என் மலர்
நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்றம்"
- ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு
- இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் கருத்து
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஆசிட் வீச்சு வழக்குகள் தொடர்பான விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய ஷாஹீன் மாலிக் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக்கின் வழக்கு தற்போது வரை விசாரணையில் இருப்பது வெட்கக்கேடானது எனவும் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "சட்ட அமைப்பை எவ்வளவு கேலிக்கூத்தாக்குவது இது. 16 வருடம் இப்படிப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது வெட்கக்கேடானது. ஒரு நாட்டின் தேசிய தலைநகராலேயே இதை கையாள முடியவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்? இது தேசத்திற்கே அவமானம்" என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு ஏன் முடிவுக்கு வரவில்லை என்பதை விளக்கி, பொதுநல மனுவிலேயே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டார். விசாரணையின்போது, ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை மாலிக் விவரித்தார். அவர்களில் பலர் நிரந்தர காயங்களுடன் வாழ்கின்றனர். செயற்கை உணவு குழாய்கள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அதனால் சில நலத்திட்டங்களை பெறமுடியும் எனவும் வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க சட்டம் அல்லது தேவைப்பட்டால் அவசரச் சட்டம் மூலம் சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
- ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றமும் ஆறுமாதம் இடைக்கால ஜாமின் வழங்கியது
- ஆசாராம் நிலையாக இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு வழக்கறிஞர் வாதம்
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த மதபோதகர் ஆசாராம் பாபு (86). இவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 2013 -ல் ஜோத்பூருக்கு அருகிலுள்ள மனாய் கிராமத்தில் உள்ள ஆசிரமத்தில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குஜராத்தின் சூரத்தில் உள்ள மற்றொரு ஆசிரமத்தில் இரண்டு சகோதரிகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசாராம் மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கிலும் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, மருத்துவ காரணங்களுக்காக ஜனவரி 7, 2025 அன்று இடைக்கால ஜாமின் பெற்றார். பின்னர் இந்த ஜாமின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஜாமினை நீட்டிக்கக் கோரிய அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்டில் சரண்டைந்தார்.
இச்சூழலில் அக்டோபர் 29 அன்று, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்த ஆசாராமுக்கு மருத்துவ காரணங்களுக்காக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஆறு மாதம் ஜாமின் வழங்கியது. ஒரு வாரம் கழித்து, நவம்பர் 6 ஆம் தேதி, குஜராத் உயர் நீதிமன்றமும் ஆசாராமுக்கு ஆறு மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆசாராமிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பின் வழக்கறிஞர் அல்ஜோ ஜோசப், ஆசாராம் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆசாராம் நாடு முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம், உயர்நீதிமன்றம் ஒரு மருத்துவக் குழுவை அமைத்ததாகவும், அதன் அறிக்கையில் ஆசாராம் நிலையாக இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதாகவும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் பெற்ற ஆசாராம், அகமதாபாத், ஜோத்பூர் மற்றும் இந்தூர் உள்ளிட்ட பிற இடங்களுக்கு பயணம் செய்து வருவதாகவும் ஜோசப் வாதிட்டார்.
- செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
- வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாஷிவந்தை விடுவித்தனர்.
போரூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.
இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
தொடர்ந்து கடந்த மாதம், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.
வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்த தீர்ப்பை று ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து வரை விடுவித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரிய மனுவை, தீர்ப்பு வழங்கிய நீதிபதி விக்ரம்நாத் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளார்.
- நீதிபதி பதவியை எப்போதும் சேவை வாய்ப்பாகவே பார்த்தேன்.
- நீதிமன்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14 ஆம் தேதி பதவியேற்ற நிலையில், இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார் பி.ஆர்.கவாய். தனது இறுதி பணி நாளான இன்று உச்ச நீதிமன்றத்தில் உரையாற்றிய அவர்,
"உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொள்கிறேன். 1985 ஆம் ஆண்டு சட்டத்துறை மாணவராகச் சேர்ந்தேன். இன்று பணி நிறைவின்போது நீதித்துறை மாணவனாக விலகுகிறேன். அரசியலமைப்பு நிலையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அது எப்போதும் பரிணாமம் அடையும். எனவே நீதிமன்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
ஒரு வழக்கறிஞராகவும், பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாக, பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தபோதும் இதனை அதிகாரப் பதவியாக பார்க்கவில்லை. மாறாக சமூகத்திற்கு சேவை செய்வதற்கான, தேசத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு என்று நம்பியிருக்கிறேன்.
அம்பேத்கரின் போதனைகளிலிருந்தும், அரசியலமைப்பு முறையாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு 1949 நவம்பர் 25 ஆம் தேதி அவர் ஆற்றிய கடைசி உரையிலிருந்தும் தான் நான் உத்வேகம் பெறுவேன். டாக்டர் அம்பேத்கர் எப்போதும் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக வாதிட்டார்.
அடிப்படை உரிமைகளை, அரசின் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட, எப்போதும் முடிந்தவரை நான் முயற்சித்தேன். எளிமையான தீர்ப்புகளை எழுதுவதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவை கடைக்கோடி மக்களுக்காக எழுதப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
2010 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி கவாய் ஆவார். 6 மாதங்களாக பதவி வகித்த கவாய், புத்த மதத்தை சேர்ந்த முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மே 24, 2019 அன்று மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றார்.
- அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
- ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் திருத்தம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மேலும், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
- நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது
- குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் மீண்டும் அனுப்ப வேண்டும்.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் மார்ச் 3ம் தேதி நிராகரித்தார்.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், "இளநிலை நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் மீண்டும் அனுப்ப வேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 254 கீழ் மசோதாவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது.
- தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை செய்வது சிரமம். எனவே கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். இப்போது இதை செய்வது சரியானது அல்ல என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.
ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஜனநாயக, சட்டவிரோாத SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
SIR நடவடிக்கைக்கு எதிராக கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.
- காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.
தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் இன்று பந்த் தொடங்கியது. இந்த பந்த் நடவடிக்கைக்கு ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பந்த் நடவடிக்கையால் தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.
தெலுங்கானா அரசின் அரசாணைக்கு அக்டோபர் 9ம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
- உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையையும், ஒப்படைப்பையும் ஐயுறுகிறதா?
- கரூர் வழக்கு விசாரணை நடைபெறுவது எப்படி நம்பிக்கைக்கு உரியதாக இருக்க முடியும்?
கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது!
கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் பங்கேற்கலாம், ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? தமிழ்நாட்டில், தமிழர்கள் மரண நிகழ்வு குறித்த விசாரணையில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனையை விதித்ததன் மூலம் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையையும், ஒப்படைப்பையும் ஐயுறுகிறதா? ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தமிழ் அதிகாரிகளுக்கு நடந்த இந்த அவமதிப்பிற்கு, தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இந்த தலைகுனிவிற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. சுயமரியாதை, மாநில சுயாட்சி என பெரும் பேச்சுக்கள் பேசியவர்கள் இப்பொழுது வாய் மூடி இருப்பது ஏன்?
தமிழ்நாட்டில் தமிழர்கள் உயிரிழக்கக் காரணமான துயர நிகழ்விற்காகத் தமிழர்களிடம் நடைபெறும் நீதி விசாரணையில் தமிழ் நன்கு தெரிந்த அதிகாரி இடம்பெறுவதுதானே சரியானதாக இருக்க முடியும்? தமிழர் நிலத்தின் வரலாறும், அரசியலும் தெரியாத, தமிழர் மண்ணிற்குச் சிறிதும் தொடர்பில்லாத அதிகாரிகள் விசாரணை செய்வது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்? அது விசாரணையில் தேவையற்ற தாமதத்தையும், தடங்கலையும் ஏற்படுத்தாதா?
மணிப்பூர் கலவரத்திற்கான விசாரணையில் அம்மாநில மொழி தெரியாத ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்தால் அம்மாநில மக்கள் ஏற்பார்களா? அல்லது கும்பமேளா நெரிசல் மரணம் குறித்து விசாரணை செய்ய இந்தி தெரியாத அதிகாரியை நியமித்தால் அம்மாநில மக்கள்தான் ஏற்பார்களா? அதிலும், குஜராத் கலவரத்தில் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் கொடூரக் குற்றவாளிகளை விடுவித்து வழங்கிய தவறான தீர்ப்பினை உச்சமன்றமே ரத்து செய்த நிலையில், அந்த நீதிபதியின்கீழ் கரூர் வழக்கு விசாரணை நடைபெறுவது எப்படி நம்பிக்கைக்கு உரியதாக இருக்க முடியும்?
ஒவ்வொரு ஆண்டும் 10 விழுக்காடு அளவிற்குக் குடிமைப்பணி அதிகாரிகள் இந்த நாட்டின் சேவைப் பணிக்காகத் தமிழர் நிலம் அளித்து வருகின்றது. இந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தமிழ் அதிகாரிகள் சிறப்புற பணியாற்றி மொழி, இன, மதம், கடந்து மக்கள் தொண்டாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களின் சிறப்பான செயற்பாடுகளால் நேர்மையானவர்கள், பணியாற்றல்மிக்க நிர்வாகிகள் என்றே பெயரெடுத்தவர்கள். தமிழ் அதிகாரிகளின் உண்மையும், உழைப்பும் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தவருக்கும் சற்றும் குறைந்தது இல்லை.
இந்த நாட்டின் விடுதலைப் போராட்டம் முதல் இன்றைய எல்லைப் பாதுகாப்பு வரை எப்படித் தமிழர்களின் பங்கு மற்ற மாநிலத்தவருக்குக் குறைந்தது இல்லையோ, எப்படி வரி செலுத்தி, வாக்கு செலுத்தி இந்த நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், இறையாண்மையும் பேணுவதில் தமிழர்களின் பங்கு மற்ற இனத்தினரை விடவும் முதன்மையாக உள்ளதோ, அதைப்போலவே தமிழ் அதிகாரிகளும் மற்ற மாநில அதிகாரிகளை விடவும் சிறப்பானவர்கள் என்பதே கடந்தகால வரலாறாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் வேண்டாம் என்று கோருபவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் வாக்கு செலுத்த வேண்டாம், வரி செலுத்த வேண்டாம் என்றும் கோருவார்களா?
