5 மாசுபாட்டில் சுமார் 15% பங்களிக்கிறது என்றும், இது சுவாசப் பிரச்சனைகள், இதய நோய்களுக்கு முக்கிய காரணம் என்றும் கோகோய் கூறினார்.

    இந்த முடிவு, இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதோடு, கோடிக்கணக்கான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் எச்சரித்தார்.

    • PM 2.5 கொண்ட காற்றை சுவாசிப்பது, முன்கூட்டிய பிறப்பு மற்றும் குறைந்த எடை பிறப்புக்கு வழிவகுக்கும்
    • மழை, வெப்பம் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட வானிலை நிலைமைகள் இதற்கு காரணம் .

    2019-21 மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இந்தியாவில் 13 சதவீத குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. 17 சதவீத குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன. மழை, வெப்பம் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட வானிலை நிலைமைகள் இதற்கு காரணம் என்று  ஆய்வு கூறுகிறது.

    டெல்லி ஐஐடி, மும்பை சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், கர்ப்ப காலத்தில் காற்று மாசுபாட்டை மதிப்பிடுவதற்கு மத்திய அரசின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பிலிருந்து ரிமோட் சென்சிங் தரவைப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.

    சுவாச மண்டலத்தை கடுமையாக சேதப்படுத்தும் நுண்ணிய துகள் பொருளான PM 2.5 கொண்ட காற்றை சுவாசிப்பது,  குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை பிறப்புக்கு வழிவகுக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசம், டெல்லி, உத்தரகண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் PM 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிக அளவில் காணப்படுகிறது.

    தென் மாநிலங்களில் இந்த சதவீதம் பொதுவாக குறைவாகவே உள்ளது.

    பஞ்சாபில் அதிக எடை குறைந்த குழந்தைகள், 22 சதவீதம் உள்ளனர். டெல்லி, மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • ஜவுளித்துறையில் வளம் குன்றா வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை ஆதரிப்பதற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது
    • கடந்த கோடையில் கோவையை விட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது:-

    ஜவுளித்துறையில் வளம் குன்றா வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை ஆதரிப்பதற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பினரும் உதவி வருகிறார்கள். மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பரிசோதனைகள் வழங்கும் பணிகளை பெண்கள் தொழில்முனைவோர் துணை அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு மூலமாக 5 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.

    உலகளாவிய காற்று மாசுபாடு குறைவாக உள்ள நகரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவில் 3 நகரங்களில் காற்று மாசுபாடு குறைவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில் திருப்பூர் முதன்மை இடத்தில் உள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வின்படி வனத்துக்குள் திருப்பூர் திட்டம் மூலமாக திருப்பூரில் வெப்பநிலை கடந்த கோடையில் கோவையை விட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
    • 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து. செய்யப்படுகிறது.

    டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர்.

    இதனால், டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

    டெல்லியில் இயங்கும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

    காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், 5ம் வகுப்புக்கு மேலான மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

    • காற்று மாசுபாட்டால் நொய்டாவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
    • காற்று மாசால் டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பயிர் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்றவற்றால் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு அபாயகர கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், மனித உயிருக்கு டெல்லியில் நிலவும் காற்று மாசு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், மனிதனின் ஆயுட்காலம் குறைவதாகவும் வெளியான பத்திரிகை செய்தி அடிப்படையில், இதை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    ஆணையத்தின் உத்தரவின் பேரில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், காற்று மாசு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வருமாறு டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் 10-ம் தேதி நேரிலோ அல்லது காணொலி மூலமோ ஆஜராகுமாறு அதில் தெரிவித்துள்ளது.

    • மும்பை நகர மக்கள் சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
    • தற்போது குளிர்காலம் என்பதால் காற்றின் வேகம் குறைவாக உள்ளது.

    மும்பை :

    நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவது வாடிக்கையாகி விட்ட நிலையில், நாட்டின் நிதி தலைநகராக விளங்கும் மும்பையிலும் காற்றின் தரம் கடந்த சில நாட்களாக மோசமாகி வருகிறது.

    காற்றின் தரம் ஏ.கியூ.ஐ. என்ற அளவை கொண்டு கணக்கிடப்படுகிறது. அது 1 முதல் 100 வரையிலான ஏ.கியூ.ஐ. ஆக இருந்தால் நல்லது என்று அர்த்தம். 100 முதல் 200-க்குள் இருந்தால் பரவாயில்லை எனலாம். 200 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 300-க்கும் மேல் இருந்தால் மிகவும் மோசம் என்றும் அளவிடப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று மும்பையில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையை எட்டியது. அதாவது நகரில் நேற்று காற்றின் தரம் 309 ஏ.கியூ.ஐ. (மிகவும் மோசம்) என்ற அளவில் பதிவாகி இருந்தது. அதே நேரத்தில் நேற்று டெல்லியில் காற்றின் தரம் 249 ஏ.கியூ.ஐ. (மோசம்) என்ற அளவில் தான் பதிவாகி இருந்தது. இதனால் காற்றின் தரத்தில் மும்பை மாநகரம் தலைநகர் டெல்லியை மிஞ்சி விட்டது.

