search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Corporation"

    • ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டதால் ஏரியின் பரப்பளவும் குறைந்தது.
    • ராஜாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

    சென்னை:

    தென்சென்னை பகுதியில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான மடிப்பாக்கம் ஏரி 62 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கடந்த 2017-ம் ஆண்டு ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்தது.

    மேலும் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டதால் ஏரியின் பரப்பளவும் குறைந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகளின் முயற்சியால் இந்த ஏரி மீட்டெடுக்கப்பட்டது.

    இதையடுத்து மடிப்பாக்கம் ஏரியின் புனரமைப்பு பணிகளை கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தொடங்கியது. ரூ.2 கோடி மதிப்பில் நடைபாதைகள், பெண்கள் உடற்பயிற்சி கூடம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டன.

    மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.42 லட்சத்தில் வேலியுடன் கூடிய பாதை அமைக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி மதிப்பில் 2 கி.மீ நீளத்துக்கு ஏரியை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஏரி மடிப்பாக்கம் அய்யப்பன் நகர், கார்த்தி கேயபுரம், ராம் நகர், சதாசிவம் நகர், ராஜாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஏரியின் கரையோரங்களில் 1,000 மரக்கன்றுகளை நட்டனர்.

    இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை வீசி எறிவதாலும், களை செடிகள் அதிக அளவில் வளர்ந்திருப்பதாலும் மடிப்பாக்கம் ஏரி மீண்டும் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மடிப்பாக்கம் பகுதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க மடிப்பாக்கம் ஏரி மட்டுமே முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியை பாதுகாக்க சென்னை மாநகராட்சி பல வசதிகளை செய்து கொடுத்தாலும், ஏரியை பராமரிக்க பாதுகாவலர்களும், தோட்டக்காரர்களும் இல்லை. எனவே சென்னை மாநகராட்சி மடிப்பாக்கம் ஏரியை பாதுகாத்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து வெள்ள தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மடிப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் ஏரியை சீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    • சென்னை மாநகராட்சி `சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • வருகிற 17-ந் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

    சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழும் மெரினா கடற்கரை, மக்களை கவரும் வகையில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் கடற்கரைக்கு தினமும் ஏராளமான மக்கள் பொழுதுபோக்க வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் பல ஆயிரம் பேர் இங்கு குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

    ஆண்டுக்கு பல லட்சம் பேர் வந்து செல்லக்கூடிய இந்த கடற்கரைக்கு இன்னமும் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும், உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவை மேலும் அழகுப்படுத்த வேண்டும் என்பதும் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

    சென்னை மாநகராட்சி `சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை மெரினாவில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    வருகிற 17-ந் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

    வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 947 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
    • சிறப்பு முகாம் மட்டுமல்லாமல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 28-ந்தேதி வரை காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது.

    இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தினர் பெயர் விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? என்பதை சரிபார்த்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக நாளை (சனிக்கிழமை) மற்றும் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (1.1.2007-ந் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம்-6 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம்.

    பெயர் நீக்கம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய உரிய படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும்.

    சிறப்பு முகாம் மட்டுமல்லாமல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 28-ந்தேதி வரை காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், http://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    அதன்படி நேற்று இரவு முதல் இன்று காலையில் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    சென்னையில் காலை 6 மணி வரை சராசரியாக 2.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6 செ.மீ., அடையாரில் 5 செ.மீ., ஆலந்தூர் மற்றும் பெருங்குடியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை. மழை தொடர்பான அனைத்து புகார்கள், உதவிகளுக்கு 1913 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சிங்கர சென்னை 2.0 என்ற திட்டத்தின்படி, பொது மக்கள் ரிப்பன் மாளிகையை காண திட்டமிடப்பட்டுள்ளது.
    • ரிப்பன் மாளிகையை சுற்று பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    111 ஆண்டுகள் பழமைவாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான, ரிப்பன் மாளிகை பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும். இங்கு, மாநகராட்சி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

    சிங்கர சென்னை 2.0 என்ற திட்டத்தின்படி, பொது மக்கள் ரிப்பன் மாளிகையை காண திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, ரிப்பன் மாளிகையை சுற்று பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    commcellgcc@gmail.com என்ற இமெயில் மற்றும் 9445190856 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம்.

    தனி நபர் அல்லது பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் வாயிலாகவும் அனுமதி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

    ரிப்பன் மாளிகையின் கட்டுமான வரலாறு, சென்னையின் வரலாறு, மாநகராட்சி இயங்கும் முறை உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளும் வகையில் சுற்றுலா திட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் புதிய இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • மாநகராட்சி பகுதியில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தற்போது தினமும் சராசரியாக 65 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு 14,885 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    சமீபத்தில் நடத்தப்பட்ட நாய்கள் கணக்கெடுப்பில் சென்னை மாநகராட்சி பகுதியில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் புதிய இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    நாட்டில் முதல் முறையாக நாய்களுக்கென பிரத்யேக இனக்கட்டுப்பாட்டு மையம் சென்னை விலங்குகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த மையங்களில் தினமும் தலா 30 நாய்களுக்கு என ஆண்டுக்கு 9,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் சென்னையில் நாய் கருத்தடை சிகிச்சை ஆண்டுக்கு 27,000-ஆக அதிகரிக்கும். புதிதாக அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் 100 நாய்களைப் பராமரிக்கும் வகையில் 40 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
    • சென்னை மாநகராட்சியின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாநகராட்சி திரும்ப பெற்றுள்ளது.

    சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு விக நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்றும், இனி அங்கு விளையாடச் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை மாநகராட்சியின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த முடிவை திரும்ப பெறுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    • 5 சதவீத ஊக்கத் தொகை சலுகை கிடைக்கும்.
    • இதுவரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    சொத்து வரி குறிப்பிட்ட காலகெடு வுக்குள் சொத்து வரி செலுத்துவதில் பாக்கி வைக்காமல் இருந்தால் அவர்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை சலுகை கிடைக்கும்.

    5.13 லட்சம் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு இந்த மாதம் 30-ந்தேதிக்குள் வரியை செலுத்தி சலுகையை பெறும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டுகளில் நிலுவைத் தொகையை செலுத்தாததால் 5 சதவீத ஊக்கத்தொகை சலுகை பெறும் தகுதியை இழந்துள்ளார்கள்.

    கடந்த ஆண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரி பாக்கி வைத்திருந்த 25 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டு வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது.

    இதையடுத்து அவர்கள் வரியை கட்டினார்கள். சொத்து வரி கட்டாததற்காக இதுவரை சொத்துக்கள் எதையும் மாநகராட்சி பறிமுதல் செய்யவில்லை.

    கடந்த 1-ந்தேதிக்கு முன்பே சுமார் 40 ஆயிரம் பேர் முன் கூட்டியே ஆன்லைனில் 6 சதவீத வரி உயர்வுக்கு பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் ரூ.175 கோடிக்கு மேல் வரி வசூலாகி இருக்கிறது.

    முன் கூட்டியே வரி செலுத்தியவர்களும் தங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அடுத்த மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

    • தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
    • சென்னையில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து அவர் துணை முதல்வர் ஆய்வு செய்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னையில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து அவர் ஆய்வு செய்தார்.

    சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மீட்பு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் ஆய்வு செய்தார். மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் அதி கனமழைக்கான எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவு.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதிப்படுத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து வெளியான தகவல்களில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். சென்னைக்கு நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் 21 ஆயிரம் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதுப்பொலிவுடன் மெரினா நீச்சல் குளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • மெரினா நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் மெரினா மற்றும் பெரியமேடு மை லேடி பூங்கா ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இதில், மெரினா நீச்சல் குளம் 3½ முதல் 5 அடி வரை ஆழம் கொண்டது. மெரினா நீச்சல் குளத்தை முதலில் மாநகராட்சி பராமரித்து வந்தது. பின்னர், ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இங்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கட்டணம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையே, நீச்சல் குளத்தை தனியார் முறையாக பராமரிக்காததால் சுகாதாரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதேபோல, கடந்த ஆண்டு பெரியமேட்டில் உள்ள உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். இதன் காரணமாக நீச்சல் குளங்களில் பொதுமக்கள் நீச்சல் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மெரினா நீச்சல் குளம் கடந்த ஆண்டு மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இன்று மாலை ரூ.1.37 கோடி செலவில் புதுப்பொலிவோடு மறுசீரமைக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நாளை முதல் மெரினா நீச்சல் குளத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் காலை 5:30 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீச்சல் குளம் திறந்திருக்கும். கழிவறை, உடைமாற்றும் அறைகள் போன்ற வசதிகள் என நீச்சல் குளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மெரினா நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி சார்பில் தரப்பட்டுள்ள கியூ.ஆர் கோடை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும். நீச்சல் குளத்தில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அவர்களும் கியூ.ஆர் கோடை பயன்படுத்தி பணம் செலுத்தினால் 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.

    இது தொடர்பான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் எக்ஸ் பதிவில், "சென்னை மெரினா கடற்கரையில் பலரும் விரும்பிச்செல்லும் நீச்சல் குளத்தைக் கழக அரசு ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதுப்பொலிவுடன் மேம்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன நீச்சல் குளத்தை இன்று திறந்து வைத்து, நீச்சல் பயிற்சியையும் தொடங்கி வைத்தோம்.

    அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்ட பின்னர் பாதுகாப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தினோம். மேலும், இப்புதிய நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கான இணையவழி முன்பதிவினையும் தொடங்கி வைத்து வாழ்த்தினோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.
    • ஏற்கனவே 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் 3 குளங்கள் உள்ளது.

    சென்னை:

    ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்' என, யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது.

    மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.

    இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை செயலர், சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, முடிவெடுக்க வேண்டும் என அவகாசம் கேட்டிருந்தது. இதனால் வரும் 14-ந்தேதி வழக்கின் அடுத்த விசாரணை நடக்க உள்ளது.

    இந்த நிலையில், கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

    ஏற்கனவே 30 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் 3 குளங்கள் இங்கு இருக்கும் நிலையில் 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 4 குளங்களை வெட்டும் பணி தொடங்கி உள்ளது.


    ×