தமிழர்களின் உரிமைக்கும் உணர்வுக்கும் இந்த நாடு உரிய மதிப்பைத் தராவிட்டால், இந்த நாட்டின் சட்டத் திட்டங்களின் மீது தமிழர்களுக்கு எப்படி மதிப்பு வரும்? நாட்டுப்பற்றுமிக்க, நடுநிலைமை தவறாத தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளை, ஒரு வழக்கு விசாரணையின் உண்மைத்தன்மை பாதிக்கும் என்று கூறி விலக்கி வைப்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் நேர்ந்துள்ள தேசிய இன அவமதிப்பாக, மானமிழப்பாகத்தான் பார்க்க முடியும்.
ஏற்கனவே, ஒரிசா மாநில மக்களின் முன்னேற்றத்திற்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த குடிமைப்பணி அதிகாரி கார்த்திகேயபாண்டியனை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அவதூறு பரப்பி அவமதித்தது அம்மாநில பாஜக. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான கட்சி என்று கூறிக்கொண்டு இனப்பாகுபாடு காட்டி அவமதித்த பாஜகவின் பொய் குற்றச்சாட்டிற்குச் சற்றும் குறைவில்லாதது தற்போதைய இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுமாகும். தமிழர்களின் மனதைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ள இவ்வுத்தரவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் உங்களுக்கு நியாயமானதாகத் தோன்றுமானால், கரூர் உயிரிழப்பு விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உடனடியாக மனுதாக்கல் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த அறிக்கையைப் படிப்பவர்களின் மனச்சான்றுக்கே விட்டுவிடுகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி.
- பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும்
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெல்லியில் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரை மட்டும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை விற்கவும் அனுமதி அளித்துள்ளது.
பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும் என்றும் டெல்லியில் மாலை 6 - இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது.
- டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டுள்ளது. டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டது.
மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம் இந்த உத்தரவால் டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்படும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்கள் விற்கப்பட்டுள்ளது.
- மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து சட்ட விரோதமாக சிறுநீரகத்தை தானமாக பெற்றனர். இதற்கு போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்களை விற்க வற்புறுத்திய நிலையில் இதற்கு திருச்சி மற்றும் பெரம்பலூரில் செயல்பட்ட 2 தனியார் மருத்துவமனைகள் உடந்தையாக செயல்பட்டதாக தெரியவந்தது.
மேலும் குறிப்பிட்ட 2 மருத்துவமனைகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசு இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை. எனவே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு இந்த சம்பவம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும் இதில் நீலகிரி, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகளை விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்தும் உத்தரவிட்டது.
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதேவேளையில் கோர்ட்டு பதிவாளர், அதிகாரிகளை நாங்களே தேர்வு செய்வோம் என்று கூறுவதில் தான் சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது' என வாதிட்டார்.
காரணம் விசாரணை அதிகாரிகளை ஆங்காங்கே இருந்து தேர்ந்தெடுத்து ஒரு குழுவை அமைப்பது நிர்வாக ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் விசாரணைக்கு தேவையான 10 அதிகாரிகளை அரசே பரிந்துரை செய்யும் என்றும், அதில் இருந்து சிறப்பு குழுவை கோர்ட்டு நியமிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என தமிழக அரசு வாதிட்டது.
அதற்கு நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டில் இருந்து மட்டும் ஏன் இத்தனை மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது என கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தை பொருத்தவரை முதலில் சி.பி.ஐ. விசாரணை என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் கோர்ட்டு அனைத்து சாராம்சங்களையும் ஆராய்ந்து சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி இருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.
அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வக்கீல்கள் விசாரணை குழு விசாரணை நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விசாரணை குழுவில் இடம் பெறும் அதிகாரிகளின் பெயர்களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு விசாரணை குழுவை அமைத்தால் சரியானதாக இருக்கும் என்பது மட்டுமே எங்களது கோரிக்கை என தெரிவித்தனர்.
மேலும் தற்போது கோர்ட்டு தேர்ந்தெடுத்து இருக்கக்கூடிய அதிகாரிகள் கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்ற மாவட்டத்தில் இருந்து 200 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவில் பணியில் உள்ள அதிகாரிகள் ஆவர். இவர்கள் சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளதால் நிர்வாக ரீதியிலான சிக்கல்களை அரசுக்கு ஏற்படுத்தும்.
எனவே அரசு தரப்பில் அதிகாரிகள் பெயர்களை பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு குழுவை அமைக்கட்டும் என்றதோடு கிட்னி திருட்டு நடந்திருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள சிறந்த அதிகாரிகளின் பெயர்களை வழங்குகிறோம். அதிலிருந்து கோர்ட்டு தேர்ந்தெடுத்தால் சரியானதாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால் சிறுநீரக மோசடி நடைபெற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்தில் இருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு முரண்படுகிறது என்றதோடு இந்த கோரிக்கையை ஏற்க மாட்டோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சிறப்பு குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், அதே வேளையில் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு குழுவை அமைத்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துக்களை மட்டும் நீக்குவதாக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.