    நேற்று முன்தினத்தை பொறுத்தவரை மும்பையில் 315 ஏ.கியூ.ஐ. என்ற அளவில் காற்றின் தரம் பதிவாகி இருந்தது. அன்றைய தினம் டெல்லியில் காற்றின் தரம் 262 ஏ.கியூ.ஐ. என்ற அளவில் தான் இருந்தது.

    இதனால் மும்பை நகர மக்கள் சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    மும்பையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள், கடற்கரை சாலை பணிகள், எண்ணில் அடங்காத கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதுபோன்ற காரணங்களால் தான் நகரில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது குளிர்காலம் என்பதால் காற்றின் வேகம் குறைவாக உள்ளது. இதனால் காற்றில் சேரும் மாசு நகராமல் இருப்பதால், காற்று மாசு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு நகரில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்தநிலையில் மும்பையில் காற்றின் தரம் மோசமாக இருப்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியதாவது:-

    கட்டுமான பணிகளால் காற்று மாசு அதிகரித்து இருப்பது என்பதை ஏற்க முடியாது. கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடக்கிறது. மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம், ஆர்.சி.எப், எச்.பி.சி.எல். போன்ற நிறுவனங்கள் அதிகளவில் கழிவுகளை வெளியேற்றுகின்றன. அதுதான் காற்று மாசு அதிகரிக்க காரணம். இந்த பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சகத்திடம் பேசி உள்ளோம்.

    மும்பையில் சில நாட்களில் ஜி20 மாநாடு கூட்டங்கள் நடக்க உள்ளன. இதற்காக வெளிநாட்டில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளனர். எனவே காற்று மாசு பிரச்சினை குறித்து பெட்ரோலிய அமைச்சகத்துடன் பேசி உள்ளோம். இதன் மூலம் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகரித்து வரும் காற்று மாசால் டெல்லி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • டெல்லியில் இயங்கும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக, குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குவதால் டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேசிய தலைநகரின் நிலைமை, வானிலை துறை மற்றும் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்பீடு செய்தது. அதன்படி, டெல்லியில் கட்டுமான பணிகள் மற்றும் தொழில்துறை செயல்பாடுகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.

    • இந்தியா கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 8வது இடத்திற்கு சரிந்துள்ளது.
    • இந்த பட்டியலில் 7,300க்கும் மேற்பட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்ட்டுள்ளது.

    மாசுபட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு சரிந்துள்ளது. இந்தியாவில் தீங்கு விளைவிக்கக்கூடிய PM 2.5 என்ற காற்று மாசு நுண்துகள் செறிவு 53.3 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டராக குறைந்திருந்தாலும், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள பாதுகாப்பு வரம்பை விட 10 மடங்கு அதிகமாகும்.

    இந்த பட்டியலில் 7,300க்கும் மேற்பட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், இந்திய நகரங்கள் முன்னிலையில் உள்ளன. மிகவும் மாசுபட்ட முதல் 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. டாப்-10 நகரங்களில் 6 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிக மாசுபட்ட நகரங்களில் முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தானின் லாகூர், சீனாவின் ஹோடான் நகரங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிவாடி, டெல்லி ஆகிய நகரங்கள் உள்ளன. 

    • கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்
    • நடந்து செல்லும் தூரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது காற்று மாசுபாடு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

    காற்று மாசுபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவை 50 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், காற்று மாசுபாட்டிற்கும், கருச்சிதைவுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

    இந்தக் குழு, 2009 முதல் 2017 வரை சீன தலைநகரில் வசிக்கும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது. காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கருச்சிதைவு ஏற்பட 52 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களால் உருவாகும் நச்சு ரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆய்வின் தலைமை ஆசிரியருமான, லிகியாங் ஜாங், கர்ப்பத்திற்கு முன்னால் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் கருச்சிதைவுகளை தடுக்க அல்லது குறைக்க சாத்தியமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    "கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும், இது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவர்களின் கருவின் ஆரோக்கியத்திற்கும் கூட அவசியமாகிறது" என தெரிவித்துள்ள பேராசிரியர் ஜாங் மேலும் கூறுகையில், இந்த விவகாரத்தில் இன்னும் தொடர் ஆய்வுகள் தேவை என்று கூறியுள்ளார்.

    ''காற்றை சுத்தப்படுத்த தற்போது காற்று சுத்திகரிப்பு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலும் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு யாராலும் காற்று மாசிலிருந்து தப்பிக்க இயலாது. மேலும் காற்று சுத்திகரிப்பு கருவிகள் வாங்குவதைப்பற்றி ஏழை எளிய மக்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏனென்றால் அவை விலை உயர்ந்தவை. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும். நடந்து செல்லும் தூரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்'' என்றார்.

    எரிபொருட்களால் உருவாகும் நச்சு ரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    ×